நம்மூர் ஃப்ளேவரில் பிரெஞ்ச் & இத்தாலியன் டெசர்ட்ஸ்!



டெசர்ட் என்று சொன்னதும் என்னவெல்லாம் நினைவுக்கு வரும்?

ஜீராவில் மூழ்கியிருக்கும் குலாப் ஜாமூன், சின்னச் சின்ன முத்துக்களை இறுக்கிப் பிடித்திருக்கும் லட்டு, நெய் சொட்டும் ஜாங்கிரி, வெண்ணெய் போல் வழுவழுப்பாக இருக்கும் ஐஸ்கிரீம்... எல்லாம் நினைவுக்கு வரும். ஆனால், டெசர்ட்களில் மிக முக்கிய இடங்களைப் பிடித்திருப்பது என்றால் அது கேக், பேஸ்ட்ரி வகைகள்தான். இந்நிலையில் கேக்கை அதிக அளவு கிரீம் கொண்டு செய்தால் அது பேஸ்ட்ரி என நாம் நினைத்துக் கொண்டிருப்பதை தவிடுபொடியாக்கியுள்ளனர் ‘டெலிஷ் டெசர்ட்ஸ்’ உணவகத்தின் முதன்மை செஃப்களான உபமன்யுவும் கஸ்தூரியும்.

ஆம். பேஸ்ட்ரிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பலவிதமான பேஸ்ட்ரிகளை கண்களுக்கும் நாவுக்கும் இவர்கள் விருந்தாகப் படைத்து வருகிறார்கள்.சென்னை அண்ணாநகர் மற்றும் கோட்டூர்புரத்தில் இயங்கி வரும் இந்த உணவகத்தின் சிறப்பே ஃபிரெஞ்ச் மற்றும் இத்தாலியன் வகை பேஸ்ட்ரிதான். ‘‘பொதுவா கேக்கைத்தான் நாம இங்க பேஸ்ட்ரினு தப்பா புரிஞ்சு வைச்சிருக்கோம். ஆனா, வெளிநாடுகள்ல பேஸ்ட்ரி என்பது கிரீம்கள் கொண்டு செய்யப்படும் ரிச்சான இனிப்பு வகைகள். இதில் கேக்கின் பங்கு சிறிதளவுதான்...’’ என்று பேச ஆரம்பித்தார் செஃப் உபமன்யு.

‘‘நானும் கஸ்தூரியும் பெங்களூரில் ஒன்றாக வேலை பார்த்தோம். நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிருக்கேன். அதன்பிறகு உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அந்த சமயத்தில்தான் என்னுடைய கல்லூரி மாஸ்டர் பெங்களூரில் லவான் பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி பயிற்சி மையத்தை நடத்துவது பற்றி தெரிய வந்தது. அங்கு சேர்ந்தேன்.
அங்கு ஏற்கனவே கஸ்தூரி பயற்சியாளரா இருந்தாங்க. வெளிநாட்டுக்குப் போக நினைத்த நான் லவானில் நாலு வருஷங்கள் பயிற்சியாளரா இருந்தேன். அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் லவானில் இருந்து விலகினேன்.

வேலை வாய்ப்புக்காக காத்திருந்த நேரத்தில், கஸ்தூரி என்னை அழைத்து இங்கு வாய்ப்பு இருப்பதாக சொன்னாங்க. உடனே பெங்களூரில் இருந்து இங்க... சென்னைக்கு வந்தேன்...’’ என்ற உபமன்யுவைத் தொடர்ந்தார் கஸ்தூரி. ‘‘எனக்கு சுத்தமா உணவு குறித்த பேக்கிரவுண்ட் கிடையாது. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிச்சுட்டு பேக்கிங் மேல் இருந்த ஈடுபாட்டால் நானும் லவானில் சேர்ந்து படிச்சேன்.
அப்புறம் பயிற்சியாளரானேன். கோவிட் அப்ப சொந்த ஊரான தூத்துக்குடிக்கு போயிட்டேன். அப்பதான் பேஸ்ட்ரி சார்ந்த உணவகத்தை பிரிக்கால் நிறுவனம் தொடங்க இருப்பதாக அங்கிருந்து எனக்கு அழைப்பு வந்தது. உபமன்யுவிடம் சொன்னப்ப அவரும் சரின்னு சொல்ல... ரெண்டு பேருமே ‘டெலிஷ் டெசர்ட்ஸி’ல் இணைந்தோம்...’’ என்ற கஸ்தூரி, இங்குள்ள
பேஸ்ட்ரி மற்றும் சேவரி குறித்து விவரித்தார்.

‘‘கேக், பன், பஃப் போன்ற பலவகை உணவகங்கள் இருந்தாலும் சென்னைல பேஸ்ட்ரிக்குனு தனிப்பட்ட உணவகங்கள் கிடையாது. அதனால அதையே மெயினா கொடுப்பதுனு முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘டெலிஷ் டெசர்ட்ஸ்’. இங்குள்ள ஒவ்வொரு உணவும் நானும் உபமன்யுவும் சேர்ந்து உருவாக்கியது. ஃபிரெஞ்ச் மற்றும் இத்தாலியன் பேஸ்ட்ரியை நம்ம மக்களுக்குப் பிடிக்கும் சுவைல கொடுக்கறோம்.

பொதுவா கேக்னா, ஒரு பெரிய  கேக் செய்வாங்க. அதிலிருந்து ஒரு துண்டை கட் செய்துதான் தனி பீசா கொடுப்பாங்க. ஆனா, வெளிநாட்ல அப்படி கிடையாது. ஒவ்வொரு துண்டு கேக்கையும் தனித்தனியா செய்வாங்க. அதாவது பெரிய கேக்கின் மினியேச்சர். இந்த மினியேச்சர் பேஸ்ட்ரியை ‘பெதிகேத்தோ’னு சொல்வாங்க. அதை இங்க அறிமுகம் செய்திருக்கோம். ஒவ்வொரு பேஸ்ட்ரியிலும் வித்தியாசமான சுவையை சேர்த்திருக்கோம். பொதுவா நம்மூர்ல கிடைக்கும் கேக்குகள் எல்லாம் ஒரே சுவைலதான் இருக்கு. சாக்லெட் கேக்னா... கேக் இடைல கிரீம். ஆனா, பேஸ்ட்ரி அப்படியில்ல.

இதில் கேக், மூஸ், கிரீம், ஜெல்லினு நான்கு ஃப்ளேவர்ஸ் கலந்திருக்கும். அதுல எங்க சிக்னேச்சர் பேஸ்ட்ரி ‘ஃபில்டர் காபி’. தென்னிந்திய மக்களுக்குப் பிடித்த ஃபில்டர் காபி சுவைல பேஸ்ட்ரியை அறிமுகம் செய்திருக்கோம். சாக்லெட் டார்ட்... அதற்குமேல் ஆல்மண்ட் கேக், காபி ஃபிளேவர் கிரீம், அடுத்து காபி ஃபிளேவர் கேரமல், மறுபடியும் காபி ஃபிளேவர் கிரீம்... சாப்பிடறப்ப காபி சுவையை முழுமையா உணர முடியும்.

ஓபரா கிளாசிக் - ஃபிரெஞ்ச் வகை பேஸ்ட்ரி. இந்த பேஸ்ட்ரியை உருவாக்கியவர் பேக்கர். ஒருநாள் இவர் தன் மனைவிக்காக சிறப்பான ஒரு டெசர்ட்டை செய்ய விரும்பினார். அவர் மனைவிக்கு காபியும் ஓபரா நிகழ்ச்சியும் பிடிக்கும். ஓபரா கேலரி பல அடுக்குகளோடு வட்டமா இருக்கும். இதை மனசுல வைச்சு காபி மற்றும் சாக்லெட் ஃபிளேவர் இரண்டையும் ஒவ்வொரு அடுக்கா வைச்சு ஒரு சுவையான பேஸ்ட்ரியை உருவாக்கினார்.

இப்படி ஃபிரெஞ்ச் பேஸ்ட்ரிகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு இருக்கு. திராமிசு - இத்தாலியன் டெசர்ட். பெரும்பாலும் கேக், மாஸ்கர்போன் கிரீம்  (mascarpone cream), அதன் மேல் கோகோ பவுடர் டஸ்ட் செய்திருப்பாங்க. நாங்க அதை லேயரா சதுர வடிவில் கொடுக்கறோம். எங்க திராமிசுவில் காபி கிரீம், மாஸ்கர்போன் கிரீமுடன் கல்ஹுவா லிக்கர் (kalhua liqueur) சேர்த்து தர்றோம்.

சூ பேஸ்ட்ரியை (choux pastry) எக்லெர் வடிவத்துல கொடுக்கறோம். நீளமான கேக்... அதன்மேல் பெயிலீஸ் லிக்கர் கிரீம் மூஸ், மற்றும் பெனகோட்டாவை சேர்த்து தர்றோம். பெனகோட்டா ஜெல்லி வடிவத்தில் இல்லாம கிரீம் வடிவத்துல கொடுக்கறோம். இதேமாதிரி ஸ்னிக்கர், பவுண்டினு பல விதமான பேஸ்ட்ரிகள் செய்யறோம்...’’ என்ற கஸ்தூரியைத் தொடர்ந்தார் உபமன்யு.

‘‘கஸ்தூரி சொன்ன மாதிரி பேஸ்ட்ரி ஒரு பக்கம் இருந்தா கூடவே சேவரிகளும் இருக்கணும். அப்பதான் பேலன்சாகும். சேவரில எங்க சிக்னேச்சர் டிஷ் கொரியன் கிரீம் பன்.
பன்னை வெண்ணெயில் முக்கி அதுக்குள்ள கிரீம் சீஸும், வறுத்த பூண்டு, சில்லிஃபிளேக்ஸ் எல்லாம் சேர்த்துத் தர்றோம். சாப்பிடும் போது இனிப்பு, பூண்டின் காரம், சீஸின் உப்புனு கலந்திருக்கும்.

டிராவல் கேக் - நம்மூரில் கிடைக்கும் டீக் கேக்தான். உள்ளே கிரீம் கொண்டு தருகிறோம். பொதுவா மூஸ், சில மணி நேரம்தான் நல்லா இருக்கும். ஆனா, இந்த கேக் இரண்டு மூன்று நாட்கள் வரை கெடாம இருக்கும். சேவரியில் எங்க சிறப்பு, பஃப். இங்கே வழக்கத்தில் உள்ளது முட்டை, பனீர், மஷ்ரூம் எல்லாம் ஸ்டஃப் செய்யப்பட்டு வரும். ஆனால் எங்க பஃப்பினுள் வைக்கப்படும் உணவுகள், மேலதான் இருக்கும். இதுக்காகவே சிறப்பு பில்லிங் தயார் செய்யறோம்.

சிவப்பு குடைமிளகாயில் பெஸ்தோ (pesto - ஒருவகையான துளசி இலை, பைன் நட்ஸ், பூண்டு, ஆலிவ் எண்ணெய், சீஸ்) தயாரிச்சு அதுல சிக்கன், மஷ்ரூம் மிக்ஸ் செய்து பஃப்பினுள் வைச்சு பேக் செய்வோம். பின்னல் செய்யப்பட்ட பிரட்தான் பாப்கா (babka) பிரட். பிரட் மாவுக்குள் சாக்லெட் கனாஜினை வைச்சு பின்னல் பின்னுவது மாதிரி பேக் செய்வோம்.
பஃப்பில் மார்ஜரினுக்கு (margarine) பதிலா வெண்ணெய் பயன்படுத்தறோம். அப்பதான் பஃப் மெல்லியதாவும், இதழ் இதழா உப்பியும் வரும். சாப்பிட்டா வாயில் ஒட்டாது. மைதாவுக்கு பதிலா தினை அல்லது மரவள்ளிக்கிழங்கு மாவை பயன்படுத்தறோம்...’’ உபமன்யு புன்னகைக்க, கஸ்தூரி தொடர்ந்தார்.

‘‘இன்னும் இரண்டு மாதங்கள்ல மேலும் சில புதிய உணவுகளை அறிமுகப்படுத்தப் போறோம். சீசனுக்கு ஏற்ப உணவுகளை அறிமுகம் செய்யும் எண்ணமிருக்கு. உதாரணமா மாம்பழ சீசனப்ப மாம்பழ மூசினால் பேஸ்ட்ரி.அடுத்து இன்க்லூஷன் சாக்லெட் பார். இப்ப ஆறு வித்தியாசமான ஃபிளேவர்களில் சின்னச் சின்ன சாக்லெட்கள் செய்யறோம். அதையே பார் வடிவத்தில் கொடுக்கப் போறோம். காரணம், எங்க ஸ்பெஷாலிட்டியே சாக்லெட்டை காம்பவுண்ட் சாக்லெட்டா கொடுக்காம, அப்படியே கூவேச்சர் சாக்லெட்டா கொடுப்பதுதான்.

ஏன்னா, கூவேச்சர்(couvecher)தான் ஒரிஜினல் சாக்லெட். கோகோ கொட்டையை காய வைச்சு, அதன் மேல்தோலை நீக்கி... அரைச்சு... அதில் பால்பவுடர் சர்க்கரை சேர்த்தா ஒரிஜினல் சாக்லெட் கிடைக்கும். இதை வைச்சுதான் நாங்க சாக்லெட் தயாரிக்கிறோம். கடைகள்ல இருப்பது கம்பவுண்ட் சாக்லெட். அதில் ஒரிஜினல் சாக்லெட்டில் இருக்கும் கோகோபட்டர் நீக்கப்பட்டிருக்கும்...’’ என்ற கஸ்தூரி, பேக்கரி குறித்த பயிற்சியும் அளிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்