சாருவின் வீடு
அரக்கப் பரக்க அலுவலகத்தினுள் நுழைந்தாள் சாரு.தோளிலிருந்த பை, கையிலிருந்த சாப்பாட்டுக் கூடையென்று அனைத்தையும் எடுத்து டேபிளின் மேல் வைத்துவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தாள்.பின்னர், முதுகை சற்றே சிரமப்படுத்தி குனிந்து டேபிளுக்கு அடியிலிருந்த டெஸ்க்டாப் கணினி சுவிட்சை ஆன் செய்தாள்.
 மானிட்டரில் பில்கேட்ஸ் ஏதோ கணக்கு போட்டுக் கொண்டிருந்தார். ஓரிரு நிமிடங்களில் அவரே ஜன்னலைத் திறப்பார். திரையில் நீலவானம் தெரியும். அதற்குப் பிறகு பாஸ்வேர்டு செலுத்தி அவள் கம்ப்யூட்டரில் நுழையவேண்டும். போன மாதத்திலிருந்து அப்படிச் செய்தால் அதுவே வருகைப் பதிவேட்டில் குறித்துக் கொள்ளும் - அவள் வந்த நேரம் உட்பட. “என்ன சாரு... ஏதோ போர்க்களத்திற்கு தயாரானது போல ரெடியாயிட்டு இருக்க..?” என்றாள் அடுத்த சீட் ஸ்வப்னா.
 “வீட்டில் ஒரு போர்க்களம் முடிச்சு ஆபீசுக்கு வந்தால் அங்கேயும்தான். மாதத்தில் முதல் திங்கள்கிழமை வேற... வாழ்க்கையே போர்தான்...” என்றாள் சாரு சலிப்புடன். “வார்த்தை விளையாட்டா? நம்ம பழைய சாரு தலையைக்காட்டற மாதிரி தெரியுதே?”“அப்படியா?” என்றாள் அப்போதும் சுரத்தேயில்லாமல்.கல்யாணத்திற்கு முன்னால் வார்த்தைக்கு வார்த்தை சரவெடியைக் கொளுத்திப் போடுகிறவள் சாரு. அவளது ஜோக்குகளைக் கேட்பதற்கு ஒரு கூட்டமே அவளைச் சுற்றிக்கொண்டு நிற்கும்.
ஆனால், அவளே சொன்னமாதிரி வாழ்க்கையே போர்க்களமாகிவிட்டது. அன்றைக்குக்கூட காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கவேண்டியவள், அலுப்பில் அலாரம் அடிப்பதைத் தள்ளிப்போட்டாள். எப்போதும் செய்பவளில்லை அவள். முந்தின நாள் ஆபீசிலிருந்து கிளம்ப நேரமாகிவிட்டது.தினசரி மாலை நேரம் ஸ்கூலிலிருந்து அவளது குழந்தை ரசிதா, தாத்தா, பாட்டி வீட்டிற்கு போய்விடுவாள். சாரு அவளது அப்பாவின் வீட்டிற்குப் போய், அங்கேயே சாப்பிட்டுவிட்டு குழந்தையுடன் கிளம்பும்போது அவள் தூங்க ஆரம்பித்திருந்தாள்.
அவளது அம்மாவிற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். “ சாரு... குழந்தைக்கு ஹோம் ஒர்க் எல்லாம் உங்க அப்பாவே கூட இருந்து பண்ணி வெச்சிட்டார்...” என்று அம்மா சொல்லி அனுப்பினாள். அந்த வேலை மிச்சம்.சாருவின் கணவன் பிரசாத் ஒரு வருட ப்ரொஜெக்ட் என்று சொல்லி அமெரிக்கா போய் ஒரு வருடம் ஆகப்போகிறது. முடியப்போகிற நேரத்தில், அதை மூன்று வருடங்களாக நீட்டி யிருக்கிறார்கள் என்று போன ஞாயிற்றுக்கிழமை பேசும்போது சொன்னான்.
துணைக்கு கூட வந்து இருங்களேன் என்று தன் பெற்றோர்களிடம் கேட்டுப் பார்த்துவிட்டாள்.“இதோ பாரு சாரு... எங்களுக்கு எங்க வீடுதான் சௌகரியம்... இதுவே உன்னோட வீடுதானே... எதுக்கு தனியா கஷ்டப்பணும் நீ... குழந்தையோட எங்களோட தங்கிடு...” என்றாள் அம்மா.அம்மா சொன்னமாதிரி அங்கேயே போய் தங்கிவிடலாம்தான். ஆனால், அவளது கணவனுக்கு அது பிடிக்கவில்லை. “ நீ யாரையும் டிபெண்ட் பண்ற பெண்ணில்லை. எதுக்கு மத்தவங்களை டிஸ்டர்ப் செய்யணும்... அவங்க உங்கப்பா அம்மாவாக இருந்தாலும்..?” என்றான்.அவனது பெற்றோர்களாவது வந்து இருக்கலாம்.
“நாங்க எதுக்கு உனக்கு பாரமாக இருக்கணும்...” என்று டிவி சீரியல் டயலாக் மாதிரி சொல்லிவிட்டு சேலத்திலேயே தங்கிவிட்டார்கள். அவர்களது பூர்வீக எஸ்டேட் சொத்து வேறு ஏற்காட்டில் இருக்கிறது.பிரசாத் அவ்வப்பொழுது வீடியோ காலில் அவளையும், ரசிதாவையும் கொஞ்சினால் மட்டும் போதுமா? அவர்களது இரட்டைக்கட்டிலில் ஒரு பாதி காலியாக அல்லவா இருக்கிறது? பிரசாத் இருந்த வரையில், அவர்களுக்கிடையே அழிச்சாட்டியமாக ரசிதா “இங்கேதான் படுத்துக் கொள்வேன்...” என்று அடம் பிடித்த தருணங்கள் மீண்டும் எப்போது வரும்? மெய்நிகர் நிமிடங்களில் விளைகிற விரகத்திற்கு மெய்யாக அல்லவா தீர்வு காணவேண்டும்!
ஆனாலும் ஒற்றை ஆளாக, கடந்த ஒரு வருடமாக குடும்பத் தலைவரில்லாமல் டைம்டேபிள் போட்டதுபோல் குடும்பத்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறாள்.காலையில் ஐந்து மணிக்கு எழுந்து காபியைப் போட்டுக் குடித்துக் கொண்டு மொபைல் செய்திகளைப் பார்க்கவேண்டும்.ஆறுமணிக்குள் குளித்துவிட்டு சமையலைத் தொடங்கவேண்டும். அவளுக்கு காலை உணவு, மத்தியானத்திற்கு டப்பாவில் சோறு, குழந்தைக்கு பிரேக்பாஸ்ட், மதியத்திற்கு ஸ்கூலில் சாப்பிட கலர்புல் மீல்ஸ்... அப்புறம் அவளுக்கு நொறுக்குத் தீனி.
தினசரி வேலைகளுக்கே நேரம் போதாத நிலையில், மாதாந்திர மீட்டிங்கில் கிளாஸ் டீச்சர், “சாரு மேடம்... ரசிதாவோட டிபன்பாக்ஸை அழகான டிசைனில் வாங்கி வைத்தால் அவள் ஆசையாக ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு வருவாள். நீங்களோ சாதாரண டப்பர்வேர்ல அனுப்புறீங்க. உங்க குழந்தை மத்த பசங்க கொண்டுவர பாக்சையே பாத்துக்கிட்டு உக்காந்திருக்கு... சாப்பிடமாட்டேங்குது...” என்றாள் ஒரு முறை. ரசிதா தினமும் பாக்சில் மிச்சம் வைக்கிற ரகசியம் தெரிந்தது சாருவிற்கு.
அடுத்த மீட்டிங்கில் “நீங்க ஒரே மாதிரி சேவை, இட்லின்னு அனுப்பறீங்க... குழந்தை பக்கத்துல இருக்கிறவங்க டப்பாவிலிருந்து எடுத்து சாப்பிடுது... கலர்ஃபுல்லா ஏதாவது செய்து அனுப்புங்க...” சாருவிற்கு அது கூடுதல் வேலைதான். குழந்தை பட்டினி கிடக்கக்கூடாது என்று அதற்கும் தலை ஆட்டினாள்.
ரசிதாவிற்கு ஸ்கூல் மூன்று மணிக்கு முடிந்துவிடும். சாருவின் பெற்றோர் இன்னமும் வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஸ்கூலில் இருந்து மணி அண்ணன் எனும் டிரைவர் ஆட்டோவில் ஏற்றி அருகிலிருக்கும் ஒரு கிரெச்சில் விட்டுவிட்டுப் போவார். அங்கு ஐந்தரை மணி வரை ரசிதா இருக்கவேண்டும். அதன்பிறகு தாத்தா தனது வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவார். அங்கே பாட்டியின் கொஞ்சலில் மடியில் படுத்துக்கொண்டு டிவி சானலில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருப்பாள். சாரு ஆபீசிலிருந்து வரும்வரைக்கும் அங்குதான் இருக்கவேண்டும்.சாருவிற்கோ வங்கியில் நுழைகிற நேரந்தான் தெரியும். வங்கிகள் முன்பு போலில்லை. பத்து பேர் வேலை செய்த இடத்தில் நான்கு பேர்தான் இருக்கின்றனர். யூனியன் கேட்டால் அனைத்து வேலைகளும் கணினிமயமானபின் எதற்கு கூடுதல் ஆட்கள் என்று நிர்வாகம் விதண்டாவாதம் பேசுகிறது.
தினசரி பொழுது எப்போது முடியுமென்றே தெரியாது. மேனேஜருக்கு அம்பத்தைந்து வயது ஆகிறது. மாலை ஆறரை ஆறேமுக்கால் ஆனால், மிச்ச வேலைகளைத் தானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி பெண்ஊழியர்களை வீட்டுக்குக் கிளம்பிப் போகச் சொல்லிவிடுகிற நல்ல மனிதர். அவரது குடும்பம் திருச்சியில் இருக்கிறது. ஆனால், சில நாட்கள் அவராலும் வேலைப்பளுவினால் முடியாதபோது சாரு அன்றைக்கெல்லாம் தாமதமாகத்தான் கிளம்ப முடியும்.
எல்லாவற்றையும் முடித்து அம்மா வீட்டிற்கு போய்விட்டு குழந்தையைக் கூட்டிக் கொண்டு போவதற்கு முன்னால், “சாப்பிட்டுப் போயேன். அங்க போய் என்னத்தை பண்ணப் போறே...” என்பாள். தூங்கிக் கொண்டிருக்கிற குழந்தையை எழுப்பிக் கூட்டிக்கொண்டு போகவேண்டும்.தினசரி காலையில் எழுந்தால் செக்கு மாட்டைப் போல் வாழ்க்கை.கைகள் பரபரக்க, பாங்க் கஸ்டமர்களிடம் ஏதேதோ பேசி, பதிலளித்து, சிரித்து இயங்கிக்கொண்டிருந்தாள். மதிய சாப்பாட்டு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சற்றே கூட்டம் குறைந்திருந்தது.
மொபைலில் அழைப்பொலி எழுந்தது. திரையில் ரசிதாவின் டீச்சர் பெயர் தெரிந்தது. ‘குழந்தைக்கு என்னாச்சோ?’“சாரு மேடந்தானே?”“ஆமாம்... ரசிதாவோட அம்மாதான்...” என்று சொல்லுமுன்பே கைகள் அவளையுமறியாமல் நடுங்கின. ஸ்வப்னா அதைக் கவனித்தபடி இருந்தாள்.“நாந்தான் அவளோட கிளாஸ் டீச்சர் பேசறேன்... என்னென்னு தெரியல... மத்தியானம் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு இரண்டு மூன்று தடவை வாந்தி வாந்தியாய் எடுத்திட்டா. டயர்டா வேற இருக்கா...
நீங்க வந்து கூட்டிக்கிட்டு போறீங்களா?” சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.மதியம் இரண்டு மணிதான் ஆகியிருந்தது. மாதத்தில் முதல் வாரம் என்பதனால் கூட்டம் சற்றே அதிகம். மேனேஜர் வேறு கஸ்டமரைப் பார்க்கப் போகிறேன் என்று வெளியில் போயிருக்கிறார். எப்படி அவளால் புறப்படமுடியும் திடுதிடுப்பென்று?குழம்பிக்கொண்டிருக்கையில், ஸ்வப்னா எல்லாம் புரிந்த மாதிரி அவளது தோளில் கைவைத்து ஆறுதலாக அழுத்தினாள். “ஸ்வப்னா... குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு ஸ்கூல்லேருந்து போன்...” அவளைப் பார்த்தபடி சொல்லும்போதே கண்களில் நீர் கரகர...“சரிப்பா... நீ கிளம்பு... நான் பாத்துக்கறேன்...” என்றாள் ஸ்வப்னா.“நிறைய வொர்க் பெண்டிங் இருக்கு ஸ்வப்னா... சார் வேற சீட்ல இல்ல...”“எல்லாம் நான் பாத்துக்கறேன்னு சொன்னேன்ல...” என்று உரிமையாய் அதட்டினாள்.எடுத்து வந்திருந்த உணவைக்கூட சாப்பிடாமல் அப்படியே எடுத்துக் கொண்டு கிளம்பினாள். ஹோண்டா ஸ்கூட்டரை விரட்டி ஸ்கூலுக்கு விரைந்தாள்.
எப்போதும் காலையில் அரக்கப்பரக்க குழந்தையைக் கொண்டுவிட்டே பழக்கப்பட்டவளுக்கு மதிய நேர பள்ளியின் மௌனித்த நிச்சலனம் வித்தியாசமாக இருந்தது. நம்ம வீட்டுப் புள்ள எப்போ வரும் என்று கேட்டின் மேல் கையையும், வழியில் விழியையும் பதித்து நிற்கும் பெற்றோர்களும் இல்லை.வந்த வேகத்தில் கேட்டின் அருகிலேயே வண்டியை நிறுத்தினாள். காலையில் அப்படியெல்லாம் வண்டியை நிறுத்தவிடமாட்டார்கள்.அவளது அவசரத்தைப் பார்த்ததுமே வாட்ச்மேன் கேட்டைத் திறந்து வைக்க அவள் உள்ளே ஓடினாள்.
ஸ்கூலின் கீழ்த்தளத்தில் பிரின்சிபால் அறைக்கு பக்கத்தில் ஓர் அறையில் ரசிதாவை அமர்த்தி வைத்திருந்தார்கள். மூன்று முறை வாந்தியெடுத்ததில் பலநாள் நோயாளி மாதிரி ரசிதா முகம் வாடிய நிலையில் இருந்தாள்.சாருவைப் பார்த்ததும் குழந்தை அழுதபடியே அவள் கைகளுக்குள் தாவினாள். உடம்பு கனன்றது.அதற்குள் டீச்சரும் அங்கு வந்துவிட்டாள்.ரசிதாவை அள்ளி மேலே போட்டுக் கொண்டாள். சாருவின் தோள் மேல் குழந்தை தலை சாய்த்தபடி இருந்தது. டீச்சரிடம் சொல்லிவிட்டு வாசலுக்கு வந்தாள்.மெல்லிய குரலில், “ஆட்டோக்காரர் வரலியாம்மா?” என்றாள் ரசிதா.
“இல்லடா செல்லம், உனக்கு உடம்பு சரியில்லதானே... அதனாலே நானே கூட்டிக்கிட்டு போகப்போறேன்...” என்றாள் சாரு .“அப்படின்னா... அந்த கிரெச்சுக்கு நீயே கொண்டுவிடப் போறியா?” என்றாள்.“இல்லடா... வீட்டுக்கு போறோம்...” என்றாள்.ரசிதா தலையைத் தூக்கி சாருவின் முகத்தருகே வந்து “உங்க வீட்டுக்கா போகப்போறோம்..?” என்றாள்.சாருவிற்கு தூக்கி வாரிப்போட்டது. “ஏன் அப்படிச் சொல்ற? அது நம்ம வீடுடா செல்லம்...’’ என்று சமாதானமாகச் சொன்னாள்.“ஆனா... ராத்திரிதானே கூட்டிட்டுப் போவ...” என்றாள் விடாமல்.
இரவு மட்டுமே வீட்டிற்கு வந்து தூங்கிப் பழகியவள் அப்படிக் கேட்டது சரிதானோ என்று தோன்றியது. சமூக நிர்ப்பந்தகளுக்கு உடன்பட்டு வேலைக்குச் சென்று, வாழ்க்கையை நடத்துவதில் அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. குழந்தை பெரியவளாகும்போது எல்லாம் புரிந்துகொள்வாள் என்று சமாதானப்படுத்திக் கொண்டாள்.ஆனாலும் வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டிற்குச் செல்லும் வழியெல்லாம் குழந்தை கேட்டதில் இருந்த நியாயம் அவளது நெஞ்சில் தீ வைத்தது போல் சுட்டெரித்தது.
ஹெச்.என்.ஹரிஹரன்
|