சல்மான் ருஷ்டி.. என்ன நடந்தது..?



‘சாத்தானின் வசனங்கள்’ நாவலுக்காக கடந்த 34 ஆண்டுகளாக கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மேடையில் கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார்.
இப்போது மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் ருஷ்டி பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் ஒரு கண்ணை அவர் இழக்கக்கூடும் என்றும் அவரது ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.சல்மான் ருஷ்டி, இந்தியாவில் பிறந்தவர்; பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்றவர்.

கடவுள் மறுப்பாளரான ருஷ்டியின் முதல் நூல் ‘க்ரிமஸ்’, பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஆனால், 5 ஆண்டுகள் கழித்து 1981ல் அவர் எழுதிய ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ நாவல் புக்கர் பரிசைப் பெற்றது. சர்வதேச அளவில் பிரபலமானார். இந்தியாவைப் பற்றி பேசிய இந்த நாவல் பிரிட்டனில் மட்டும் பத்து லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையானது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1983ல் பாகிஸ்தானைப் பற்றிய ‘ஷேம்’ நாவலை வெளியிட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிகரகுவா நாட்டு பயணத்தைப் பற்றிய ‘த ஜாகுவார் ஸ்மைல்’ நாவலை எழுதினார்.ருஷ்டியின் ஐந்தாவது நூல் ‘The Satanic Verses’ (சாத்தானின் வசனங்கள்), 1988ம் ஆண்டு வெளியானது. சர்ச்சைக்குரிய நபராக அவர் மாறியது இதன் பிறகுதான். இந்த நாவல் இஸ்லாமியர்களை அவமதிப்பதாக கண்டனங்கள் எழுந்தன.

இந்தியாதான் முதன்முதலில் இந்த நாவலை 1988 ஆகஸ்ட் 5ம் தேதி தடை செய்தது. இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இந்நாவலை தடை செய்தன.

‘சாத்தானின் வசனங்கள்’ வெளிவந்து சரியாக ஒரு வருடம் கழித்து, ஈரானின் மூத்த மதகுருவாக அப்போதிருந்த அயதுல்லா ருஹோல்லா கொமேனி, ருஷ்டியை கொலை செய்பவருக்கு 30 லட்சம் டாலர்களுக்கும் அதிகமான வெகுமதி தரப்படும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இஸ்லாமியர்கள் இந்நாவலுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.

எதிர்ப்புகள் வலுக்கவே, இஸ்லாமியர்களுக்கு ஏற்படுத்திய துயரத்துக்காக ருஷ்டி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். ஆனாலும், ருஷ்டிக்கு எதிரான ஃபத்வாவை கொமேனி திரும்பப் பெறவில்லை. இதனால், அதன்பிறகு ருஷ்டி தனது மனைவியுடன் காவல்துறை பாதுகாப்பில் தலைமறைவாக வாழத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பே ருஷ்டி வெளியே வந்தார். அவருக்கு பிரிட்டன் காவல்துறை பாதுகாப்பு கொடுத்து வந்தது.

இப்போது 75 வயதாகும் சல்மான் ருஷ்டி, 12 ஆகஸ்ட் 2022 அன்று காலை 11.00 மணி அளவில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஷட்டாக்குவா என்னும் ஏரிக்கரையில் உள்ள ‘ஷட்டாக்குவா’ கல்வி நிறுவனத்தால் நடத்தப்பட்ட கோடைகால விரிவுரைத் தொடர் நிகழ்வில் முதல் பேச்சாளராக உரையாற்றினார். அப்போது பார்வையாளர்களில் ஒருவர் திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டி கழுத்தின் வலது பக்கம் உட்பட பல இடங்களில் மாறி மாறி குத்தினார். உடனே ரத்தம் பீறிட ருஷ்டி சரிந்தார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மருத்துவர் ரீடா லிண்ட்மேன், உடனடியாக ருஷ்டிக்கு முதலுதவிகள் செய்தார். அருகே இருந்தவர்கள், “அவருக்கு நாடித் துடிப்பு உள்ளது” என்று குரல் கொடுக்க, அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் உடனே ஹெலிகாப்டர் மூலம் ருஷ்டியை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்.ருஷ்டிக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பேச முடியாவிட்டாலும் ருஷ்டி நலமுடன் இருப்பதாகவும், “அவர் ஒரு கண்ணை இழக்கக்கூடும். கையில் உள்ள நரம்புகள் அறுபட்டிருக்கின்றன. கல்லீரல் சேதமடைந்திருக்கிறது...” என்றும் அவரது ஏஜென்ட் ஆண்ட்ரூ வெஸ்லி கூறியுள்ளார்.

பொதுவாகவே ருஷ்டி காவலர்கள் சூழவே வெளியே வருவார். இந்நிலையில், அமெரிக்காவிலேயே அவர் தாக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சல்மான் ருஷ்டியைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஹாதி மட்டார்; நியூஜெர்சியில் வசிப்பவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேடையில் சல்மான் ருஷ்டியை மட்டுமல்லாமல், அவரைப் பேட்டி எடுத்த நபரையும் ஹாதி மட்டார் கத்தியால் குத்தியுள்ளார். பேட்டி எடுத்தவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

என்.ஆனந்தி