மாமல்லபுரத்தைக் கலக்கிய சர்வதேச பட்டம் விடும் திருவிழா!



தமிழகத்தில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறது தமிழக சுற்றுலாத் துறை. கடந்த 13ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும், சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனும் தொடங்கி வைக்க, சுற்றுலாத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகனும், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரியும் முன்னிலை வகித்தனர்.

‘‘சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்திட்டு வருது. அதன் ஒரு நிகழ்வுதான் மூன்று நாட்கள் நடக்கும் இந்த சர்வதேச பட்டம்விடும் திருவிழா. இதில் அமெரிக்கா, தாய்லாந்து நாடுகள்ல இருந்து 4 குழுக்களும், இந்தியாவிலிருந்து ஆறு குழுக்களும் பங்கேற்று இருக்காங்க...’’ என அதிகாரிகள் உற்சாகமாகச் சொல்ல, வானில் பட்டங்கள் சீறிப்பாய்ந்தன.
இவை தடை செய்யப்பட்ட மாஞ்சா கயிற்றால் பறக்கவிடப்படும் பட்டங்கள் அல்ல. நைலான் கயிற்றில் பாராசூட் மெட்டீரியலில் பறக்கும் வண்ணமயமான பட்டங்கள். உச்சிவெயிலில் கடற்கரை மணலில் மகிழ்ச்சியாகப் பட்டங்களை வெளிநாட்டினரும், இந்தியர்களும் பறக்கவிட அதை பெரியவர்களும், குழந்தைகளும் பார்த்து கைதட்டி ரசித்தனர்.
 
தேசியக் கொடி வண்ணத்தில் இந்தியா எனப் பெயர் கொண்ட பட்டத்தைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்த நேகுல் பட்டக், ‘‘நான் குஜராத் மாநிலம் அகமதாபாத்ல இருந்து வர்றேன். 15 ஆண்டுகளா இந்த ஹாபியில் இருக்கேன். நம் கலாசாரத்தையும் பண்பாட்டையும் இந்தப் பட்டங்கள் வழியே பிரதிபலிக்கிறேன். இந்தியா சார்பா இங்கிலாந்து, நெதர்லாந்து, குரேஷியா, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ்னு எல்லா நாடுகளும் போயிருக்கேன். தமிழ்நாடு, இதுதான் ஃபர்ஸ்ட் டைம்...’’ என தாடியைத் தடவியபடியே ஆங்கிலத்தில் பேச, அருகே கதகளி பட்டத்தை காற்றின் போக்கிற்கு ஏற்ப விட்டுக் கொண்டிருந்தார் ஹர்ஷா சாம்ராஜ்.

‘‘நாங்க மங்களூர்ல இருந்து வர்றோம். பட்டம்விடும் குழுக்கள்ல டீம் மங்களூர்னா உலகம் முழுவதும் தெரியும். அந்தளவுக்கு நாங்க ஃபேமஸ். இந்தக் குழுவை 27 ஆண்டுகளுக்கு முன்னாடி ஆரம்பிச்சேன். இதுல இருபதுக்கும் மேற்பட்டவங்க இருக்காங்க. இங்க 5 பேர்தான் வந்திருக்கோம். எல்லாருமே பொழுதுபோக்காவே இதுல ஈடுபடுறோம். நான் மங்களூர்ல டூர் கைடா இருக்கேன். தேசிய, சர்வதேச பட்டம்விடும் நிகழ்ச்சிகளை மங்களூர்ல நடத்தியிருக்கோம். உலக அளவில் ஃபிரான்ஸ், இங்கிலாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்துனு எல்லா நாடுகளுக்கும் போயிருக்கோம்.

எங்க ஸ்பெஷாலிட்டி, நாங்க பிரிண்ட் செய்யப்பட்ட ரெடிமேட் மெட்டீரியல் பட்டங்களை வாங்கி பறக்கவிடுறதில்ல. நாங்களே பாராசூட் மெட்டீரியல்ல எங்களுக்குப் பிடிச்ச மாதிரி தைப்போம். அதுக்கு எஞ்சினியரிங் தொழில்நுட்பம் தேவை. அதுக்கான ஆட்கள் எங்ககிட்ட இருக்காங்க. அப்படித்தான் இந்த கதகளி பட்டத்தை உருவாக்கினோம். இதை பறக்கவிடும்போது பலரும் பார்த்து கைதட்டி ரசிப்பாங்க...’’ என ஹர்ஷா நிறுத்த, அதே குழுவில் இருந்த 25 வயதேயான இளைஞர் ஸ்ரீனிகேத் தொடர்ந்தார்.

‘‘இதோ மேல பறக்குது பாருங்க... இந்தப் பட்டம் ஃபிரான்ஸ்ல சிறந்த பட்டம்னு பெயர் வாங்குச்சு. ஏன்னா, அது புஷ்பக விமான பட்டம். இராவணன் சீதையைக் கொண்டு போன புஷ்பக விமானம் கான்செப்ட்ல இந்தப் பட்டத்தை உருவாக்கினோம். அதனால, சிறந்த பட்டம்னு பெயர் எடுத்தது. இதுக்காக பரிசு தரமாட்டாங்க. ஒரு சான்றிதழ் தந்து அங்கீகரிப்பாங்க.
நீங்க ஒருமுறை இதுக்குள்ள வந்துட்டீங்கனா ரொம்ப ஆர்வமாகிடுவீங்க.

இது விலை மலிவான ஒரு பொழுதுபோக்கு. உலக அளவுல நடக்கிற திருவிழாக்கள்ல கலந்துக்க கூட நிகழ்ச்சியை நடத்துறவங்கதான் பயணத்திற்கும், தங்குவதற்குமான செலவை ஏத்துப்பாங்க. அப்படிதான் நாங்க உலகம் முழுவதும் இந்தியா சார்பாக கலந்துகிட்டிருக்கோம். ஒரு அட்ராக்‌ஷன் ஏற்படுத்த இந்நிகழ்வை நடத்துவாங்க. இங்க சுற்றுலாவை பிரபலப்படுத்த நடத்துறாங்க.  

இந்தப் பொழுதுபோக்குல இந்தியாதான் கிரியேட்டிவ்வா செய்வாங்க. நாம் எப்பவும் இந்திய புராணத்தைக் கொண்டு போவோம். கலாசாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துவோம். அதுவே உலக அரங்கில் நம்மை கவனிக்க வைக்குது...’’ என்கிறார் ஸ்ரீனிகேத்.அடுத்த சில மணி நேரங்களில் அந்தப் பகுதியே பட்டங்களால் நிரம்பி வழிந்தன. மக்களைக் கவர்வதற்காக சுற்றுலாத்துறையும் முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள், இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்வுகள் எனப் பல உற்சாக விஷயங்களை செய்திருந்தது பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

செய்தி: பி.கே

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்