சரித்திர நாவல்களின் நாயகன் சாண்டில்யன் இல்லம்…
சரித்திர நாவல்களின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் சாண்டில்யன். இன்றும் கூட அவரை சிலாகிக்காதவர்களே இல்லை. அவரது நாவல்கள் இன்றும் ஹாட் சேல்தான். கல்கியின்‘பொன்னியின் செல்வனை’ பேசுபவர்கள் சாண்டில்யனின் ‘கடல்புறா’வையும், ‘கன்னி மாட’த்தையும், ‘யவன ராணி’யையும் பேசிவிட்டே நகர்வார்கள்.அந்தளவுக்கு பிரம்மாண்டத்தை நாவல்களில் காட்டியவர். அவரின் சரித்திர நாவல்கள் ஒவ்வொன்றும் மாஸ்டர்பீஸ் ரகம். சுமார் ஐம்பது வரலாற்றுப் புதினங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அள்ளித் தந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல; சமூக நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பல தளங்களிலும் முத்திரை பதித்தவர்.சென்னை தி.நகர் மகாலட்சுமி தெருவில் இருக்கிறது அவர் வீடு. நூற்றாண்டு பழமை கொண்ட அந்த வீட்டிலிருந்துதான் அத்தனை வரலாற்றுப் புதினங்களையும் படைத்திருக்கிறார் சாண்டில்யன். ‘பரிமள ரங்கம்’ எனப் பெயர்ப் பலகை தாங்கிய அந்த வீட்டின் முன்பகுதியில் சாண்டில்யனின் இளைய மகன் பேராசிரியர் கிருஷ்ணன் வசித்து வருகிறார். பின்வீட்டில் மூத்தவர் பேராசிரியர் சடகோபன் குடும்பம் வசிக்கிறது.

‘‘இந்த வீடு தாத்தாவுடையது. நூறு ஆண்டுகள் பழமையானது. தாத்தாவுக்குப் பிறகு அப்பா பராமரிச்சார். அவருக்குப் பின் இந்த வீடு ரொம்ப சிதலமடைஞ்சதால 1996ல் நானும் அண்ணனும் இடிச்சிட்டு வீடுகள் கட்டினோம்...’’ என நினைவுகளைப் பகிர்ந்தார் பேராசிரியர் கிருஷ்ணன். ‘‘முதல்ல இந்த வீட்டை தாத்தா, அப்பாவின் நினைவா அப்படியே பராமரிக்கலாம்னு இருந்தோம். ஆனா, ரிப்பேர் செய்ய முடியாதுனு சொல்லிட்டாங்க.
 ஏன்னா, இந்த வீட்டை சுண்ணாம்புக் காரை, செங்கல் கொண்டு கட்டியிருக்காங்க. அதை மறுபடியும் புதுப்பிக்க ஆட்கள் இருப்பாங்களானு தெரியலன்னாங்க. அதனால, புதுசா கட்ட வேண்டிதாகிடுச்சு...’’ என்கிற பேராசிரியர் கிருஷ்ணன், சாண்டில்யனின் வாழ்க்கையை சுருக்கமாகச் சொன்னார்.  ‘‘அப்பா 1910ல் திருக்கோவிலூரில் பிறந்தார். அவரின் நிஜப்பெயர் பாஷ்யம். அப்பாவின் அப்பா, அதாவது என் தாத்தா டி.ஆர்.சடகோப அய்யங்கார், பிரிட்டிஷ் அரசுல தாசில்தாரா இருந்தார். என் பாட்டியின் பெயர் பூங்கோவில்வல்லி. தாத்தாவுக்கு அவ்வப்போது டிரான்ஸ்பர் ஆகும். அந்நேரம் மாயவரத்துல இடம் மாறி போறாங்க. அங்கிருந்து ஒரு கிமீ தூரத்துல திருஇந்தளூர்னு ஒரு ஊர் இருக்கு. அதுதான் எங்க பூர்வீகம். அங்க பரிமள ரங்கநாதர் கோயில் இருக்கு. அந்தக் கோயிலை ஒட்டின சன்னிதி தெருவில்தான் எங்க மூதாதையர்கள் இருந்தாங்க.

அப்பா சின்ன வயசுலயே சமஸ்கிருதம், தமிழ் ரெண்டு இலக்கியங்களையும் கத்துக்கிட்டார். பிறகு தாத்தாவுக்கு சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகுது. இங்க சைதாப்பேட்டையில் மாடல் ஸ்கூல்ல சேர்றார். அப்பதான் தாத்தா இந்த வீட்டைக் கட்டினார். அப்புறம், அப்பா திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இன்டர்மீடியட் படிக்கிறார்.
அங்க கிளைவ் ஹாஸ்டல்ல தங்கி ரெண்டு ஆண்டுகள் படிச்சார். ரெண்டாமாண்டுல அவருக்கு சுதந்திரப் போராட்டத்துல ஈடுபாடு வருது. தாத்தா பிரிட்டிஷ் சப்போர்ட்டரா இருக்கார். அப்பாவோ அவருக்கு மாறாக இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு சப்போர்ட் செய்றார்.
அப்ப ராஜாஜி சத்தியாக்கிரகம் பண்ண ஆட்களைத் தேர்ந்தெடுத்தார். அந்நேரம், ‘ஒரு பையன் இருக்கிற குடும்பம்னா வரக்கூடாது. ஒரு குழந்தைக்கு மேல் உள்ள குடும்பத்துல இருந்து வரலாம்’னு சொல்றாங்க. அது காங்கிரஸ் பாலிசி. இவர் வீட்டுக்கு ஒரே பையன். அப்பாவுக்கு ஒரு தங்கை மட்டும். அதனால, அப்பாவை அவங்க சேர்க்கல. அப்படியும் இவர் போகணும்னு நினைச்சார்.
அதனால படிப்பை விட்டுட்டார். இறுதித் தேர்வு எழுதினாரானு தெரியல. அதைப்பத்தின தகவல்கள் இல்ல. ஆனா, திருச்சியில் படிக்கிறப்ப நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டு இருக்கார். அதை கோல்டன் இயர்ஸ்னு எங்ககிட்ட சொல்வார். அப்புறம் அவருக்கு ஜர்னலிசத்துல ரொம்ப ஈடுபாடு வந்திடுச்சு. குறிப்பா கதை எழுதுறதுல அதீத ஆர்வம் ஏற்பட்டுச்சு.
நான் எழுத்தாளர் ஆனதற்கு ஏழு பேர் காரணம்னு சொல்வார். முதல்ல தாத்தா. அப்புறம், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியரா இருந்த ஃபாதர் காம்பர்ட். அடுத்து பெரியார். இவர் பெரியாரின் திராவிடன்ல வேலை செய்தார். பிறகு வெ.சாமிநாத சர்மா, கல்கி, ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸன், வித்வான் வே.லக்ஷ்மணன். இவங்களால்தான் பத்திரிகையாளனானேன்னு குறிப்பிடுறார்.
இதுல ‘திராவிடன்’ ஆசிரியரா இருந்த தோழர் சுப்ரமணியம்தான் அப்பாவை சிபாரிசு செய்து பெரியாரிடம் அழைச்சிட்டு போனார். பெரியார், திறமை இருப்பவரை ஊக்குவிக்கலாம்னு சொல்றார். தோழர் சுப்ரமணியம், ‘சும்மா கதை எழுது தம்பி’னு கட்டாயப்படுத்துறார். ‘திராவிடன்’ல, ‘சாந்தசீலன்’ சிறுகதையை எழுதுறார். அந்தக் கதை அப்பாவின் சொந்தக் கதை. ஒரு தாசில்தாருக்கும், தன் மகனுக்கும் நடந்த லட்சியப் போராட்டத்தைப் பற்றின கதை. அதனால, ‘காங்கிரஸ் கதையை எப்படி நம் பேப்பரில் போடலாம்’னு அங்க சில பிரச்னைகள் எழுது. அதை தோழர் சுப்ரமணியம் சமாளிச்சார்.
அப்ப உஸ்மான் ரோட்டுலதான் சாமிநாத சர்மா இருந்தார். கல்கி பக்கத்து தெருவுல இருக்கார். அவங்க இந்தச் சிறுகதையைப் பார்த்துட்டு நல்லாயிருக்குனு அப்பாவை தொடர்ந்து எழுதச் சொல்றாங்க. கல்கி, அப்பாவின் கதையை ‘ஆனந்த விகடனி’ல் பிரசுரிக்கிறார். சாமிநாத சர்மா ‘நவசக்தி’யில் அப்பாவின் கட்டுரைகளைப் போட்டார். இதுக்கிடையில் அப்பாவுக்கு திருமணமாகுது. அம்மா ரங்க நாயகிக்கு சொந்த ஊர் ஸ்ரீரங்கம். பிறகு, ‘சுதேசமித்திர’னில் அதன் ஆசிரியர்ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸன் சொல்லி பத்திரிகையாளரா வேலைக்குச் சேர்றார். இதுதான் ஆரம்பக்கட்டத்துல நடந்த விஷயங்கள்.
நாங்க மொத்தம் ஏழு குழந்தைகள். மூத்தது அக்கா. அப்புறம், அண்ணா சடகோபன். அப்புறம், மூணு அக்காக்கள். ஆறாவதா நான். எனக்குப் பிறகு ஒரு தங்கச்சி. எங்களுடனே எங்க அத்தையும் இருந்தாங்க. நாங்க கூட்டுக்குடும்பமா ஒண்ணா இருந்தோம். அப்பாதான் எல்லாரையும் கவனிச்சார். எங்களை நல்லா படிக்க வச்சார். நானும், அண்ணனும் டி.ஜி.வைஷ்ணா கல்லூரியில் பேராசிரியர்களா இருந்தோம். நான் கல்லூரி முதல்வரா இருந்து ஓய்வுபெற்றேன்...’’ என்கிற கிருஷ்ணன், ‘அப்பாவின் வாழ்க்கையில் ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்கள் இருக்கு’ என்கிறார்.
‘‘அந்தக் காலத்துல ‘தி இந்து’, ‘மெட்ராஸ் மெயில்’ ஆகிய இரண்டையும்தான் பத்திரிகைகளா பார்த்திருக்காங்க. ஐகோர்ட் ரிப்போர்ட், கவர்னர் ரிப்போர்ட் எல்லாம் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கே முன்னுரிமை தந்தாங்க.
அதை அப்பாதான் பிரேக் செய்தார். தமிழ் நிருபர்களுக்கும் முன்னுரிமை அளிக்கணும்னு வாதாடியிருக்கார். அடுத்து, இந்தி ரொம்பத் திணிக்கப்பட்டிருக்கு. அதையும் அப்பா குறிப்பிட்டு இருக்கார். இந்தி ஆதிக்கம் பலமாக இருந்ததுனு சொல்றார். மகாத்மா காந்தி சென்னை வந்தப்ப ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட இந்தியில் பேசியிருக்காங்க. இந்தியில் பேசினதுக்கு அப்பா எழுந்து ‘ஆங்கிலத்தில் பேசினால் எல்லோருக்கும் புரியும். ஏன் இப்படி இந்தியைத் திணிக்கிறீங்க’னு கேட்டிருக்கார். கடைசிவரை இந்தி திணிக்கப்பட்டதுனுதான் அப்பா ஃபீல் பண்ணினார். அப்பாவுக்கு தீரர் சத்தியமூர்த்தி மீதும் காமராசர் மீதும் நிறைய ஈடுபாடு உண்டு. அப்ப சென்னை மாகாணத்திற்கு பிரதம மந்திரியாக சத்தியமூர்த்தி வருவார்னு எதிர்பார்த்திருக்காங்க. ஆனா, ராஜாஜி வர்றார். அதனால, அப்பா அதை அநீதினு எழுதுறார். அதுக்கு காந்திஜி காரணமாக இருந்தாலும் அநீதி அநீதிதான்னு சொல்றார். இந்தச் சம்பவத்தை மனசுல வச்சுதான் ‘பலாத்காரம்’னு நாவல் எழுதினார்.
பிறகு ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையின் நிருபராக சில காலம் இருந்தார். அப்பாவுக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மூணுமே நல்லா தெரியும். மூன்றிலும் புலமை வாய்ந்தவர். இடையில், சினிமாவில் கோலோச்சினார். வி.நாகையா, பி.நாகிரெட்டி அவங்கெல்லாம் ரொம்ப குளோஸா இருந்தாங்க. ராம்நாத் இயக்குநரா இருந்த ‘சுவர்க்க சீமா’ படத்திற்கு திரைக்கதை எழுதினார்.
நாகையாவின் ‘தியாகையா’ படத்திற்கும் திரைக்கதை எழுதினார். அப்புறம், ‘அம்மா’னு ஒரு படம். அது 50 வாரங்கள் ஓடியிருக்கு. சினிமாவில் கதையெழுதும் வேலை அதிகமானதால ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகை வேலையை ராஜினாமா செய்றார்.
பிறகு, மறுபடியும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் சேர்றார். அங்க, ‘வார அனுபந்தம்’னு வாரப் பத்திரிகையை ‘ஞாயிறு மலர்’னு மாற்றி அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். இதனுடனே நாவல்கள் எழுதுறார். ‘அமுதசுரபி’யில் அப்பா எழுதுறதைப் பார்த்து ‘குமுதம்’ இதழில் எழுத வச்சாங்க. அதுலதான் ‘கன்னிமாடம்’, ‘மன்னன் மகள்’, ‘கடல்புறா’, ‘யவன ராணி’னு முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் வந்தது. அப்புறம், ‘கல்கி’யில் எழுதினார். பிறகு, பாவை சந்திரன் ஆசிரியரா இருந்தப்ப ‘குங்குமத்’தில் எழுதினார். கலைஞர் அவர்களும், முரசொலி மாறன் அவர்களும் ‘குங்குமத்’துல எழுத ஊக்கப்படுத்தினாங்க. ‘அலை அரசி’தான் அவர் எழுதின கடைசி நாவல்.
அப்பாதான் ஜர்னலிஸ்ட்டுக்கு யூனியன் வேணும்னு சென்னை ஜர்னலிஸ்ட் அசோசியேஷனை ஆரம்பிச்சார். ரிச்சி தெருவில் அந்த சங்கத்திற்கான கட்டடம் கட்ட முதல்முதலாக பணம் வசூல் செய்ய ஏற்பாடு செய்தவர் அப்பாவும் அப்பாவுடன் பணியாற்றிய நீலம் என்பவரும்தான். அவர் சினிமாவில் எடிட்டிங்கில் இருந்து பல விஷயங்கள் கற்றிருந்ததால, ‘பர்த் ஆஃப் ஏ நியூஸ் பேப்பர்’னு பத்திரிகை உற்பத்தி பற்றி ஒரு ஆவணப்படம் தயாரிச்சார். இந்தியாவிலேயே பத்திரிகை உற்பத்தி பற்றி தயாரிக்கப்பட்ட முதல் செய்திப்படம் அதுதான்.
அப்பா கடைசி ஆறு மாதங்கள் ஸ்ட்ரோக்ல படுத்திருந்தார். செப்டம்பர் 11ம் தேதி 1987ல் மறைந்தார்...’’ என வேதனையாகக் குறிப்பிடுகிறார் கிருஷ்ணன். ‘‘இந்த வீட்டைச் சுற்றிலும் அப்ப மரங்கள் நிறைய இருந்தது. பின்புறம் பலா, வாழை, சப்போட்டா, பப்பாளி, தென்னைனு பெரிய தோட்டம் வச்சிருந்தோம்.
அதை அப்பாதான் பராமரிச்சார். அவருக்குத் தோட்ட வேலை ரொம்பப் பிடிக்கும். வாசல்ல பன்னீர் மரமும், பாரிஜாதமும் இருக்கும். இப்ப பாரிஜாதம் மரம் மட்டும் வச்சிருக்கோம். அந்த டேபிள்ல உட்கார்ந்துதான் எல்லா நாவல்களும் எழுதினார்.
அவர் வழக்கமா காலை நான்கு மணிக்கு எழுந்திடுவார். எவ்வளவு தாமதமாக படுத்தாலும் அந்த நேரத்துக்கு எழுந்திடுவார். எங்க அம்மா ரங்கநாயகி காப்பி போட்டு வச்சிடுவாங்க. நாலரைக்கெல்லாம் எழுத உட்கார்ந்திடுவார். ஏழு மணிக்கெல்லாம் முடிச்சிடுவார்.
அவருக்கு ஹோட்டல்ல சாப்பிட ரொம்பப் பிடிக்கும். இங்க தி.நகர் சோஷியல் கிளப் இருக்கு. அங்க ஒரு கேண்டீன் இருக்கும். அதை டி.எஸ்.சி கேண்டீன்னு சொல்வாங்க. அங்க காப்பி ரொம்ப நல்லாயிருக்கும். அப்புறம், பாண்டிபஜார்ல கீதா கபே, இங்க நாதன்ஸ் கபே, தேவி விலாஸ் ரெண்டு ஹோட்டல்கள் ரொம்ப பாப்புலர். ஆனா, அவருக்கு ரொம்ப பிடிச்சது உட்லண்ட்ஸ் டிரைவிங் ரெஸ்டாரண்ட்தான்.
அவருக்கு நண்பர்களும் அதிகம். அதுல தமிழ்வாணன் ரொம்ப நெருக்கம். அவர் கூடவே இருப்பார். அவர் கார் எடுத்திட்டு வந்திடுவார். ரெண்டு பேரும் சேர்ந்துபோய் சாப்பிடுவாங்க. சில நேரங்கள்ல நானும், லேனாவும் போயிருக்கோம். அப்புறம், ‘சுதேசமித்திரன்’ ஸி.ஆர்.னிவாசன் மகன் ஸி.எஸ்.நரசிம்மனும் தினமும் அழைச்சிட்டு போவார். பெரும்பாலும் ஹோட்டல்ல சாப்பிடுவார். மதியம் மட்டும்தான் வீட்டுச் சாப்பாடு.
கலைஞர், எம்ஜிஆர்னு எல்லார்கிட்டயும் நண்பரா இருந்தார். எம்ஜிஆர் ரெண்டு முறை வீட்டுக்கு வந்திருக்கார். அப்பாவின் ‘மலைவாசல்’ நாவலை ஏ.பி.நாகராஜனை வச்சு பண்ணணும்னு நினைச்சார். ஏ.பி.நாகராஜன் திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதிட்டார். அதேபோல ‘ஜீவபூமி’ சிவாஜி கணேசனை வச்சு ஜெய்ப்பூர்ல அஞ்சு சீன் ஷூட் பண்ணினாங்க. ஆனா, எல்லாம் டிராப் ஆகிடுச்சு. கமலுக்கு ஒரு படம் பண்ணினாங்க. டிஸ்கஷன் எல்லாம் போச்சு. ஆனா, அதுவும் நடக்கல. சினிமா அவருக்கு செட்டாகல.
அப்பா உடல்நிலை சரியில்லாதபோது கலைஞர் வந்து பார்த்திட்டு போனார். அவர் இறந்தப்ப ‘முரசொலி’யில் முதல்பக்கம் பெரிசா போட்டு கவர் பண்ணினாங்க. இன்னைக்கு எங்க குடும்பத்துல இருந்து யாரும் அப்பா மாதிரி எழுத்தாளர் ஆகல. இப்ப அவரின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைப்பாளரா இருக்கார். ‘ஜெய்பீம்’, ‘சதுரங்க வேட்டை’, ‘முண்டாசுப்பட்டி’னு நிறைய படங்களுக்கு இசையமைச்சிருக்கார்...’’ சந்தோஷமாகச் சொல்கிறார் பேராசிரியர் கிருஷ்ணன்.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்
|