ஒரு நாயின் பசியைப் போக்க ஒரு ருபாய் போதும்! சொல்கிறார் இந்த Dog Lover



அக்‌ஷயா ரவிச்சந்திரன் எங்கே சென்றாலும் அந்தப் பகுதி தெரு நாய்கள், பூனைகள் என சுற்றி வளைத்து அன்பைக் கொட்டுகின்றன. கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்த்து எங்கிருந்தாலும் ஓடி வந்து நிற்கின்றன. அதற்குக் காரணம் அக்‌ஷயா கொடுக்கும் உணவும் அதைக் காட்டிலும் அதிகமான அன்பும்தான். தினம் தினம் வாளி நிறைய சாதத்துடன் சென்னையின் முக்கிய இடங்களில் உள்ள தெரு நாய்களுக்கு சாப்பாடு போடுவதுதான் இவரின் பிரதான வேலை.

‘‘எனக்கே ஆச்சரியமா இருக்கு... இங்க இருந்து கேரளாவுக்கு ஒரு டிரிப் போயிருந்தேன். எங்க ஃபிரெண்ட்ஸ் கூட்டத்தை எல்லாம் விலக்கிட்டு வந்து ஒரு நாய் என்கிட்ட சாப்பாடெல்லாம் கேட்கலை. வெறுமனே தடவிக் கொடுத்து ‘என்கூட விளையாடு’ என்கிற மாதிரி ஒரு தருணம் அது. பிஸ்கட் கொடுத்தாகூட சாப்பிடலை. தடவிக் கொடுத்த கொஞ்ச நேரத்துல கிளம்பிட்டான்...’’ பேசிக்கொண்டிருக்கும் அக்‌ஷயாவை பேசவிடாமல் சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரையோரமுள்ள அத்தனை நாய்களும் விளையாடும் படி கூப்பிட்டுக் கொண்டிருந்தன.
‘‘இவ பேரு கஸ்தூரி... ரொம்ப அன்பானவ... நிறைய டைம் குட்டி போட்டதால அருகில் இருக்கிற மருத்துவமனையில் கொண்டு போய் சிகிச்சை செய்தாச்சு.

இவன் இடுப்பை அழகா வளைச்சு நடப்பான்... அதனாலேயே இவனை ‘டிம்பிடிப்பி’ன்னு கூப்பிடுவேன்...’’ இப்படி அங்கே இருக்கும் 100 நாய்களாக இருந்தாலும் அத்தனை பேரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். நமக்கும் அறிமுகம் செய்து வைத்துக்கொண்டே அக்‌ஷயா தன்னைப் பற்றி பேசத் தொடங்கினார். ‘‘நான் அக்‌ஷயா ரவிச்சந்திரன். சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கேன். எனக்கு சொந்த ஊரு நெய்வேலி. பி.காம் முடிச்சிருக்கேன். வேலைக்காக 2016ல் சென்னை வந்தேன். அப்போதிருந்து சென்னைதான் வாழ்க்கை.

சின்ன வயதிலிருந்து நாய்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க ஏரியாவில் கூட பிஸ்கட், ஸ்நாக்ஸ் இப்படி ஏதாவது வாங்கி போட்டுக்கிட்டே இருப்பேன். அந்த முயற்சி இப்ப இங்க வந்து நிற்குது. வேலைக்கு நடுவுல எங்க டாக்ஸ் கேம்ப் போட்டாலும் சரி, வாலன்டியர்கள் கூப்பிட்டாலும் சரி, முதல்ல ஆஜராகிடுவேன். தெருவோரம் நாய்களுக்கு சிகிச்சை, பராமரிப்பு, அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கிறது... இப்படி அப்பப்ப செய்துட்டு இருந்தேன். அதுவரையிலும் நானே செலவு செய்து என்னால முடிஞ்ச சாப்பாடு, பிஸ்கட்... இப்படிதான் கொடுத்துட்டு இருந்தேன்.

2019ல் ஒரு நண்பர் மூலமா நாய்களுக்காகவே சாப்பாடு செய்கிற ஒரு அமைப்பு பற்றி தெரிஞ்சது. அந்த அமைப்புக்கு வாலன்டியராவே நான் போனேன். தினம் தினம் ஒரு பெரிய அண்டா நிறைய சாப்பாடு செஞ்சு வச்சிருப்பாங்க. ஆனா, கொண்டு போய் கொடுக்கறதுக்கு பெரிய அளவில் ஆள் பலம் அவங்ககிட்ட இல்ல. ஏன்னா எல்லாருக்கும் சொந்த வாழ்க்கை... வேலை இப்படி நிறைய கமிட்மென்ட் இருக்கும். அதனாலேயே அவங்களால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மட்டுமே சாப்பாடு கொடுப்பாங்க. அந்த வேலையைத்தான் நான் எடுத்துக்
கிட்டேன்.

அவங்க சாப்பாடு செய்து வச்சு நல்லா ஆறின பிறகு அதை நான் ஒரு வாளி நிறைய நிரப்பி, உடன் கரண்டியும் எடுத்துக்குவேன். கூடவே சாப்பாடு கட்டிக் கொடுக்கற சில்வர் காகிதங்கள் அல்லது தட்டுகள் கையில வச்சுப்பேன். என் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தா எங்கே எல்லாம் தெருநாய்கள் கண்ணில் படுதோ அங்கே எல்லாம் சாப்பாடு வச்சுகிட்டே போவேன். அதுல அதிகமா மெரினா பீச்... பெசன்ட் நகர் பீச்... இங்கதான் தெருநாய்கள் கொஞ்சம் அதிகம். ஒரு சில நேரங்களில் இங்கேயே வந்து சாதத்தை வச்சிடுவேன்...’’ என்னும் அக்‌ஷயா, தான் இதற்காக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவு செய்கிறார் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘ஒவ்வொரு மாசமும் ரூ.1000 இதுக்காகவே நான் எடுத்து வைச்சிடுவேன். சாப்பாடு அவங்க செய்யலைன்னாலும் நிறைய பிஸ்கட்களாவது போட்டுட்டு போயிடுவேன். எங்க போனாலும் என்னுடைய ஹேண்ட் பேக்கில் ஒரு பெடிகிரி பாக்கெட்டும், சில பிஸ்கட் பாக்கெட்களும் கண்டிப்பா இருக்கும்...’’ சொல்லிக் கொண்டே அக்‌ஷயா சில்வர் காகிதங்களை விரித்து வைத்து சாப்பாடு வைக்க... நாய்கள் அவ்வளவு சந்தோஷமாக சாப்பிட ஆரம்பித்தன.

‘‘2020 - 21... ரெண்டு வருஷங்களும் கொரோனா ஊரடங்கு காரணமா ரொம்ப கஷ்டப்பட்டது இந்த தெரு நாய்கள்தான். காரணம், எங்கேயும் மக்கள் கூட்டம் கிடையாது. அதனாலேயே இவங்களுக்கும் சாப்பாடு கிடைக்கல. அந்த வேளைதான் இன்னமும் நாங்க அதிகமா சாப்பாடு செய்து கொண்டுவந்து போட ஆரம்பிச்சோம். அதிகமா இரவு நேரங்களில் சாப்பாடு போட ஆரம்பிச்சதுக்கு முக்கிய காரணம் பகல் முழுக்க எப்படியாவது எங்கேயாவது இவங்களுக்கு சாப்பாடு கிடைச்சுடும்... ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் அந்த இரவுப் பொழுது அவங்களுக்கு வெறும் வயிறா போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சோம்.

அதனால்தான் அந்த ரெண்டு வருஷங்களும் அதிகமா இரவு நேரங்களில் சாப்பாடு கொடுத்தோம்...’’ என்னும் அக்‌ஷயா, இதில், தான் மட்டுமல்ல... நிறைய மக்கள் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார். ‘‘இந்த மாதிரி அமைப்புகள் நிறையவே சென்னை முழுக்க இருக்கு. நாய்கள் மட்டுமில்ல, ஒருசிலர் பறவைகளுக்கு சாப்பாடு கொடுக்கவே காலை நேரத்துல இங்க வருவாங்க.  ஒரு சிலர் தெருவுல இருக்குற பூனைகளை மட்டும் டார்கெட் செய்வாங்க. அவங்க, பால் விஸ்காஸ்... இந்த மாதிரி எடுத்துக்கிட்டு கிளம்புவாங்க.

இதில் அதிகம் டாக் ஃபீடர்கள்தான். இப்ப நான் சாப்பாடு எடுத்துட்டு வர்ற அமைப்புல நிறைய டோனர்கள் இருக்காங்க. அவங்க மாதம்தோறும் இவ்வளவு அரிசி பணம்னு கொடுத்திடுவாங்க. ஒரு சிலர் பிறந்த நாள், திருமண நாள், முக்கியமான விசேஷங்களுக்கு பணமாவோ அரிசியாவோ, இல்ல தேவைப்பட்ட உணவுப் பொருளாகவோ கொடுத்துடுவாங்க.
அதுல இவங்க சமைச்சு வச்சுடுவாங்க. என்ன மாதிரி இருக்கிற டாக் ஃபீடர்கள் அந்த சாப்பாட்டை நாய்களுக்கு விநியோகம் பண்ணிடுவோம்...’’ என்னும் அக்‌ஷயா, மாதம் ஒரு ரூபாய் கொடுத்தால் கூட போதும்... அது ஒரு நாயின் ஒருவேளை பசியையாவது போக்கும் என்கிறார்.

‘‘அரிசி, சிக்கன் கழிவுகள், முட்டை... இதெல்லாம் சேர்த்துதான் சமைச்சு வைப்பாங்க. நீங்க இவ்வளவுதான் தரணும் அப்படிங்கறது எல்லாம் இல்ல... வெறும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கூட போதும். அதுல ஒரு சின்ன வர்க்கி வாங்கிப் போட்டா கூட அந்த சமயம் ஒரு நாயின் பசியைப் போக்கலாம். உங்க ஏரியாவுல, உங்க தெருவுல இருக்கும் ரெண்டு, மூணு டாக்ஸை நீங்க பார்த்துக்கிட்டாலே அவங்களுக்கு பெரிய உதவியாய் இருக்கும். அதேபோல எங்க ஒரு நாளைக்கு சோறு போட்டா நாளுக்கு நாள் நாய்கள் வரத்து அதிகமாகிடுமோ என்கிற பயமே வேண்டாம்.
 
ஏன்னா நாய்களைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப கட்டுப்பாடா இருக்கும். ஒரு தெருவில் நீங்க சாப்பாடு கொடுக்குறீங்கனா அந்தத் தெரு நாய்களைத் தவிர்த்து வேறு எந்த தெரு நாய்களும் அந்த தெருவுக்குள்ள நுழையாது. அப்படியான ஒரு கட்டுப்பாடுகளோடுதான் இவங்க எப்பவுமே இருப்பாங்க...’’ சொல்லிக் கொண்டே அக்‌ஷயா சாப்பாடு வைக்க... நாய்களும், காக்கா, புறாக்கள் என அத்தனையும் அங்கே சந்தோஷமாகக் குவிந்தன.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்