காபி டேபிள்



‘ஆர்ஆர்ஆர்.’ படத்துக்கு கூகுள் கவுரவம்!

பிரம்மாண்டமான படம் என்றால் இந்தியாவில் அது ராஜமெளலிதான் என்பது போல் அடுத்தடுத்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இந்திய பாக்ஸ் ஆபீஸில் ஒட்டுமொத்த வசூல் நிலவரப்படி ராஜமெளலியின் ‘பாகுபலி’ படங்களும், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படமும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்திருக்கின்றன.இந்நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்துக்கு இப்பொழுதும் ஓடிடி-யில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தை ஓடிடி-யில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.

இதற்கெல்லாம் மேலாக, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்துக்கு புதிய கவுரவம் ஒன்றை கூகுள் அளித்திருக்கிறது. அதாவது இணையத்தில் பிரபல தேடல் தளமான கூகுள்.காம் தளத்தில் ‘RRR’ என்று டைப் செய்தால் முதலில் ஒரு குதிரை பாய்ந்து ஓடி வர... அதன் பின்னாலேயே ஒரு பைக்கும் விர்ரூம்ரூம் என்று வேகமெடுத்து வருகிறது.ஒரு இந்தியப் படத்துக்கு உலகளாவிய தேடல் தளமான கூகுள் அளித்திருக்கும் இந்த கவுரவத்தினால் உச்சி குளிர்ந்து போய் இருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

பழைய படம்... புது வைரல்!

இயக்குநர் வெற்றிமாறன் டைரக்டர் ஆவதற்கு முன் ‘காதல் வைரஸ்’ என்னும் படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார். இப்படத்தை கதிர் இயக்கியிருந்தார்.அப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் நடித்த காட்சியின் புகைப்படம் இப்போது வைரலாகி வருது.

இந்தியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா..?

சர்வதேச அளவில் எந்த நாட்டு மக்கள் அதிக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைப்பற்றி ஐநா சபையின் Sustainable Development Solutions Network (SDSN) அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வின்படி, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 136வது இடத்தில் உள்ளது. மொத்தமுள்ள நாடுகளில் 146 நாடுகளில் மட்டுமே இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் பின்லாந்து நாடு முதலிடத்தில் இருக்கிறது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் 121வது இடத்திலும், இலங்கை 127வது இடத்திலும், நேபாளம் 84வது இடத்திலும், வங்கதேசம் 94வது இடத்திலும் உள்ளன.

அட்றாசக்க... வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!

அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறிவிட்ட வாட்ஸ்அப் செயலியின் புதிய மூன்று அப்டேட்ஸ் என்ன தெரியுமா..?

யாருக்கும் தெரியாமல் குரூப்பை விட்டு வெளியே போகலாம்...ஆம். இதுதான் முதல் அப்டேட். பலருக்கு இது ஒரு குடைச்சலாக இருந்தது. நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருப்பவர்கள் பல வாட்ஸ்அப் குரூப்புகளில் இருப்பர். சில நேரம் அது போல ஏதாவது குரூப்பில் இருந்து வெளியே வந்துவிட்டால், நம் பெயரோடு, குரூப்பில் இருந்து வெளியேறிவிட்டார் என்று அனைவருக்கும் தெரியும்படி வாட்ஸ்அப் காட்டிக் கொடுத்துவிடும்.இந்த புதிய அப்டேட்டுக்குப் பிறகு, நீங்கள் குரூப்பை விட்டு வெளியேறுவது அந்த குரூப் நண்பர்களுக்குக் கூட தெரியாது. நைஸாக எஸ் ஆகிவிடலாம்!இரண்டாவது அப்டேட், இனி நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யாருக்கெல்லாம் காட்ட வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும்.

இதுநாள்வரை வாட்ஸ்அப்பில் நுழைந்தவுடன் நம் பெயருக்கு கீழே ‘ஆன்லைன்’ என்ற வாசகம் ஒளிர்ந்து காட்டிக்கொடுத்துவிடும். ஆனால், இனி அப்படியிருக்காது. முன்பு நமது வாட்ஸ் அப் முகப்பு புகைப்படத்தை (profile picture) நமது நண்பர்கள் பார்க்கலாம் அல்லது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என மறைத்து வைக்கலாம். இப்போது, எந்த நபர்களுக்கெல்லாம் தெரிய வேண்டும் என்பதை நம்மால் தனித்தனியே தேர்வு செய்ய முடியும். அதேபோல் இப்போது நாம் ஆன்லைனில் வந்தால் அதையும் யார் யாருக்கெல்லாம் தெரிவிக்கலாம் என்பதையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

மூன்றாவது அப்டேட், ஒரு முறை காணும் மெசேஜ்களை ஸ்கிரீன் ஷாட் ( Screenshot ) எடுக்க முடியாது என்பது.இதற்குமுன் ஒருமுறை மட்டும் காண்பதற்கு சில மெசேஜ்களை நம்மால் அனுப்ப முடியும். இப்படி ஒருமுறை காணும் மெசேஜை பெறுபவர், அந்த படத்தையோ, வீடியோவையோ தனது மொபைலில் டவுன்லோட் பண்ண முடியாது என்றாலும் அதற்கு இணையாக ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும்.புது அப்டேட்படி இதுபோல ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை வாட்ஸ்அப் தடை செய்யும். இது போன்ற அப்டேட்டுகளால், வாட்ஸ்அப்பில் நமது தனியுரிமை (privacy) கண்டிப்பாக அதிகரிக்கும் என்கின்றனர்.

தொகுப்பு: குங்குமம் டீம்