Must Watch



டார்லிங்ஸ்

‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி பாராட்டுகளையும், பார்வைகளையும் அள்ளிக்கொண்டிருக்கும் இந்திப் படம், ‘டார்லிங்ஸ்’. பத்ருவை காதலித்துத் திருமணம் செய்கிறான் ஹம்ஷா. அவர்கள் வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் ஒரு குடியிருப்பில் தனியாக வசிக்கிறார் பத்ருவின் அம்மா.  பத்ருவுக்கும், அம்மாவுக்கும் நெருக்கமான நட்புடன் இருக்கிறான் ஜுல்பி. தினமும் குடித்துவிட்டு பத்ருவை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறான் ஹம்ஷா.  

எப்படியாவது காதல் கணவனைக் குடிப்பழக்கத்திலிருந்து மீட்டு, நல்ல மனிதனாக மாற்றிவிடலாம் என்று பத்ரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஹம்ஷா திருந்துவதாக இல்லை. ஹம்ஷா குடித்துவிட்டு பத்ருவைத் தாக்கும் விசயம் ஜுல்பிக்குத் தெரிய வர, அவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடுகிறான். ஹம்ஷாவைக் கைது செய்து காவல் துறை விசாரிக்கிறது. பத்ருவிடம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம்; குடியை விட்டுவிடுகிறேன் என்று கெஞ்சி வெளியில் வந்துவிடுகிறான் ஹம்ஷா.

பத்ரு கர்ப்பமடைகிறாள். ஆனால், ஹம்ஷா திருந்தவில்லை. மட்டுமல்ல; தன் மீது யார் புகார் தெரிவித்தது என்று அவனை தொந்தரவு செய்கிறான். பத்ரு எப்படி பதிலடி கொடுக்கிறாள் என்பது மீதிக்கதை. குடும்ப வன்முறை குறித்த முக்கியமான படமாக மிளிர்கிறது ‘டார்லிங்ஸ்’. பத்ருவாகக் கலக்கியிருக்கிறார் அலியா பட். படத்தின் இயக்குநர் ஜஸ்மீட் கே. ரீன்.

மலையன் குஞ்சு

கேரளாவில் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்கள் மரணமடைவதும் உடைமைகளை இழப்பதும் நடந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலச்சரிவை மையமாக வைத்து வெளியான மலையாளப்படம், ‘மலையன்குஞ்சு’. குடும்பத்தில் நடந்த சில சம்பவங்களால் கடுமையான மனிதனாகிவிட்டான் அனிகுட்டன். யாரிடமும் சிரித்துக்கூட பேசமாட்டான்.
எலெக்ட்ரிக் சாதனங்களைப் பழுது பார்ப்பதில் கில்லாடி. எப்போதும் எலெக்ட்ரிக் சாதனங்களைப் பழுது பார்த்துக்கொண்டு தனது அறையிலே மூழ்கிக் கிடக்கிறான்.
அம்மாவிடம் கூட அதிகமாக அவன் பேசுவதில்லை. அவன் வேலை செய்யும்போது பக்கத்து வீட்டு குழந்தை அழுகிறது.

குழந்தையின் அழுகையைக் கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியாமல் பக்கத்து வீட்டினரிடம் சண்டை போடுகிறான். இந்நிலையில் அவன் வசிக்கும் மலைப்பகுதியில் விடாமல் மழை பெய்கிறது. கடும் மழையால் நிலச்சரிவு ஏற்பட, அதில் மாட்டிக்கொள்கிறான் அனிகுட்டன். நிலச்சரிவில் இருந்து அனிகுட்டன் பிழைத்தானா என்பதே கிளைமேக்ஸ். நிலச்சரிவின்போது நிகழும் உயிர்ப் போராட்டத்தை நம்முன் நிறுத்துகிறது இந்தப் படம். அனிகுட்டனாக வாழ்ந்திருக்கிறார் பகத் பாசில். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்துக்கு பலம். மகேஷ் நாராயணன் திரைக்கதை எழுத, படத்தை இயக்கியிருக்கிறார் சஜிமோன் பிரபாகர்.

19 (1) (a)

‘ஹாட்ஸ்டாரி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் மலையாளப் படம், ‘19 (1) (a)’. ஓர் இளம் பெண் தந்தையுடன் வசித்து வருகிறாள். அவளுக்கும் தந்தைக்கும் இடையில் நெருக்கமான உறவு இல்லை. ஊருக்கு வெளியே ஒரு ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறாள் அந்தப் பெண். காலையில் வந்து கடையைத் திறப்பது, எப்போதாவது வாடிக்கையாளர் வரும்போது ஜெராக்ஸ் எடுத்துக் கொடுப்பது, வீட்டிலிருந்து கொண்டுவந்த மதிய உணவைத் தோழியுடன் சேர்ந்து சாப்பிடுவது, இரவானதும் கடையை மூடிவிட்டு வீட்டுக்குப் போவது என்று அவளது நாட்கள் ஒரே மாதிரி செல்கின்றன.

ஒரு நாள் காலைப் பொழுதில் எழுத்தாளர் ஒருவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக கையெழுத்துப் பிரதியைக் கொண்டு வருகிறார். கடையை மூடுவதற்குள் ஜெராக்ஸ் எடுத்து வைக்கச் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார் அந்த எழுத்தாளர். அந்தப் பெண்ணும் கையெழுத்துப் பிரதியை ஜெராக்ஸ் எடுத்துவிட்டு எழுத்தாளருக்காகக் காத்திருக்கிறாள்.

அவர் வரவே இல்லை. கடையிலே தங்கிவிடுகிறாள். அடுத்த சில நாட்களில் எழுத்தாளர் கொல்லப்பட்ட செய்தி தீ போல பரவுகிறது. சூடு பிடிக்கிறது திரைக்கதை.
எழுத்தாளராக விஜய் சேதுபதியும், இளம் பெண்ணாக நித்யா மேனனும் கச்சிதம். படத்தின் இயக்குநர் இந்து வி.எஸ்.

13 லைவ்ஸ்

ஓர் உண்மைக்கதையை எப்படி திரைப்படமாக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது ‘தேர்ட்டீன் லைவ்ஸ்’. ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி அப்ளாஸை அள்ளிக்கொண்டிருக்கிறது இந்த ஆங்கிலப்படம். ஜூன் 23, 2018ம் வருடம். ஜூனியர் கால்பந்தாட்டக் குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்கள் - 11 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் - இவர்களுடன் 25 வயதான உதவிப்பயிற்சியாளர் என 13 பேரும் சேர்ந்து தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் மலைக்குகைக்கு சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அவர்கள் குகைக்குள் சென்றபிறகு கன மழை பெய்து வெள்ளம் பெருகுகிறது. குகையிலிருந்து வெளியே செல்வதற்கான எல்லா பாதைகளும் தடைபடுகின்றன. குகைக்குள் 13 பேரும் மாட்டிக்கொண்டது உலகின் முக்கிய செய்தியாகியிருக்கிறது. அவர்களை மீட்கும் போராட்டம் திரைக்கதையாக விரிகிறது. ஒரு வரலாற்று நிகழ்வை அருகிலிருந்து பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி சீட் நுனிக்கே கொண்டு செல்கிறது இந்தப் படம்.

நடிகர்கள் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக செய்திருக்கின்றனர். உண்மைக்கதைகளை படமாக்குவதில் விற்பன்னரும், ‘ஏ ப்யூட்டிஃபுல் மைண்ட்’ படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றவருமான ரான் ஹோவர்டுதான் இப்படத்துக்கு டைரக்டர்.

தொகுப்பு: த.சக்திவேல்