லேட்டஸ்ட்... கேட்ஜெட்ஸ்



சானிடைசர் டிஸ்பென்சர்

இன்று வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டது சானிடைசர். அலுவலகம், மால், தியேட்டர், மருத்துவமனை... என எங்கே சென்றாலும் சானிடைசரைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதனால் கொரோனா தொற்று ஆரம்பித்த நாட்களிலிருந்து சானிடைசரின் சந்தை பல மடங்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.

இந்நிலையில் ‘கென்ட்’ நிறுவனம் ‘டச்லெஸ் சானிடைசர் டிஸ்பென்சர்’ என்ற புரொடக்ட்டை சந்தையில் இறக்கியிருக்கிறது. இன்பிராரெட் சென்சார் இருப்பதால் டிஸ்பென்சரின் முன் கை நீட்டினாலே போதும். ஆட்டோமேட்டிக்காக சானிடைசர் உங்களின் உள்ளங்கையில் விழும். தேவையான அளவு விழுந்த பிறகு அதுவே நின்றுவிடும். நீங்கள் டிஸ்பென்சரை தொட வேண்டிய அவசியமே இல்லை.

அதனால் ரொம்பவே சுகாதாரமானது இந்த புரொடக்ட். மட்டுமல்ல, சானிடைசர் விழும் வேகத்தை நம் விருப்பப்படி வைத்துக்கொள்ளலாம் என்பது இதில் ஹைலைட்.
இதை சுவரில் மாட்டிக்கொள்ளலாம்; மேசையின் மீதும் வைத்துக்கொள்ளலாம். மூன்று ‘AA’ பேட்டரியால் இயங்குகிறது. இந்த புரொடக்ட்டுடன் ஒரு 350 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கன்டெய்னர் இருக்கும். அதில் நமக்குப் பிடித்தமான சானிடைசரை ஊற்றி டிஸ்பென்சருடன் பொருத்த வேண்டும். அந்த கன்டெய்னரை எடுத்து சுத்தம் செய்வதும் சுலபம். இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.4950.

நவீன ரௌட்டர்

நெட்வொர்க் வேகத்தை அதிகரிப்பதற்காகவும், இண்டர்நெட்டின் வேகத்தை சீராகப் பராமரிக்கவும் நவீன ரௌட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது ‘மீ’ நிறுவனம். ‘ஸ்மார்ட் ரௌட்டர் 4 சி’ என்பது இந்த மாடலின் பெயர். 300 எம்பிபிஎஸ் வேகத்தில் எந்த வித தடங்கலும் இல்லாமல் வீடியோக்களைப் பிளே செய்யவும், பிரவுசிங் செய்யவும் இந்த ரௌட்டர் உதவுகிறது. இதற்காகவே இதில் நான்கு ஆண்டனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதைப் பொருத்தியவுடன் ‘மீ ஒய்- பை ஆப்’பை டவுன்லோடு செய்வது அவசியம்.

அந்த ஆப்பின் மூலம் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் நெட்வொர்க்கை கண்காணிக்க முடியும். குழந்தைகளின் இண்டர்நெட் பயன்பாட்டைப் பெற்றோர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஒருவேளை வீட்டிலுள்ள ரௌட்டரை ஆப் செய்யாமல் அலுவலகம் வந்துவிட்டீர்கள் என்றால், அலுவலகத்திலிருந்தபடியே ஆப் செய்யலாம்.  400 சதுர அடி பரப்பளவு வரைக்கும் ஒரே வேகத்தில் இண்டர்நெட் வசதியைக் கொடுக்கிறது. இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ. 1199.

ஸ்மார்ட் கேமரா

வீட்டுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா இருப்பதைப் போல, வீட்டுக்குள் நடப்பதைக் கண்காணிக்க வந்திருக்கிறது இந்த ஸ்மார்ட் கேமரா. ‘ஜெப்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பு இது. ‘ஜெப் ஸ்மார்ட் கேம் 100’ என்பது இந்த மாடலின் பெயர்.  வீட்டின் சமையலறை, படுக்கையறை, ஹால்... என நான்கு சுவர்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம்; கண்காணிப்பு தேவையான இடங்களில் வைப்பது நலம்.

கேமராவைப் பொருத்திய பிறகு இதற்கென இருக்கும் ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் ஆகிய சாதனங்களில் இந்த ஆப் இயங்கும்.
ஆப் மூலம் வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து கவனித்துக்கொள்ளலாம். குழந்தைகளுடன் பேசவும் முடியும். தவிர, சமையலறையில் சமையல்  செய்துகொண்டே ஹாலில் குழந்தை என்ன செய்கிறது என்பதைக் கவனிக்கலாம். அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட்டால் கேமராவைக் கட்டுப்
படுத்த முடியும்.

தவிர, 2.0 எம்பி திறன்கொண்ட கேமரா, 1080 பிக்ஸலில் வீடியோவைப் பதிவு செய்கிறது. இதிலிருக்கும் ‘இன்பிராரெட் நைட் விஷன்’ எனும் தொழில்நுட்பம் பகலைப் போல, இரவையும் துல்லியமாகப் படம் பிடிக்கிறது. இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.2499.

ஆல் இன்ஆல் ரிமோட்

உங்கள் வீட்டிலிருக்கும் ஸ்மார்ட் டிவி, ஏசி, செட்டப் பாக்ஸ், மியூசிக் சிஸ்டம், ஏ.சி... என ரிமோட் கண்ட்ரோலால் கட்டுப்படுத்தப்படும் அனைத்து சாதனங்களுக்கும் தனித்தனியான ரிமோட்டை வைத்திருப்பீர்கள். இந்த எல்லா சாதனங்களுக்கும் ஒரேயொரு ரிமோட் இருந்தால் நல்லாயிருக்குமே என்று பலர் நினைத்திருப்பார்கள். உங்களுக்காகவே வந்திருக்கிறது ‘ஓக்ரிமோட்’.  ரிமோட்டால் கட்டுப்படுத்தப்படும் எல்லா சாதனங்களையும் இதனால் இயக்க முடியும்.

தவிர, அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட்டுக்கும் சப்போர்ட் செய்கிறது. ‘சன் டிவிக்கு மாற்று அலெக்ஸா...’, ‘ஏசி டெம்பரேச்சரை 20 க்கு குறை கூகுள்...’, ‘சவுண்டை 30 பாயிண்ட் வரை அதிகப்படுத்து அலெக்ஸா...’ என்று சொன்னாலே போதும். இந்த ரிமோட் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

இதுபோக ரிமோட்டுக்கு என்று இருக்கும் பிரத்யேகமான ஆப்பை டவுன்லோடு செய்து, அதனுடன் ரிமோட்டை இணைத்துவிட்டால் போதும். ஸ்மார்ட் போன் மூலமாகவே ரிமோட் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யலாம். இந்த ரிமோட்டை சார்ஜ் செய்தாலே போதுமானது. அதனால் பேட்டரி தீர்ந்துவிட்டது என்ற பிரச்னையில்லை.  
இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.2490.

ஏர் ஃப்ரஷ்னர்

இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனால் கட்டுப்படுத்தப்படும் ப்ளூடூத் வசதியுள்ள ஆட்டோமேட்டிக் ஏர் ஃப்ரஷ்னர் டிஸ்பென்சர் இது. ‘கோத்ரெஜ் ஏர் மேட்டில் ரீபில்’ என்பது இதன் பெயர். அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு உகந்தது. இதிலிருந்து வெளியாகும் நறுமணம் அறையை சில மணி நேரங்களுக்கு புத்துணர்வுடன் வைத்துக்கொள்கிறது.

இந்த ஏர் ஃப்ரஷ்னரை தரையில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் உயரத்தில் பொருத்த வேண்டும். அப்போதுதான் அறை முழுவதும் நறுமணம் பரவும். பிறகு இதற்கென இருக்கும் ஆப்பை டவுன்லோடு செய்து ப்ளூடூத் மூலம் இணைக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஸ்பிரே பண்ணினால் போதும் என்று ஆப்பில் டைம் ஷெட்யூல் செய்துகொள்ளலாம். ஆப் மூலமாக ஸ்பிரே செய்ய முடியும். பேட்டரி குறைந்துவிட்டது, இன்னும் இரண்டு நாட்களில் ஏர் ஃப்ரஷ்னர் தீர்ந்துவிடும் என்று ஆப்பே அலெர்ட் தரும். ஒரு ஏர் ஃப்ரஷ்னர் ரீபில் 2200 ஸ்பிரேக்கள் வரை தாங்குகிறது. இரண்டு விதமான நறுமணங்களில் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ. 859.

பூந்தொட்டி ப்ளூடூத் ஸ்பீக்கர்

மக்கள் அதிகம் வாங்கும் கேட்ஜெட்களில் ஒன்று, ப்ளூடூத் ஸ்பீக்கர். பெரும்பாலும் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் பயணம் செல்பவர்களை மனதில் வைத்தே வடிவமைக்கப்படுகிறது. அதனால், சிறிய அளவில், டிசைனில் பெரிதாக மெனக்கெடல் இல்லாத ப்ளூடூத் ஸ்பீக்கர்களே சந்தையில் அதிகமாக கொட்டிக்கிடக்கின்றன. இந்நிலையில் ‘கேட்ஜெட்ஸ் அப்ளையன்ஸ்’ நிறுவனம் புதிதாக பூந்தொட்டி வடிவில் ப்ளூடூத் ஸ்பீக்கரை வடிவமைத்திருக்கிறது. இதை எங்கு வைத்தாலும் அந்த இடத்தை அலங்கரிக்கிறது. தவிர, எல்இடி லைட்டாகவும் இதைப் பயன்படுத்தலாம். விதவிதமான வண்ணங்களில் கிடைக்கிறது.

ஆனால், இது பயணம் செய்பவர்களுக்கு உகந்ததல்ல. இசையை ரசிக்கும் நேரங்களில் இதை ஆன் செய்துவிட்டு, மீதி நேரத்தில் வீட்டுக்கு வெளியேயோ அல்லது உங்களின் மேசையின் மீதோ ஒரு பூந்தொட்டியாகப் பயன்படுத்தலாம். பேட்டரியை முழுமையாக சார்ஜ்  செய்தால் 4 மணி நேரம் வரை இடைவிடாமல் இசையை ரசிக்கலாம். பத்து மீட்டர் தூரம் வரை ப்ளூடூத் கனெக்ட் ஆகிறது. எடை 325 கிராம். இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.1490.

த.சக்திவேல்