கூட்டாஞ்சோறு... இது நாடுகளின் சங்கமம்!
கடலுக்கு பெயர் உண்டா? உண்டு. அரபிக் கடல், இந்துமாக் கடல், வங்கக் கடல், மத்தியதரைக் கடல் என்கிற Mediterranean Sea... என பட்டியலிடுவோம். இதில் மத்தியதரைக் கடலுக்கும் இந்த உணவுக்கும் தொடர்பிருக்கிறது என்பதுதான் மேட்டர்!ஆம்.
 நடுநிலக் கடல், மத்தியதரைக் கடல், நடுத்தரைக் கடல் எனப் பல பெயர்கள் கொண்ட Mediterranean Sea, அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதி. நான்குபுறமும் நிலப்பகுதியால் சூழப்பட்டு, வடக்கில் ஐரோப்பாவும், அனத்தோலியாவும் (சின்ன ஆசியா), தெற்கே வடக்கு ஆப்பிரிக்காவும், கிழக்கில் ஆசியாவும் இக்கடலைச் சூழ்ந்துள்ளன. 
பண்டைக்காலத்தில் இந்தக் கடல்பகுதி, மெசபடோமியா, எகிப்து, செமிட்டிக், பாரசீகம், போனீசிய, கார்த்தஜீனிய, கிரேக்க மற்றும் ரோமாபுரி... என பல்வேறு நாகரீகங்களுக்கு இடையிலான வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளுக்கான முக்கியமான பாதையாக இருந்தது. வணிகம் மட்டுமில்லாமல் இந்தக் கடல் பகுதியைச் சுற்றியுள்ள நாடுகளின் உணவு சங்கமமாகவும் இப்பகுதி திகழ்ந்தது.
 இன்றைய நவீன யுகத்திலும் இந்த உணவுக் கலாசாரம் தொடர்வதுதான் ஹைலைட்.யெஸ். கிரீஸ், இத்தாலி, ஃபிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் உள்ள உணவுப் பழக்கத்தை இங்கு வசிக்கும் மக்கள் 1960ம் ஆண்டு முதல் பின்பற்றி வருகின்றனர். அதன் பிறகு துருக்கி, பால்கன்ஸ், மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்ரிக்கா, போர்ச்சுகல் போன்ற நாடுகளின் உணவுகளும் இங்கு இரண்டறக் கலந்தன.  ஆக, மெடிட்டரேனியன் உணவு என்றால் அது கடற்கரை ஓரமாக அமைந்திருக்கும் அத்தனை நாடுகளின் கூட்டாஞ்சோறுதான்! அப்படிப்பட்ட மத்தியதரைக் கடல் உணவை அப்படியே சென்னை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் ஜுனாய்ட். இவர் ‘ஃபைண்டிங் ரூமி’ என்ற பெயரில் மெடிட்டரேனியனின் உணவகத்தை நந்தனத்தில் திறந்துள்ளார்.‘‘இவர் அடிப்படையில் ஒரு ஆர்க்கிடெக்ட். உலகம் முழுதும் பல நாடுகளுக்கு சென்றுள்ளார். உணவுப் பிரியரும் கூட. அந்த மோகம்தான் சென்னையில் சர்வதேச அளவில், அதுவும் பாரம்பரிய சுவை மாறாமல் ஒரு உணவகத்தை அமைக்கத் தூண்டியது...’’ புன்னகையுடன் பேசத் தொடங்கினார் இந்த உணவகத்தின் தலைமை செஃப் விஜய்.
‘‘இங்கு முழுக்க முழுக்க மெடிட்டரேனியன் உணவுகள்தான். சுவை மாறாமல் இருக்க அந்த உணவுகளை சமைக்கத் தேவைப்படும் அனைத்து மசாலாக்களையும் உணவுப் பொருட்களையும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே கொண்டு வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் உணவை வழங்கும் போது, அதன் பாரம்பரியமும் சுவையும் மாறக் கூடாது. அப்படியே அந்த நிலப்பரப்பில் சாப்பிடுவது போல் இருக்க வேண்டும். இதை இம்மி பிசகாமல் கடைப்பிடிக்கிறோம்.
சென்னையில் முன்பு மெடிட்டரேனியன் உணவகம் இருந்தது. ஆனால், இப்போது இல்லை என்ற காரணத்தால்தான் ஜுனாய்ட் இந்த உணவகத்தை ஆரம்பிக்க நினைத்தார். அதே சமயம் இந்த உணவு பல நாடுகளின் கூட்டு உணவு என்பதால், அனைத்து உணவுகளையும் இங்கு கொடுக்க முடியாது.
எனவே, சிறப்பான, அதேநேரம் எல்லோராலும் விரும்பி சுவைக்கப்படும் வித்தியாசமான உணவுகளை மட்டுமே இப்போது இங்கு அறிமுகம் செய்திருக்கிறோம். இங்கு மெடிட்ட ரேனியன் உணவு மட்டுமில்லாமல் வட இந்திய உணவுகளான தால் மக்கானி, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் டிக்கா, ரொட்டி நாண், தந்தூரி உணவுகளையும் கொடுக்கிறோம். காரணம், எல்லாருக்கும் மெடிட்டரேனியன் உணவு பிடிக்கும் என்று சொல்ல முடியாதே! அவர்கள் மற்ற உணவுகளை விரும்புவார்கள். அதனால்தான் இரண்டு உணவுகளையும் கலந்து சாப்பிட ஆப்ஷன் ஏற்படுத்தி இருக்கிறோம்...’’ என்ற செஃப் விஜய், உணவகத்துக்கு ‘ஃபைண்டிங் ரூமி’ என்று பெயர் வைத்த காரணத்தையும் விவரித்தார்.‘‘ரூமி என்பவர் பெர்ஷியன் கவிஞர்; தத்துவவாதி. அவரது தத்துவங்கள் மேல் ஜுனாய்ட்டுக்கு அபரிதமான ஈடுபாடு உண்டு. ரூமியின் கவிதைகளை தமிழில் பலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனவே இலக்கிய பரிச்சயமுள்ள தமிழர்களுக்கும் இன்று ரூமியைத் தெரியும். சூஃபிச முறையைப் பின்பற்றிய ரூமி, மத்தியதரைக் கடல் பகுதியைச் சேர்ந்தவர்.
அதனால் அவர் பெயர் கண்டிப்பாக, தான் திறக்கும் உணவகத்தில் இடம்பெற வேண்டுமென்று விரும்பினார். ரூமி என்ற பெயரில் கோவாவில் ஒரு உணவகம் இருப்பதால், ‘ஃபைண்டிங் ரூமி’ என்று வைத்தார். தவிர இந்த உணவகத்தின் உள்ளலங்காரத்தையும் மத்தியகிழக்கு நாடுகளை நினைவுபடுத்தும் வகையிலேயே அமைத்துள்ளார்.
ஆரம்பத்தில் நானும் அவரும் இணைந்து என்ன உணவுகளைக் கொடுக்கலாம் என்று திட்டமிட்டோம். மெடிட்டரேனியன் உணவுகள் ஆரோக்கியமானவை. அவர்களின் உணவில் ஆலிவ் எண்ணெய், காய்கறி, பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள்தான் அதிகமாக இருக்கும். மீன், சீஸ், தயிர், சிக்கன் மற்றும் மட்டன் உணவுகளும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும். அதேபோல் அதற்கு பயன்படுத்தக்கூடிய மசாலாக்களும் பலவித கலவை கொண்டவை. எனவே, ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு சுவையில் சப்புக்கொட்ட வைக்கும்...’’ என்றவர் இங்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து விவரித்தார். ‘‘மெடிட்டரேனியன் உணவுகளில் பெரும்பாலும் ஈராக்கி மற்றும் ரசில்நட் (ras-el-hanout) மசாலாக்களைத்தான் பயன்படுத்துகிறோம். இதை மெடிட்டரேனியன் கிரில் உணவுகளுக்கு பயன்படுத்துகிறோம். எகிப்து அரிசி தான் பயன்படுத்துகிறோம் இதில் ஸ்டார்ச் அளவு அதிகமாக இருப்பதால் நாம் சாப்பிடும் அரிசியை விட கொஞ்சம் குழைந்திருக்கும்.
தாஹினி சாஸ் (tahini) எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் சாஸ். சாலட்டுக்கு பயன்படுத்துகிறோம். ரிக்கேட்டா சீஸ், கிரீக் ஃபெட்டா சீஸ், டெசர்ட் வகையான கனாஃபாவுக்கு பயன்படுத்தப்படும் கடாஃபி... இவை அனைத்தையும் நாங்கள் மத்திய கிழக்கு பகுதியில் இருந்து வரவழைக்கிறோம். 23 வகையான மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவது ஈராக்கி மசாலா. ரசில்நட் மசாலாவில் பட்டை, லவங்கம், தனியா, நட்மெக், சுக்கு, மிளகு, வெந்தயம், மஞ்சள், ஜாதிக்காய், மாசிக்காய், மிளகாய்... என 13 வகையான மசாலா பொருட்கள் அடங்கியிருக்கும்.
இங்கு ஒவ்வொரு உணவும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது. சூப்பில் மிகவும் ஃபேமஸ் மொரோக்கன் பம்ப்கின் சூப். மொரோக்கன் முறையில் இந்த சூப்பை தயாரிக்கிறோம். பூசணிக்காயை முழுமையாக ரோஸ்ட் செய்து பிறகு தோல் நீக்கி ரசில்நட் மசாலா சேர்த்து செய்யும் போது மொரோக்கன் சுவையை உணர முடியும்.
சாலட் வகையில் கிரீக் சாலட் - கிரீக் ஃபெட்டா சீஸ், வெங்காயம், வெள்ளரி, ஆலிவ், பேசில் இலைகள் எல்லாம் சேர்த்து கலந்து தருவோம். டாபுலே சாலட் - இது லெபனீஸ் சாலட். இதில் உடைத்த கோதுமை, தக்காளி, பார்ஸ்லி, ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, மொலாசஸ் சேர்த்து பரிமாறுவோம். பாபாகனாஷ் சாலட்டில், பெரிய கத்தரிக்காயை ரோஸ்ட் செய்து அதனுடன் ஆலிவ் எண்ணெய், தாஹினி சாஸ் மற்றும் மசாலாக்கள் சேர்த்து வரும். சிக்கன் கினோவா சாலட்டில் தாஹினி, தயிர், ஹரிசா சாஸ் (மொராக்கோ சாஸ்) எல்லாம் சிக்கனுடன் சேர்த்து கிரில் செய்து அதனுடன் கினோவா மற்றும் செர்ரி தக்காளி சேர்த்து பரிமாறப்படும். அடுத்து லைட் பைட்ஸ் ஸ்டார்ட்டர் போன்ற உணவுகள். இதில் ஃபலாஃபல் பிரிட்டர்ஸ் மிகவும் பிரபலம். வெள்ளை கொண்டைக்கடலையில் செய்யப்படும் ஒருவகையான கட்லெட் என இதைச் சொல்லலாம்.
ஸ்டார்ட்டர்களில் எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவது மெச்சி பிளாடர். இதில் பீட்டா பிரட்டுடன் டாபுலே சாலட், பாபாகனாஷ் சாலட், கொண்டைக் கடலையால் செய்யப்படும் ஹம்மஸ், ஃபலாஃபல், ஆலிவ், ஃபெட்டா சீஸ், தயிர்... அனைத்தும் சேர்த்து ஒரே பிளேட்டில் தருவோம். சாலட் வகைகள், சீஸ், ஃபலாஃபல் அனைத்தையும் பீட்டா பிரட்டுக்குள் வைத்து சாண்ட்விச் போல் சாப்பிட வேண்டும். இதைத் தவிர இத்தாலியன், கிரீக், ஸ்பானிஷ், லெபனான், மத்தியகிழக்கு நாடுகளில் சாப்பிடக்கூடிய ஸ்டார்ட்டர் வகைகளும் உண்டு.
அடுத்து சார்கோல் கிரில்கள் இங்கு ஃபேமஸ். சிக்கன், மட்டன், மீன், பிரான்... என அனைத்தையும் கிரில் செய்து தருகிறோம். பொதுவாக கிரில் வகை உணவுகளை ஸ்க்யூவர் குச்சியில் குத்திதான் கிரில் செய்வார்கள். நாங்கள் அப்படி இல்லாமல் நேரடியாக கரி அடுப்பில் கிரில் செய்து தருகிறோம். டிஜாஜ் சுலோவாகி என்பது கிரீக் உணவு.
அதில் சிக்கனை மசாலா, தயிர் எல்லாம் கலந்து ஊறவைத்து கிரில் செய்வோம். மத்திய கிழக்கு உணவான கபாப் லோக்மெஹ் - இதை மட்டனை நன்கு அரைத்து அதில் மசாலாக்கள் சேர்த்து கிரில் செய்வோம்.
மிஷ்வி ஸ்மாக் - இதில் மீன் துண்டுகளை மசாலா தடவி கிரில் செய்வோம். அதேபோல்தான் பெரிய சைஸ் பிரான்களையும் கிரில் செய்து தருகிறோம். இந்த கிரில் உணவுகள் அனைத்தும் எகிப்து அரிசி சாதம் மற்றும் கிரில் செய்யப்பட்ட காய்கறிகள் சேர்த்து பரிமாறப்படும்.
பிறகு மெயின் கோர்ஸ் என்று பார்த்தால் லாம் மஹாமார். இது மட்டனை மெல்லிய தீயில் மசாலாக்கள் சேர்த்து அதிக நேரம் சமைக்கப்படும். அதனுடன் எகிப்து அரிசி மற்றும் காய்கறிகளை கிரில் செய்து தருவோம். பாஸ்டிசாடா என்பது பாஸ்தாவில், சாஸ், பிரேஸ்ட் லாம்ப் மசாலா, பார்மீசன் சீஸ் சேர்த்து சாப்பிடலாம். கடைசியாக மத்தியகிழக்கு பகுதியில் அதிகம் விரும்பி ச்சாப்பிடக்கூடிய பக்லாவா மற்றும் குனாஃபா போன்ற டெசர்ட்களும் இங்கு உண்டு...’’ என்கிறார் செஃப் விஜய்.
செய்தி: ப்ரியா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|