140 இசைக் கலைஞர்கள்... புழக்கத்தில் இல்லாத இசைக் கருவிகள்!



சொல்கிறார் ‘சீதா ராமம்’ இசையமைப்பாளர்

துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ பார்த்தவர்கள் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் புகழ் கீதம் பாடுகிறார்கள். ‘‘நான் சினிமாவுக்கு வந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டது. முப்பது படங்கள் பண்ணிவிட்டேன். இப்போதான் முதல் ஹிட் பார்க்கிறேன். ஒரு அறிமுக இசையமைப்பாளரா இருந்திருந்தா என்னோட சந்தோஷம் கொஞ்சம் அதிகமா இருந்திருக்கலாம்.
படங்கள் பண்ணிப் பண்ணி பழகியதால் இதை எந்தமாதிரி வெற்றியா பார்க்கணும்னு தெரியல. ஆனா, ஒரு விஷயம்... என் வாழ்க்கையில் இதுவரை வந்திராத வாழ்த்துச் செய்தி, பிரபலங்களின் பாராட்டு கிடைச்சது. மம்மூட்டி சார் படம் பார்த்துவிட்டு அழுததாகச் சொன்னார்கள்...’’ உணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் விஷால் சந்திரசேகர்.  
‘சீதா ராமம்’ வாய்ப்பு எப்படி கிடைச்சது?

ஸ்வப்ன சினிமாஸ், வைஜெயந்தி மூவிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிச்ச படம் இது. தயாரிப்பாளர் அஸ்வினி தத் தெலுங்கு சினிமாவின் பெரிய தயாரிப்பாளர். இயக்குநர் ராஜமெளலியை அறிமுகம் செய்தவர். எழுபதுக்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களைத் தயாரிச்சவர். கீர்த்தி சுரேஷ் நடிச்ச ‘நடிகையர் திலகம்’ கூட அவர் தயாரிச்ச படம்தான்.

இயக்குநர் அனுராகவபுடி எனக்கு பத்து வருஷ நண்பர். ஏற்கனவே அவருடன் ரெண்டு படம் பண்ணியிருக்கிறேன். ஒரு படத்துல நானியும், இன்னொரு படத்துல ஷர்வானந்த், சாய் பல்லவியும் நடிச்சிருந்தாங்க. அனுராக் படம் பண்ணுவதா இருந்தா நான்தான் மியூசிக் பண்ணுவேன். அந்தளவுக்கு எங்களிடையே வேவ்லெங்த் இருக்கும். அப்படிதான் இந்த வாய்ப்பு கிடைச்சது.

‘சீதா ராமம்’ 60களின் கதை என்பதால் எந்த மாதிரியான ஹோம் ஒர்க் தேவைப்பட்டது?

படம் ஆரம்பிக்கும்போது நேரடி தெலுங்கு படமாதான் இருந்துச்சு. மத்த மொழியில வெளியிடுவது பற்றி அப்ப ப்ளான் பண்ணல. தெலுங்கு படம் என்பதால் 60, 70 களின் தெலுங்கு பாடல்களை நிறைய கேட்டேன். அதுல மெயினா ‘இந்தோல’ ராகம் அதிகமா இருந்துச்சு. இந்த ராகத்தை அந்தக் காலத்துல வெளிவந்த மேக்ஸிமம் படங்களில் யூஸ் பண்ணியிருப்பாங்க. அந்த சமயத்துல இந்த ராகம் பொதுவான ராகமா இருந்துச்சு.

அப்படி ஒரே ராகத்துல பாடல்கள் வெளிவந்த சமயத்துல வேறு சில ராகங்களில் வெளிவந்த பாடல்களும் ஹிட்டாகியிருந்தது.அதனால அந்த ராகத்தை யூஸ் பண்ணணும்னு முடிவு செஞ்சேன். ஆனா, அது கண்டிப்பா இந்தோல ராகம் கிடையாது. ஏனெனில், ‘இந்தோல’ ராகம் யூஸ் பண்ணியிருந்தால் கேட்கும்போதே 60 களின் பாடல்கள் என்ற எண்ணம் வந்துவிடும்.

இது பீரியட் படம் என்பதால் எல்லாமே லைவ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் யூஸ் பண்ணினோம். எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ஒண்ணுகூட பயன்படுத்தலை. மொத்தமா 140 இசைக் கலைஞர்கள் வேல செஞ்சாங்க. நானா புதுசா எந்த வாத்தியங்களையும் கண்டுபிடிச்சு யூஸ் பண்ணல. இப்ப புழக்கத்தில் இல்லாத வாத்தியக் கருவிகளைத் தேடிப் பிடிச்சு பயன்படுத்தினேன்.

மத்திய கிழக்கு ஆசியாவுடைய அவுத், ரூவான், சாஸ், பீப்பா போன்ற வாத்தியக் கருவிகளை யூஸ் பண்ணினேன். இந்த இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ரொம்ப அரிதானது.‘ஹே சீத்தா ஹே ராமா...’ பாடல் நடபைரவி ராகத்தில் உருவானது. அந்த ராகம் பொதுவான ராகம். அந்தப் பாடலைக் கேட்கும்போது ‘அடி ஆத்தாடி இளமனசொண்ணுறெக்க கட்டிப் பறக்குது...’ ஞாபகத்துக்கு வரும். அத்தோடு ‘இது ஒரு நிலாக் காலம்...’ பாடலும் நினைவுக்கு வரும்.

இந்தப் பாடல்களை மிக்ஸ் பண்ணி எடுத்ததுதான் ‘ஹே சீத்தா...’ பாடல். இதுக்கு பேர் காப்பி கிடையாது. இன்ஸ்பிரேஷன். ‘குறுமுகில்...’ பாடல் டிபிக்கல் எஸ்.டி.பர்மன் ஸ்டைல் கம்போஸிங். ‘கண்ணுக்குள்ளே...’ பாடல் கவாலி, சூஃபி ஸ்டைல். சுத்த தன்ய ராகத்துல உருவானது. ‘பிரியாதே...’ பாடல் நடபைரவியில் உருவானது.பாடல்களில் பழைய சாயல் தெரியுது... என்று ஒரு சில விமர்சனம் வருகிறதே?

நல்லது. உங்களுக்கு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குனு ஞாபகம் வருகிறது என்றால் ராகத்தின் அடிப்படையில் பாடல்கள் அமைந்திருக்கும். பழைய சாயல் மாதிரி இருக்கே என்ற சிந்தனை தப்பே கிடையாது. படத்தோட எந்த டீயூனையும் அப்பட்டமான காப்பினு உங்களால் சொல்ல முடியாது. எல்லா இசையமைப்பாளர்களும் ஒரே ராகத்துல இருந்து எடுக்கும்போது அந்த ராகத்தோட பிரயோகம் ஒரே மாதிரியாதான் வரும். பாடல்கள் ஒரேமாதிரி இருக்கிறது என்பதைக் கடந்து ஆன்மாவை கனெக்ட் பண்ணும் என்று என்னால் சொல்லமுடியும்.
படத்தின் எந்தப் பகுதி உங்களுக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது?

முழுப் படமும் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. எந்தப் படத்துக்கும் அப்படி நான் சொன்னதில்ல. எல்லா காட்சிகளையும் ரெண்டு, மூணு தடவைக்கும் மேல பார்த்து வேல பார்த்தேன். எடிட்டர் பார்வையிலும் எந்த காட்சியையும் தூக்க முடியாதபடி இயக்குநர் அற்புதமா படமாக்கியிருந்தார். ஒரு காட்சியை வெட்டி எறிந்திருந்தாலும் படம்
சாய்ந்துவிடும்.

எல்லா பாடல்களையும் மெலடியாகக் கொடுத்த நிலையில் யூத் ஆடியன்ஸுக்காக பெப்பி சாங் வைக்கவில்லையா?

எனக்கு மெலடி மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு வரும் மெசேஜ் அப்படித்தான் இருக்கிறது. நீங்க சொல்ற யூத்தான சாங்ஸ் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. நாம என்ன நெனைக்கிறோம்னா ஆடியன்ஸுக்கு பிடிச்ச மாதிரி சாங்ஸ் தரணும்னு நெனைக்கிறோம். ஆக்ச்சுவலா நமக்கு சாங் பிடிச்சா ஆடியன்ஸுக்கு பிடிக்கும். இப்ப இருக்கிற யூத் ஜெனரேஷன்தான் சவுண்ட் இந்த இடத்துல நல்லா இருந்துச்சு, டியூன் சூப்பர்னு சொல்றாங்க. டெம்ப்ளேட்ல மியூசிக் பண்ணக்கூடாது. கதை என்ன கேட்கிறதோ அதை பண்ணாலே சாங் பேசப்படும்.

‘O2’ பார்த்துவிட்டு நயன்தாரா என்ன சொன்னார்?

ஃபைனல் அவுட்புட் ரெடியானதும் நயன்தாரா மேடம் பார்த்துட்டு சந்தோஷப்பட்டாங்க. மியூசிக் வெர்ஷனைப் பார்த்ததும் படம் விறுவிறுப்பா இருக்குன்னு மியூசிக்கை துல்லியமா கவனிச்சு சொன்னாங்க.

கம்போஸர் - மியூசிக் டைரக்டர்... இருவருக்கும் என்ன வித்தியாசம்?

கம்போஸர் என்பவர் ஒரிஜினல் டியூன் பண்ணுபவர். மியூசிக் டைரக்டர் என்பவர் நாலைந்து கலைஞர்களிடம் நோட்ஸ் கொடுத்துவிட்டு அவர்கள் ஸ்டைலில் இசையை வாங்கி அரேஞ்ஜ் பண்ணுபவர்.

ஒரு கதையில் இசைக்கான முக்கியத்துவம் இருப்பதை எப்படி உணர்வீர்கள்?

நான் எப்போதும் இயக்குநரிடம் கதை சொல்லச் சொல்லி கேட்கமாட்டேன். பவுண்ட் ஸ்கிரிப்ட் வாங்கி படிப்பேன். ஏனெனில், படிக்கும்போது எமோஷனல் ஆழம் தெரிஞ்சுடும். சில கதைகளைப் படிக்கும்போது அது இனம் புரியாத உணர்வுகளைத் தரும். அந்த மேஜிக் எல்லா கதைகளுக்கும் நடக்காது. அரிதாகவே நடக்கும். அப்படி ஒரு மேஜிக் நடக்கும்போது அதை நம்மால் உணர முடியும். ஒரு படம் பார்க்கும்போது நமக்கு ஒரு சின்ன ஃபீல் கிடைக்கும். அதே ஃபீல் படிக்கும்போது கிடைத்தால் அதை இசைக்கான படமாக உணர்வேன்.

பழைய வாத்தியக் கருவிகளின் இசையை இப்போது கேட்க முடிவதில்லையே?

இப்போதும் பழைய வாத்தியங்கள் வாசிக்கிறோம். லிரிக் கம்மியானதால் அதிரடி மியூசிக் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.

இசை உலகில் இப்போது எது டிரெண்டிங்கில் உள்ளது?

இந்த டிரெண்டிங் என்ற வார்த்தையை நான் சத்தியமா நம்புவதில்லை. டிரெண்டிங் என்ற வார்த்தையைக் கேட்கும்போது விரக்தியடைகிறேன். டிரெண்டிங் என்ற வார்த்தையால் நல்ல விஷயங்கள் காணாமல் போய்விடுகிறது. டிரெண்டிங் ஆகணும் என்பதற்காகவே அடிச்சுத் துவைத்து காதுகள் பழுதடையும் வகையில் இசை உருவாக்கப்படுகிறது. அப்படி பண்ணக்கூடாது.

எல்லாரும் சேர்ந்து ஒரே பாடலை இதுதான் டிரெண்டிங்னு திணிக்கிறார்கள். அதனால டிரெண்டிங் என்ற விஷயத்துல எனக்கு உடன்பாடு கிடையாது. என் பாட்டு பிடிக்கலையா... பிடிக்கலனு சொல்லுங்க, சந்தோஷப்படுவேன். ஆனா, என் பாட்டு டிரெண்டிங்ல இல்லன்னு சொல்லாதீங்க!

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்:  ஆ.வின்சென்ட் பால்