தமிழ் ராக்கர்ஸ் எப்படி செயல்படறாங்கனு தமிழ் ராக்கர்ஸ் சொல்லும்!



பெயருக்கேற்ப டெக்னிக்கலாகவும் டேலண்ட்டாகவும் படம் எடுக்கக்கூடியவர் இயக்குநர் அறிவழகன். இவர்  இயக்கிய ‘ஈரம்’ இன்றளவும் இவரை ஈரம் காயாமல் வைத்திருக்கிறது. இப்போது முதன் முறையாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரீஸ் இயக்கியுள்ளார். ஏவி.எம். புரொடக்‌ஷன்ஸ், அருண் விஜய் என்று பலமான கூட்டணி அமைத்துள்ள அறிவழகனிடம் கூடுதல் உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது.‘தமிழ் ராக்கர்ஸ்’ பற்றி எடுக்க இப்ப என்ன இருக்கு?

‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வார்த்தை சினிமாக்காரர் மட்டுமில்லாம, பொது மக்களுக்கும் தெரியும். இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு ஏவி.எம். நிறுவனத்திடமிருந்து வந்தது. கதையைப் படிச்சதும் இது முக்கியமான படமா தோணுச்சு. இண்டஸ்ட்ரியில் இருக்கும் எந்த ஒரு இயக்குநரும் இந்த மாதிரி கதையை எடுத்துப் பண்ணுவாங்க.
என்னுடைய படங்கள் டெக்னிக்கலா இருந்தாலும் உணர்வுபூர்வமா இருக்கும். ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘குற்றம் 23’ அப்படிப்பட்ட படங்கள். தமிழ் சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறது ‘தமிழ் ராக்கர்ஸ்’. சினிமாக்காரர்களின் வலி இதுல எமோஷனலா மாறியிருக்கும்.

கேசட், சிடி, டிவிடி, டவுன்லோடு என்ற நிலை மாறி இப்ப டெலிகிராம் அளவுக்கு வளர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘தமிழ் ராக்கர்ஸ்’. இதை சட்டத்தால் அழிப்பதைவிட மக்கள் மத்தியில் அவங்க செய்றது தப்பு என்பதை உணர வைக்க வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமா இருந்துச்சு.
போதை மருந்து பயன்பாட்டை கடும் தண்டனை மூலம் கட்டுப்படுத்தலாம். இவங்கள தண்டனையால் தடுக்க முடியாது. விழிப்புணர்வு மூலம் மட்டுமே தடுக்க முடியும். அந்த வேலையை இந்தப் படம் செய்யும்.

டிரக் லார்ட் என்று அழைக்கப்படும் எக்ஸோபர் வாழ்க்கை நமக்கு தெரியும். வீரப்பன் வாழ்க்கை பற்றி நமக்கு தெரியும். அதனால் அவர்களைப் பற்றி படம் எடுக்கும்போது முழுமையா சொல்ல முடியும். ‘தமிழ் ராக்கர்ஸ்’ பற்றி அப்படி சொல்ல முடியாது. ‘தமிழ் ராக்கர்ஸ்’ யார் என்று தெரியாது. அவர்கள் கண்ணுக்குத் தெரியாத எதிரியா இருக்கிறார்கள்.  அதுல, கன்டன்ட் எப்படி அவங்களுக்கு கிடைக்குது, எப்படி ரிலீஸ் செய்றாங்க என்பதை ஃபிக்‌ஷன் கலந்து சொல்லியிருக்கிறோம்.

ஏவி.எம் படம் பண்ணுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

சினிமாவுக்கு வருபவர்களின் கண்கள் கண்டிப்பா ஏவி.எம் உருண்டை மீது திரும்பாமல் இருக்காது. பலருக்கு அந்த ஸ்டூடியோவுக்குள் நுழைவது பெரும் கனவா இருக்கும். இண்டஸ்ட்ரியில் எந்த கிராஃப்ட்டை சேர்ந்தவர்களா இருந்தாலும் ஏவி.எம்.மில் ஒரு படம் பண்ணிடமாட்டோமா என்று நினைப்பதுண்டு. இப்ப, நான்காவது தலைமுறையா அருணா குகன், அபர்ணா குகன் புரொடக்‌ஷன் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அதுல அவங்க என்னை இயக்குநரா செலக்ட் பண்ணியிருக்காங்க. ஒரு இயக்குநரா நல்ல படைப்பு கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு அதிகமாகியிருக்கு. இதை எனக்கான அங்கீகாரமாவும் பார்க்கிறேன்.  

அருண் விஜய்யுடன் ஹாட்ரிக் அடிச்சிருக்கீங்க?

அருண் விஜய்க்கும் எனக்கும் வேவ் லெங்க்த் ஒரே மாதிரி இருக்கும். கம்போர்ட் சோன் நல்லா இருக்கும். தயாரிப்பாளர் சைட்லயும் அருண் விஜய் சாய்ஸா இருந்தார். அருண் விஜய் சாரும் இப்பதான் வெப் சீரீஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கிறார். நான் அவருக்கு பரிச்சயம் என்பதாலும் ஏவி.எம் புரொடக்‌ஷன் என்பதாலும் அவர் தைரியமா வந்தார்.

அவர் எனக்கு கம்ஃபோர்ட்டா இருப்பார் என்பதைத்தாண்டி கேரக்டருக்கு பொருந்திப்போனார். முன்பு விஜயகாந்த் சார், அர்ஜுன் சார்  போலீஸ் கேரக்டருக்கு கச்சிதமா இருந்தாங்க. இப்ப சிலர்தான் அப்படி இருக்காங்க. அதுல அருண் விஜய் முக்கியமானவர்.

போலீஸ் கேரக்டருக்கு என்ன உடல் மொழி வேண்டுமோ அதை சரியா கொண்டுவந்தார். என்மீது அவருக்கும் அவர்மீது எனக்கும் நம்பிக்கை இருந்ததால் வேல ஸ்மூத்தா போச்சு.
வாணிபோஜன் சைபர் ஃபோரன்சிக் ஆபீசரா வர்றார். ரொம்ப மெச்சூரிட்டியான நடிப்பைக் கொடுத்தார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், அழகம்பெருமாள், ஐஸ்வர்யா மேனன், சரத் சாகர், வினோத், தருண், மாரிமுத்து, வினோதினி இருக்காங்க.

இன்ஸ்டிடியூட்ல என்கூட ஒண்ணா படிச்ச ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரொம்ப நாளா சேர்ந்து பண்ண நெனச்சோம். ‘பார்டர்’லதான் இணைஞ்ச்சோம். இப்ப இதுல சேர்ந்து பண்றோம். மியூசிக் டைரக்டரா விகாஷ் என்பவரை அறிமுகம் பண்ணுகிறோம். திறமைசாலி. நல்ல எதிர்காலம் இருக்குனு என்னால் உறுதியா சொல்லமுடியும். ‘வல்லினம்’ சாபு எடிட்டிங்.

மனோஜ்குமார் கலைவாணன் கதை எழுதியுள்ளார்.

ஒரு இயக்குர் பல நிறுவனத்துல படம் பண்ணியிருந்தாலும் ஏவி.எம் நிறுவனத்துல பண்ணும்போது அது அவருக்கு பெஸ்ட் அனுபவமா இருக்கும். பொதுவா ஒரு புரொடக்‌ஷன் நிறுவனத்துல எதாவது ஒருசில தடைகள், மனஸ்தாபங்கள் வரும். அந்த மாதிரி பிரச்னைகளுக்கு வாய்ப்பே இல்லாத இடம் ஏவி.எம். கிரியேட்டிவ் சைட்லயும் தடை இருக்காது.
 
‘பார்டரு’க்கு எப்ப அழைச்சுட்டு போகப் போறீங்க?

ஒரு படத்தின் தாமதம் புரொடக்‌ஷன் செலவைப் பொறுத்து அமைகிறது. கல்யாணம் பண்ணுவதாக இருந்தாலும் கட்டடம் கட்டுவதாக இருந்தாலும் பணம் எவ்வளவு வேகமாக விநியோகிக்கப்படுகிறதோ அப்போதுதான் அது சீக்கிரத்துல நிறைவு பெறும். ஒரு படம் என்பது இயக்குநரை மட்டும் நம்பி இருப்பதில்லை. அப்படி என்னை மட்டுமே சார்ந்ததாக இருந்தால் என்னுடைய எல்லா படங்களும் குறிப்பிட்ட காலத்தில் வெளியாகியிருக்கும்.  

கடந்த இரண்டு வருடங்களை நாம் எப்படி கடந்து வந்தோம் என்பது தெரியும். அந்த மாதிரி சூழ்நிலைகளால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முடியாது. ‘பார்டர்’ல தேசபக்தி பத்தி சொல்லியிருக்கிறேன். அதுல அரசியல், சமூக சூழலைப் பற்றி லைட்டா சொல்லியிருப்பேன். அருண் விஜய் பிரமாதமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

உங்கள் படங்கள் பெரும்பாலும் ‘ஏ’ சென்டருக்கான படங்களாக உள்ளது. பி அண்ட் சி-க்கு ஏத்த மாதிரி மாஸ் படம் பண்ணும் ஐடியா இல்லையா?

‘குற்றம் 23’, த்ரில்லராவும், ‘வல்லினம்’ ஆக்‌ஷனாவும் பண்ணேன். கமர்ஷியல் என்பது விஜய் சார், அஜித் சார் உள்ளே வரும்போது அது அவங்களுக்கான படமாகவும் எனக்கான படமாவும் இருக்கும். உதாரணத்துக்கு, ‘துப்பாக்கி’யையும் ‘பார்டரை’யும் கம்பேர் பண்ணிப் பார்க்கலாம். ‘துப்பாக்கி’ ‘ஏ’ கிளாஸ் படம். விஜய் சார் உள்ளே வந்தபிறகு அஞ்சு
பாட்டு, அஞ்சு ஃபைட்னு மாறுது. அதனால் பி அண்ட் சி படமா மாறுது.

‘பார்டர்’ ஒரு தீவிரவாதியை பிடிக்கப் போகும் ஒரு தேச பக்தனின் கதை. இங்கு ஆர்ட்டிஸ்ட், பட்ஜெட்தான் கமர்ஷியலை முடிவு செய்கிறது. என்னுடைய படங்களில் விஜய் சார், சிவ கார்த்திகேயன் சார் வரும்போது பாடல்கள், ஃபைட் எல்லாமே தானா சேர்ந்துவிடும். என்னைப் பொறுத்தவரை பி அண்ட் சி படம் என்பதை ஹீரோதான் முடிவு செய்கிறார்.

விஜய் சார் படம் பண்ணும்போது என் ஸ்டைல்படிதான் பண்ணுவேன்னு அடம்பிடிக்கமாட்டேன். காலம் என்னை அந்த மாதிரி படங்களுக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை இருக்கு.
நேற்று வந்த இயக்குநர்கள் அஜித், விஜய்னு போயிட்டாங்க. நீங்க எப்ப பெரிய ஹீரோ படம் செய்யப் போறீங்க?

சினிமா என்பது புரியாத புதிர். அதன் சூட்சுமம் அதிகம். நமக்கான உழைப்பை நாம் கொடுத்தால் ஜெயிக்கலாம். வாழ்க்கையில் மத்தவங்களோட கம்பேர் பண்ண ஆரம்பிச்சுட்டா பைத்தியம் பிடிச்சுடும். எனக்கான படங்களை தொடர்ந்து பண்ணாலே எனக்கான உயரத்தை அடைய முடியும்.

அறிவழகன் படம் என்றாலே தாமதம், பட்ஜெட் அதிகமாகும் என்ற பேச்சு உள்ளதே?

இந்த கேள்வியை நீங்கள் கேட்காம இருந்திருந்தாலும் நானே இப்படி ஒரு கேள்வி கேளுங்கனு சொல்லி பதில் அளித்திருப்பேன். ஒரு  பெரிய ஹீரோவை வெச்சு பண்ணும்போது பெரிய பட்ஜெட் தேவைப்படும். ‘பார்டர்’ல அருண்விஜய் பெரிய ஹீரோ. ‘ஈரம்’, ‘வல்லினம்’ பட்ஜெட் அதிகமாயிடுச்சு என்பதை ஏத்துக்கறேன். ஆனா, அடுத்தடுத்த படங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் பண்ணியிருந்தாலும் என் மீது பழைய ஸ்டாம்ப்பை குத்த ஆரம்பிச்சிட்டாங்க. அதை மாத்த முடியாது.

குளோஸா பழகியவர்கள் அறிவழகன் அப்படிப்பட்டவர் இல்ல என்று சொல்லலாம். எல்லோரும் பட்ஜெட் அதிகமாக்கிட்டார் என்று ஒரு வாதத்தை வைத்தாலும் அதன்பிறகு
எடுத்த படங்களை 45 நாட்களில் முடித்திருக்கிறேன். அதுல பட்ஜெட் உயர வாய்ப்பே இல்ல. பகல், இரவு ஷூட் பண்ணாலும் ரெண்டு கால்ஷீட்னு சொல்றாங்க. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைனு சொல்வாங்க. அதுமாதிரி இங்கு நடக்கும்.

ஆக்‌ஷன் படமான ‘பார்டர்’ 47 நாட்களிலும், 90 நாட்களில் எடுக்க வேண்டிய ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரீஸை 53 நாட்களிலும் எடுத்தேன். அதுக்கு நான் டபுள் கால்ஷீட் போய்த்தான் ஆக வேண்டும். அதனால்தான் சொல்றேன்... கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. எல்லாத்தையும் மீறி குவாலிட்டி கொடுத்துடுவார்னு என்னைப் பற்றி மறைமுகமான அபிப்பிராயம் இருக்கு. அதை யாரும் வெளியில் சொல்வதில்லை. அதை பிசினஸுக்கு யூஸ் பண்ணிப்பாங்க.  

‘ஈரம் - 2’ கதை தயாராக இருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள். ஷங்கரிடம் தயாரிப்பு பற்றி பேசினீர்களா..?

கதை ரெடி. நடுவுல எனக்கு இடைவெளி வீழ்ந்துவிட்டது. இப்ப ‘பார்டர்’, ‘தமிழ் ராக்கர்ஸ்’ பண்ணியிருக்கிறேன். அடுத்ததா மிகப்பெரிய வெற்றி கொடுத்ததும் ‘ஈரம் - 2’ பண்ணணும் என்ற முடிவுல இருக்கிறேன். ஷங்கர் சாரும் புரொடியூஸ் பண்ண ரெடியா இருக்கார்.

உங்க காதல் மனைவி ஹீரா என்ன சொல்றாங்க?

ஹீரா, மகன் ஆதித்யானு லைஃப் சந்தோஷமா போகுது. ஹீரா குடும்பத்தை மட்டும் பார்த்துக்காம என்னுடைய புரொஃபஷனுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்காங்க. என்னுடைய முதல் விமர்சகர் அவர்தான். அவருடைய விமர்சனத்தை ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் விமர்சனமாகவே பார்க்கிறேன்.

எஸ்.ராஜா