ஒரே நேரத்தில் அம்மாவும் மகனும் பாஸ்!



ஒவ்வொரு வருடமும் கேரளாவில் காலியாக இருக்கும் அரசுப் பணியிடங்களுக்காக கேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சில நூறு பேர் மட்டுமே வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையைப் பெற்றதோடு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர் பிந்துவும், விவேக்கும். கேரளாவில் உள்ள அங்கன்வாடியில் ஆசிரியையாக இருப்பவர் பிந்து. 42 வயதான பிந்து, நான்கு முறை தேர்வெழுதி இப்போதுதான் வென்றிருக்கிறார். விரைவில் கடைநிலை ஊழியராக அரசுப் பணியில் சேரப்போகிறார்.

 பிந்துவின் மகன்தான் விவேக். இவருக்கு கிளர்க் பணி கிடைத்துள்ளது. அம்மாவும், மகனும் ஒன்றாகவே பயிற்சி வகுப்புக்குச் சென்றிருக்கின்றனர். அத்துடன் ஒன்றாகவே தேர்வுக்குத் தயாராகி, தேர்வெழுதி வெற்றி பெற்றிருக்கின்றனர். மகனை பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குள் இழுத்து வந்ததே அம்மாதான் என்பது இதில் ஹைலைட்.  கேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வரலாற்றில் அம்மாவும், மகனும் ஒரே நேரத்தில் தேர்வெழுதி, அரசுப் பணியைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

த.சக்திவேல்