என்ஜினியரிங் டிஸ்கன்டினியூட் to ஃபேஷன் டிசைனர்!



ரசிகர்களுக்கு திரைக்கு முன் தோன்றும் கலைஞர்கள் தெரிந்திருக்குமளவுக்கு திரைக்குப் பின் உழைக்கும் கலைஞர்கள் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் நடிகர், நடிகைகளை ஸ்டைலிஷ்ஷாக காண்பிக்கக் கூடியவர்கள் காஸ்டியூமர் என்று சொல்லக்கூடிய ஃபேஷன் டிசைனர்ஸ். இந்தத் துறையில் முத்திரை பதிப்பவர்களில் ஒருவர்தான் நிவேதா ஜோசப். இவருடைய ஃபேஷன் ரசனை லாரன்ஸ் ராகவேந்திராவின் ‘காஞ்சனா - 3’, அருண்விஜய்யின் ‘யானை’, ‘யூகி’ உட்பட ஏராளமான படங்களில் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு காத்திருக்கிறது ‘ருத்ரன்’.

உங்கள் பாதை எங்கு ஆரம்பித்தது?

சின்ன வயதிலிருந்தே ஃபேஷன் டிசைனராக வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அப்பா, அம்மா விருப்பத்துக்காக என்ஜினியரிங் படித்தேன். மூன்றாம் ஆண்டு டிஸ்கன்டினியூ பண்ணிவிட்டு என் விருப்பத்தின்படி ஃபேஷன் டெக்னாலஜி படித்தேன். உண்மையைச் சொல்வதாக இருந்தால் சினிமாவுக்கு வரணும்னு நினைத்ததில்லை. சினிமா வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும்போது ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக சில ஃபேஷன் ஷோக்களில் ஒர்க் பண்ணினேன். அப்போது என்னுடைய வேலை பிரபல காஸ்டியூமர் தீபாளி நூர் மேடத்துக்கு பிடிக்கவே, உதவியாளராக சேர்ந்துகொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்கினார். ‘10 எண்றதுக்குள்ள’, ‘புலி’, தெறி’ உட்பட ஏராளமான படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்தேன்.
காஸ்டியூம் டிசைனராக ‘காஞ்சனா - 3’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘அடுத்த சாட்டை’, ‘யானை’ உட்பட ஏராளமான படங்களில் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது.

உங்கள் குருநாதர் தீபாளி நூரிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

சினிமாவைப் பொறுத்தவரை நான் ஜீரோ நாலெட்ஜ் பெர்சனாக உள்ளே வந்தேன். முதன் முதலாக நான் உதவியாளராக வேலை செய்த படம் ‘புலி’. அந்தப் படத்தில், பாதி படப்பிடிப்பில் ஜாயின் பண்ணினேன். தீபாளி மேடம் ஃபேஷன் சார்ந்தது மட்டுமல்லாமல், சினிமாவுக்கான ஒர்க்கிங் ஸ்டைல், நடிகர், நடிகைகளை எப்படி ஹேண்டில் பண்ணுவது, ஃபேஷன் துறையில் உள்ள நுணுக்கங்கள் உட்பட ஒவ்வொரு அடிப்படை விஷயங்களையும்  கற்றுக்கொடுத்தார்.

காஸ்டியூம் டிசைனிங்ல உங்கள் செயல்முறை எப்படி இருக்கும்?

காஸ்டியூம் பிராசஸிங் முறையில் எனக்குப் பிடித்த பகுதி ஸ்கெட்ச் பண்ணுவது. ஸ்கெட்ச் பண்ணியதை அப்படியே அவுட்புட் கொண்டுவர முயற்சி செய்வேன். அதற்கு கலர்ஸ் கொடுத்து, அதற்குரிய மெட்டீரியலை தேர்வு செய்து பிறகு டைலருடன் உட்கார்ந்து தைக்கும்போதுதான் ஸ்கெட்ச்சில்உள்ள அவுட்புட் வரும். அதை அப்படியே திரையில் பார்க்கும்போது கூடுதல் சந்தோஷமாக இருக்கும்.

ஆடை வடிவமைப்பு மூலம் கதாபாத்திரத்தை எந்தளவுக்கு மெருகேற்றுவீர்கள்?

பொதுவாக காஸ்டியூம் பண்ணும்போது ஒரு பேண்ட், சட்டை என்றால் நார்மல் வேலை என்பதுபோல் தெரியும். ஆனால், கதையும், இயக்குநரும் கதாபாத்திரத்துக்குள் நம்மை டிராவல் பண்ண வைத்துவிடுவார்கள். அப்படி, ஸ்கிரிப்ட்ல என்ன இருக்கிறதோ அதை ஃபீல் பண்ணும் இடத்துக்கு போய்விடுவோம். கல்லூரி மாணவன் என்றால் எப்படி டிரஸ் பண்ணுவார்களோ அதற்கு ஏற்ற மாதிரி பண்ண வேண்டும். அந்த கல்லூரி மாணவனின் அப்பா, அம்மா என்ன வேலை செய்கிறார்கள், எந்த இடத்தில் வசிக்கிறார்கள், அவர்களின் பொருளாதார சூழ்நிலை போன்ற எல்லா விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அப்பா போலீஸ் என்றால் மகன் டீசண்ட்டாக உடை அணிந்திருக்க வேண்டும் என்ற எழுதப்படாத நெறி இருக்கும். அந்த வகையில் கேரக்டரை உள்வாங்கி கல்லூரி மாணவன் அல்லது மாணவி எந்தமாதிரி ஆடை, அணிகலன்களை தேர்வு செய்வார்கள் என்று கதாபாத்திரத்தோடு இன்வால்வாகிய பிறகுதான் காஸ்டியூமை இறுதி செய்து கொடுப்பேன். அந்தளவுக்கு ஆழமாக ஒர்க் பண்ணினால்தான் கதையோடு பயணிக்க முடியும்.

ஒரு படத்துக்கான வேலைகளை தொடங்கும் முன் எந்த விஷயங்களை கருத்தில் எடுத்துக்கொள்வீர்கள்?

முதலில் கதை. அடுத்து, கலர் பேலட். சினிமாவில் கலர் மேஜர் ரோல் என்பதால் காட்சிகளை என்ன கலரில் எடுக்கப் போகிறார்கள் என்பதை ஒளிப்பதிவாளருடன் டிஸ்கஸ் பண்ணுவேன். மூன்றாவதாக ஆர்ட்டிஸ்ட். அவர்களின் ஸ்கின் டோன், உடல் அமைப்புக்கு என்ன மாதிரி உடைகள் பொருத்தமாக இருக்கும் என்று பேட்டர்ன் தேர்வு செய்வேன். அந்தக் கேரக்டரும் உடையும் பொருத்தமாக இருப்பதற்கு நியாயம் செய்யப் பார்ப்பேன்.

சிலருக்கு இந்தியன் உடைகள் ஒட்டாது. சிலருக்கு மாடர்ன் உடை ஒட்டாது. உடை அணிந்த பிறகு அவர்களுக்கு மேக்கப், ஹேர் ஸ்டைல் என்று முழுவதுமாக கேரக்டராக மாறும் பிராசஸ் நடக்கும். அதன்பிறகு ஃபிட்டிங் பிராசஸ் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பேன். இப்படி எல்லாம் முழுமையாக பூர்த்தியானபிறகுதான் படப்பிடிப்பு நடக்கும். கேஷுவலான படம் என்றால் ஆயத்த ஆடைகள் போதுமானதாக இருக்கும். அழுத்தமான கதைகள் என்று வரும்போது நீண்ட பிராசஸ் இருக்கும்.

‘ருத்ரன்’ படத்தின் ஐகானிக் ஃபேஷன் என்றால் எதைச் சொல்வீர்கள்?

‘ருத்ரன்’ல லாரன்ஸ் மாஸ்டர் பண்ணாத கேரக்டர் பண்ணியிருக்கிறார். அவருடைய ஸ்டைலில் வராத கதை. சரத்குமார் சாருக்கும் பண்ணியிருக்கிறேன். அவருடைய ஸ்டைல் கிளாஸாக இருக்கும். அது எனக்கு பிடித்திருந்தது. சரத் சார் லுக்கிற்காக நிறைய ஒர்க் பண்ணினேன். அவருடைய அவுட்புட் எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கும்.

‘ருத்ரன்’ல தனித்துவமான வேலைகள் இல்லை. இதில் அவருடைய கேரக்டர் யதார்த்தமாக இருக்கும். அவருடைய தனித்துவமான ஸ்டைலை வெளிப்படுத்த பாடலில் மட்டும் ஒர்க் பண்ணியிருக்கிறேன். உடை விஷயத்தில் மாஸ்டருடைய ஆல் டைம் சாய்ஸ் கோட். எல்லா படத்திலும் எதாவது ஒரு பாடலில் கோட் இடம் பிடித்திருக்கும். அதுதான் அவருடைய ஸ்டைல் ஐகான்.

காஸ்டியூமைப் பொறுத்தவரை பாலிவுட் படங்களுக்கும், தமிழ்ப் படங்களுக்கும் என்ன வித்தியாசம்?

பாலிவுட்ல காஸ்டியூம்ஸ் ஹெவியாக இருக்கும். தமிழில் ரியாலிட்டியாக இருக்கும். பெரிய ஹீரோ படமாக இருந்தாலும் ஹீரோ ஆட்டோ டிரைவர் என்றால் அதற்குப் பொருத்தமாகவே உடை அணிந்திருப்பார். அதுல மாஸ் காண்பிப்பது, கூடுதல் உடை அணிவது தமிழ்ப்படங்களில் இருக்காது. எந்த மீட்டரில் இருக்க வேண்டுமோ அந்த மீட்டரில் இருக்கும்.

பாலிவுட்ல டிரஸ் தனியாகத் தெரியுமளவுக்கு ஆடை வடிவமைப்பு இருக்கும். சில படங்கள் யதார்த்தமாகவும் இருக்கும். மெஜாரிட்டியாக ஹெவி டிரஸ்ஸிங் இருக்கும். அதுவும் ஒரு அழகு என்று சொல்லலாம். தெலுங்கு படங்களிலும் பாலிவுட் பேட்டர்னை பார்க்க முடியும். இந்த மாதிரி படங்களிலிருந்தும் காஸ்டியூம் டிசைனர்கள் ரெஃபரன்ஸ் எடுக்க முடியும்.

பேய் கதைகளுக்கும் மற்ற கதைகளுக்கும் என்ன வித்தியாசம்?

பேய் கதைகளில் கலர் பண்ண முடியாது. முரட்டுத்தனமான விஷயங்களைத்தான் கையாள வேண்டும். ஒரு டிசைனராக கொஞ்சம் அலுப்பாக இருக்கும். ஏனெனில், பேய்க்கு  ஒரே மாதிரியான உடை கொடுக்க வேண்டும். ஹாரர் படம் இருள் சூழ்ந்த இடத்தில் நடக்கும் என்பதால் கலர்ஸ் யூஸ் பண்ண முடியாது.

பேய் படம் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், காஸ்டியூம்ல ஆப்ஷன் இருக்காது. ஆனால், ‘காஞ்சனா - 3’ எனக்கு ஹாரர் உணர்வைக் கொடுக்கவில்லை. பாடல்கள் இருந்ததால் என்னுடைய வேலையை முழுமையாகச் செய்ய முடிந்தது.

உங்கள் ஸ்டைலில் இருந்து விலகி கோலிவுட் ஃபேஷன் டிரெண்டிலிருந்து எதையாவது செயல்படுத்தியுள்ளீர்களா?

என்னுடைய ஸ்டைலில் இருந்து விலகி பண்ணியது என்றால் ‘யானை’ படத்தை சொல்லலாம். அது ரூரல் சப்ஜெக்ட். அந்தப் படம் பண்ணியபிறகு என்னுடைய ஃபேவரைட் லுக்காக மாறிவிட்டது. அதற்கு முன் நான் சிட்டி சப்ஜெக்ட் பண்ணியிருந்தேன். ரூரல் பண்ணும்போது என்னுடைய பார்வை கொஞ்சம் விலகியே இருந்தது. ஒர்க் முடிந்து பார்த்த பிறகு எனக்கு பிடித்திருந்தது.

காஸ்டியூமர் இயக்குநரின் பார்வைக்கு தகுந்த மாதிரி ஆடை வடிவமைப்பு செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியம்?

நூறு சதவீதம் டைரக்டர் கோணத்தில் பண்ண வேண்டும். இயக்குநரின் தேவையைப் பூர்த்தி செய்வதுதான் காஸ்டியூமர் வேலை. நாங்கள் முதலாவதாக முக்கியத்துவம் தருவது இயக்குநர்களுக்குத்தான். அதன் பிறகுதான் ஆர்டிஸ்ட் வருவாங்க. சில சமயம் நடிகர், நடிகைகளின் செளகரியமான வட்டத்தை விட்டு உடைகள் வெளியே இருக்கும்.

ஆனால், இயக்குநர் குறிப்பிட்ட லுக் வந்தால் கதை, கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்வார்கள். இந்த மாதிரி சமயத்தில் ஆர்ட்டிஸ்ட், இயக்குநர் என இரண்டு தரப்பையும் பேலன்ஸ் பண்ணி ஒர்க் பண்ண வேண்டும். ஆனாலும், முதலாவது இயக்குநரின் தேவைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

பேய் படங்களுக்குப் பிறகு எந்த மாதிரி ஜானர்ல வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறீர்கள்?

காமெடி படங்கள் ஒர்க் பண்ணியதில்லை. ‘காபி வித் காதல்’ படத்தோட ‘ரம்... பம்... ஆரம்பம்...’ பாடல் வெளியானபோது அந்த பாடல் என்னை மிகவும் இம்ப்ரஸ் பண்ணியது. அந்த மாதிரி கலர்ஃபுல் காதல் கலந்த காமெடி படம் பண்ணணும்.      

எஸ்.ராஜா