சிறுகதை - இரவுகள்



“என்னலேய் காரக்கோழி... ‘காவோ’ கொண்டு வரப் போன பயலுவோ வருவானுவளா மாட்டானுவளா?’’ திண்ணையில் சாய்ந்து கொண்டு மிகராஜ் லெப்பை கேட்டார்.
‘‘போயிருக்கானுவ லெப்பை. சீக்கிரம் வந்துடுவானுங்க’’ன்னு நான் சொன்னாலும் அவனுங்க எவனும் வரமாட்டானுங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

தராவீஹ் தொழுகை முடிஞ்சதும் தொழுது விட்டு வந்தவர்களுக்கு தேத்தண்ணியும், முறுக்கு அல்லது ஹம்சா கடை பக்கோடா என ஏதாவது கொறிப்பதற்குக் கிடைக்கும். வடக்குப் பள்ளிவாசல் தெருவில் உள்ள வீடுகளில் இருந்து முறை வைத்து தேத்தண்ணியும், அவரவர் வசதிக்கேற்ப வேறேதேனும் தின்பண்டமும் தொழுகை முடித்து வரும் ஆண்களுக்காக அனுப்பி வைப்பது வழக்கம். இப்படி முறை வைத்து 30 நோன்பு நாட்களிலும் தராவீஹ் தொழுகை முடிந்ததும் தொழுது விட்டு வருபவர்கள் தேத்தண்ணீர் குடித்தபடியே ஊர்க்கதைகளைப் பேசிச் சிரித்து விட்டு வீடு செல்வது வழக்கம்.

தராவீஹ் தொழுது முடிந்ததும், ‘வித்ரு’ தொழ ஆரம்பிக்கும்போது ஆனாசேனா, இம்மி, ஜாங்கி, ஆரி, அம்மி உள்ளிட்ட இளம் பட்டாளங்கள் எல்லாம் கிளம்பி விடுவார்கள் தேத்தண்ணி வாங்கி வர.தொழுகைக்காக வீட்டை விட்டு ஏழு மணிக்கே பெரிய மனிதர்கள் மாதிரி கிளம்பி விட்டாலும் கடைத்தெருவுக்குப் போய் நோன்பு பிடித்ததற்காகப் பெரியவர்கள் தந்த சில்லறையில் கல்கோனா வாங்கி வாயில் ஒதுக்கிக் கொண்டு அல்லது அம்புடுதக்கா கடையில் குச்சிஐஸ் வாங்கித் தின்றுகொண்டு மெதுவாகத்தான் பள்ளிவாசல் பக்கம் வருவது வழக்கம்.
வந்ததும் ஜாங்கியை (ஜஹாங்கீர்) ‘‘போய் பார்த்துட்டு வா என்ன ‘சூரா’ ஓதுறாங்கன்னு...’’ என்று அனுப்பி வைப்பேன்.

‘‘இப்பத்தான் நாலாவது ‘ரக்-அத்’ நடக்குது காக்கா. நம்ம இன்னம் கொஞ்சம் சுத்திட்டு வரலாம்...’’ என்றோ, ‘‘இதா ஜாஹ நருல்லாஹி ஓதுறாங்க. சீக்கிரம் வாங்க...’’ என்றோ தொழுகை எந்தத் தருணத்தில் இருக்கிறது என்று சரியாகக் கணித்துச் சொல்வதில் ஜாங்கி கில்லாடி.தொழுகை கிட்டத்தட்ட முடியப் போகிறது எனும்போது படை போல உள்ளே நுழைந்து ரொம்ப நல்ல பிள்ளைகளாய் தொழ ஆரம்பித்து விடுவோம். இவனுங்க எப்பவந்து தொழ ஆரம்பிச்சானுக என்பது யாருக்கும் தெரியாது.

இது ஒருமாதிரி என்றால் சமயங்களில் தொழுகை ஆரம்பிக்கும்போதே போய் நின்று விடுவதுமுண்டு. அன்றைக்கு தொழுகையில் பெரியவர்கள் எல்லாம் ‘சுஜ்து’க்குப் போகும்போது நாங்கள் மட்டும் வெளியில் வந்து விடுவோம். இதுவுமில்லாமல் சிரிப்பும் கும்மாளமுமாகவும் இருக்கும். மிகராஜ் லெப்பைக்குக் கோபம் வந்துவிடும். என்றாலும் ‘சின்னப்புள்ளைங்கதானே’ என்று விட்டு விடுவார். ஆனால், இந்த ரஹ்மானியா ஹோட்டல்காரனுக்குத்தான் சும்மா இருக்கத் தெரியாது.

‘‘ரமலானில் அல்லாஹுத்தாலா செய்த்தானை எல்லாம் கெட்டிப்போடுறதா சொல்லுறான். வடக்குத் தெரு பள்ளிவாசல்ல மட்டும் எதுக்கு அவுத்து வுட்டுருக்கான்னு தெரியல. இந்தப்பாருங்களே, ஒழுங்கா தொழுவுறதா இருந்தா பள்ளிவாசலுக்கு வாங்கோ. இல்லேன்னா பேசாம தெருவுல போயி வெளயாடுங்கோ. இங்க வந்து சத்தம் போட்டா பிச்சுப்போடுவேன்...’’ என்று சத்தம் போட்டான்.

இவன் அப்பன் வூட்டுப் பள்ளிவாசலா இது? வடக்குத் தெருக்காரங்களே பேசாம இருக்கும்போது வெளியூர்க்காரன் இவன் எங்களை எப்படி சத்தம் போடலாம்? நல்லபிள்ளையாக அன்று தொழுதுவிட்டு வந்தாலும் எனக்குள் கெட்ட கோபம் வந்து விட்டது.‘‘எலேய், நாளைக்கு ஒருத்தனும் பள்ளிக்கு தொழ வரக்கூடாது. வந்தா தொலைச்சு போடுவேன்...’’ என்றேன்.
‘‘ஐயோ, பள்ளிக்கு போவலேன்னு தெரிஞ்சா உம்மம்மா கொன்னு போடுவா...’’ என்றான் நியாஸ்.

‘‘அதையெல்லாம் நாங்க பாத்துக்குறோம். நீ தொழப் போனா நேத்து பள்ளிலே தொழும்போது நீதான் சிரிச்சேன்னு உங்க உம்மம்மா கிட்ட சொல்லிடுவேன்...’’ என்று மிரட்டினதும் தயங்கியபடி ஒப்புக் கொண்டான்.இம்மிக்கு (இமாம் என்ற பெயரின் சுருக்கம்) பள்ளிவாசல் போகாமல் இருப்பதில் பெரும் சிக்கல் இருந்தது.

மெகராஜ் லெப்பையின் அருந்தவப் புதல்வன் அவன். பள்ளிவாசலுக்கு அவன் போகாவிட்டால் வீட்டில் நல்ல ‘சாத்து’ கிடைக்கும்‘‘நான் என்ன செய்யுறது?’’ என்று அவன் கேட்டபோது எனக்கும் கவலையாகப் போய்விட்டது. கொஞ்சம் மண்டையைக் குழப்பியபின் இம்மிக்கு அடுத்தநாள் வயிற்றுவலி என்று தீர்மானம் போட்டாயிற்று.

‘‘எலேய்... என்னா? பள்ளிக்குப் போவலியான்னு...’’ சல்மாம்மா கேட்டதுக்கு ஏதோ காரணம் சொல்லிச் சமாளித்தாகி விட்டது. அன்று நல்ல பிள்ளையாக நான் வீட்டில் இருந்து பாடம் படித்துக் கொண்டிருந்ததில் உம்மாவுக்கு இயற்கையாகவே சந்தேகம் வந்து விட்டது.

‘‘என்ன, இன்னிக்கு அதிசயமா பாடம் படிச்சுக்கிட்டிருக்குறே?’’

‘‘நாளைக்கு பாப்பு டீச்சர் கணக்கு கேட்பாங்க. அதான் வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணுறேன்...’’ உம்மாவைப் பார்க்காமல் பதில் சொன்னேன்.
‘‘என்ன ஊமைக்குசும்பு பண்ணப் போறே நீ?’’ என்று அதிரடியாய் அடுத்த கேள்வி வந்தாலும், ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. வாய்ப்பாடு படிக்காம போனா டீச்சர் அடிப்பாங்க. அதுவும் புளியங்கம்பு வச்சு அடிப்பாங்க. அதான் படிக்குறேன்...’’

‘‘தராவீக்குப் போயிட்டு வந்து படிக்க வேண்டியதுதான?’’

‘‘போம்மா... அங்க போயிட்டு வந்தா அப்புறம் தூக்கம் வந்துடும். படிக்க முடியாது...’’இருந்தாலும் சந்தேகம் விலகாத பார்வையோடு விலகிச் சென்ற உம்மாவைப் பார்க்க எனக்குள் சிரிப்பாக வந்தது. கூடவே எவனாவது பள்ளிவாசலுக்கு எனக்குத் தெரியாமல் போய் விடுவான்களோ என்று கவலையாகவும் இருந்தது. எவனாவது போயிருந்தான்னா மலையாண்டிகிட்ட சொல்லிடவேண்டியதுதான். அவன் சைக்கிள்ல வச்சு அழுத்திட்டுப் போய் இசக்கியம்மன் கோயில் கிட்ட விட்டுட்டு வந்துருவான்.

ஆனால், வெற்றிகரமாகப் புறக்கணிப்பு அரங்கேறியது. பயலுகள் ஒருத்தனும் பள்ளிவாசல் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் புறப்படத் தயாராக இருந்தபோது மெகராஜ் லெப்பை வீட்டை நோக்கி வருவது தெரிந்ததும் தெருவீட்டில் கதவுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டேன்.

உள்ளே நுழைந்த லெப்பை, ‘‘சலாமு அலைக்கும். வீட்டுல யாரு?’’ என்று குரல் கொடுத்தார். கண்ணாடி பெத்தாதான் முதலில் வெளியே வந்தாள். ‘‘வலைக்கும் சலாம். யாரு லெப்பையா? வாங்க வாங்க. என்ன சுவமா இருக்கியளா? நோம்பெல்லாம் எப்படி போவுது?’’ என்று கேள்வியாய் அடுக்கினாள்.

‘‘நல்லா இருக்கேன் பெத்தா! நீங்க எப்படி இருக்கியோ? நோம்பெல்லாம் நல்ல ‘ராகத்தா’ இருக்குதா?’’

‘‘அல்ஹம்துலில்லா. படைச்ச ‘ரப்பு’ நோம்பு புடிக்க தெம்பு குடுக்காமலா போயிடுவான்...’’கிழவிக்குப் பல் போன காலத்திலும் நோன்பு புடிக்கிற திமிர் என்று நினைத்துக் கொண்டேன்.

‘‘மோசாம்மா இல்லியா...’’ என்றார் லெப்பை மெதுவாக.எப்போதுமே இரைந்து பேசாதவர் சத்தம் போடுவதாக இருந்தால் கூட அதிராமல்தான் சத்தம் போடுவார்.. அவரே அப்படி இருக்கும்போது எவனோ வந்து இருந்தாலும் தொழுவுறதுக்கு மட்டும்தான் பள்ளிவாசலுக்கு வரணும்னு எப்படிச் சொல்லலாம்?

‘‘அவ வேலையா இருந்தா. வரச் சொல்றேன்...’’ என்று பெத்தா முடிப்பதற்கு முன்பே உம்மா வந்து, ‘‘சலாம் அலைக்கும் லெப்பப்பா...’’‘‘வலைக்கும் சலாம் மோசாம்மா. நோம்பெல்லாம் ‘ராகத்தா’ இருக்குதானே?’’ என்று அதே கேள்வியைக் கேட்டார்.உம்மாவும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே முகத்தில் கவலை ரேகைகள் தென்பட்டதை என்னால் படிக்க முடிந்தது. சாதாரணமாக லெப்பை வீடு தேடி வருவதில்லை. ஏதேனும் செய்தி இருந்தாலும் எந்தப் பையனிடமாவது சொல்லி அனுப்புவதுதான் வழக்கம். ஆனால், அவரே நேரிடையாக வந்திருக்கிறார் என்றால் ஏதேனும் விஷயம் இருக்கும்.

‘‘என்ன லெப்பப்பா... என்ன விசயம்?’’ உம்மாவின் முகத்தில் கவலை.‘‘ஒண்ணுமில்லம்மா. சின்னவன் பள்ளிக் கூடத்துக்குப் போயிட்டானா?’’
‘‘ஆமா. அப்பவே போயிட்டானே. என்ன விஷயம்?’’ நான் தெரு வீட்டுக்குள் ஒளிந்திருப்பது உம்மாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மெதுவாகச் சிரித்தார் லெப்பை. ‘‘காரக்கோழி லேசுப்பட்ட ஆளில்லம்மா... சரியான ரோசக்காரனால்ல இருக்கான்...’’‘‘ஏன் என்ன பண்ணுனான்?’’ மீண்டும் கவலையோடு உம்மா.

‘‘ஒண்ணும் பண்ணல... ஆனால்...’’ எதற்காகவோ தயங்கி இருந்து விட்டு பின்னர், ‘‘முந்தா நேத்து பள்ளிக்கு வந்து தொழும்போது சேட்டை பண்ணிக்கிட்டு இருந்தானுவோ... இவன் பண்ணல. ஆனா, இவன் கூட வருதுங்களே செய்த்தானுவோ.

அதுங்க எல்லாம் சத்தம் போட்டுக்கிட்டு வெளயாண்டுக்கிட்டு இருந்துதா.. அதான் இனிமே வெளயாடுறதா இருந்தா பள்ளிவாச பக்கம் வராதீங்கன்னு ரவுமானியா ஹோட்டல்காரரு சொன்னாரு பாத்துக்குங்கோ.. நேத்து ஒரு பயலும் தொழுறதுக்கு வரவேயில்லம்மா பள்ளிவாசலுக்கு. எனக்குப் பொறந்த சின்ன செய்த்தான் நேத்து பள்ளிக்கு வராம இருந்ததுக்குக் காரணம் கேட்டா வவுத்து வலின்னு சொன்னான்.

ஆனா மூணு தட்டு சோறு ஒண்ணா திங்குறான். அதட்டிக் கேட்டா யாரும் பள்ளிவாசலுக்கு இன்னிக்குப் போவக் கூடாதுன்னு நம்ம சின்னாருதான் சொல்லியிருக்கானாம். நீங்க அவனை அடிக்க வேணாம். பயலுவளைக் கூப்பிட்டுட்டு பள்ளிக்கு வரச் சொல்லுங்கோ...’’ சொல்லி முடித்து விட்டுச் சிரித்தார்.‘‘ஆனாலும் பாத்தியளா... மொளச்சு மூணு இல வுடறதுக்கு முந்தி எவ்வளவு ரோசமா இருக்கானுவோ இந்தக் காலத்துப் பயலுவோ...’’ மீண்டும் அவர் சிரித்தாலும் உம்மாவுக்குக் கெட்ட கோபம் வந்துவிட்டதை முகம் உணர்த்தியது.

‘‘சரி லெப்பப்பா, நான் அவன் கிட்ட சொல்றேன். சூடு போட்டாத்தான் இந்த வெட்டி ரோசமெல்லாம் காணாம போவும்...’’‘‘இதப் பாத்தியாம்மா... இதுக்குத்தான் உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நெனச்சேன். நோன்பு வெக்கிற புள்ள. இந்த வயசுல இதெல்லாம் செய்யாம எப்படி? கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பானுவோ.

அடிக்காதீங்கோ. நீங்க சொன்னா அவன் கேப்பான். அப்ப நான் வரட்டுமாம்மா? சின்னாரு வாப்பா பெருநாளைக்கு வராங்களா? சலாம் சொன்னதாச் சொல்லுங்கோ...’’ என்றவாறே அவர் படியிறங்கிப் போனதும் எனக்குக் கோபமாக வந்தது. இம்மி பயல் உளறினதாலதான் எல்லாம் கெட்டுப் போச்சு. இன்னிக்கு உம்மா கிட்ட அடிவாங்கிச் சாவ வேண்டியதுதான். நினைக்கும்போதே அழுகையாக வந்தது.

ஆனால், சாயங்காலம் உம்மா அடிக்கவில்லை.‘‘இன்னிக்கு வாய்ப்பாடு இருக்கா, இல்லே தொழப் போகப் போறியா’’ன்னு உம்மா கேட்டதுமே சாரத்தை உடுத்திக் கொண்டு தொப்பியைத் தலையில் மாட்டிக் கொண்டு நல்ல பிள்ளையாக பள்ளிவாசலுக்குக் கிளம்பி விட்டேன்.

இம்மி கிட்ட மட்டும் பேசக் கூடாதென்று கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பினாலும் சுல்தான் ஹோட்டலில் யாருக்கும் தெரியாமல் இம்மி ஆப்பம் வாங்கித் தந்ததில் அவனோடிருந்த கோபம் தீர்ந்து விட்டது. ஆனால், ரகுமானியா ஹோட்டல்காரர் மேலிருந்த கோபம் மட்டும் தீரவில்லை.
வடக்குத் தெரு வீட்டுவாசிகளின் தேத்தண்ணி முறை முடிந்ததும் ரகுமானியா ஹோட்டல்காரர் தனது ஹோட்டலில் இருந்து தேத்தண்ணி கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தார். காத்திருந்த காலம் வந்துவிட்ட மகிழ்ச்சி எனக்கு.

வழக்கம்போல ‘வித்ரு’ தொழ எல்லோரும் தயாரெடுக்கும்போது தேத்தண்ணி வாங்கக் கிளம்பிய ஆனாசேனாவையும், அம்மியையும் நிறுத்தினேன். ‘‘தேத்தண்ணியை வாங்கிட்டு நேரா கபரடி முடுக்குக் கிட்ட நிக்கணும். நான் சொல்லும்போதுதான் வரணும். அதுக்கிடையிலே உனக்கு எவ்வளவு தேயிலை வேணுமுன்னாலும் குடிச்சுக்கோ. ஆனால், நான் வந்து சொல்லுறதுக்கு முன்னால பள்ளிவாசலுக்கு வந்தா கொன்னுபோடுவேன், தெரிஞ்சுதாலே?”

‘‘சரி காக்கா, ஆனா, கபரடி முடுக்குன்னா எனக்கு பயமாயிருக்குமே?” என்றான் ஆனாசேனா.‘‘இம்மி, இவனுவளுக்கு நீ துணையா போ” என்று சொன்னதும் தயங்கியவாறே இம்மி ஒப்புக் கொண்டான். நான் நல்ல பிள்ளையாக பள்ளிவாசல் போய் தொழுகையில் கலந்து கொண்டேன். வழக்கம்போல தேத்தண்ணி வாங்க மூன்று பேர் மட்டுமே போயிருந்ததால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரவில்லை.

தொழுகை முடிந்து ‘சலாம்’ சொல்லி வெளியில் வந்ததும் கொஞ்ச நேரம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘‘பாருங்களேன் வஹாப்சா, இன்னிக்குக் காலையிலேதான் மழ பெய்யுமுன்னு பேப்பருல போட்டிருந்தான். மழயயும் காணோம், மண்ணையும் காணோம்.”‘‘அதாவது சரி லெப்பை, ஆனா இந்த ஹராபாப் போன காத்தையுமுல்ல காணோம். எப்படி புளுங்குது பாருங்க.”

‘‘அதான் வகாப்சா ஜட்டி போடாம வெறும் வேட்டியோட தொழ வர்றார் போல, என்ன காக்கா?” என்றான் நியாஸ் குசுகுசுப்பாக. இந்த மாதிரி ஆராய்ச்சியில் அவன் பெரிய ஆளுதான். இப்படியே பேசிக் கொண்டேயிருக்கும்போதுதான் திடீரென்று ஞாபகம் வந்தது போல லெப்பப்பா கேட்டார் தேத்தண்ணி வாங்கப் போனவங்களை எங்கே என்று. வருவார்கள் என்று சொல்லி விட்டு ஒண்ணும் தெரியாதது போல நான் இருந்து கொண்டேன்.

இன்னும் கொஞ்ச நேரம் போனதும் ரகுமானியா ஹோட்டல்காரருக்கு சந்தேகம் வந்து விட்டது. ‘‘எங்க கடைக்குத்தானே போனாங்க?” என்றார்.‘‘ஆமா. உங்க கடைக்குத்தான் போனாங்க. உங்க கடையில போனவுடனே தேத்தண்னி தந்துடுவாங்களோ? அவனுவளை சும்மா காத்திருக்கச் சொல்லிட்டு வியாபாரமெல்லாம் முடிஞ்சதுக்குப் பொறவுதானே பள்ளிவாசலுக்குக் குடுப்பீங்க. போன வருசம் அப்படித்தானே நடந்தது?” என்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஊசி செருகினேன்.

‘‘அதெல்லாம் சரி வாப்பா, நேரமாவுதுல்ல. பேராண்டி போயி என்னாச்சுன்னு பாத்துட்டு வாங்களேன்” என்றார் வகாப் அப்பா.‘‘சரி பாத்துட்டு வர்றேன். நியாஸ், எங்கூட வா” என்று சொல்லிவிட்டு எழுந்து ரகுமானியா ஹோட்டலுக்குப் போவது போல நடந்து அரிகிருஷ்ணன் கடை முடிந்ததும் அந்த மூத்திர முடுக்கில் நுழைந்து குத்தாலம் சாராயம் விக்கிற கடையைக் கடந்து கபரடி முடுக்கு போனால் இம்மி பருப்பு வடையைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தான்.

சொல்லி விட்டபடி நியாஸ் ஒரு செம்பில் வென்னீர் கொண்டுவர, தேத்தண்ணியைப் பாதி குடிக்கும்வரை குடித்துவிட்டு மீதியில் வென்னீரைக் கொட்டி கலந்தோம். கேத்தலில் இருந்து கிளாசுக்கு ஊத்தி குடித்தால் வாந்தி வருவது போல இருந்தது. நினைத்ததைச் சாதித்து விட்ட மகிழ்ச்சியில் எல்லாரையும் அழைத்துக் கொண்டு பள்ளிவாசல் திரும்பினோம்.

‘‘பேராண்டின்னா பேராண்டிதான். போனோம் வந்தோம்னு வந்துட்டான் பாருங்க” என்று சான்றிதழ் வழங்கிய வகாப்சாவை நினைக்கக் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருந்தது.
‘‘அவன் கெட்டிக்காரம்லோ” என்றார் பாய் வியாபாரம் செய்யும் கபீர். எல்லாம் சொல்லுவீங்க.. தேத்தண்ணியைக் குடிச்சதுக்கப்புறம்தானே இருக்கு வேடிக்கை?

நினைத்தபடியே தேத்தண்ணியை வாயில் வைத்த அத்தனை பேருக்கும் முகம் வங்காளம் வரைக்கும் சுழித்துப் போனது. ‘‘என்ன பீர்கான், உங்க கடையில என்ன தேத்தண்ணி போட்டிருக்காங்க? இவ்வளவு மோசமா இருக்குதே?” என்றார் வகாப்சா. அதுவரை தயங்கிய மற்றவர்களும் தங்கள் பங்குக்குச் சேர்ந்துகொள்ள எனக்குள் நினைத்ததைச் சாதித்த மகிழ்ச்சி.ரகுமானியா ஹோட்டல் பீர்கானுக்கோ முகம் கறுத்து விட்டது. ‘‘எல்லோரும் மன்னிச்சுக்குங்கோ. என்ன நடந்ததுன்னு தெரியல.

பள்ளிவாசலுக்கு ஸ்பெசலா போடுன்னுதான் சொல்லிட்டு வந்தேன்” என்று சமாளிக்க முற்பட, ‘‘அதான் ஸ்பெசலா போட்டிருக்காங்க போலிருக்கு” என்று எரியும் கொள்ளியில் நான் எண்ணெய் போட எல்லோரும் சிரிக்க பீர்கான் குன்றிப் போனார். எவ்வளவு தெனாவெட்டு இருந்தா எங்க பள்ளிவாசலுக்கு வரக்கூடாதுன்னு எங்ககிட்டயே சொல்லுவார்? எனக்குச் சிரிப்பாக வந்தது. அன்று வீட்டுக்கு வந்தும் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து உம்மா ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒன்றும் நடக்கவில்லை.

அடுத்த நாள் தொழுகைக்கும் அதன் பின்னரும் பீர்கான் பள்ளிவாசலுக்கு வரவில்லை. சொந்த ஊருக்குப் போய்விட்டதாக வகாப்சா சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வெற்றியைக் கொண்டாட எல்லோருக்கும் பெருநாளைக்கு சேமியா போட்ட பால் ஐஸ் வாங்கிக் கொடுத்துக் கொண்டாடினேன்.

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வடக்குப் பள்ளிவாசல் தெருவில் தராவீஹ் தொழுவதற்கு புறப்படும்போது என் மகனும் கூட வருவதற்காகப் புறப்பட்டான். ‘‘சும்மா கூப்பிட்டுட்டுப் போ. உன்னை மாதிரி சேட்டை ஒண்ணும் பண்ண மாட்டான்” என்று சொல்லி உம்மா சிரித்தார்கள். எனக்கும் சிரிப்பு வந்தது. நான் போகும்போது தொழுகை துவங்கியிருந்தது. அவசரமாக இமாமோடு சேர்ந்து கொண்டேன். மனது தொழுகையில் ஆழ்ந்து விட தொழுகை முடிந்து, ‘முஸாபா’ செய்கையில், ‘‘சலாமலைக்கும் வாப்பா, நல்லா இருக்கீயளா?” என்ற குரல் ஈர்த்தது.

அதே பீர்கான் காக்கா. பழைய மிடுக்கு இல்லாமல் வெகுவாகத் தளர்ந்த உடல். கடந்து போன காலத்தின் மிச்சமாக அவர் நின்றிருக்க எங்கேயோ மறைந்து மறந்திருந்த குற்ற உணர்ச்சி எனக்குள் வெளிப்பட்டது.

பதிலுக்கு சலாம் சொல்லி, அவரை ஆரத் தழுவி ‘முஸாபா’ செய்கையில் மெதுவாக அவர் காதுக்குள் ‘‘இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்!” என்று கிசுகிசுத்தேன். ‘‘எதுக்கு வாப்பா?”  என்று என்னைக் கேட்டவருக்கு என் கண்கள் பனித்திருந்ததன் காரணம் புரிந்திருக்க வாய்ப்பேயில்லை.மகனையும் கூட்டி வீடு நோக்கி நடக்கையில் மனது அந்த நோன்புக்கால இரவின் அமைதி போல நிறைந்திருந்தது.

 -  ஆசிப் மீரான்