‘‘வந்துடுவேன்;வந்துடுவேன்னு சொல்லிட்டு வராமலே போயிட்டியே சாமி...’’



34 ஆண்டுகால சிறைவாசியின் இறுதி யாத்திரை

‘‘எப்படியும் வந்துடுவேன். நம்ம ஊரை கண்குளிரப் பார்ப்பேன். சொந்த பந்தங்களையெல்லாம் சந்திப்பேன்!’’ என்று தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் எல்லாம் நம்பிக்கையுடன் சொல்லுபவர்.
இப்படி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல; 34 ஆண்டுகளாக சொல்லி வந்தவர், தன் நம்பிக்கை நிறைவேறாமலேயே இறந்து போனார். 34 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். மைசூர் சிறையில் இருந்த வீரப்பன் வழக்கின் கடைசி சிறைவாசி. மீசைக்கார மாதையன் இறப்பு குறித்து வீரப்பன் விசுவாசிகள் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்.

அவர் உடல் அடக்கம் அவரின் சொந்த ஊரான மோட்டுமடுவு என்ற கிராமத்தில் கடந்த வாரம் நடந்தது. சேலம் மேட்டூரிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் குளத்தூர். அங்கிருந்து ஏழு கிலோமீட்டரில் கருங்கல்லூர் கிராமம். இங்கேயிருந்து இரண்டு கிலோமீட்டரில் மோட்டுமடுவு. வீரப்பன் கூட்டாளி மாதையன் இறந்தது, அவர் உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்படுவது கருங்கல்லூர் கிராமத்திலிருந்தவர்கள் பெரும்பாலானவர்களுக்கே தெரியவில்லை.

மோட்டுமடுவு சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கும் குட்டி கிராமம். போகிற வழியில்தான் வீரப்பனின் - மாதையன் குடும்பத்தாரின் குலதெய்வமான முனியப்பசாமி கோயில். அங்கிருந்து ஒதுக்குப்புறமாக இருக்கிறது மாதையன் குடும்பம். பத்துக்கு பதினாறு அடியில் சின்ன வீடு. அதில் இரண்டு அறைகள். இரண்டு கதவுகள். ஒன்றில் மாதையனின் ஒரு மகனும், மருமகளும், இன்னொன்றில் மனைவியும் வசித்து வருகின்றனர்.

சின்ன திண்ணையில்தான் பெண்கள் கட்டிக்கொண்டு ஒப்பாரி மூலம் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். வாசலில் துக்கம் விசாரிக்க வருபவர்களுக்காக பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கே வருபவர்களுக்கு கைநீட்டிக் கொண்டிருந்தவர் சாட்சாத் வீரப்பன் சாயலில் மீசையும் வைத்திருந்தார். அவர் சாமிநாதன். மாதையனின் தம்பி. இவரும்  ஆறாண்டு காலம் வீரப்பன் வழக்கில் சிறையிலிருந்தவர். கிட்டத்தட்ட ஒன்பது கொலை வழக்குகளுக்காக கோர்ட்டுக்கு நடையாய் நடந்து விடுதலை பெற்றவர்.

அந்தக்காலத்தில் போலீஸ் டார்ச்சர் கேம்பில் வைத்து சித்ரவதை செய்ததில் உடம்பெல்லாம் ஊமைப் புண் ஆகி தற்போதும் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். இவர் தன் அண்ணன் மாதையன் வீட்டுக்கு அருகாமையிலேயே வீடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் மகனும், மருமகளும்தான் இவர் குடும்பத்தை கவனித்து வருகிறார்கள்.

மாதையனின் மனைவி தங்கம்மாளுக்கு வருமானம் ஏதும் இல்லை. ஒரு மகன் போலீஸ் என்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட இன்னொரு மகன் - மருமகள் இவருடன் வசித்தாலும் அவருக்கும் வேலையில்லை. ஒரு ஏக்கர் வறண்ட காடு. மழை வந்தால் சோளம், ராகி விதைக்கலாம். மீதி நேரங்களில் மாங்காய், தேங்காய் இப்படி கூடையில் தெருத் தெருவாக விற்று ஜீவனம் ஓட்டுகிறார்.

‘‘எங்க குடும்பத்தில் மட்டும் வீரப்பன் வழக்குகளுக்காக அண்ணன் மாதையன் உட்பட நான்குபேரை இழந்துள்ளோம். அதில் மூன்று பேர் உடலை நாங்களே பார்க்கவில்லை. இப்போது அண்ணன் உடல் மட்டும் ஊர் சுடுகாட்டுக்கு வருகிறது..எங்க குடும்பத்தில் வீட்டில் இருந்த என்னைத்தான் போலீஸ் முதலில் பிடித்தது.

அதற்கு முன்பு என் அப்பா, அம்மாவை மாதக்கணக்கில் வைத்து டார்ச்சர் செய்திருக்கிறது. அதில் அப்பா சிறையில் இருந்தபோது நான்தான் ஜாமீன் எடுத்தேன். அதற்குப் பிறகே என்னைப் பிடித்தார்கள். என்னை அவர்கள் சித்ரவதை செய்ததை பொறுக்க முடியாமலே அண்ணன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அவரையும் என்னையும் ஏழு கொலை வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தார்கள்!’’

என்று தானும், தன் அண்ணனும் வீரப்பன் வழக்குகளில் மாட்டிய சம்பவங்களைச் சொல்லி வருத்தப்பட்டார் சாமிநாதன்.துக்க வீட்டிற்கு வரும் உறவுக்காரர்கள் பெரும்பாலும் வீரப்பன் வழக்குகளில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களாகளே இருந்தனர். அவர்களின் நாவிலிருந்தும் வீரப்பன் கதைகளும், அதிரடிப்படை டார்ச்சர்களும், மாதையன் குடும்பக் கதைகளும் சரளமாக வெளி வந்தன.

அதன் சுருக்கம் இதுதான்: வீரப்பன் கூட்டாளிகளில் முக்கியமானவர் மீசைக்கார மாதையன். வீரப்பனின் தந்தையுடன் பிறந்தவர்கள் மூவர். அதில் இந்த மீசைக்கார மாதையன் தந்தையும் ஒருவர். அதாவது வீரப்பனுக்கு இவர்கள் பங்காளி முறை. மீசைக்கார மாதையனுடன் பிறந்தவர்கள் அவரையும் சேர்த்து ஆண்கள் நால்வர். அதில் இவர்களின் கடைசித் தம்பியை வீரப்பன் சிறுவனாக இருந்த காலத்திலேயே மலைக்காடுகளுக்குள் அழைத்துச் சென்று விட்டார். 1980களில் வீரப்பன் சந்தனக்கட்டை கடத்தலில் ஈடுபட்டபோது பங்காளிகள் பலரும் அவருடன் இருந்துள்ளனர்.

அதுவரை இவர்களுக்கு, தாம் செய்யும் தொழில் குற்றம் என்பது கூட தெரிந்திருக்கவில்லை. சிதம்பரம் ரேஞ்சருக்கும், வீரப்பனுக்கும் வாக்குவாதம் நடந்து அதில் வீரப்பன் சிதம்பரம் ரேஞ்சரைச்சுட்டுக் கொல்லவும்தான் விவகாரம் தீயாய் புறப்பட்டது. தமிழக வனத்துறையினர் அணி அணியாகச் சேர்ந்து வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபடலாயினர்.

அதைத் தொடர்ந்து வனத்துறையினருக்கும், வீரப்பனுக்கும் நடந்த  மோதல், தொடர்ந்து போலீஸாருக்கும் வீரப்பனுக்கும் நடந்த சண்டை, கொல்லப்பட்ட உயிர்கள் காரணமாக வெளியுலகில் வீரப்பன் பரபரப்பாய் பேசப்படலானார்.

அந்த தேடுதல் வேட்டை பரபரப்பில் சிக்கி சின்னாபின்னப்பட்டது வீரப்பனுக்கு உதவுவதாக கருதப்பட்ட வீரப்பனின் உறவினர்களும், நண்பர்களும், மலைமக்களும்தான்.
அதில் ரொம்பவும் பாடாய்பட்டது இந்த மீசைக்கார மாதையனின் குடும்பம். இவரது தம்பி சாமிநாதன், முனியன், சுண்டா வெள்ளையன், மாதையனின் மகன் மாதேஷ் ஆகியோர் போலீஸ் தேடுதலுக்கு பயந்து காட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். இதில், சாமிநாதன் மட்டும் 1991ல் போலீஸில் சரணடைந்தார். தொடர்ந்து மீசைக்கார மாதையனும் சரண்டரானார்.

இவர்கள் மீது பல்வேறு கொலை வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகளில் தன் வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார் மாதையன். அவர் தம்பி சாமிநாதன் ஒரே ஒரு வழக்குக்கு மட்டும் ஜாமீன் கிடைக்காத நிலையில் ஆறாண்டுகள் சிறையில் இருந்தார். 1993ல் முனியன், சுண்டா வெள்ளையன் இருவரும் போலீசாரிடம் சரணடைந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1998ல் மீசைக்கார மாதையனின் மகன் மாதேஷ் சத்தியமங்கலம் காட்டில் உள்ள புளியங்கோம்பை என்ற ஊரில் தமிழ்நாடு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் மோகன் நவாஷால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆக மொத்தம், இவர் குடும்பத்தில் மட்டும் வீரப்பன் வழக்குகளுக்காக 3 பேர் உயிரிழக்க, மீசை மாதையன் மீது மேலும் பாலாறு குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகள் கர்நாடக போலீஸாரால் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தடா வழக்கும் பாய்ந்து, விசாரணை முடிவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

போலீஸார் மேல் முறையீட்டு மனு விசாரணைக்குப் பின்னர், உச்ச நீதிமன்றம், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நால்வரின் ஆயுள் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக மாற்றியது. இதை எதிர்த்து ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நால்வரும் தூக்கில் போட உத்திரவு பிறப்பிக்கப்பட்டது.  

குடியரசுத் தலைவர் மனுவை முறையான காலத்தில் பரிசீலனை செய்து முடிக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து  கருணை மனுவை ஒன்பது ஆண்டுக்காலம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் வைத்திருந்த காரணத்தினால், இந்த நால்வரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தலைமை நீதிபதி சதா
சிவம், ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் தலைமையிலான அமர்வு  ஒரு தீர்ப்பை வழங்கினர். ஜனவரி 2014ல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டாலும், கர்நாடக மாநில அரசும் சிறைத்துறையும் இந்த நால்வரையும் விடுதலை செய்யாமலே சிறையில் வைத்திருந்தனர்.

ஏற்கனவே மூன்றாண்டு காலம், பின்னர் 31 ஆண்டுகள் என மைசூர் சிறையிலிருந்த மீசை மாதையன், கடந்த 11ம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார். தொடர்ந்து பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாதையன் உயிரிழந்தார். மாதையனின் உடல் வரும்போது மாலை 5 மணி ஆகி விட்டது. துக்க வீட்டுக்கு ஒரு பர்லாங் தூரத்திலேயே சுடுகாடு. நேரே அங்கேதான் ஆம்புலன்ஸ் வந்தது. தன் கணவனின் உடலைப் பார்த்து அவர் மனைவி தங்கம்மாள் அழுது கரைந்தது அந்தப் பிராந்தியத்தையே உலுக்கியது. அவருக்கு ஆறுதல் சொல்ல வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வந்திருந்தார்.

பெங்களூரு சென்று மைசூர் சிறை அதிகாரிகளிடமும், போலீஸாரிடமும் மல்லுக்கட்டி உடலை வாங்கி வந்தவர் அந்தியூர் அன்புராஜ். வீரப்பன் கூட்டாளியாக வாழ்ந்து போலீஸில் சரண்டராகி, 20 ஆண்டுகள் மைசூர் சிறையில் தண்டனை அனுபவித்து, நாடகப்பட்டறை நடத்தி விடுதலையாகி, அந்தியூரில் வசிப்பவர் அன்புராஜ். வீரப்பன் வழக்கு சிறைவாசிகளுக்காகவும், அதில் வதைபட்ட மக்களுக்காகவும் இன்றும் போராடி வருபவர். அவர்களுக்காக துணை நிற்கும் ஒரே மனிதர்.

‘‘மைசூர் போலீஸார், பாடியைத் தர மாட்டோம். இங்கேயே எரித்து விடுவோம் என்றெல்லாம் பிடிவாதம் பிடித்தார்கள். நாங்கள் விடவில்லை. எந்த சட்டவிதிமுறைப்படி பாடியை தர மறுக்கிறீர்கள் என்று போன பத்துப் பேரும் சாலையில் உட்கார்ந்து விட்டோம். அதன் பிறகுதான் ஃபார்மாலிட்டியை முடித்து பாடியைக் கொடுத்தார்கள்...’’ என்றார்.

முன்தினம் இவர் வரும் வரை மாதையன் குடும்பத்தில் இருந்து அவர் உடலை வாங்க ஒருவரும் வரவில்லை. காரணம், அவர்களுக்கு பெங்களூரு சென்று, ஆம்புலன்ஸ், கார் செலவு செய்ய வசதியில்லை. ‘‘இந்த ஏற்பாட்டை நாங்களே செய்ததால்தான் உடலையாவது ஊர் மக்கள் கண்ணில்படும்படி கொண்டு வர முடிந்தது!’’ என உருகினார் அன்புராஜ்.

‘‘மாதையன் எந்தக்குற்றமும் செய்யவில்லை. சந்தர்ப்ப சாட்சியங்கள் அவரைக் குற்றவாளியாக்கி விட்டது. தமிழக சிறையில் இருந்திருந்தால் அவரை கடைசிகாலத்தில் நோய்வாய்ப்பட்ட இந்த சூழ்நிலையிலாவது விட்டிருப்பார்கள். அப்படித்தான் என் கணவர் வீரப்பனின் அண்ணன் மாதையன் இறப்புக்குப் பின்னர் நீண்டகால சிறைவாசிகள் இருவரை வெளியே விட்டார்கள். மைசூர் சிறை என்பதால்தான் கர்நாடக போலீஸ் விடவில்லை.

மாதையன் குடும்பம் இப்போது ஏதுமற்றவர்களாய் உள்ளனர். அன்றாட உணவுக்கே அல்லாடுகின்றனர். இதைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் கருணை கூர்ந்து இவர்களுக்கு ஏதாவது உதவிட வேண்டும்!’’ என்றார் வீரப்பனின் மகள் முத்துலட்சுமி.  மாதையன் மனைவி தங்கம்மாள் பேச சக்தியற்றவராக நம்மிடம் பேசினார். ‘‘சாமீ... வந்துடுவேன்... வந்துடுவேன்னு சொல்லிட்டு வராமலே போயிட்டார்... நானும் நம்பீட்டு இருந்தேன் படுபாவி... எனக்கும் வயசாயிருச்சு.

என்ன செய்வேன். ஒரு கூடை தூக்க முடியலை. நடக்க முடியலை. ஏதாச்சும் பார்த்து உபகாரம் செய்யுங்க சாமீ!’’ அவர் வீறிட்டு அழுதது மனதை என்னவோ செய்தது.குற்றவாளிக்குத்தானே தண்டனை. குற்றவாளியின் மனைவிக்கு ஏனிந்த தண்டனை? மனம் கேள்வி கேட்டது. இதுமாதிரி நிறைய கேள்விகள். விடைகள்தான் இல்லை.

கா.சு.வேலாயுதன்