புவி வெப்பமயமாதலை தடுக்க களம் இறங்கிய கோவை இளைஞர்
புத்தம் புது மனைவியே ஆனாலும் சைக்கிளில்தான் பயணம்!
முப்பதாண்டுகளில் உலகத்தினுடைய சராசாி வெப்பநிலை 1.22 டிகிரி செல்சியஸ் அதிகமாகியிருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் 2100ம் ஆண்டில் வெப்பநிலை 3.20 டிகிரி செல்சியஸ் கூடுதல் ஆகும். அதனால் மனித இனமே அழிந்து விடும். எண்ணி நூறாண்டில் மனிதகுலமே வசிக்க முடியாத அளவு பூமி சூடாகிறதென்றால் யோசித்துப் பாருங்கள்.
காலநிலை மாற்றம் என்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. எளிதாகக் கடந்து போகக்கூடிய விஷயமல்ல. இது உலகத்தையே அழிவுக்குள்ளாக்கும். கார்பன் வெளியேற்றமே இதற்கு எல்லாம் மூலகாரணம்!’’ வாயைத்திறந்தால் போதும் இப்படி புவி வெப்பமயமாதல் குறித்து நிறைய பேசுகிறார் சிவசூர்யன்.
 இதை மக்களிடம் விழிப்புணர்வூட்ட கடந்த மாதம் காஷ்மீர் டூ கன்னியாகுமரி 4200 கி.மீ சைக்கிள் பயணம் செய்துள்ளார். நான்கு மாதங்கள் முன்பும் குஜராத் டூ கோவைக்கு ஒரு சைக்கிள் பயணம். கோவை டூ குருவாயூர் 250 கி.மீ தூரம் முடித்துவிட்டு தன் திருமணத்திற்கு சைக்கிளில் போய் இறங்கியுள்ளார். இப்படி திருமண வீட்டில் இறங்கிய புது மாப்பிள்ளை இந்தியாவில் இவராகத்தான் இருக்கும்.
 காஷ்மீர் டூ கன்னியாகுமரி பயணத்தில் சைக்கிளில் இவர் கட்டியிருந்த பேனர் வாசகம் ‘பசுமை இந்தியா’. இந்த பயணத்தில் இளைஞர்கள், பெரியவர்கள், குழந்தைகள், கல்லூாி மாணவ, மாணவிகளிடம் புவிவெப்பமயமாதல் குறித்து பேசியிருக்கிறார்.‘‘இந்த பூமியை நாம் எப்படி அனுபவிக்கிறோமோ, அதே மாதிரி நம் சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். அப்படி அதை விட்டுச் செல்ல ஒவ்வொரு உலகக்குடிமகனும் இன்றைக்கே இப்படியொரு செயல் திட்டத்தில் இறங்க வேண்டும். அதற்கு தம் பங்குக்கு கார்பன் வெளியிடுவதை நிறுத்த வேண்டும்!’’ என்று வேண்டுகோள் விடுப்பதே இவரின் தாரக மந்திரம்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன் பாளையத்தில் இவர் வீடு. அப்பா இல்லை. அம்மா, தாய் மாமா பராமரிப்பில் வளர்ந்தவர். 28 வயது. கெமிக்கல் எஞ்சினியர் படிப்பு. குஜராத் வதேதுரா மாவட்டத்தில் ஒரு மருந்துக் கம்பெனியில் பணி. ‘‘அப்பா இல்லாததால அந்த இடத்துல என்னை வளர்த்து ஆளாக்கினது மாமா. சின்ன வயசில் ஈரோடு பக்கம் உள்ள பவானிக்கு குடும்பமே சென்றது. அப்ப என் மாமா முப்பது ரூபாய் கையில் கொடுத்து, ‘ஒரு வேளை நீ காணாமல் போனா உடனே பஸ் பிடிச்சு வீட்டுக்கு வந்துடணும்’ன்னு சொன்னார். அப்ப, நாம் தொலைந்து போனால் திரும்பி வருவது எப்படி என்ற யோசனை ஏற்பட்டது. அதுவே பின்பு வழக்கமாகி விட்டது. நம்ம போற பஸ் எது... அதன் முகப்பு போர்டுல என்ன எழுதியிருக்கு... திரும்ப எப்படி எந்த நேரத்தில் அந்த பஸ்வரும்... அதுல ஏறி எப்படி வீட்டுக்குப் பக்கத்துல போய் எறங்கறது என இந்த ஆராய்ச்சியில் இறங்கிடுவேன். ப்ளஸ்டூ படிக்கும்போது ஆசிரியர் ஒருத்தர் ‘‘நினைவுகள் அழிவதில்லை’ என்ற புத்தகம் படித்தபோது கண்ணில் நீர் கொட்டியது. பல நாட்கள் என்னை அந்தப் புத்தகம் தூங்கவிடவில்லை’ன்னு சொன்னார். ஒரு புத்தகம் ஒரு மனிதனை தூங்க விடாமல் செய்யுமான்னு ஆச்சர்யப்பட்டேன்.
அந்த புத்தகத்தை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். தொடர்ந்து அதேமாதிரியான புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். அதில் இறையன்பின் தன்னம்பிக்கை நூல்கள் வெகுவாக ஈர்த்தது. அதன் மூலம், நாம சுயநலமா வாழக்கூடாது; சுத்தியிருக்கிற நாலு பேருக்காவது உதவணும்கிற எண்ணம் ஏற்பட்டது. கல்லூரிப் படிப்பு முடிந்து பரோடா நகரில் ஒரு வேலையில் சேர்ந்த போது சம்பளத்தில் தினம் பத்து ரூபாய் எடுத்து சேமித்து அதை ஏழை எளிய குழந்தைகள் படிப்புக்காக உதவ ஆரம்பித்தேன்.
என்னைப் போலவே பத்து இளைஞர்கள் சேர்ந்தார்கள். எல்லோரும் சம்பளத்தில் ஒரு தொகை ஒதுக்கி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவ ஆரம்பித்தோம். படிப்பு தாண்டி ஓவியம், விளையாட்டு என மாணவர்களிடமிருக்கும் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதே எங்கள் சேவையானது. இதற்காக ‘ஸ்பெட்லவ் ஃபவுண்டேஷன்’னு ஒன்றை ஆரம்பித்து முறையாக செய்ய ஆரம்பித்தோம். அதுதான் இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கும் விதையாக அமைந்தது!’’ என்று படபடவென்று தன் மனதிலிருந்த விஷயங்களை அருவியாகக் கொட்டினார்.
இதன் மூலம் இவர்கள் ஆட்டிசம் பாதித்த ஒரு குழந்தை பள்ளியில் சேர உதவியுள்ளனர். சிறுநீரகம் செயலிழந்த தந்தையை ஆஸ்பத்திரியில் கவனித்துக் கொள்ள படிப்பை விட்ட ஒரு மாணவிக்கு மீண்டும் படிக்க வசதி ஏற்படுத்தித் தந்துள்ளனர். குஜராத் டூ கோவை சைக்கிளிங் வந்தபோது பல நண்பர்கள் வழியில் பணமும், பொருளுதவியும் செய்துள்ளனர். அதை எல்லாம் இப்படியான ஏழை எளிய சிறுவர் சிறுமிகளுக்கு கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் அளித்துள்ளார்.
‘‘2019ல் அப்துல் கலாம் பிறந்தநாள் அன்று ஃபிட்னஸ் சேலன்ஞ் என்றொரு நிகழ்வு நடந்தது. அதில், ‘‘ஒரு நாட்டோட உண்மையான சொத்து அந்த நாட்டினுடைய மக்களுடைய உடல்நலன்தான்’’னு இறையன்பு சொன்னதை மேற்கோள் காட்டி பேசினேன். ‘‘நம் உடல் நலன் நன்றாக இருக்க, சூழல் நன்றாக இருக்க வேண்டும். தட்ப வெப்பநிலை சீராக இருக்க வேண்டும். அதற்கெல்லாம் சிக்கலாக இருப்பது புவி வெப்பமயமாதலாக இருக்கிறது!’ என்று பேசினேன்.
இதைப் பற்றி மக்களுக்கு புரியும்படி எப்படி எடுத்துச் சொல்வது என்று அப்போதே சைக்கிளிங்கில் இறங்கினேன். அதன் அடிப்படைதான் குஜராத் டூ கோவைக்கு என் சைக்கிள் பயணம். ஒண்ணு தெரியுமா... என் திருமணம் காதல் திருமணம்!’’ என்று சொல்லி, தான் சைக்கிளில் மாப்பிள்ளையாகச் சென்ற அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தார். ‘‘வாகன வசதி கூடாது. நான் சைக்கிளில்தான் வருவேன் என பெண் வீட்டாரிடம் சொன்னபோது அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களை கன்வின்ஸ் செய்யவும், மணப்பெண்ணை சமதானப்படுத்தவும் மூன்று மாதங்கள் தேவைப்பட்டது.
மணமகனாக குருவாயூர் போகும்போது என்னுடன் நண்பர்கள் பலரும் சைக்கிளிலேயே வந்தார்கள். திரும்பி வரும்போது கூட மனைவியுடன் சைக்கிளிலேயே வரத்தான் முயற்சி செய்தேன். அதற்கு அவர்கள் குடும்பம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் அதைக் கைவிட்டேன். வீட்டிலிருந்து வெளியே செல்வது எல்லாமே சைக்கிளில்தான். என் மனைவியை அழைத்துக் கொண்டு கடைகளுக்கு செல்வதும் சைக்கிளில்தான். ஆஸ்பத்திரி, அவசரத்திற்கு எங்காவது செல்வது என்றால்தான் நண்பர்களின் பைக்கை வாங்கிக் கொண்டு போவேன்.
திருமணமாகி இரண்டு மாதங்களாகிறது. காஷ்மீர் டூ கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் புறப்பட்டேன். மனைவி ஒரே அழுகை. பனிப்பிரதேசம் இமயமலை, ராஜஸ்தான் பாலைவனம் இப்படி எத்தனை கரடுமுரடான பாதைகளைக் கடக்க வேண்டும். ஒன்று கிடக்க ஒன்று ஆனால் என்ன செய்வது என்று குடும்பத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களையும் கன்வின்ஸ் செய்துதான் கிளம்பினேன். அந்தப் பயணத்தை கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி பதினோரு நாட்களில் முடித்தேன்!’’ என்றவர் அதன்மூலம் கிடைத்த அனுபவங்களையும் ஏராளமாய் விவரித்தார்.
‘‘ஜம்மு-காஷ்மீரில் இப்போது புதிய முதலீட்டாளர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். அங்கே இருந்த அசாதாரண சூழல் அச்சுறுத்துவதாக இருந்தது. அதேசமயம் இந்து-முஸ்லீம் ஒற்றுமை வியக்க வைத்தது. அந்த மாநில பாஜக தலைவர்தான் கொடி அசைத்து பயணத்தைத் துவக்கி வைத்தார். அழைத்தவுடன் உடனே வந்து விட்டார். ஆனால், ஹை செக்யூரிட்டி.
பஞ்சாப்பின் பசுமை வளம் மனதை என்னவோ செய்தது. அங்கே பிச்சைக்காரர்களே தென்படவில்லை. ராஜஸ்தான் மாநில வாழ்க்கை விநோதமானது. அதிகமான உயிர்கள் இறப்பது அங்கேதான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கண்ட ஒரே அதிர்ச்சி விஷயம்... இமயமலை தொடங்கி, குமரி வரை எங்கெல்லாம் மலைகள் உள்ளதோ, அங்கெல்லாம் அதை வெட்டி எடுப்பதும், கல்குவாரிகள் நிறைந்திருப்பதும்தான்.
சாலைகள் மோசம். வாகனங்கள் அதிகம். அவை விடும் புகையை சொல்லவே வேண்டியதில்லை. இதையெல்லாவற்றையும் ஆங்காங்கே உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் பேசி வருகிறேன்.உலகிலேயே கார்பன் உற்பத்தியில் அமெரிக்காதான் முதலிடம் வகிக்கிறது. 4220 ஜெகா டன் கார்பன்டை ஆக்சைடு வெளியிடுகிறது. அடுத்தது சீனா. இது வெளியிடும் கார்பன் 241. 8 ஜெகா டன். ரஷியா 117.3, ஜெர்மனி93.1, இங்கிலாந்து 74.9, ஜெகா டன், ஜப்பான் 66.7, இந்தியா 57.1 ஜெகா டன்.
இந்தியா இந்த வரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது. மொத்த நாடுகளும் இணைந்து செயல்பட்டால்தான் இதைக் கட்டுப்படுத்த முடியும். உலக வெப்பமயமாதலுக்கு காரணம் ஏழை எளிய மக்கள் அல்ல. உலகத்தில் உள்ள பணக்காரர்களே. அதாவது உலகத்தில் உள்ள பத்து சதவீத பணக்காரர்களே கார்பன் வெளியிடுவதில் 50 சதவீதத்தைச் செய்கிறார்கள். அதனால்தான் இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் சிவசூர்யன்.
கா.சு.வேலாயுதன்
|