மம்மிக்கும் பீட்சா வுக்கும் தொடர்பிருக்கு!
இரத்தம் படிந்த கத்தியுடன், கலைந்து கிடக்கும் உணவகம், கையில் டார்ச்லைட் சகிதமாக அஸ்வின் காக்கமனு. ‘என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியலை’ என்னும் குரல் ஒலிக்க திகில் ட்ரீட்டாக வெளியாகியிருக்கிறது ‘பீட்சா 3: த மம்மி’ படத்தின் டீஸர். தமிழ் சினிமாவில் மிக முக்கிய பேய் படங்கள் பாகங்களில் தவிர்க்க முடியாதவை ‘பீட்சா’.  முதல் பாகம் கார்த்திக் சுப்புராஜ் - விஜய் சேதுபதி - சி.வி.குமார் கூட்டணியில் மெகா வெற்றி பெறவே, அடுத்து அசோக் செல்வன் நடிப்பில் ‘பீட்சா 2: வில்லா’ வெளியானது. அப்படமும் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற இதோ மூன்றாம் பாகமான ‘பீட்சா 3: த மம்மி’ படம் கோடை விருந்தாக வரவிருக்கிறது.  சி.வி.குமாரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து, ரவீனா தாஹா, காளி வெங்கட் மற்றும் குரைஷி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.‘‘பேய் இருக்கா... இல்லையா... வர்றதுக்கு எதாவது அறிகுறி இருக்கா... மாதிரியான எந்த கேள்வியும் இல்லை. இது முழுக்க முழுக்க 100% ஹாரர் படம்...’’ நம்பிக்கையுடன் முகம் மலர்கிறார் அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த்.
முதல் படமே வெற்றி பெற்ற ஃபிரான்சைஸ் தலைப்பில் இயக்கும் வாய்ப்பு? எப்படி இருக்கிறது இந்தத் தருணம்?
ஒரு தயாரிப்பாளர் கிடைச்சிட மாட்டாங்களான்னு ஓடிட்டு இருக்கும் எத்தனையோ பேருக்கு நடுவிலே எனக்கு சி.வி.குமார் சாரும், ‘பீட்சா’ ஃபிரான்சைஸும் கிடைச்சது அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். நான் ஒரு கதை எழுதியிருந்தேன். அந்தக் கதை ‘பீட்சா’ டெம்பிளேட்டுக்குள்ளே பொருந்தும் என்கிற நம்பிக்கை இருந்துச்சு. அந்த நம்பிக்கையுடன் சி.வி.குமார் சாரை சந்திச்சு கதை சொன்னேன். அவருக்கும் பிடிச்சுப் போக 2020லேயே இந்தப் படம் ஆரம்பிச்சிருக்கணும்.
ஆனால், கொரோனா தாக்கம், மூணு வருஷம் காத்திருக்க வேண்டியதாகிடுச்சு. எனக்கு சொந்த ஊர் சென்னைதான். முழுப் பெயர் மோகன் கோவிந்த். 2011ல் விஸ்காம் முடிச்சேன். தொடர்ந்து ஒரு பிரபல தனியார் சேனலில் அஸிஸ்டென்ட் புரொடக்ஷன் மேனேஜரா வேலை செய்தேன். மலையாளம் ‘சாப்பா குரிஷ்’ (தமிழில் ‘புலிவால்’ படமாக ரீமேக் ஆனது) படத்திலே அசிஸ்டென்ட் இயக்குநரா வேலை செய்தேன். அடுத்து ‘கணிதன்’, அப்புறம் சில டிவி விளம்பரங்கள் எல்லாம் வேலை செய்தேன்.
தொடர்ந்து சி.வி.குமார் சார் கிட்டே ‘மாயவன்’ படத்திலே உதவி இயக்குநரா வேலை செய்தேன். அப்பதான் நம்பிக்கையா ‘பீட்சா’ படத்தின் தலைப்புக்காகவே ஒரு கதை உருவாக்கி சார் கிட்டே சொன்னேன். ஓகே ஆகிடுச்சு.
முழுமையான எமோஷனல் ஹாரர் படம் இது. இப்படியான வெற்றிகரமான டைட்டிலை கையிலே எடுக்கும்போது ஆடியன்ஸை சுலபமா தியேட்டருக்கு வரவழைச்சிடலாம். ஆனா, அந்த டைட்டில் கொடுத்த மேஜிக் அளவுக்கு நிச்சயம் மெனக்கெடணும். அந்தப் படம் சேது அண்ணாக்கு ஒரு பெரிய பிரேக் கொடுத்த படம். அதனுடைய அடுத்த பாகமும் அசோக் செல்வன் என்கிற இன்னொரு நாயகனுக்கு பெரிய பிரேக்கா அமைஞ்சது. அதே மாதிரி இந்தப் படமும் அஸ்வினுக்கு நல்ல துவக்கமா மாறும்னு நம்பறேன்.
ஏன் ‘பீட்சா’ தலைப்புடன் ‘த மம்மி’ சப் தலைப்பு?
ரெஸ்டாரண்ட் நடத்துகிற ஒரு இளைஞர். அங்கே தினம் தினம் அமானுஷ்யமான விஷயங்கள் நடந்துகிட்டே இருக்கு. தொடர்ந்து இவர் டெலிவரி செய்கிற இடங்களிலும் அதிர்ச்சியான சில சம்பவங்கள் எல்லாம் நடக்குது. ஏன்... என்ன பின்னணி... இதை நோக்கிய தேடலும், திகிலும்தான் கதை. காமெடியோ, பேயை சர்காஸ்டிக் செய்கிற நையாண்டியோ எதுவும் இல்லை.
முடிந்த வரைக்கும் ஹாரர் பட விரும்பிகளை திருப்திப் படுத்த நிறைய ஜம்ப் ஷாக் மொமெண்ட்ஸ் இருக்கும். மம்மி என்கிற வார்த்தைக்கும் கதையிலே மிக முக்கியமான சர்ப்ரைஸ் இருக்கும்.
ஆக்ச்சுவலி கதை எழுதும் போது மெயின் தலைப்பே ‘த மம்மி’னுதான் வெச்சிருந்தேன். ஒருவேளை ‘பீட்சா’ தலைப்பு கிடைக்கலைன்னா இந்தத் தலைப்புன்னு திட்டம் இருந்துச்சு. அதுதான் படத்தின் திருப்பம். கதாநாயகன் அஸ்வின் பாத்திரம் எப்படி வந்திருக்கு... மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க?
டெடிகேஷனான நடிகர், தனக்கென ஒரு அடையாளம் தேடி மெனக்கெடுபவர். இந்தப் படம் அவர் கரியரில் நிச்சயம் தவிர்க்க முடியாத படமாக மாறும். அவர் இந்தப் படத்திலே ஒரு செஃப். ஹீரோயினா பவித்ரா மாரிமுத்து, இதற்கு முன்னாடி அருள்நிதி சார் ஜோடியா ‘டைரி’ படத்தில் நடிச்சிருந்தாங்க. அவங்களுக்கும் ஹீரோயின் என்கிறதைத் தாண்டி கதைக்குள் பெரிய பிளே இருக்கும்.
படம் முழுக்கவே 80% இரவிலேயே நடக்கும். அதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு ரவீணா தாஹா, காளி வெங்கட், குரேஷி இவங்கல்லாம் அருமையா வேலை செய்து நடிச்சுக் கொடுத்தாங்க.
இந்தப் படம் டெக்னிக்கலி அதிகம் பேசப்படும். ‘பீட்சா’ முதல் பாகத்தின் முக்கிய பலமே மேக்கிங்தான். அந்த மேக்கிங்கை விட இன்னும் சிறப்பான மேக்கிங் கொடுக்க முயற்சி செய்திருக்கோம்.
சினிமாட்டோகிராபி பிரபு ராகவ், எடிட்டர் இக்னேஷியஸ் அஸ்வின், ஆர்ட் டைரக்ஷன் எஸ்.கே, மியூசிக் அருண் ராஜ். மொத்தம் ரெண்டு பாடல்கள். ஒரு பாடல்தான் படத்திலே இருக்கும். இன்னொரு பாடல் கதைக்குள்ள கடந்து போகும்.
படத்திற்கு இன்னொரு பலமா சவுண்ட் மிக்ஸிங்கை சொல்வேன். ஹரீஷ் செய்திருக்கார். நிச்சயம் மல்டிபிளக்ஸ், நல்ல சவுண்ட் டெக்னாலஜி உள்ள தியேட்டர்கள்ல பார்க்கும் போது சிறப்பான அனுபவத்தை உணர்வீங்க. முதல் படமே பெரிய பேனர், பெரிய பொறுப்பு... எப்படி அமைந்தது... எப்படி உங்களுக்கு கிடைத்தது என நினைக்கிறீங்க?
கதைதான் ஹீரோ. இதைப் புரிஞ்சுக்கிட்டாலே போதுமானது. கதை எழுதுவதோடு அதை சுவாரஸ்யமா சொல்லவும் திறமையை வளர்த்துக்கணும். அடுத்து பட்ஜெட் புரிஞ்சு படம் உருவாக்கத் தெரியணும். இதெல்லாம் முதலில் நானே முழுமையா செய்தேனா தெரியலை.
சி.வி.குமார் சார் மாதிரி ஒரு தயாரிப்பாளர் கூடவே இருக்கற வாய்ப்பு கிடைச்சது, அதைத் தொடர்ந்து படமும் கிடைச்சது. ஆனாலும் நல்ல கதை இல்லைன்னா அதே சி.வி சார் என்னை இயக்குநர் நாற்காலியிலே உட்கார வைச்சிருப்பாரான்னு கேட்டா நிச்சயம் இல்ல. அதனால் கதைதான் இந்தப் படத்தை தீர்மானிச்சது. ‘பீட்சா 3: த மம்மி’ ஆடியன்ஸ்க்கு என்ன கொடுக்கும்?
ஹாரர் படத்தைப் பொறுத்தவரைக்கும் பெரிய சவாலே முதல்ல திகிலான கதைச் சூழலை ஆடியன்ஸ்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கணும்; நம்ப வைக்கணும். அதன் பிறகு அதை நியாயப்படுத்துதலான முடிவும் இருக்கணும். அதைத்தான இந்தப் படத்திலே செய்திருக்கோம். பெரும்பாலும் ஹாரர் பட விரும்பிகள் ‘எங்கே பயமுறுத்து பார்க்கலாம்’ என்கிற சவாலை நம்ம கிட்டே கொடுப்பாங்க. அதற்காக நிறைய ஜம்ப் ஸ்கேரி தருணங்களை படத்திலே வெச்சிருக்கோம்.
ஷாலினி நியூட்டன்
|