Must Watch
 ஹங்கர் நெட்பிளிக்ஸின் டாப் டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கும் தாய்லாந்து நாட்டுப்படம், ‘ஹங்கர்’. ஆங்கிலத்தில் காணக்கிடைக்கிறது. பாங்காக்கில் உள்ள ஒரு தெருவில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சிறிய அளவில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறாள் ஆயி. சமையலில் கில்லாடி அவள். தாய்லாந்திலேயே புகழ்பெற்ற சமையல் கலைஞன் பால். ரொம்பவே கறாரான ஆசாமி. பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகளின் நிகழ்வுகளில் பாலின் சமையல்தான் இடம்பெறும். அவரது சமையல் குழுவிற்கு ‘ஹங்கர்’ என்று பெயர்.

ஒரு நாள் ஹங்கர் குழுவைச் சேர்ந்த சமையல் கலைஞன் ஒருவன் ஆயியின் உணவகத்துக்குச் சாப்பிட வருகிறான். அவளது சமையலை ருசித்த அவன், ஹங்கர் குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறான். ஆயியும் அழைப்புக்கு செவி சாய்த்து நேர்காணலுக்குச் சென்று தேர்வாகிறாள்.
தாய்லாந்திலேயே நம்பர் ஒன் சமையல் கலைஞனிடமிருந்து ஆயி எதைக் கற்றுக்கொள்கிறாள்... அவளது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது... என்பதே மீதிக்கதை. சமையலை மையமாக வைத்து ஒரு திரில்லிங் அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றனர். பின்னணி இசை, நடிப்பு, ஒளிப்பதிவு என அசத்தும் இப்படத்தின் இயக்குநர் சிட்டிசிரி மோங்கோல்சிரி. ஸ்மைல்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய ஆங்கிலப்படம், ‘ஸ்மைல்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் பார்க்கலாம். ஒரு பெரிய மருத்துவமனையில் மன நல ஆலோசகராக இருக்கிறாள் ரோஸ் காட்டர். மன நலம் பாதிப்படைந்த விசித்திர நோயாளிகளுக்கு ரோஸ்தான் சிகிச்சையளிக்கிறாள். இந்நிலையில் ஓர் இளம் பெண் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறாள். அவளுடன் கலந்துரையாடி என்ன பிரச்னை என்று கேட்கிறாள் ரோஸ்.
தன் முன்பு இறந்து போனவர்களின் பிம்பங்கள் தோன்றுவதாகவும், அவர்கள் தன்னைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிப்பதாகவும், தான் சாகப்போவதாகவும் சொல்கிறாள் அந்த இளம்பெண்.
அதிர்ச்சியடைகிறாள் ரோஸ். அப்போது ரோஸுக்குப் பின்னாடி யாரோ இருப்பதாகச் சொல்லி கத்துகிறாள் அந்தப் பெண். உதவிக்கு ஒருவரை ரோஸ் அழைக்கிறாள்.
அதற்குள் அந்தப் பெண் தன் கழுத்தை அறுத்துக்கொள்கிறாள். இந்நிகழ்வு ரோஸ் வாழ்க்கையில் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குகிறது என்பதே திகில் திரைக்கதை. திகில் படப்பிரியர்கள் தவறவிடக்கூடாத ஒரு படமாக மிளிர்கிறது ‘ஸ்மைல்’. படத்தின் இயக்குநர் பார்க்கர் ஃபின்.. வெள்ளரி பட்டணம்
கடந்த வாரம் ‘அமேசான் பிரைமி’ல் வெளியாகி பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘வெள்ளரி பட்டணம்’.
உள்ளூர் அரசியல்வாதி கே.பி.சுரேஷ். எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து பெரிய அரசியல்வாதியாக பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்கிறார். ஆனால், எதுவும் அவருக்கு வெற்றியைக் கொண்டு வருவதில்லை.
இன்னொரு பக்கம், தான் தொட்டதை எல்லாம் வெற்றி பெற வைத்து உள்ளூர் மக்களால் இந்திரா காந்தி எனப் புகழப்படுகிறார் கே.பி. சுனந்தா. இவர் வேறு யாருமல்ல. சுரேஷின் சகோதரிதான் சுனந்தா. இருவருமே ஒரே கட்சியில்தான் இருக்கின்றனர். கைச்செலவு உட்பட அனைத்துக்கும் சுனந்தாவையே நம்பியிருக்கும் சகோதரன்தான் சுரேஷ்.
இருவரும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். யார் அரசியல் வாழ்க்கையில் ஜெயித்தார்கள் என்பதை நகைச்சுவையும், எதார்த்தமும் கலந்து சொல்லியிருக்கிறது திரைக்கதை.
சமகால அரசியல் சூழலை பகடி செய்திருக்கிறது இந்தப் படம். மஞ்சு வாரியர், சௌபின் சாஹிர் போன்ற நட்சத்திரப் பட்டாளங்கள் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக தந்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் மகேஷ் வெட்டியார்.
ஷேசாடா
தெலுங்கில் சக்கைப்போடு போட்ட ‘அல வைகுந்தபுரமுலோ’வின் அதிகார பூர்வ இந்தி ரீமேக்தான் ‘ஷேசாடா’. ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்கலாம். பெரும் கோடீஸ்வரர் ஆதித்ய ஜிண்டாலின் நிறுவனத்தில் குமாஸ்தாவாக இருந்தவர்கள் வால்மீகியும், ரந்தீப்பும். ஜிண்டாலின் மகளைக் கல்யாணம் செய்து பணக்காரராகிவிடுகிறார் ரந்தீப்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார் வால்மீகி. அவருடைய ஏழ்மை வாழ்க்கை அப்படியே தொடர்கிறது. இருவரது மனைவிகளும் ஒரே நேரத்தில், ஒரே மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இருவருக்கும் ஆண் குழந்தை பிறக்கிறது. ரந்தீப்பின் குழந்தை மூச்சுப் பேச்சில்லாமல் இருக்கிறது.
வால்மீகியின் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இதையறிந்த வால்மீகி செவிலி மூலமாக ரந்தீப்பின் குழந்தை இருந்த இடத்தில் தன் குழந்தையை வைத்துவிடுகிறார். ஆனால், ரந்தீப்பின் குழந்தை உயிருடன்தான் இருக்கிறது. இருந்தாலும் தன் குழந்தையாவது பணக்கார வீட்டில் வளரட்டும் என்று அப்படியே வால்மீகி விட்டுவிட்டு, ரந்தீப்பின் குழந்தையைத் தன் குழந்தைபோல வளர்க்கிறார். குழந்தைகள் இருவரும் வளர்ந்து தங்களின் உண்மையான பெற்றோர்களுடன் சேர்ந்தார்களா என்பதே சுவாரஸ்யமான கதை. ஒரிஜினலுக்கு நியாயம் செய்திருக்கிறது ‘ஷேசாடா’. படத்தின் இயக்குநர் ரோஹித் தவான்.
தொகுப்பு: த.சக்திவேல்
|