ஒருநாள் ஆர்ஜே ஆன கொலோடியன் பேபி!



இசை, எல்லோருக்கும் மிகப்பெரிய ஆறுதல். ஆனால், மதுரை திருப்பாலையைச் சேர்ந்த பார்கவிக்கோ அது ஓர் ஆகச்சிறந்த நம்பிக்கை. என்றாவது ஒருநாள் சிறந்த பாடகியாக இந்த உலகமே வியக்கும் வண்ணம் வருவோம் என்கிற தன்னம்பிக்கை.
அதனை நோக்கியே ஒவ்வொரு நொடியும் ரசித்துப் பயணித்துக் கொண்டிருக்கிறார் பார்கவி. அவரின் குரல்வளமும் அத்தனை இனிமையாக இருக்கிறது. ஒரு மரபணு குறைபாடு கொண்ட பெண்ணால் எப்படி இத்தனை அழகாகப் பாடமுடிகிறது... என அவரைப் பார்ப்பவர்கள் வியக்கிறார்கள். அதற்கு பார்கவியின் மனவலிமையும், தன்னம்பிக்கையுமே காரணங்கள்.

சமீபத்தில், மதுரை ‘சூரியன் எஃப்எம்’ ஒருநாள் நிகழ்ச்சிக்கு ஆர்ஜேவாக தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் பார்கவி. அது, அவருக்கு கூடுதல் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. ஏனெனில், அவரின் கனவுகளில் ஒன்று ஆர்ஜேவாக வேண்டும் என்பது.

சரி, பார்கவியின் பிரச்னைதான் என்ன?

‘‘எனக்கு பிறந்ததுல இருந்தே இந்தக் குறைபாடு இருக்கு. இதை ‘கொலோடியன் (Collodion) மரபணு குறைபாடு’னு சொல்றாங்க. மருத்துவர்கள் என்னை ‘கொலோடியன் பேபி’னு சொன்னாங்க. எனக்கு தோல் தினமும் உரிந்துகொண்டே இருக்கும். அது மட்டுமல்லாமல், அதனுடன் எலும்பும் பாதிச்சிருக்கு.

இதனால, நாளாக நாளாக என்னால வேகமாக எழுத முடியாமல் போயிடுச்சு. வேகமாக நடக்கவும் முடியாது. கண்களைச் சரியாக மூடமுடியாது. அதனால, கண்கள்ல இருந்து தானாகவே நீர் வந்திட்டே இருக்கும். வெயில்ல டிராவல் பண்ணமுடியாது. கொஞ்ச நேரம் வெயில்ல நின்னாலும் முகம் சிகப்பாகிடும். வெயிலுக்கு புண்களும் வரும்.

சின்ன வயசுல எனக்கு எதுவும் தெரியாது. போகப்போக தெரியவந்தது. இந்நோய், லட்சத்துல ஒருத்தரை பாதிச்சிருக்கு. ஆனா, கோடியில் ஒருத்தருக்குத்தான் தோலுடன் எலும்பும் சேர்ந்து பாதிக்குமாம். அது எனக்கு வந்திருப்பதாக டாக்டர்கள் சொன்னாங்க...’’ என வேதனையுடன் தெரிவிக்கும் பார்கவியிடம், சரி எப்படி இசை ஆர்வம் என்றதும் உற்சாகமானார்.  
‘‘சின்ன வயசுல இருந்தே வீட்டுல ரேடியோவில் பாட்டு கேட்பாங்க. நான் அதை கேட்டுக்கேட்டு வளர்ந்ததால எனக்கு இசையில் ஆர்வம் வந்திடுச்சு.

நானாகவே பாடுவேன். இப்ப மூணு ஆண்டுகளாக கர்நாடக சங்கீதம் கிளாஸ் போய் கத்துக்கிட்டு இருக்கேன். அப்பாவும் நிறைய இசை கேட்பார். நான் பாடுவதை வச்சு அப்பா இந்தமாதிரி பாடல்கள் கேளும்மானு ஊக்கப்படுத்துவார். அப்பா, அரசு ஊழியராக இருக்கார். அம்மா, தம்பி, அப்பத்தானு வீட்டுல எல்லோரும் பெரிய சப்போர்ட். அதனாலதான், என்னால் இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கமுடியுது...’’ என்கிற பார்கவி இப்போது மதுரை யாதவா கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு முடித்திருக்கிறார்.

‘‘ஆரம்பத்துல என்னை என் பெற்றோர் பள்ளியில் சேர்க்கவே ரொம்ப சிரமப்பட்டாங்க. ஏன்னா, மற்றவங்க அவங்க பசங்களுக்கும் வந்திடுமோனு பயந்தாங்க. பிறகு, அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். அங்க பள்ளி வாழ்க்கை சிறப்பாக இருந்தது. கோ-எஜுகேஷன்லதான் படிச்சேன். ஃப்ரண்ட்ஸ், டீச்சர்ஸ்னு எல்லோரும் ரொம்ப கேரிங் எடுத்து பார்த்துக்கிட்டாங்க.

அதேபோல நானும் எல்லோரிடமும் மிங்கிளாகிடுவேன். என்னால் யார்கூடவும் பேசாமல் இருக்கமுடியாது. பத்தாம் வகுப்பு தேர்வு எல்லாம் ஸ்க்ரைப் வச்சு எழுதினேன். கல்லூரி வந்ததும் நானே எழுதிப் பழகிட்டேன். பயத்தைப் போக்கி, நிறைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கிட்டேன்.

பள்ளியில் தமிழ் ஆசிரியை மூலமாக கல்ச்சுரல்ஸ்ல கலந்துக்கிட்டு பாடியிருக்கேன். பாட்டுக்காக நிறைய பரிசுகளும் பெற்றிருக்கேன். பிறகு, யாதவா கல்லூரியில் பி.காம் முடிச்சேன். இப்ப அங்கே எம்.காம் படிக்கிறேன். கல்லூரி வாழ்க்கைதான் ரொம்ப என்ஜாய் பண்ணமுடியல. ஏன்னா, கொரோனாவுல ரெண்டு ஆண்டுகள் கழிஞ்சிடுச்சு. எனக்கு முதல்ல தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருந்தது. எங்கேயும் வெளியே போகமாட்டேன். வீட்டுல கூப்பிட்டால்கூட வரலனு சொல்லிடுவேன். யாராவது ஏதாவது சொல்லிடுவாங்களோனு பயம் இருந்தது.

ஆனா, இப்ப அப்படியில்ல. நானே வெளியில் கூட்டிட்டு போங்கனு சொல்றேன். நானும் எல்லோர் மாதிரிதான்னு நினைக்கிறேன். எல்லா டிரஸ்ஸும் அணியிறேன். என்னைப் போல நிறைய பேர் இருக்காங்கனு சோஷியல் மீடியா பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். நானும் சோஷியல் மீடியாவில் போஸ்ட் எல்லாம் போடுறேன்.

இப்ப நிறைய தன்னம்பிக்கை வந்திடுச்சு. என்னைப்போல் இருக்கிறவங்களும் நம்பிக்கையுடன் வெளியில் வந்து சாதிக்கணும்னு வேண்டிக்கிறேன்...’’ என்கிறவர், சிரித்தபடி தொடர்ந்தார்.
‘‘நான் ரேடியோவை கேட்டுக்கேட்டுதான் இசையில் ஆர்வமானேன். ஆனா, அதுவே ஆர்ஜே ஆகணும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துச்சு. முதல்ல, ரேடியோவில் இடையில் வரும் விளம்பரங்கள் மாதிரி பேசிப் பார்த்தேன். அப்புறம், ரேடியோ ஜாக்கி மாதிரி பேச ஆரம்பிச்சேன்.

அந்த ஆர்வத்தால் கொரோனா நேரத்துல ஆர்ஜே மாதிரி வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி நண்பர்கள், உறவினர்கள்னு எல்லோருக்கும் செல்போன்ல அனுப்பினேன். அவங்க கேட்டுட்டு பாராட்டினாங்க. அப்படித்தான் எனக்கு சூரியன் எஃப்எம்ல ஒருநாள் ஆர்ஜேவாக நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வாய்ப்பு அமைஞ்சது. அந்த நாளையும், இதை சாத்தியமாக்கிய சூரியன் எஃப் எம்மையும், புகாரிராஜா சாரையும், சேது சாரையும் என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்.

இப்ப நான் ஆர்ஜேவாக ஆகணும்னு ஆசைப்படுறேன். அப்புறம், பாடகியாக வரணும்னு லட்சியம் வச்சிருக்கேன். ஆனா, ஒருபோதும் வீட்டுல சும்மா இருந்து சோர்ந்துபோயிடக்கூடாது என்கிறதுல உறுதியா இருக்கேன். என்னை வாட்டும் இந்நோய் சரியாகும்னு இதுவரை எந்த மருத்துவரும் சொல்லல. நாங்களும் அலோபதி, சித்தானு பல மருத்துவங்கள் பார்த்திட்டோம். எல்லோரும் வளர வளர சரியாகும்னு சொன்னாங்க.

பத்தாம் வகுப்பு வரை நிறைய ட்ரீட்மென்ட் எடுத்தோம். அப்புறம், படிப்புக்கு முக்கியத்துவம் தர ஆரம்பிச்சிட்டேன். இப்பவும் ஆயில் எல்லாம் தடவிட்டு இருக்கேன். இது குறையும். ஆனா, மறுபடியும் வந்திடும். அதுதான் பிரச்னை. இதுக்காக என் கனவை அடையாமல் இருக்கக்கூடாது இல்லையா? அதனால, வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறணும்னு தீர்க்கமாக இருக்கேன். இதுவரை அப்பா அம்மாவை நம்பியே இருந்திட்டேன்.

இனி நான் என்னைப் பார்த்துக்கணும். கூடவே அப்பா, அம்மாவையும் பார்த்துக்கணும்னு ஆசைப்படுறேன். நிச்சயம் ஒருநாள் இந்த பார்கவி சிறந்த பாடகினு எல்லோரும் பாராட்டும்படி வருவேன்...’’ கண்களில் நம்பிக்கை மிளிர சொல்கிறார் பார்கவி.அவரின் கனவு மெய்ப்பட வாழ்த்துவோம்!

பேராச்சி கண்ணன்