பிரேக் அப் ஆனவர்களுக்கு உதவும் அரசு!
உலகம் முழுவதும் இளைஞர்களின் மத்தியில் இருக்கும் முக்கியமான பிரச்னை, காதல் முறிவு எனும் பிரேக் -அப். பொதுவாக காதல் முறிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருப்பவர்கள் நண்பர்கள் மட்டுமே.
 ஒருசிலர் மன நல மருத்துவர்கள் அல்லது ஆலோசகர்களிடம் சென்று காதல் முறிவிலிருந்து வெளியேற முயற்சிக்கின்றனர். காதல் முறிவிலிருந்து மீள முடியாதவர்கள் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர். இந்தப் பிரச்னை ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை முடக்கிவிடுகிறது.  இந்நிலையில் காதல் முறிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்திருக்கிறது நியூசிலாந்து அரசு. காதல் முறிவால் பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு உதவ ஒரு அரசு முன்வருவது உலகில் இதுவே முதல் முறை. இதற்காக ‘லவ் பெட்டர்’ எனும் செயல்திட்டத்தை உருவாக்கியிருக்கிறது நியூசிலாந்தின் சமூக வளர்ச்சிக்கான அமைச்சகம். இந்த திட்டத்துக்காக இந்திய மதிப்பில் சுமார் 32 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது நியூசிலாந்து அரசு.
கடந்த சில வருடங்களாக நியூசிலாந்தின் முக்கிய சமூகப் பிரச்னையாக உருவெடுத்து இருக்கிறது, காதல் முறிவு. அங்கே காதல் முறிவுக்கு உள்ளான 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளசுகள் கடுமையான அக, புறச்சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதிலிருந்து, சுய வதை, தற்கொலை வரை நீள்கிறது இந்தச் சிக்கல்.
கணவன் - மனைவிக்குள் முறிவு ஏற்படும்போது அது குடும்ப வன்முறையாக வெடிக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே ‘லவ் பெட்டர்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல் முறிவுக்கு உள்ளானவர்கள் தங்களையும், மற்றவர்களையும் துன்புறுத்தாமல் அதிலிருந்து மீண்டு, புது வாழ்க்கையைத் தொடங்குவதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்து தருகிறது ‘லவ் பெட்டர்’.
இதன்படி காதல் முறிவிலிருந்து மீண்டவர்கள் தங்களின் அனுபவங்களை காதல் முறிவுக்கு உள்ளானவர்களிடம் பகிர்ந்து, வழிகாட்டுவார்கள். அத்துடன் தேவைப்படும்போது தேர்ந்த மனநல ஆலோசகர் மூலம் இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படும்.
மட்டுமல்ல, சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ‘லவ் பெட்டர்’ குழு இயங்கும். அதாவது பதிவுகளின் மூலமாக காதல் முறிவுக்கு ஆளானவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு உதவும்.
இந்தத் திட்டத்தின் மூலம் காதல் முறிவிலிருந்து மீண்டவர்கள் காதல் முறிவுக்கு உள்ளானவர்களுக்கு உதவுவார்கள். இதற்கு நியூசிலாந்து மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.l
த.சக்திவேல்
|