இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்!
உலகம் முழுவதும் பிரபலமான ஒரு பிராண்ட், ‘ஆப்பிள்’. ஐபோன், ஐபேட், மேக்புக், ஏர்பாட்ஸ், ஆப்பிள் வாட்ச்... என ‘ஆப்பிளி’ன் அனைத்து தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டதே ஆப்பிள் ஸ்டோர்.
 ‘ஆப்பிள்’ தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக ஆயிரக்கணக்கான கடைகள் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆப்பிள் ஸ்டோருக்குத் தனி மவுசு. அதனால்தான் உள்ளூரிலேயே ஆப்பிள் தயாரிப்புகள் கிடைத்தாலும், வெளியூரில் இருக்கும் ஆப்பிள் ஸ்டோருக்குச் சென்று அதன் தயாரிப்புகளை வாங்குபவர்களின் சதவீதம் அதிகம். இப்படியான முதல் ஆப்பிள் ஸ்டோர் அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா மாகாணத்தில் மே 19, 2001ல் திறக்கப்பட்டது. ஆப்பிள் ஸ்டோரை திறப்பதற்கு முன்பு பத்திரிகைகளும், வணிக நிபுணர்களும், ‘‘ஆப்பிளின் இந்த முயற்சி தோல்வியில்தான் முடியப்போகிறது...’’ என்று எழுதினார்கள்.
 காரணம், அப்போது கம்ப்யூட்டர் சார்ந்த எந்த பெரிய நிறுவனமும் நேரடியான சில்லறை வணிகத்தில் ஈடுபடவில்லை. பத்திரிகைகள் மற்றும் வணிக நிபுணர்களின் அபிப்ராயங்கள் பொய்யானது. ஆம்; 2004ம் வருடம் ஆண்டு விற்பனை ஒரு பில்லியன் டாலரை எட்டியது. சில்லறை விற்பனையில் வேகமாக ஒரு பில்லியன் டாலரை எட்டிய முதல் ஸ்டோர் என்ற பெருமையைத் தன்வசமாக்கியது ‘ஆப்பிள்’.
இதற்குப் பிறகு உலகின் முக்கியமான நகரங்களில் எல்லாம் ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மட்டுமே ‘ஆப்பிளி’ன் தயாரிப்புகளை விற்பனை செய்து வந்தனர். இத்தனைக்கும் ‘ஆப்பிள்’ பயனாளிகளில் குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தியர்கள். இவர்களின் ஏகோபித்த ஒரே எதிர்பார்ப்பு இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் எப்போது திறக்கப்படும் என்பதே.
இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் வரப்போவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 2021ம் வருடம் இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் என்ற செய்தி கசிந்தது. கொரோனா லாக்டவுனால் தள்ளிப்போய், கடந்த வாரம் திறக்கப்பட்டிருக்கிறது இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர். மும்பையிலுள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் அமைந்திருக்கும் ஜியோ வேர்ல்டு டிரைவ் மாலில் வீற்றிருக்கிறது இந்த ஸ்டோர்.
கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று ஜியோ மாலில் புதிதாக வடிவமைக்கைப்பட்ட இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரை, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது வாடிக்கையாளர்களை வரவேற்ற டிம் கும், அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த ஸ்டோரில், ‘ஆப்பிளி’ன் தயாரிப்புகளைப் பற்றி நன்கு அறிந்த நூறு பேர் வேலை செய்கின்றனர். இவர்களால் இருபது மொழிகளில் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாட முடியும்.
இங்கே ‘ஆப்பிளி’ன் அனைத்து தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படுவதோடு, தரமான முறையில் சர்வீஸும் செய்து தரப்படும். தில்லியில் அமைந்துள்ள சாகேட்டில் வீற்றிருக்கும் செலக்ட் சிட்டிவாக் மாலில் கடந்த ஏப்ரல் 20ம் தேதியன்று இந்தியாவின் இரண்டாவது ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இந்தியா உட்பட 26 நாடுகளில் உள்ள 525 இடங்களில் ஆப்பிள் ஸ்டோர்கள் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 272 ஸ்டோர்கள் உள்ளன.
த.சக்திவேல்
|