கொடைக்கானல் பாதரசக் கழிவு பிரச்னைக்கு நியாயம் கிடைத்திருக்கிறதா..?



ஒரு புத்தகம் எழுப்பும் கேள்வி

சுமார் 22 வருடங்களுக்கு முன் கொடைக்கானல் வாசிகள் ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் 1984 முதல் இயங்கி வந்த யூனிலீவர் எனும் லண்டனைச் சேர்ந்த கம்பெனி தயாரித்த தெர்மாமீட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாதரசம் எனும் மெர்க்குரிக் கழிவுகள் இயற்கையின் ஒரு கொடையான கொடைக்கானலில் தாறுமாறாகக் கொட்டப்பட்டதால் நிலம், நீர், காற்று நஞ்சானதாகவும்; இதனால் இறப்பு, நோய், சுற்றுச்சூழலுக்குக் கேடு என்றும் அந்தப் போராட்டத்தில் குதித்த மக்கள் 2001களில் தெருவில் வந்து போராடத் தொடங்கினர்.

இந்தப் பிரச்னை தொடர்பாக வழக்கும் பதியப்பட்டு 2016ல் தீர்ப்பும் வந்தது. சிலருக்கு இழப்பீடு என்று கொடுக்கப்பட்டாலும் இந்தப் பிரச்னையின் ஆழம்
இன்றுவரை தொடரத்தான் செய்கிறது. இந்நிலையில் மெர்க்குரி நஞ்சு தொடர்பான பிரச்னையின் ஆரம்பம், ஆழம், குழப்பம் மற்றும் போதாமைகளை பல இடங்களில் போராடி ‘ஹெவி மெட்டல்’ (Heavy Metal) எனும் தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார் அமீர் ஷாகுல்.

ஐபிஎம், நிசான் நிறுவனங்களில் கைநிறைய ஊதியம், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் வேலை என்று இருந்தவர் புலனாய்வுப் பத்திரிகைத் துறையில் சவால்கள் அதிகம் என்று தெரிந்தும் உலகளாவிய பசுமை நிறுவனமான கிரீன்பீஸிலும் தன்னை இணைத்துக்கொண்டார் ஷாகுல். கர்நாடகாவைச் சேர்ந்த ஷாகுலின் இந்தப் புத்தகம் தமிழகத்திலும் பெரிய அதிர்
வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தகத்துக்குள் இந்தப் பிரச்னை தொடர்பாகப் போவதற்கு முன்பாக சில விஷயங்களைப் பார்ப்போம்.

முதலில் இந்த தெர்மாமீட்டர் தயாரிக்கும் கம்பெனி அமெரிக்காவில்தான் செயல்பட்டுக்கொண்டிந்தது. அந்த நிறுவனத்தின் பெயர் செஸ்ப்ரோ பாண்ட்ஸ். அமெரிக்காவில் இந்த நிறுவனத்துக்கு பலத்த எதிர்ப்பு இருந்ததால் 1982களில் இந்த நிறுவனம் தன் தொழிற்சாலையை கொடைக்கானலுக்கு மாற்றியது.
1984ல்தான் லண்டனின் யூனிலீவர் நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்கியது. 1984 முதல் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனம் என்றுதான் தன்னை அறிவித்துக் கொண்டது. சிலர் இடையில் முகப்பவுடர் தயாரிக்கும் கம்பெனி என்றும் நினைத்துக்கொண்டனர்.

ஆனால், சுமார் 15 வருடங்கள் கழித்து, அதாவது 2001ல் ஃபெரோஸ் மோடி என்பவர் கொடைக்கானலில் ஒரு காட்டுப் பகுதியில் பாதரசக் கழிவுக் குப்பை மேட்டைப் பார்த்ததும்தான் பிரச்னையின் ஆழ அகலம் பிடிபட்டது. பிற்பாடு இதேமாதிரியான பல கழிவுக் குப்பைமேடுகளை கொடைக்கானல்வாசிகள் பலரும் கண்டுபிடித்ததால் பிரச்னை வழக்கு வரைக்கும் போனது.
2016இல் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பையும் வழங்கியது. சுமார் 591 ஊழியருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், மேலும் பலருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; மரங்களை நிறுவனம் அழிப்பதை நிறுத்தவேண்டும்; ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றவேண்டும் என் றெல்லாம்  மக்கள் தொடர்ச்சியாகப் போராடினர். இன்று கழிவுகளை அகற்றுவதற்கான முயற்சிகளை நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது.

பொதுவாக கொடைக்கானலை பிரேசிலின் அமேசான் காடுகளுக்கு சமமானதாக பலரும் சொல்வார்கள். ஒருபக்கம் மேற்குத் தொடர்ச்சி மலை, இன்னொரு பக்கம் நீர்நிலைகள், காடுகள், தமிழகத்தில் கிடைக்கும் அரிய வகை மரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள் உள்ள சூழல் இங்கே நிலவியது.  

‘வழக்கு கோர்ட்டில் இருக்கும்போதே இந்திய அரசின் டிபார்ட்மெண்டான அணுசக்தி நிறுவனம் கொடைக்கானல் பிரதேசத்தில் எடுத்த ஒரு ஆய்வு கொடைக்கானல் சுற்றுச்சூழலில் அமெரிக்கா சொல்லும் மெர்க்குரியின் கட்டுப்பாடு அளவைவிட 11 மடங்கு அதிகம் இருந்ததாகவும்; கனடா சொல்லும் கட்டுப்பாடு அளவைவிட 20 மடங்கு அதிகம் இருந்தாகவும் கண்டுபிடித்தது.
ஆனால், இது பலருக்குத் தெரியாததால் வழக்கிலும் சேர்க்கப்படவில்லை.

இதனால் இந்தப் பிரச்னைஒரு கிரிமினல் வழக்காக பதியப் படுவதற்கான வாய்ப்பு இந்தப் போராட்டத்தால் சாத்தியமாகவில்லை’ என்று இந்தப் புத்தகத்தில் சொல்கிறார் ஷாகுல். கூடவே மெர்க்குரிக்கழிவுப் பிரச்னையின் ஆரம்பம், போராட்டம், தீர்ப்புகள், போதாமைகளைப் பட்டியலிடுவதோடு,  கொடைக்கானல் போராட்டத்தைப் பற்றிய இந்த புலனாய்வுப் புத்தகம் எதிர்காலப் போராட்டங்களுக்கு துணையாக இருக்கும் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டு இன்று கொடைக்கானலில் சுற்றுச்சூழலுக்கான அமைப்பாக செயல்படும் ‘எஃபக்ட்’ எனும் அமைப்பின் நிறுவனரும் அப்பகுதியைச் சேர்ந்தவருமான வீராவைத் தொடர்புகொண்டு இந்தப் புத்தகம் தொடர்பாகவும் இந்தப் பிரச்னையின் இன்றைய நிலை பற்றியும் பேசினோம்.‘‘எனக்கு பூர்வீகம் புதுக்கோட்டை. ஹனிமூன் வந்த இடத்தில் கொடைக்கானலின் இயற்கையைப் பார்த்து என் அப்பாவும் அம்மாவும் இங்கேயே செட்டிலானவர்கள். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கொடைக்கானலில்தான்.

பிஎச்.டி வரை படித்தேன். 1998களில் கொடைக்கானலின் இயற்கையைப் பாதுகாக்க போராடிக்கொண்டிருந்த ‘பழனி மலை பாதுகாப்பு கவுன்சில்’ எனும் அமைப்பில் இணைந்து கொண்டு என்னாலான வேலைகளைச் செய்தேன்.

அப்போதுதான் இந்த மெர்க்குரிக்கழிவு பற்றிய பிரச்னையைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இந்த அமைப்பின் மூலம் கிடைத்தது. அதேபோல சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2001ல் ஃபெரோஸ் மோடி என்பவர் இந்தப் பிரச்னை தொடர்பாக வழக்குப் போட்டதும் நடந்தது.

ஃபெரோஸ், முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியுடன் படித்தவர்...’’ என்று சொல்லும் வீராவிடம், மெர்க்குரிக்கழிவு பிரச்னை, அதன் தீர்வுகள், அதன் எதிர்கால நிலை பற்றிக்
கேட்டோம்.‘‘2000களிலேயே என் நண்பன் ஒருவனுக்கு நடந்த ஒரு பிரச்னை மூலம் இதன் ஆழத்தைத் தெரிந்துகொண்டேன். திருமணமாகிநீண்டநாள் அவனுக்கு குழந்தை பிறக்கவில்லை. டாக்டர்களாலும் என்ன பிரச்னை என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த மெர்க்குரிக்கழிவுப் பிரச்னையால் அன்றைய காலத்தில் சுமார் 41 பேராவது இறந்திருப்பார்கள். எல்லோருமே 35 வயதுக்கு உட்பட்டவர்கள். மெர்க்குரியை நாம் அப்படியே கையில் எடுத்தால் ஒன்றும் ஆகாது. ஆனால், அது இன்னொரு பொருளுடன் சேரும்போது அது கையில் பட்டால் பல தீங்குகளை ஏற்படுத்தும்.

கேன்சர், மூளைக்கட்டி, தோல்,  நுரையீரல் பிரச்னை, நரம்புமண்டலப் பிரச்னை, கிட்னி பிரச்னை என்று ஏகப்பட்ட பிரச்னைகளை உண்டாக்கும். கம்பெனிக்கு எதிராக தீர்ப்பு வந்ததும் 4 லட்சத்திலிருந்து 40 லட்சம் வரைக்கும் சுமார் 600 சொச்சம் பேருக்கு இழப்பீடு கிடைத்தது. பலபேர் தொழிலாளர் யூனியனில் இல்லாததால் கிடைக்கவில்லை.

மெர்க்குரிக் கழிவானது மண், நீர்நிலைகள், காற்றிலும் இருப்பதாக பல ஆய்வுகள் சொல்லின. உதாரணமாக, கொடைக்கானலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பெரிய
குளம் பக்கம் இருக்கும் கும்பக்கரை குளத்தின் மீனிலும் மெர்க்குரி இருந்ததாகக் கண்டுபிடித்தனர். இதனால் பெரியவர்கள் ஒருகாலத்தில் மூச்சுவிட கஷ்டப்பட்டனர். இன்று யூனிலீவர் கழிவுகளை அகற்றும் வேலையில் இறங்கியிருக்கிறது. ஒருநேரத்தில் இந்தப் பிரச்னை பற்றிய செய்தி காட்டுத் தீயைப்போல பரவியது.

ஆனால், உள்ளூர்வாசிகள் ஃபேக்டரி மூடப்பட்டதும் பிரச்னையைக் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை ஏதாவது உடல்நிலை பிரச்னை என்றாலும் அன்றைக்கு ஏதாவது ஒரு மாத்திரையைப் போட்டு சமாளித்துக்கொண்டனர். உதாரணமாக, 84 முதல் 86 வரை வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே ஃபேக்டரியில் வேலை செய்த ஒருவர் மூச்சுத் திணறல் என்று திருச்சி மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

டாக்டர்களும் சோதித்துவிட்டு நுரையீரலில் ஏதோ ஒரு அன்னியப் பொருள் இருக்கிறது என்று சொல்லி அதை சுரண்டி எடுத்து அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
இதுபோல பலருக்கும் இந்தப் பிரச்னை இன்றும் இருக்கலாம். இதற்காகத்தான் குறைந்தது இன்னும் 20 ஆண்டுகளுக்காவது இந்த மக்களை தொடர்ச்சியாக பரிசோதிக்க வேண்டும் என்று கூறிவருகிறேன்.

ஃபேக்டரியை மூடியது மேலும் பல பிரச்னைகளை ஏற்படுத்தாமல் தடுத்தது என்பது உண்மை. அதேநேரம் முற்றிலுமாக மெர்க்குரிக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இனி இதுபோல் எந்த ஆலைகளும் இப்பகுதியில் நிறுவப்படக் கூடாது...’’ என்கிறார் வீரா.  

டி.ரஞ்சித்