ஹீரோ வேலையை ஹீரோயினும்; ஹீரோயின் வேலையை ஹீரோவும் செய்வாங்க!



Mr.மனைவி ஷூட்டிங் ஸ்பாட் ரவுண்ட் அப்

பெயரில் மட்டுமல்ல, கதையிலும் அத்தனை வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கும் புதிய தொடர்தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘Mr.மனைவி’.
ஏவிஎம் கார்டனில் ஹீரோ பவன் @ விக்கியின் பர்த்டே ஃபங்ஷன் காட்சிக்கான ஷூட்டிங் எனக் கேள்விப்பட்டு அதனுள் சங்கமித்தோம். முதலில் ஃபங்ஷனுக்கு ரெடியாகி வந்தார் நெகட்டிவ் ரோலில் ஸ்வேதா கேரக்டரில் கலக்கும் மான்சி.

‘‘சன் டிவியில் இதுதான் என் முதல் புரொஜெக்ட். இதுக்கு முன்னாடி ஒரு சீரியல் பண்ணினேன். அப்புறம், தெலுங்கு சீரியல்ல ஹீரோயினாக பண்ணியிருக்கேன். கன்னடத்துல ஐந்து புரொஜெக்ட்ஸ் பண்ணினேன். அங்க நெகட்டிவ் ரோல்ல நான் ஃபேமஸ்.  இந்தத் தொடர்ல நடிக்க விஷன் டைம்ல இருந்து ராஜேஷ் சார் பேசினாங்க. நெகட்டிவ் ரோல்னு சொன்னதும், ஆடியன்ஸ் எப்படி எடுப்பாங்களோனு ஒரு பயம் வந்தது. அப்ப ராஜேஷ் சார், ‘இந்தக் கேரக்டருக்கு ரொம்ப வெயிட்டேஜ் இருக்கு. நல்ல ரோல். சன் டிவியில் வர்றதால உங்க ரீச் இன்னும் உயரும்’னு நம்பிக்கை தந்தார்.

இப்ப இந்தக் கேரக்டருக்கு எவ்வளவு ரீச் இருக்குனு ஒருமுறை மாலுக்கு போனப்பதான் தெரிஞ்சுகிட்டேன். ஐ யெம் வெரி ஹேப்பி...’’ என்றார். அப்போது பர்த்டே காட்சியில் அனைவரையும் வரவேற்றபடி நடித்துக் கொண்டிருந்தனர் நடிகர் ராஜ்காந்தும், நடிகை அம்முவும். முதலில் பேசிய ராஜ்காந்த், ‘‘இதுக்கு முன்னாடி பண்ணினது எல்லாமே ஒரு ஸ்டைல் ஆஃப் ஆக்டிங்தான். இதுல நெகட்டிவ்வாக இருக்கும். ஒருசில இடத்துல ஹியூமராகவும் இருக்கும். அப்புறம், பாசிட்டிவ் மாதிரி தெரியும். இப்படி எல்லாமே கலந்தமாதிரி வருகிற ஒரு நல்ல கேரக்டர்.

முன்னாடியெல்லாம் புதுசா வர்றவங்களதான் ஆடிஷன் பண்ணி எடுப்பாங்க. இப்ப அப்படியில்ல. இந்தக் கேரக்டருக்கு ஆப்ட்டாக இருக்காரானு பார்க்க ஆடிஷன் பண்ணி எடுக்குற ஸ்டைல் வந்திடுச்சு. அப்படியாக, நான் கேரக்டருக்குப் பொருந்தி வந்ததால ‘மிஸ்டர் மனைவி’க்குள் வந்தேன்.
என்னை இப்பவும் ‘மெட்டி ஒலி’யைக் குறிப்பிட்டுதான் சொல்வாங்க. என்னை வில்லனாகவும், முரட்டுத்தனமாகவும் மக்கள் யோசிச்சிட்டாங்க. ஆனா, எனக்கு மனசுக்குள்ள வேறமாதிரி பண்ணணும்னு ஆசை. இதுல வேறமாதிரி இருக்கிறதால நிறைய பேர், ‘முன்னாடி உங்களப் பார்த்தால் கோபம் வரும். இப்ப மகிழ்ச்சியாக இருக்கு’னு சொல்றாங்க. அப்படி மாறணும்னுதான் நான் நினைச்சேன். இதுல அது நடந்திருக்கு...’’ என ராஜ்காந்த் உற்சாகமாக நிறுத்த, அம்மு தொடர்ந்தார்.

‘‘எனக்கு இது அதிர்ஷ்டவசமாகக் கிடைச்ச புரொஜெக்ட். ஏன்னா, முதல்ல ராேஜஷ் சார் இந்தக் கேரக்டர் பற்றி சொன்னதும் நான் ஷாக்கானேன். அம்மா ரோல் எனக்கு செட்டாகுமானு கேட்டேன். அப்ப சார்தான், ‘நீங்க பண்ணினா நல்லாயிருக்கும்’னு சொன்னார். அதேமாதிரியே நடந்திருக்கு. அதனால, இது லக்கி புரொஜெக்ட். இதுல என் ரோல் பெயர் சரண்யா.

இன்னசென்ட்டான, அதேசமயத்துல பொறுப்புள்ள ஒரு கேரக்டர். இதுல சரண்யா கேரக்டரை மொத்தமாக உருவாக்கியது இயக்குநர் சுலைமான் சார்தான். அவருக்கு நன்றி சொல்லணும். ராஜ்காந்த் சாருடன் நடிக்கிறது ரொம்ப எளிதாக இருக்கு. விக்கியாக வர்ற பவனும், நரேஷ் கேரக்டர்ல என் பையனாக நடிக்கிற அஸ்வத்தும் ரொம்ப நல்ல பசங்க.

அப்புறம், லதா அம்மாவின் மருமகளாக நடிக்கிறது பெருமையாக இருக்கு. என் பெரிய மாமாவாக சஞ்சய் அஸ்ரானி நடிக்கிறார். ஆஃப் ஸ்கிரீன்லயும் நாங்க ஒரு குடும்பமாகவேதான் வாழ்ந்திட்டு இருக்கோம். இப்ப ரெஸ்பான்ஸ் நிறைய வருது. இதை எங்களுக்குக் கிடைச்ச வெற்றியாக நான் பார்க்கிறேன்...’’ என்றார் அம்மு. அப்போது பார்ட்டிக்கு ஹீரோயின் அஞ்சலியாக வரும் ஷபானாவும், பாட்டி ரஞ்சிதமாக காமெடியில் கலக்கும் நடிகை அனுராதாவும் வந்தனர்.

முதலில் பேசிய ஷபானா, ‘‘ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இப்பதான் நான் இங்க எல்லோர் கூடவும் பழக ஆரம்பிச்சிருக்கேன். நான் எப்பவும் பழக கொஞ்ச நாட்கள் எடுத்துப்பேன். ஆனா, க்ளோஸ் ஆகிட்டா அவங்க ஃப்ரண்ட்ஷிப்பை ரொம்ப மதிப்பேன். விடவேமாட்டேன். இப்ப பாட்டியாக வர்ற அனுராதா அம்மா ரொம்ப க்ளோஸாகி இருக்காங்க. எனக்கு வார்ம் ஃபீல் கொடுக்குறாங்க. நம்மதான் தெரியணும்னு நினைக்காமல், ‘நீங்க நல்லா பண்ணுங்க. அப்பதான் நாம எல்லாருமே நல்லா தெரிவோம்னு’ சொல்வாங்க. அந்த குவாலிட்டி ரொம்பப் பிடிச்சிருக்கு. இது ரொம்ப நல்ல டீம்...’’ என அவர் சொல்ல, அனுராதா தொடர்ந்தார்.

‘‘நான் விஷன் டைம் நிறுவனத்துடன் ‘தங்கம்’ சீரியல்ல இருந்து வேலை செய்றேன். அப்போதிலிருந்து எனக்கு பாசிட்டிவ் கேரக்டர்தான் கொடுத்திட்டு வர்றாங்க. இதுல காமெடியுடன் கூடிய கேரக்டர். பாட்டிக்கும் பேத்திக்கும் இடையில் காமெடி நிறைய இருக்கு. எமோஷன்ஸ் இருக்கு. நான் படங்கள்லதான் காமெடி பண்ணியிருக்கேன்.

இதுல எந்தளவுக்கு வொர்க்அவுட் ஆகும்னு ஃபீலிங்கா இருந்தது. இயக்குநர் சுலைமான் என்னுடன் ‘தங்கம்’ சீரியல்ல வொர்க் பண்ணினவர். ‘இந்தமாதிரி பேசுங்க அனும்மா’னு கேட்டார். நான் பேசினதும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

பைலட் ஷூட்டை சேனலுக்கு அனுப்பினாங்க. அங்க மேடத்திற்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்படியாக பாட்டி கேரக்டர்ல நடிக்கிறேன். நான் மனோரமா ஆச்சிம்மாவைத்தான் மைண்ட்ல வச்சு இந்தக் கேரக்டர் பண்றேன். அவங்க இந்த டயலாக்கை பேசினால் என்ன முகபாவம் காட்டி பேசுவாங்க என்கிற ஃபீலுடன் நடிக்கிறேன். அதனால என்னால் எளிதாகப் பண்ணமுடியுது...’’ என்றார். தொடர்ந்து மரகதம் கேரக்டரில் நடிக்கும் பழம்பெரும் நடிகை லதாவிடம் பேசினோம். ‘‘சீரியல் பண்றதுனா கொஞ்சம் தேர்ந்தெடுத்தே செய்வேன். பிடிச்ச கேரக்டர் பண்ணினால் போதும்னு நினைப்பேன். நல்ல கதையாகவும் அதேநேரம் என்டர்டெயினிங்காகவும் இருக்கணும். அதுல ஒரு கருத்தும் இருக்கணும்னு ஆசைப்படுவேன்.

இது இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்புடைய கதை. பவன் பாட்டியாக நடிக்கிறேன். அந்தப் பக்கம் பாட்டியாக அனுராதா அம்மா நடிக்கிறாங்க. பவன் என்னை டார்லிங்னுதான் கூப்பிடுவார். அதனால, இப்ப இன்ஸ்டாவுல எல்லாரும் டார்லிங்னு கூப்பிடுறாங்க! எல்லாருக்குமே இந்த சீரியல் பிடிச்சிருக்கு. இதுல என்னை, ‘‘அபியும் நானும்’ சீரியல் கெட்டப் மாதிரியே வாங்க’னு சொன்னாங்க. ஆனா, நான்தான், ‘அதேபோல வந்தால் நல்லாயிருக்காது. வித்தியாசமான லுக் வேணும்’னு சொல்லி, இரவோடு இரவாக இந்த விக்கை வாங்கினேன். இது நல்லா இருக்குனு எல்லோரும் பாராட்டுறாங்க...’’ என்றார் லதா.   

அப்போது ஹீரோ பவன் பாட்டியைத் தேடிக் கொண்டு வர அவரை நிறுத்தினோம். ‘‘கன்னடத்துல ‘காவ்யாஞ்சலி’னு ஒரு சீரியல் ‘உதயா’வுல பண்ணினேன். அந்த சீரியல் மெகா ஹிட். அதை நான்கு மொழியில் ரீமேக் செய்தாங்க. அப்ப சன் டிவியில் இருந்து கால் வந்தது. ‘அந்த கேரக்டரை தமிழ்ல செய்வீங்களா’னு கேட்டாங்க. ‘ஓகே’னு சொல்லி வரும்போது ஏனோ அந்த சீரியலை நிறுத்தி வச்சிட்டாங்க.

அடுத்து என்னனு இருக்கும்போது விஷன் டைம் ராஜேஷ் சார் போன் பண்ணி, ‘ஒரு புது சீரியலுக்கு உங்களை செலக்ட் செய்ய சேனல் ஓகே சொல்லியிருக்காங்க. பண்றீங்களா’னு கேட்டாங்க. ஓகே சொல்லி ஆடிஷன் பண்ணினேன். ‘இந்த சீரியல்ல ஹீரோ வேலையை ஹீரோயின் பண்ணுவாங்க. ஹீரோயின் வேலையை ஹீரோ செய்வார்’னு சொன்னாங்க. அப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது நான் ஹீரோயின் ரோலுக்கு ஆடிஷன் கொடுத்திருக்கேன்னு!

‘இந்தக் கதை இப்படிதான் இருக்கும். ரொம்ப சவாலான, அதேநேரம் ஃபன்னான கேரக்டர்’னு சொன்னாங்க. என் ரியல் லைஃப் கேரக்டருடன் ஒத்துப்போனால் பண்ணலாம்னு அக்செப்ட் பண்ணினேன். எனக்கு தமிழ் ஆடியன்ஸ் நல்லதொரு வரவேற்பு தந்திருக்காங்க. ரொம்ப என்கரேஜ் பண்றாங்க. சன் நட்சத்திரக் கொண்டாட்டம் போனப்ப விக்கி ப்ரோனு கூப்பிட்டாங்க. இப்ப எல்லோரும் விக்கி ப்ரோனே அழைக்கிறது சந்தோஷமாக இருக்கு...’’ என்றார்.

இயக்குநர் சுலைமானிடம் பேசினோம். ‘‘இது ரொம்ப வித்தியாசமான கன்டென்ட் உள்ள ஒரு புரொஜெக்ட். கொரோனா நேரத்துல ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது. அது கொடுத்த அனுபவம்தான் இந்தக் கதை. ‘உனக்கென்ன வீட்டுல சும்மாதான இருக்க’னு மனைவியைப் பார்த்து சொல்றோம். ஆனா, வீட்டுல அவ்வளவு வேலைகள் இருக்குனு கொரோனா நேரத்துலதான் பார்த்து தெரிஞ்சுக்கிட்டோம். அந்தக் கதாபாத்திரத்தை ஒரு கதாநாயகன் ஏற்று பண்ற மாதிரியான தொடர் இது. வீட்டைப் பார்த்துக் கொள்ளும் வேலையை ஒரு கதாநாயகன் பண்றான். எனக்கு அந்த லைன் ரொம்பப் பிடிச்சிருந்தது. இதை பண்ணணும்னு நினைச்சு விரும்பி வந்தேன்.

ஆக்சுவலா இந்தக் கதையின் ஒன்லைன் சொன்னதே சன் டிவியின் சேர்மன் கலாநிதி மாறன் சார்தான். பிறகு காவேரி மேடம் ஒவ்வொரு முறையும் நிறைய இன்புட்ஸ் தந்தாங்க. அவங்க இந்தப் பையன் கேரக்டரை இன்னும் அழகாக பண்ணச் சொல்லி ஐடியா கொடுத்தாங்க. புதுசா இந்தக் களம் ஜெயிக்கும்னு நம்பிக்கையாக சொன்னாங்க. அப்புறம், தயாரிப்பு நிறுவனம் விஷன் டைம் வைதேகி ராமமூர்த்தி சார் மிகப்பெரிய பலம். நிறைய சுதந்திரம் தந்து எங்களுக்கு பக்கபலமாக இருக்கார். சேனல் பக்கம் நிர்வாகத் தயாரிப்பாளர் ரவி சார் நிறைய சப்போர்ட். இவங்க எல்லோரின் வழிகாட்டுதலில் இந்த புரொஜெக்ட் சிறப்பாகப் போகுது.

ஆர்ட்டிஸ்ட்டுகள் எல்லோருமே சிறப்பா பண்றாங்க. இது ஒரு அழகான ஃபேமிலி. இதுல முக்கிய நெகட்டிவ் ரோல்ல ஆட்டிப்படைக்க வந்த கேரக்டராக இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் நடிக்கிறார். அந்தக் கேரக்டருக்கு அப்படியான நபர் தேவையாக இருந்தது. அவர் சீரியலுக்குள்ள வந்ததும் அதிரிபுதிரியான கலராக இந்தத் தொடர் மாறியிருக்கு. அவர் நூறு சதவீதம் பெஸ்ட்டாக பண்ணியிருக்கார். அவர் மனைவியாக தாரணி மேடம் வர்றாங்க. அவங்களுக்கு ரெண்டு பசங்க வர்றாங்க.

ஆர்ட்டிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை எல்லோரும் பெஸ்ட் செலக்‌ஷன்னு சொன்னாங்க. இதுக்குக் காரணம் தயாரிப்பு நிறுவனமும், சேனலும், நாங்களுமாக சேர்ந்து நிதானமாக செய்ததுதான்.

நான் முதல்முறையாக சன் டிவிக்கு ‘தங்கம்’ சீரியல் பண்ணினேன். அதுவும் விஷன் டைம் நிறுவனத்துக்காக செய்தேன். அப்புறம், ‘செல்லமே’, ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’, ‘சித்தி 2’ பண்ணினேன். இது சன் டிவியில் எனக்கு ஐந்தாவது புரொஜெக்ட்.

வினோத் பாரதி ஒளிப்பதிவு பண்றார். அவர் நிறைய படங்களுக்கு வொர்க் பண்ணினவர். அவரை முதல்முறை சீரியலுக்கு கொண்டு வந்திருக்கோம். வசனமும், திரைக்கதையும் ரதி பாலா சார் செய்றார். திரைக்கதையில் ஒரு மேஜிக் நிகழ்த்துறார்னுதான் சொல்லணும். இப்ப மக்களும் இந்தத் தொடரை ரொம்ப நேசிக்கிறாங்க. சந்தோஷமாக அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்னு சொல்றாங்க. இனிவரும் காலங்களில் இது எல்லோரும் பேசக்கூடிய சீரியலாக அமையும்...’’ என உற்சாமாகச் சொல்கிறார் இயக்குநர் சுலைமான்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்