வில்லனை காப்பாற்றும் ஹீரோ! இது சீரியஸ் Hunt



‘‘என்னுடைய ரொம்ப நாள் கனவு நிறைவேறிடுச்சு...’’ ‘‘நானும் நினைச்சுக் கூட பார்க்கல... ராஜா சார் ஓகே சொல்லிட்டார்ன்னு வெங்கட் பிரபு புரோ  சொல்லும் போது பெரிய சர்ப்ரைஸா இருந்துச்சு...’’இயக்குநர் வெங்கட் பிரபுவும் நாகசைதன்யாவும் ஆச்சரியத்தில் இருந்து இன்னும் மீளாதவர்களாக பேசத் தொடங்கினார்கள். ‘கஸ்டடி’ திரைப்படம் மூலம் தெலுங்கில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் வெங்கட் பிரபு; அதே படத்தின் மூலம் ஹீரோவாக தமிழில் அறிமுகம் ஆகிறார் நாக சைதன்யா. படத்திற்கு இசை இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும்.

‘‘தலைப்புதான் கதை. ஒரு கஸ்டடி  கைதி, அவனுடன் பயணிக்கும் கான்ஸ்டபிள், அதைச் சுற்றி நிகழும் சுவாரஸ்யமான திரைக்கதை.  ஆனா, என்னுடைய ஸ்டைல் டெம்ப்ளேட் இந்த படத்தில் ரொம்பக் கம்மியா இருக்கும். படம் முழுக்க சீரியஸான டோன் பார்க்கலாம். முதல் தடவை முயற்சி செய்திருக்கேன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் ஏத்த மாதிரி பேலன்ஸ் செய்து எடுத்திருக்கேன்னு நம்பறேன்...’’ புன்னகைக்கிறார் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபுவுடன் நாக சைதன்யா... நாக சைதன்யாவுடன் வெங்கட் பிரபு...

வெ.பி: சே (நாக சைதன்யா) இந்த படத்தில் ஒரு சின்ன ஊரில் இருக்கும் கான்ஸ்டபிள். ஒரு சாதாரண இளைஞன் தனக்கு சவாலா பெரிய விஷயம் வரும்பொழுது என்ன ஸ்டெப் எடுத்து வைப்பார் என்பதுதான் கதை.சே (நாக சைதன்யா) பயங்கர சின்சியர். டெடிகேஷன். நல்லா தமிழ் பேசுறார். அதனாலேயே எனக்கு ரிஸ்க் இல்ல. ஒரே வருத்தம்தான்... வெங்கட் பிரபு கேங்னாலே எப்பவுமே பார்ட்டி, கலாட்டானு இருக்கும். ஆனா, இந்தப் பையனை (நாகசைதன்யா) பார்ட்டிக்கு எல்லாம் கூப்பிடவே முடியலை! அதில் ஆர்வமே காட்ட மாட்டேங்கறார்.

நா.சை: இவ்வளவு ரிலாக்ஸ் ஆன ஒரு இயக்குநரை முதல் தடவையா சந்திக்கறேன். எல்லாத்தையும் காமெடியா, ரிலாக்ஸா, ஜாலியா ஹேண்டில் செய்யறார். பேசிக்காவே சினிமாவில் ஓவர் பில்டப், பஞ்ச் டயலாக் எல்லாம் தவிர்க்கவே பார்ப்பேன். விபி ப்ரோவும் அதேமாதிரி பில்டப் இல்லாம கதை சொன்னார்...இனி விபி ப்ரோகிட்ட பேசுங்க... அவர் பேசி முடிச்சதும் நான் பேசறேன்...’’ என நாக சைதன்யா ஒதுங்க... ஓவர் டூ வெங்கட் பிரபு.   வேறு படத்தின் சாயல் இருக்கும் படம்னு தைரியமா சொல்ற ஆள் நீங்க... இந்தப் படமும் அப்படித்தானா..?
நிச்சயமா நிறைய படங்கள் சொல்லலாம். ‘மிட் நைட் ரன்’, ‘டியூ டேட்’, ‘ஹிட்மேன் பாடிகார்ட்ஸ்’... இப்படி எதிர்மறையான ஐடியாலஜி இருக்கற ரெண்டு பேர் சேர்ந்து பயணிக்கிற சூழல் வந்தால் என்ன ஆகும் என்கிற கான்செப்ட்டில் நிறைய படங்கள் வந்திருக்கு. அந்த மாதிரியான கதைதான் இதுவும்.  

தமிழ், தெலுங்கு இரண்டு படங்களுக்கும் வித்தியாசங்கள் உண்டா? நிச்சயமா. நாகசைதன்யா தெலுங்கில் பெரிய நடிகர். அதற்கேற்ற காட்சிகளும் பில்டப்புகளும் அங்க இருக்கும். தமிழைப் பொறுத்தவரை சே (நாக சைதன்யா) அறிமுகமாகும் ஒரு நடிகர்.

இவரோட ஒரே அடையாளம் நாகார்ஜுனா சார் பையன் என்பது. ஸோ, அதற்கேற்ற மாதிரி தமிழில் எப்படி காட்டணுமோ அப்படி காட்டி இருக்கேன். தெலுங்குக்காக ஒரு ஆக்‌ஷன் சீன் கூட ஷூட் செய்தோம். பார்த்துட்டு சே-வே ‘இது வேண்டாம் ப்ரோ, தமிழ் ஸ்டைல்லயே இருக்கட்டும்’னு சொல்லிட்டார்.அரவிந்த்சுவாமி, சரத்குமார், பிரியாமணி... தமிழுக்கும், தெலுங்குக்கும் நடிகர்கள் மாற்றம் உண்டா?

வெ.பி: அரவிந்த்சாமி சார்னு சொன்னதுமே படத்துல யார் வில்லன்னு தெரிஞ்சிருக்கும். சரத்குமார் சார் இருக்கறார்... ஸோ, இவங்கதான் மெயின் கேரக்டர். பிரியாமணி கலெக்டரா வர்றாங்க.

அத்தனை நடிகர்களுமே இரண்டு மொழிக்கும் தெரிந்த முகங்கள். காமெடிக்கு மட்டும் தமிழில் பிரேம்ஜியும்; தெலுங்கில் வெண்ணிலா கிஷோரும்.

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை... இந்த காம்போ அமைந்தது எப்படி?

மொத்த கதையும் 48 மணி நேரங்களில் நடக்குது. அதற்கேற்ற மாதிரி படத்துல நிறைய இல்லாம மொத்தமே மூணு பாடல்கள்தான். அதிலும் ஒன்றுதான் படத்தில் வரும்.
ஆக்சுவலா ராஜா சார் ஓகே சொல்வார்னு நினைச்சுகூட பார்க்கல. என் படத்தில் அவருடைய பெயர் டைட்டில் கார்டில் இருக்கணும்ங்கிறது நீண்ட நாள் ஆசை.

அது இந்த படத்தில் நிறைவேறிடுச்சு.  பொதுவா யுவன்கிட்ட பாட்டு கேட்கும் போது பெரியப்பாவின் பாட்டை மாதிரியா சொல்லித்தான் அப்படி வேணும்னு கேட்பேன். ஆனா, ராஜா சார்கிட்ட என்ன சொல்லி கேட்கணும்னு எனக்கே தெரியல! அதனால் கான்செப்ட்டை மட்டும் சொல்லிட்டு அமைதியா உட்கார்ந்திட்டேன். பல இடங்களில் யுவன்தான் எனக்கு பதிலா பேசினான்.

ராஜா சார் ‘ஹவ் டு நேம் இட்’னு ஒரு மியூசிக் சிம்பொனி செய்திருப்பார். அதிலிருந்து ஒரு ட்ராக் எடுத்து இந்த படத்தில் ஒரு சீன் செய்திருக்கோம். ‘அதெல்லாம் வாசிக்கிறதுக்கே இப்ப ஆளே இல்லையேடா’னு சொன்னாரு... இருந்தாலும் பரவாயில்லை பயன்படுத்தின ஏதாவது ஒரு ட்ராக் இருக்குமேனு கேட்டு வாங்கினேன்.

உங்க பொண்ணு ஷிவானி இந்தப் படத்தில் பாடல் எழுதி இருக்காங்களே..?

ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஸ்கூலில்  மியூசிக் படிச்சுக்கிட்டு இருக்காங்க. உடன் ஜர்னலிஸம் படிக்கிறாங்க. வெறுமனே சீன் மட்டும் சொன்னேன். எங்கப்பா மாதிரியே பத்து நிமிஷத்திலே வரிகள் அனுப்பிட்டாங்க. சினிமாட்டோகிராபி எஸ்.ஆர்.கதிர் சார், எடிட்டர்  பிரவீன் கே எல் அஸிஸ்டெண்ட் வெங்கட்தான் இந்த படத்துக்கு எடிட்டர், ஆர்ட் டைரக்‌ஷன் சத்தியநாராயணன், சில்வா மாஸ்டரின் அசிஸ்டெண்ட் மகேஷ் இந்த படத்துக்கு ஸ்டண்ட். அப்பா (கங்கை அமரன்)  ஒரு பாடல் எழுதி இருக்கார், மதன் கார்க்கி ஒரு பாடல் எழுதி இருக்கார், கருணா ஒரு பாடல் எழுதியிருக்கார்.

வெங்கட் பிரபு முடித்ததும் ‘‘வெல்கம் டு தமிழ்... தமிழில் முதல் அறிமுகம்... எப்படி உணர்கிறீர்கள்...’’ என நாக சைதன்யாவிடம் கேட்டோம். ‘‘அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தமிழ் நல்லா தெரியும். நானும் என்னுடைய ஸ்கூலிங்கை இங்கதான் முடிச்சேன். அதனாலயே தமிழ் எனக்கு ஓரளவு வரும்.

என்னால மட்டும்தான் இந்த கதை செய்ய முடியும்னு கிடையாது. எந்த ஹீரோவும் நடிப்பாங்க. ஆனா, நல்ல கதை. மிஸ் பண்ண விரும்பலை. எனக்கு விபி ப்ரோவை பத்து பன்னிரண்டு வருடங்களாவே தெரியும். அவரும் தெலுங்கில் அறிமுகமாக வேண்டிய சூழல் உருவானது. நானும் தமிழுக்கு வருவதற்கான நல்ல கதைக்காக காத்திருந்தேன். இந்த கதை அதற்கு சரியா பொருந்திடுச்சு.

இங்கே எனக்கு இன்ஸ்பிரேஷனான கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு மத்தில நானானு நினைக்கும்போது கொஞ்சம் நெர்வசாதான் இருக்கு.
தமிழ் மக்கள் என்னை ஏத்துக்கணும். எவ்வளவு சிறப்பா நடிக்க முடியுமோ நடிச்சிருக்கேன்...’’ சிரிக்கிறார் நாக சைதன்யா.

‘கஸ்டடி’ ஆடியன்ஸுக்கு என்ன எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்? மிகப்பெரிய ட்ரீம் எங்க ரெண்டு பேருக்கும் நினைவாகியிருக்கு. ராஜா சார் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல் முறையா ஒரு ஹீரோவுக்கு வில்லனைக் காப்பாற்றும் பொறுப்பு. இதை நோக்கி கதை டிராவல் ஆகும். நிச்சயமா அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்னு நம்பறோம்.

ஷாலினி நியூட்டன்