சென்னையில் இருக்கு காலண்டர் ஓவியர்களின் கலைக்கூடம்!



காலண்டர் ஓவியங்களின் பிதாமகர் ஓவியர் கொண்டையராஜு. அவரின் சீடர்கள் வரைந்த கடவுள் ஓவியங்கள்தான் அன்று காலண்டர்களை அலங்கரித்தன. இந்த கடவுள் ஓவியங்களுக்காகவே அன்றைய வீடுகளில் காலண்டர்கள் வாங்கும் பழக்கமும் இருந்து வந்தது. ஆனால், நவீன டிஜிட்டல் யுகத்தில் அவையெல்லாம் காணாமல் போய்விட்டன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காலண்டர் ஓவியத்துக்கென தனித்துவமான பாணியை உருவாக்கி, இந்திய கலைஞர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்த ஓவியர்கள் இவர்கள்.
அதுமட்டுமல்ல. வட்டார தெய்வங்களைக் காலண்டர் ஓவியங்களாக ஆக்கிய பெருமைக்குரிய ஓவியர்களும் இவர்கள்தான். இவர்களின் ஓவியங்கள் எப்படி இருக்கும் என்பது அன்றைய தென்மாவட்ட மக்களுக்கே தெரியும்.

இப்போது இந்த ஓவியங்களை மீட்டெடுத்து அதை நிரந்தர ஆர்ட் கேலரியாக சென்னையில் காட்சிக்கு வைத்திருக்கிறார் ஜெயக்குமார்.
இவர், அன்று காலண்டர் ஓவியங்களில் ஜொலித்தவரும், ஓவியர் கொண்டையராஜுவின் பிரதான சீடர்களில் ஒருவருமான மு.ராமலிங்கத்தின் இளைய மகன். சென்னை ஆழ்வார்திருநகரில் ‘சித்ராலயம்’ என்ற பெயரில் இவர் திறந்திருக்கும் ஆர்ட் கேலரியில் சந்தித்தோம்.

‘‘2012ம் ஆண்டு பாண்டிச்சேரியில் பிரபல கலைஞர் சிற்பி ஜெயராமன், ‘சினிமா நூறு’னு ஒரு ஆர்ட் ஷோ பண்ணியிருந்தார். சினிமா சம்பந்தமாக நூறு போர்ட்ரைட்ஸ் வரைஞ்சு பார்வைக்கு வச்சிருந்தார். அதுக்கு நான் போயிருந்தேன். அங்க நடந்த வொர்க் ஷாப்ல கலந்துக்கிட்டேன். அப்பதான் நாமும் அப்பாவின் ஓவியங்களை ஷோவுக்கு வைக்கலாமேனு தோணுச்சு. ஏன்னா, காலண்டர் ஓவியங்கள், குறிப்பாக அன்றைக்கு மக்களால் நேசிக்கப்பட்ட கடவுள் ஓவியங்களை வைக்க ஒரு கலைக்கூடம் இங்கில்ல. அதை நாம் செய்வோம்னு நினைச்சேன்.

அப்படியாக ஆரம்பிச்ச கனவுப் பயணம், இப்ப பத்தாண்டுகளுக்குப் பிறகு நனவாகியிருக்கு...’’ என்றவர், இந்த ஓவியங்களைச் சேகரிக்க நிறைய அலைந்திருக்கிறார்.  ‘‘இதை சேகரிக்கணும்னு நினைச்சதும் என் அண்ணன் சோமுகிட்ட, ‘இப்ப படங்கள் எதுவும் இல்லை. எல்லாமே வித்துட்டாங்க. என்ன செய்ய’னு கேட்டேன். அப்ப அண்ணன் சோமுதான், ‘அப்பா வரைஞ்ச பிரஸ்கள்ல போய் கேட்டால் கிடைக்கும்’னு நம்பிக்கையாகச் சொன்னார்.

சரினு ஒரு ஏழுமாத காலம் அலைஞ்சேன். ஆனா, அப்பாவின் படங்கள் எதுவும் கிடைக்கல. ஏன்னா, நிறைய பேர் இந்த ஓவியங்களை வாங்கி வித்திருக்காங்க. இதுல முக்கியமாக தில்லியில் இருந்து ஒருத்தர் மொத்தமாக வாங்கிட்டு போயிருக்கார். அதை அவர் தில்லி உள்ளிட்ட பல நகரங்கள்ல கண்காட்சி வச்சிருக்கார். அப்ப, அதன் மதிப்பு தெரிஞ்சவங்க வாங்கிட்டு போயிருக்காங்க. இருந்தும் என் தேடலை நான் விடல.  

சிவகாசியில் ஓரியண்ட்னு ஒரு பிரஸ் இருக்கு. அதன் உரிமையாளர் அண்ணாச்சி ஜெகதீச சங்கர் அப்பாவின் சமகாலத்தில் இருந்தவர். அவர்தான் என்னை நம்பி அப்பாவின் ஓவியங்களைக் கொடுத்தார். அப்பா வரைந்த ஐம்பது ஓவியங்களை எடுத்து வச்சிருந்தார். என்ன வேணுமோ எடுத்துக்கோனு சொன்னார். நான் அதிலிருந்து முப்பது படங்களைத் தேர்ந்தெடுத்தேன்.

அப்புறம், கார்னேஷன்ல ஜவஹர் அண்ணாச்சி அவங்க ஸ்டாக் ரூம்ல நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸ் படங்கள் வச்சிருந்தார். அவரும் என்னை உள்ளே போகச்சொல்லி என்ன படங்கள் வேணுமோ எடுத்துக்கோனு சொன்னார். அங்கிருந்து அப்பாவின் 20 படங்களைத் தேடி எடுத்தேன். அதைத்தான் இங்க காட்சிப்படுத்தியிருக்கோம். நான் அதிகமாக வாங்கினது இவங்க
ரெண்டுபேர்கிட்டதான்.

அதேபோல, ஓரியண்ட்ல சந்திரநாத்னு இன்னொரு அண்ணாச்சி இருக்கார். ஜெகதீச சங்கரின் சகோதரர். அவரும் கண்காட்சி பண்றதுனா எடுத்துக்கோங்கனு சொன்னார். அதுவும் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. இவங்க தவிர்த்து டச்சிங் ஆர்ட்டிஸ்ட்களிடம் படங்கள் இருக்கும். அவங்க சில படங்களை எனக்குக் கொடுத்தாங்க. இப்படியாக மொத்தம் 130 படங்கள் சேகரிச்சேன். இதுல அப்பா படங்கள் மட்டும் 65க்கும் மேல் இருக்கும். மற்றதெல்லாம் வெவ்வேறு ஓவியர்களின் படங்கள்.

அதுல முக்கியமாக தாத்தா டி.எஸ்.சுப்பையா, முருகக்கனி, கே.மாதவன், வடஇந்தியாவைச் சேர்ந்த மூல்காவ்ங்கர், ராம்குமார், சஃப்பார், சர்தார் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் இருக்கு.
ஆரம்பத்துல நான் அப்பாவின் ஓவியங்கள் மட்டும்தான் சேகரிச்சு காட்சிப்படுத்தணும்னு நினைச்சேன். அப்ப ஓரியண்ட் ஜெகதீச சங்கர் அண்ணாச்சிதான், ‘நீ அப்பா படம் மட்டும் சேகரிக்காதே. எல்லோர் படங்களையும் சேகரி. காலண்டர் இண்டஸ்ட்ரினு நாளைக்கு நீ ஒரு கண்காட்சி வைக்கணும்னா எல்லார் படங்களும் இருக்கணும்’னு சொன்னார்.

அதன்பிறகு எல்லா காலண்டர் ஓவியர்களின் ஓவியங்களையும் நிறைய சேகரிச்சேன். அதாவது கிடைச்ச அளவு சேகரிச்சு இங்க வச்சிருக்கேன்...’’ என்றவர், தன் அப்பா மு.ராமலிங்கம் பற்றி குறிப்பிட்டார்.  ‘‘இந்த கலைக்கூடத்துல என் அப்பா மற்றும் சுப்பையா தாத்தாவின் படங்கள் எப்பவும் நிலையாக இருக்கும். இவங்க இல்லனா நாங்க இல்ல. என் அப்பா மு.ராமலிங்கம், பிதாமகர் கொண்டையராஜுவிடம் வருவதற்குக் காரணம் சுப்பையா தாத்தாதான். அவர்தான் முதல்ல வர்றார். பிறகு, அப்பாவை அந்தக்குழுவில் இணைக்கிறார். அப்பா வரும்போது அவருக்கு பதினாலு வயசு.

கோவில்பட்டியில் தேவி எலக்ட்ரிக் ஸ்டூடியோ என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஸ்டூடியோக்களுக்கான திரைச்சீலைகள், நாடக திரைச்சீலைகள், தொழில் நிறுவனங்களுக்கான ஓவியங்கள் வரைதல், அதன் அதிபர்களின் போர்ட்ரைட் படங்கள் தீட்டுதல், கம்பெனிகளுக்கான இலச்சினை படங்கள் வரைதல், புகைப்படங்கள் எடுத்தல்னு பல பணிகள் செய்றாங்க.
அப்படியாக காலண்டர் ஓவியர்கள் உள்ளே வர்றாங்க. அவரின் அவ்வளவு சீடர்களுக்கும் தொழிலைக் கற்றுக்கொடுத்ததுடன் கல்யாணம் பண்ணி வச்சு வாழ்க்கையில் முன்னேற்றியும் இருக்கிறார் பிதாமகர் கொண்டையராஜு...’’ என நெகிழ்ந்த ஜெயக்குமார் நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘ஆரம்பத்துல சீடர்கள் எல்லோருமே ஓவியங்களுக்குக் கீழ் தங்கள் குருவான கொண்டையராஜு பெயர்தான் போட்டுப்பாங்க. சில ஓவியங்கள்ல கொண்டையராஜு தேவி ஆர்ட்ஸ் ஸ்டூடியோ, கொண்டையராஜு அம்மாள் ஆர்ட்ஸ் ஸ்டூடியோனு எல்லாம் இருக்கும். கொண்டையராஜு அம்மாள் ஆர்ட்ஸ்னு போட்டதெல்லாம் அப்பா வரைஞ்சதாக இருக்கும். கொண்டையராஜு தேவி ஆர்ட்ஸ் எல்லாம் சுப்பையா தாத்தா வரைஞ்சதாக இருக்கும். அதுக்கு முன்னாடி ரெண்டு பேருமே கொண்டையராஜு கோவில்பட்டினு போட்டு வரைவாங்க. அதனால, இந்த கேலரியில் அதை பிரிச்சு வச்சிருக்கோம்.  

காலண்டர் இண்டஸ்ட்ரியில் முதலில் பிரிண்ட் ஆனது அப்பாவின் ஓவியங்கள்தான். அந்தக் காலகட்டத்துல மேற்கு வங்கத்துலதான் பிரிண்டிங் இருந்தது. அதனால, அதைச்சுற்றிதான் ஓவியர்கள் இருந்தாங்க. ஒரு படம் வேணும்னா இங்கிருந்து அங்க போவாங்க. இந்தச் சூழ்நிலைல கோவில்பட்டியிலும் ஓவியர்கள் இருக்காங்கனு தெரிஞ்சு சிவகாசியிலிருந்து வந்தாங்க. அப்ப, பிரிண்டிங்கிற்கு சேம்பிள் படமாக விநாயகர் ஓவியத்தை அப்பா வரைஞ்சார். அதன்பிறகு அவங்க ஆர்டர் எடுத்தாங்க.

விருதுநகர் அம்மாள் காப்பி நிறுவனத்திற்காக அப்பா, மீனாட்சி அம்மன் படம் வரைஞ்சு தந்தார். வியாபாரத்துக்குனு முதல்ல பிரிண்ட்டானது அப்பாவின் மீனாட்சி அம்மன் படம்தான்.
இது எப்படி நடந்ததுனா, அந்தக் காலத்துல எல்லோரும் பேக்டிராப்பாக பெரிய பெரிய சைஸ்ல வரைஞ்சாங்க. அப்பாவுக்கு சுப்பையா தாத்தாதான் வரைய சொல்லித் தந்தார். ஸ்கெட்ச், கலரிங் எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

அப்பா சின்ன சைஸ்ல பயிற்சி எடுத்தார். அப்புறம், ஆயில் பெயிண்ட்ல பிரிண்ட் எடுக்கமுடியாது. போஸ்ட் கலர்தான் நல்லாயிருக்கும். அதுலயும் அப்பாவுக்கு நல்ல பயிற்சி இருந்தது. அப்படியாக அப்பாவின் ஓவியம் முதல் காலண்டர் ஓவியமாக பிரிண்ட்டாச்சு. பிறகு, சுப்பையா தாத்தா உள்ளிட்ட எல்லோருமே காலண்டர் ஓவியங்கள் வரைய ஆரம்பிச்சாங்க.   
இதுல அப்பாவின் டிராக்கும், தாத்தாவின் டிராக்கும் வேறுவேறானது. சுப்பையா தாத்தா வரைஞ்சது எல்லாம் வட்டார தெய்வங்கள். கோமதி அம்மன், மாரியம்மன், செண்பகவல்லி அம்மன் சிலைகளை உருவமாக மாற்றிய பெருமை அவங்களுக்குதான்.

ஆனா, அப்பா வரைஞ்சது எல்லாம் சப்ஜெக்ட்டாக இருக்கும். அன்றைய காலகட்டத்திற்குத் தகுந்தபடி, டிரெண்ட் என்னவோ அதை ஓவியங்களாக்கி இருப்பாங்க. நைலக்ஸ் புடவை அன்னைக்கு வந்ததுனா அதை ஓவியமாக வச்சிருப்பார். இந்த கேலரியில் அதையெல்லாம் காட்சிப்படுத்தியிருக்கோம். கடவுள் ஓவியங்கள் தவிர ஆர்டருக்காக அன்றைய ஆங்கில இதழ்கள்ல வந்த பெண்களின் புகைப்படங்களையும் அப்பா ஓவியங்களாக வரைஞ்சிருக்கார். அதையும் இங்க பார்க்கலாம்.  

இதுதவிர திருப்பதி, பழநி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி பகவதி அம்மன் உள்ளிட்ட பல கோயில்களின் தேவஸ்தான அழைப்பின்பேரில் போய் கருவறையில் அமர்ந்து வரைஞ்சிருக்காங்க. அவற்றின் ஸ்கெட்ச்சஸ் இருக்கு. அப்புறம், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டைக்காக அப்போது ஓவியங்கள் வரைஞ்சு தந்தது அப்பாதான். அதன் ஸ்கெட்ச்சஸும் நம்மகிட்ட இருக்கு. அதுக்காக முதல்வர் கலைஞர்,  அப்பாவைப்பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிச்சார்.

இதுதவிர இந்த கேலரியில் அப்பாவின் டெஸ்க், ஓவியங்கள் வரைஞ்ச தூரிகை, வண்ணங்கள், அப்பாவின் கேமராக்கள், ஆர்ட்வொர்க் எல்லாம் வச்சிருக்கோம். அவர் எப்படி ஒரு செட்அப்ல இருந்து வரைஞ்சாரோ அதேபோல இங்க காட்சிப்படுத்தியிருக்கோம். அவர் பாட்டு கேட்டுக்கிட்டே சிலநேரங்கள்ல வரைவார். அந்த கிராமோபோனும் இங்க இருக்கு. அப்பா தன் தம்பியையும் குருகுலத்திற்கு அழைச்சிட்டு வந்தார். அவர் பெயர் சீனிவாசன். இப்ப சித்தப்பாவுக்கு 85 வயசாகுது. இப்பவும் அவர் வரைஞ்சிட்டு இருக்கார்.

இந்த கேலரிக்கு எங்கள் குடும்பத்தினர் சப்போர்ட் மட்டுமல்ல. சுப்பையா தாத்தாவின் குடும்பத்தினரும் நிறைய சப்போர்ட் தந்தாங்க. குறிப்பாக, சுப்பையா தாத்தாவின் மகன் மாரீஸ் மாமா நிறைய இன்புட்ஸ் தந்து உதவினாங்க. அவங்கதான் கொண்டையராஜுவின் குருகுலம் அன்னைக்கு எப்படி இருந்ததுனு எல்லாம் எங்களுக்கு சொன்னாங்க.

அடுத்து, காலண்டர் ஓவியர்கள் பற்றின ஆய்வாளர் ரெங்கையா முருகன் சில இன்புட்ஸ் தந்தார். இவங்க உதவிகளை மறக்கமுடியாது. அப்புறம், கொண்டையராஜுவின் தங்கச்சி குடும்பத்தினரை இந்த கேலரி திறப்புவிழாவின்போது வரவழைச்சு கௌரவப்படுத்தினோம்.

ஏன்னா, அந்த குருகுல மாணவர்களுக்கு அன்று உணவாக்கிப் போட்டு கவனிச்சது பிதாமகர் கொண்டையராஜுவின் தங்கச்சிதான்...’’ என்றவரிடம், அடுத்து என்ன என்றோம்.
‘‘இந்த கேலரிக்கு வர்றவங்க ஓவியங்களைப் பார்க்கும்போது வாங்கலாம்னு தோணும். அதனால, நாங்க ரீபுரொடக்‌ஷன் பண்ணலாம்னு திட்டம் வச்சிருக்கோம். இதுதவிர, ஆர்ட் வொர்க் ஷாப் நடத்தலாம்னு இருக்கோம்.

அப்புறம், நம் தென்பகுதியிலிருந்து வர்றவங்களுக்கு இங்க அடித்தளம் இல்லாமல் இருக்கு. அவங்களுக்கு ஒரு ஸ்பேஸ் கொடுக்கலாம்னு நினைக்கிறோம். உண்மையில் அவங்களுக்கு திறமை இருக்குனா, அவங்க வருமானத்திற்குத் தகுந்தமாதிரி தயார்படுத்தி, அவங்களுக்குப் பயிற்சி அளிச்சு இங்க ஷோ பண்ணலாம்னு நினைச்சிருக்கோம். இதுதான் அடிப்படை. இதுல என்ன விஷயங்கள் எங்களால் முடியுமோ அதைச் செய்வோம்...’’ என உற்சாகமாகச் சொல்கிறார் ஜெயக்குமார்.  

பேராச்சி கண்ணன்