லவ் + ஆக்ஷன் + மியூசிக் = டக்கர்!
‘பாய்ஸ்’ படம் மூலம் மாஸ் நாயகனாக அப்போதைய இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் சித்தார்த். தொடர்ந்து ‘ஆயுத எழுத்து’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘உதயம் NH4’ உள்ளிட்ட மிகச்சில படங்களில் நடித்தாலும் சித்தார்த்தின் நேச்சுரல் நடிப்பிற்காகவே அவருக்கென ஒரு தனி ரசிகர் வட்டம் உண்டானது.
 ஆனாலும் அடிக்கடி டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துகள், பதிவுகள் என மாட்டிக் கொள்வது அவரது பழக்கம்; வழக்கமாக மாறிப் போனது. 2019ம் ஆண்டு வெளியான ‘அருவம்’ படத்திற்குப் பிறகு தெலுங்கு, இந்திப் பக்கம் சென்றார். ஏராளமான படங்கள், ஓடிடி புராஜெக்ட்ஸ் என அவர் தனக்கென வேறு ஒரு மார்க்கெட்டை செட் செய்துகொண்டார். இதோ தமிழில் மீண்டும் இளமை ததும்ப ஒரு படம்... அதுதான் ‘டக்கர்’. இந்தப் படம் தனக்கு கம் பேக் ஆக அமையும் என சித்தார்த் நம்புகிறார்.
 ‘கப்பல்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் ஜி கிரிஷ். இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டெண்ட். ‘டக்கர்’ படம் இவருக்கு இரண்டாவது படம். ஸோ, கிட்டத்தட்ட சித்தார்த், கார்த்திக் ஜி கிரிஷ் இருவருக்குமே ‘டக்கர்’ மிக முக்கியமான படம். ‘‘காதலிக்க ஆசைப்படும் நாயகன், காதல் என்றாலே வெறுக்கும் நாயகி... இருவரும் ஒன்றாகப் பயணிச்சா என்ன ஆகும்..? இதுதான் ‘டக்கர்’ பட ஒன்லைன்...’’ உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ்.
 ‘டக்கர்’..? இந்தியில் ‘மோதல்’ என அர்த்தம். ரெண்டு ஈகோ பிடிச்ச இளைஞர்கள் ஒரு கட்டத்தில் சந்திச்சு ஒண்ணாக பயணிக்க வேண்டிய தருணம் உண்டாகுது. தொடர்ந்து அவங்க பயணம் எப்படி இருக்கப் போகுது, என்னவெல்லாம் சுவாரஸ்யம் நடக்கப் போகுது என்பதுதான் கதை. முழுக்க முழுக்க லவ் + ஆக்ஷன் கலவைதான் இந்த ‘டக்கர்’. ரொம்ப நாளைக்கு அப்பறம் சித்தார்த்தை திரும்ப ஒரு சார்ம், துறுதுறு லவ்வர் பாய் கெட்டப்பில் பார்க்கலாம். ஆக்ஷனும் நல்லா செய்திருக்கார்.

டிரெய்லரில் கார் பயணம், கிராமத்து செட்டப் என வருகிறதே..? சித்தார்த்தை எப்படி கிராமத்துப் பையனாக யோசிச்சீங்க..? நிறைய பேர் கேட்கறாங்க. அவருடைய ஸ்டைலிஷ் லுக், கிராமத்துப் பின்னணி எல்லாத்துக்குமே படத்திலே காரணமும், கன்டென்டும் இருக்கும். கிராமத்திலே இருந்து பணம் சம்பாதிக்கணும், அதுவும் பணக்காரன் ஆகணும்னு நினைச்சு நகரத்துக்கு வருகிற இளைஞன், ஒரு பொண்ணை சந்திக்கிறார். அவங்க கேரக்டரும், இவர் கேரக்டரும் சுத்தமா செட்டாகவே இல்லை. ஆனாலும் அதையும் மீறின ஒரு கெமிஸ்ட்ரி அவங்களுக்குள்ள ஃபார்ம் ஆகுது. அந்த கெமிஸ்ட்ரி என்ன செய்யப் போகுது, அப்படிங்கறதுதான் கதை.
என்ன சொல்கிறார் சித்தார்த்? எதுவுமே சொல்ல மாட்டார். அவருக்கு கதை, இயக்கம் இதில் எல்லாம் நிறைய அனுபவம் உண்டு. ஆனாலும் இன்னொருத்தர் கதைக்குள்ள தலையிட மாட்டார். டெடிகேஷனா நடிப்பார். தன் கேரக்டரும், கதையும் புரியும் வரைக்கும் மெனக்கெட்டு கதை கேட்பார். ஏற்கனவே மிகப்பெரிய இயக்குநர்கிட்ட வேலை செய்ததால் அவருக்கு இன்னொரு இயக்குநருடைய வேலை, சிரமம் புரியும். அதனால் நமக்கும் கஷ்டப்பட்டு புரிய வைக்க வேண்டிய கட்டாயம் இருக்காது.
இந்தப் படத்திலே அவர் ஒரு கோபமுள்ள வாலிபன். பணம் ஏன் ஒருசிலர்கிட்டே இருக்கு, ஏன் பலர்கிட்டே இல்லனு கேள்வி கேட்கும் கேரக்டர். ரியாலிட்டியாகவும் கோபமான இளைஞர் சித்தார்த். ஸோ, இந்தக் கேரக்டரில் அவ்வளவு சரியா பொருந்தியிருப்பார். திவ்யான்ஷா கௌசிக் பற்றி சொல்லுங்க... தொடர்ந்து போல்டான பாத்திரத்திலேயே நடிக்கிறாரே?
திவ்யான்ஷா கௌஷிக் தமிழில் முதலில் ஒப்பந்தமானது ‘டக்கர்’ படத்தில்தான். ஆனால், முந்திக்கொண்டு ‘மைக்கேல்’ படம் வெளியாகிடுச்சு. இந்தக் கதைக்கான கேரக்டரா அவங்க நடிச்சிருக்காங்க. ‘உனக்கு வேணும்னா செக்ஸ் வெச்சிக்கோ, இந்த காதல் எல்லாம் வேண்டாம்’னு சொல்கிற கேரக்டர்!நிச்சயம் திவ்யான்ஷா கேரக்டர் சிலருக்கு வித்யாசமா தெரியலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கேரக்டர், அதற்காக அவங்க கேரக்டரை ஜட்ஜ் பண்ணக் கூடாது என்கிறதையும் சில இடங்கள்ல காண்பிச்சிருப்பேன்.
அவங்கவங்க வாழ்க்கை... அதிலே நாம கருத்து சொல்ல முடியாது. எதிர்கால இளைஞர்கள் மட்டுமில்ல... இப்பவே இளைஞர்கள் கிட்டே எல்லாத்திலும் ஒரு தெளிவு இருக்கு. தனக்கு என்ன வேணும்ங்கறதிலே புரிதலோடு இருக்காங்க. அதைத்தான் படத்துல காண்பிக்க நினைச்சேன்.
யோகி பாபு டபுள் ஆக்ஷன்னு கேள்விப் பட்டோமே?
யோகி பாபு ஒரு டானுடைய பையன். டானும் அவர் மகனும் என இரட்டை வேடத்துல நடிச்சிருக்கார். தன் மகன் பெரிய டானாகணும்னு டிரெயினிங்கிற்காக வில்லன்கிட்ட அனுப்பி வைப்பார் அப்பா யோகி பாபு. படம் முழுக்க காமெடி, அட்ராசிட்டி என பின்னியிருப்பார். ‘வேலாயுதம்’, ‘தலைவா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட படங்கள்ல வில்லனா மாஸ் காட்டிய அபிமன்யூ சிங்தான் இந்தப் படத்திலும் வில்லன். இவர்கள் இல்லாம முனீஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், நடிச்சிருக்காங்க.
காதல், ஆக்ஷன் கலவை என்றாலே பாடல்கள் மிக முக்கியம்... இசை, மற்றும் டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க?
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு, நிவாஸ் கே பிரசன்னாதான் மியூசிக், ‘மரகத மாலை...’, ‘ரெயின்போ...’ உட்பட படத்திலே மொத்தம் அஞ்சு பாடல்கள். ‘ரெயின்போ...’ பாடலை சிம்பு பாடியிருக்கார். ஆண்ட்ரியா ஒரு பாடல் பாடியிருக்காங்க. இவங்க இல்லாம பிரதீப், சின்மயி, விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மோகன் இவங்கல்லாம் பாடின பாடல்கள் நல்லா வந்திருக்கு. படமே மியூசிக்கல் படம்தான்.
‘நான் சிரித்தால்’ பட சினிமாட்டோகிராபர் வாஞ்சிநாதன் முருகேசன் இந்தப் படத்துக்கும் சினிமாட்டோகிராபி. ‘டான்’ பட ஆர்ட் டைரக்டர் உதய குமார் கே இந்தப் படத்துக்கும் ஆர்ட் டைரக்ஷன். எடிட்டிங் ஜி.ஏ.கௌதம். ‘டக்கர்’ யாருக்கான படம்?
யாருக்காக அப்படின்னு நாங்க வயது வாரியா எதுவும் ஒதுக்கலை. சில வசனங்கள், சீன்கள் பார்க்கும் போது இளைஞர்களுக்கான படமா தெரியும். டீசர், டிரெய்லரிலேயே 18+ வசனங்கள் இருக்கறதா கேள்விகள் வருது. என்னைக் கேட்டால் எல்லாத்தையும் மறைச்சு குடும்பமா படத்துக்கு வரவழைச்சு இந்தக் காட்சிகளை எல்லாம் காட்றதை விட முன்பே இதுதான் படம், இதுதான் கதைன்னு சொல்லிட்டா நல்லது. அந்தப் பொறுப்பு ஒரு இயக்குநருக்கு டீசர், டிரெய்லரில் இருந்தே ஆரம்பிக்கறதா நான் நம்பறேன். லவ், ஆக்ஷன், மியூசிக் மூணும் சேர்ந்த கலவையா ‘டக்கர்’ படம் உங்களை என்டர்டெயின் செய்யும்.
ஷாலினி நியூட்டன்
|