Must Watch
 அக ‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஃபிரெஞ்சு மொழிப்படம், ‘அக’. ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது.பாரிஸ் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் குண்டு வெடிக்கிறது. பலர் இறக்கின்றனர். சூடானைச் நேர்ந்த முக்தாரின் ஆட்கள் குண்டு வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸுக்கு எழுகிறது. முக்தாருடன் தொடர்புடையவர் டான் விக்டர். காவல்துறைக்கு நெருக்கடி அதிகமாகிறது. விக்டர் குழுவுக்குள் நுழைந்தால் சுலபமாக முக்தாரைப் பிடித்துவிடலாம் என்று காவல்துறை திட்டம் தீட்டுகிறது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக உளவாளி ஆடம் பிராங்கே தேர்வு செய்யப்படுகிறார். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு விக்டரிடம் வேலைக்குச் சேர்கிறான் ஆடம். அவனைப் பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரியாது. விரைவிலேயே விக்டரிடம் நல்ல பெயர் எடுக்கிறான் ஆடம்.
இன்னொரு பக்கம் ஆடமுக்கும் விக்டரின் வளர்ப்பு மகன் ஜொனாதனுக்கும் இடையில் நல்ல உறவு ஏற்படுகிறது. கடமையா? அன்பா? ஆடம் என்ன முடிவெடுக்கிறான் என்பதுதான் திரைக்கதை. ஆக்ஷன் காட்சிகள் படத்தின் ஓட்டத்தை சுவாரஸ்யமாக்குகிறது. தீவிரவாதி என்று பட்டம் சூட்டி குற்றவாளியாக்கப்படுபவர்களின் உண்மையான பக்கத்தை திறந்து காட்டுகிறது இந்தப் படம். இதன் இயக்குநர் மோர்கன் எஸ்.டாலிபெர்ட். கிறிஸ்டி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, அப்ளாஸை அள்ளிய மலையாளப் படம், ‘கிறிஸ்டி’. இப்போது ‘சோனி லிவ்’வில் தமிழில் பார்க்கலாம். கேரளாவில் உள்ள பூவார் எனும் இடத்தில் படத்தின் கதை நிகழ்கிறது. தன்னுடைய அத்தை வீட்டில் தங்கி பிளஸ் டூ படித்து வருகிறான் ராய். அவனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, டான்ஸ் ஆடுவதுதான் அவனுக்குப் பிடித்திருக்கிறது. அத்துடன் பள்ளிக்கும் அவன் ஒழுங்காகச் செல்வதில்லை.
படிப்பதில் ஆர்வம் இல்லையென்றால் ராயை ஊருக்கு வரச் சொல்கிறாள் அவனது அம்மா. அத்தையோ பக்கத்து வீட்டிலிருக்கும் ஆசிரியை கிறிஸ்டியிடம் ராயை டியூசனுக்கு அனுப்புகிறாள்.
கிறிஸ்டி விவாகரத்து ஆனவள். நல்ல படிப்பாளி. வேண்டா வெறுப்புடன் கிறிஸ்டியிடம் டியூசனுக்குச் செல்கிறான் ராய். கிறிஸ்டியைவிட ரொம்பவே இளையவன். நாட்கள் செல்லச் செல்ல ராய்க்கு கிறிஸ்டி மேல் காதல் மலர்கிறது.
இந்நிலையில் மாலத்தீவில் கிறிஸ்டிக்கு வேலை கிடைக்கிறது. ராயின் காதல் என்னவாகிறது என்பதே மீதிக்கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தது இந்தப்படம் என்பதுதான் இதில் ஹைலைட். கிறிஸ்டியாக மாளவிகா மோகனனும், ராயாக மேத்யூ தாமஸும் கலக்கியிருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஆல்வின் ஹென்றி.
புல்ராணி
ஐம்பது வருடங்களுக்கு முன்பு வெளியாகி எட்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஆங்கிலப்படம் ‘மை ஃபேர் லேடி’. இதன் அதிகாரபூர்வ மராத்தி ரீமேக்தான் ‘புல்ராணி’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. மாடல்களுக்குப் பயிற்சி அளித்து, அழகிப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் விக்ரம்.
இவரது நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாடல்கள்தான் ஐந்து வருடங்களாக முக்கிய அழகிப்போட்டியில் முதல் பரிசைத் தட்டுகின்றனர். அதனால் அழகிகளைத் தயார் செய்யும் துறையில் அசைக்க முடியாத ஒரு நபராகத் திகழ்கிறார் விக்ரம். ஒரு நாள் விக்ரம் மது போதையில் இருக்கும்போது அவரது நண்பர், “ உன்னால் பெரிய இடத்துப் பெண்களைத்தான் அழகிகளாகத் தயார் செய்ய முடியும். எங்கே ஒரு பூக்காரியை அழகிப்போட்டியில் ஜெயிக்க வைக்க முடியுமா..?’’ என்று சவால் விடுகிறார்.
விக்ரமும் சவாலை ஏற்றுக்கொள்கிறார். இந்த விஷயம் வைரல் செய்தியாகிறது. விக்ரம் தன் சவாலில் ஜெயித்தாரா என்பதே மீதிக்கதை. பழைய கதையாக இருந்தாலும எந்த இடத்திலும் சலிப்புத் தட்டாமல் சுவாரஸ்யமாகச் செல்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் விஸ்வாஸ் ஜோஷி.
யூ டர்ன்
சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்ட கன்னப்படம், ‘யூ டர்ன்’. இதன் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்தப் படம். ‘ஜீ 5’ல் நேரடியாக வெளியாகியிருக்கிறது.
வாகனங்கள் வேகமாகச் செல்லும் ஒரு நெடுஞ்சாலை. இடையில் யூ டர்ன் எடுக்கக்கூடாது என்பதற்காக சாலையின் நடுவில் வரிசையாக கான்கிரீட் கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
டூ வீலரில் வரும் சிலர் அந்தக் கற்களை நகர்த்திவிட்டு யூ டர்ன் எடுக்கின்றனர். கற்களை இருந்த இடத்தில் வைக்காமல் சாலையிலே அப்படியே விட்டுவிடுவதால் அந்தக் கற்களின் மீது மோதி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சிலர் மரணமடைகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இது குறித்த ஆராய்ச்சியில் இறங்குகிறார் பத்திரிகையாளர் ராதிகா. இப்படி கற்களை நகர்த்தி யூ டர்ன் எடுத்தவர்கள் எல்லோருமே தற்கொலை செய்துகொள்கின்றனர். இதற்கான பின்னணிகளை அமானுஷ்யமாகச் சொல்கிறது திரைக்கதை. சமூகப் பொறுப்புள்ள ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை அமானுஷ்யமாகச் சொன்னதே இப்படத்தின் பெரிய வெற்றி. ஒரிஜினல் கன்னடப் படத்துக்கு நியாயம் செய்திருக்கிறது இந்த இந்தி ரீமேக். பத்திரிகையாளராக கச்சிதமாகப் பொருந்துகிறார் ஆலயா எஃப். படத்தின் இயக்குநர் ஆரிஃப் கான்.
தொகுப்பு: த.சக்திவேல்
|