சிறுகதை-இவள் கண்மணி



குடோனிலிருந்து இன்றைக்கு வெளியே எடுத்த சரக்குகள் போக கையிருப்பை சரிபார்த்து இன்றைய நாளின் கணக்கை முடித்து எடுத்துக்கொண்டு மேனேஜரின் அறைக்குப்போனால் அவரைக் காணோம்.ரிப்போர்ட்டை டேபிள் மீது வைத்து விட்டுப்போனாலும் பொறுப்பில்லாத்தனம் என்று திட்டு விழும்.அவர் வரும் வரை காத்திருந்து கையில் கொடுத்து அதை அவர் சரிபார்த்து கையெழுத்திட்டுக் கொடுத்தபின் பிரதியெடுத்து கோப்பில் சேர்த்துவிட்டே இவளால் வீட்டிற்குப்போக முடியும்.

காத்திருப்பது தவிர வேறு வழியில்லை.நல்லவேளையாக அதிகம் நேரமெடுக்காமல் அவர் வரும் அரவம் கேட்டது. யாருடனோ பேசிக்கொண்டே வருகிறார்.  

கதவுக்குமிழ் திருகப்படும்போதே எழுந்து நின்றாள் கண்மணி.இவளைக்கண்டதும் ‘‘அடடே... நேரமாச்சேம்மா... இன்னமுமா கிளம்பாமல் இருக்க?’’

‘‘... ..’’‘‘ஓஹ் ரிப்போர்ட்டா! வைத்துவிட்டு போவதுதானே. நாளை காலையில் பார்த்துக்கொள்வோம்...’’ என்றார்இது அவரோடு உள்ளே நுழைந்த அந்தப் புதியவனுக்கு முன்னால் காட்டிக்கொள்ளும் பாவனைச்ச லுகை என்பதுதான் அவளுக்குத் தெரியுமே!கூடவே அந்தப் புதியவனுக்கு இவளை அறிமுகம் செய்துவைத்தார்.

‘‘இவள் கண்மணி. எள் என்னும் முன் எண்ணெயாக வேலையை முடித்துக்கொண்டுவந்து நிற்பாள். பயங்கர ஷார்ப். எப்போது எந்த தகவலைக் கேட்டாலும் விரல் நுனியில் வைத்திருப்பாள்... இவர் மகேந்திரன். நம் நிறுவனத்தின் புதிய பர்ச்சேஸ் மேனேஜர். எம்.டிக்கு நெருக்கமாக வேண்டப்பட்டவர்...’’அவன் அழகுற புன்னகைத்து ‘‘ஹலோ...’’ என்றபடி கையை நீட்டினான்.ஒருகண தயக்கத்திற்குப்பின் கண்மணி கைகொடுத்தாள்.இருவரிடமும் ஒரு தலையசைப்பிற்குப்பின் வெளியே வந்துவிட்டாள்.

கதவு முழுவதுமாக மூடிக்கொள்வதற்குமுன் மேனேஜர் அந்த மகேந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தது கண்மணியின் காதில் விழாமலில்லை.‘‘இந்தப் பொண்ணு உள்ள இருப்பான்னு தெரியாது. திடுமென இவள் முகத்தைப் பார்த்து பலமுறை பயந்திருக்கேன். என்றைக்கு எனக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகுதோ!’’
நெருஞ்சி முள் வார்த்தைகள் கண்மணியைக் குத்தாமலில்லை.

மீண்டும் கதவைத்திறந்து உள்ளே போய் ‘‘ஏன் சார் முகத்திற்கு நேரே புகழ்ந்து, முதுகிற்குப்பின் உருவக்கேலி செய்கிறீர்கள்...’’ எனக் கேட்டுவிடவே மனம் துடித்தது.  
கேட்டுமட்டும் என்ன மாறிவிடப்போகிறது!?

இதென்ன இவளுக்கு புதிதா!
பள்ளிக் காலத்திலிருந்து அனுபவிப்பதுதானே!

சிலரது அய்யோ பாவமென்ற பரிதாபப்பார்வைகள்; சிலரது எள்ளி நகைப்பு பார்வைகள், சிலரெல்லாம் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் என்பதுபோல இரண்டடி நகர்ந்து நின்றாலே உள்ளுக்குள் அவ்வளவு தைக்கும்.பூங்கொடி வாகும் வட்ட முகமும் சுடர் மிளிரும் கண்களும் மாநிறமுமான வடிவுப்பெண்தான் கண்மணி. ஆனால், செக்மண்டெல் விட்டிலிகோவினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.முகத்தில் முக்கால்வாசிக்கு நெற்றி, மூக்கு, இதழ்கள், கழுத்துப்புறம், கை விரல்கள், வயிறு, கால்பாதமெல்லாம் அவளுடைய மாநிறத்தோலில் நிறமி இழந்து பாதிக்குப்பாதி வெண் புள்ளித்திட்டுக்களாகப் படர்ந்து அவளைக் கோரமாக்கிக் காட்டு கின்றன. இதொன்றும் அவள் குற்றமில்லையே...

எல்லோரையும் போல்தான் பிறந்தாள் கண்மணி. வீட்டில் தம்பி தங்கையைக் காட்டிலும் கண்மணியின் முகம் கூடுதல் களையானது என்பாள் அம்மா.கண்மணிக்கு பதினோரு வயதிருக்கும்போது ஒருதரம் காய்ச்சலில் விழுந்திருக்கிறாள். இருவாரங்களாகியும் குறையாத வைரல் காய்ச்சல். அந்த சமயம் உட்கொண்ட மருந்து மாத்திரைகளின் சைட் ஃஎபெக்ட்தான் அவளின் தோல்நிற மாற்றம்.

அப்போது தொடங்கி மெல்ல மெல்ல படர்ந்தது. இதற்காக பார்த்துக்கொண்ட வைத்தியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. ஒருகட்டத்தில் அலுத்துப்போய் என்னை இப்படியே விட்டுவிடுங்கள் என்றுவிட்டாள்.இதனால் தூக்கிச்சுமக்கிற அவமானங்களுக்கெல்லாம் பழகிக்கொண்டுதான் நடமாடுகிறாள்.இவளிருக்க... தங்கை யாமினிக்கு  மணம் முடிக்கும்போது அந்த மண்டபத்திலேயே இவள் காதுபட எத்தனை பேச்சுகள்... எத்தனை உச்சுக்கொட்டுகள்...வலிக்கவேயில்லை, பாதிக்கவேயில்லையென்கிற மாதிரி நகர்ந்து போய்க்கொண்டுதான் இருக்கிறாள்.

இதோ இப்போது மேனேஜர் பேச்சைக் கேட்டதும் ஏறியதுபோல் சமயத்தில் சுர்ரென்று ஏறும். பின்பு கையாலாகாத்தனத்துடன் தணியும். அவ்வளவேதான்.இத்தனைக்கும் சோர்ந்துவிடாமல் இந்த இருப்பதேழு வயதிற்கும் அவளை நிமிர்த்தி நிற்க வைப்பது அவள் படித்த படிப்பும் சுயசம்பாத்தியமும்தான்.அன்றைக்குப் பிறகு அவளே எதிர்பார்த்திடாத வகையில் நாளுக்கு நாள் கண்மணியின் வாழ்வில் வண்ணங்களேறின.

அந்த வண்ணத்தீட்டலைச் செய்தவன் மகேந்திரனே. அவளுடைய வேலையில் அவனை தினமும் சந்தித்துப் பேசியே ஆகவேண்டிருந்தது. அப்படி பேசும்போதெல்லாம் அவனின் பார்வையில், குரலில் எதோ இருந்து அவளைத்தாக்கிக்கொண்டேயிருந்தது.லஞ்ச் டைமிலும் கையிலிருந்த வேலையை முடித்துவிட அமர்ந்திருந்தவளுக்கு செல்பேசியில் மெசேஜ் ஒளிர்ந்தது புதிய எண்ணிலிருந்து.   ‘‘இது என் கண்மணிக்கு லஞ்ச் டைம்... அவளைச் சாப்பிடப்போகச்சொல்லு ப்ளீஸ்...’’ திரும்பினால் கண்ணாடிச்சுவருக்குப் பின்னே மேஜை மேல் சாய்ந்து  மகேந்திரன் அவளைத்தான் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

இன்னதென்று விளங்கிக்கொள்ள முடியாதவொரு பரவச உணர்வு அவளை ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தது.இதுபோன்ற உணர்வுகளெல்லாம் அவளுக்கு வரவே வாய்ப்பில்லையென்று நினைத்திருந்தாளே!அலுவலகத்தில் அவள் மட்டும்தான் பெண் என்று இல்லை. அழகான எந்த பெண்ணையும் அவன் கண்ணெடுத்தும் பார்க்காமல் தன்னை மட்டுமே பார்க்கிறான் என்பதன் சிலிர்ப்பு, மகிழூற்று... இது போதும் வாழ்நாள் முழுமைக்கும் என்றிருந்தது அவளுக்கு.அவனோ, போதாது... திகட்டுதலும் தீருதலும் இல்லாத காதலை இன்னுமின்னும் தருகிறேன் உனக்கு... என்று செயலில் காட்டினான்.குடும்பத்துடன் கண்மணியின் வீட்டிற்கு வந்து பெண் கேட்டான்.  

அழகன். இளைஞன். பணச்செழிப்பும் செறிவுமான குடும்பத்து பிள்ளைக்கு மணம் முடித்துத்தர கண்மணியின் பெற்றோருக்கு கசக்கவா செய்யும்!

இதோ மணக்கோலத்தில் அவனருகில் நிற்கின்றாள் கண்மணி.பட்டுடுத்தி மேடையேறி அக்னியின் முன்னமர்ந்து கழுத்தில் அவன் கட்டிவிட்ட மஞ்சள் கயிற்றில் பொன் பூத்த தாலியோடு..இது கனவா அல்லது நிஜமேதானா..! என்றிருந்தது  ‘‘கண்மணிக்கு கல்யாணம் நடக்கும்னெல்லாம் நினைக்கவேயில்லை...’’‘‘இவளுக்கு அடிச்ச யோகத்தைப்பாரேன்...’’ என்றெல்லாம் பேசியது இவளின் உறவுக்கூட்டம்.‘‘நீங்க க்ரேட் ப்ரோ...’’ என்றும்; ‘‘உன் மனசு யாருக்கும் வராதுடா...’’ என்றும் பேசியது அவனது கூட்டம்.

புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துத் தள்ளினார்கள். ‘‘வாழ்நாளின் ஒருமுறை வரும் வைபவம் இது. எனக்காக ப்ளீஸ்...’’ என அவன் கேட்கவும் அவளுக்கு பிடிக்காதபோதும் போட்டோ ஷூட்களை இன்முகத்தோடு சகித்தாள்.மகேந்திரன் அவளை ஹனிமூனுக்கு சிங்கப்பூர் அழைத்துப்போனான்.

திரும்பிவந்த பின்பும் நித்தமும் அவளை வெளியே சுற்ற அழைத்துப்போனான். போதுமென்றாலும் வேண்டாமென்றாலும் கேட்காமல் எதைஎதையோ அவளுக்காக வாங்கி வாங்கிக் குவித்தான்.திகட்டத்திகட்ட அன்பு செய்தான். அலுவலகம் போனாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு காலும்  கொஞ்சிக்கொஞ்சி  நூறு மெசேஜ்களும்; வீட்டிலிருந்தாலும் அவளைவிட்டு நீங்காமல் இருவரும் ஓருயிரென நினைக்கச் செய்தான்.

ஒவ்வொரு நாளும் அவள் மேகத்திரளாகி வானத்தில் மிதந்தலைந்து கொண்டிருந்தாள்.அவளின் கன்னத்தில் முத்தமிடுவது போலவும் கட்டியணைத்தும் புகைப்படங்களை எடுத்து அவன் பப்ளிக் போஸ்ட் போடுவது அவளுக்கு பிடிக்கத்தான் இல்லை.‘‘என்ன மஹேன் இது! இதெல்லாம் போய் சோசியல் மீடியாவில் பதிவேற்றத்தான் வேண்டுமா!?’’ என்று சொல்லிப்பார்த்தாள்ஆனால், அவனுக்கு பிடிக்கிறதே... ஆயிரக்கணக்கில் லைக்குகள் அள்ளுவதையும் எல்லோரும் புகழ்ந்து தள்ளுவதையும் அவன் விரும்புகிறான்.
‘‘ஸோ வாட்! நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேனென்பது உலகத்திற்கு தெரியட்டும்...’’ என்றான்.  

எவ்வளவு உயரப்பறந்தாலும் என்றாவதொருநாள் தரைதட்டத்தானே செய்யும். உறங்கும் நேரம் தவிர ஓயாமல் வேலை செய்தே பழகியவள் கண்மணி.

புகுந்த வீட்டில் எதோ கட்டிப்போட்டது போல் உணரத்தொடங்கினாள்.சமைக்கலாமென்று சமையற்கட்டிற்குப்போனாலோ வீட்டை சுத்தம் செய்யலாமென்று தொடங்கினாலோ மாமியார் விடவில்லை. ‘‘அதற்கெல்லாம்தான் சம்பளம் கொடுத்து ஆள்வைத்திருக்கிறோமே. நீ போய் ரெஸ்ட் எடு...’’ என்றாள்.

‘‘அம்மா வீட்டிற்கு இரண்டுநாள் போய்வருகிறேன்...’’ என்றதற்கு, ‘‘இந்த வீட்டுப்பெண்களுக்கு ஆண் துணையில்லாமல் எங்கும் போவதும் தங்குவதும்  வழக்கமில்லை. உன் பெற்றோரை இங்கே வரவைத்து பார்த்துக்கொள்...’’ என்றாள்.மொட்டைமாடியில் நின்றபோது பக்கத்து வீட்டுப்பெண்ணிடம் பேசினால் ‘‘அக்கம் பக்கமெல்லாம் பேச்சு வச்சுக்காதே... குடியைக்கெடுக்க ஒண்ணுக்கு இரண்டா சொல்லிக்கொடுக்கிறவளுக...’’ என்று அதற்கும் தடை உத்தரவு செய்தாள்.

பார்க்க வந்த பெற்றோரோ ஒருபடி மேலே போய் ‘‘இப்படி தங்கத்தட்டில் வைத்து தாங்குகிற புகுந்துவீடு யாருக்கு கிடைக்கும். கொடுத்துவைத்தவள்...’’ என்று விட்டுப் போனார்கள்.
தாங்குகிறார்கள்தான், தங்கக்கூண்டுக்குள் சிறைவைத்து.தங்கை யாமினிக்கு, குழந்தை பிறந்தபோது பூக்குவியல் போலிருந்த பாப்பாவைத் தொட்டுத் தூக்கி அள்ளிக்கொள்ள வேண்டுமென்று ஆசையிருந்த போதும் தன் வெண்புள்ளி படர்வு கரங்களால் தொட்டால் தங்கை வீட்டு மனிதர்கள் என்ன நினைப்பார்களோ என ஆசையை அடக்கிக்கொண்டவள் கண்மணி.

இப்போது அவளே அவளுக்கென்று குழந்தையை வயிற்றில் சுமந்து ஈன்று ஆசை தீர அள்ளிவைத்து கொஞ்ச முடியுமென்கிற நினைப்பில் இருக்கையில் சில வருடங்களுக்கு குழந்தையென்கிற பேச்சுக்கே இடமில்லையென்று மண் அள்ளிப்போட்டான் மகேந்திரன்.‘‘சரி அப்போ குழந்தை பிறக்கிறவரை சும்மா இருக்காமல் முன்னைப்போல நான் வேலைக்கு போகிறேனே...’’ என்றபொழுதுதான் முதன்முதலாக அவனின் கோபமுகத்தைப் பார்த்தாள் கண்மணி.  ‘‘ஒழுக்கமாய் நல்ல குடும்பத்துப்பெண்ணாய் எனக்கு பொண்டாட்டியாக மட்டும் இரு... அதுபோதும்...’’
‘‘என்ன கேவலமான பேச்சு இது! வேலைபார்க்கிற பெண்களெல்லாம் ஒழுக்கமான நல்ல குடும்பப்பெண்கள் இல்லையா!?’’

‘‘இருக்க வாய்ப்பில்லை. அப்படி ஊர் மேய முடியாதவள் நீ என்பதால்தான் உன்னைக் கட்டினேன்... புரிந்ததா?’’ வார்த்தைகளால் நெருப்பள்ளிக் கொட்டினான்.
‘‘இன்னொன்றும் கேட்டுக்கொள். உன் போன்றவளுக்கு குழந்தை பிறந்தால் உன் பாதிப்பு குழந்தைக்கும் இருக்குமாம். உன்னைப்போல் எனக்கு குழந்தை தேவையில்லை. இனி அந்த பேச்சு கூடாது. புரிந்ததா!’’மொத்தமாகவே அவளை நெருப்பில் பிடித்துத் தள்ளிவிட்டான்.

அடுத்த சில மாதங்கள் கண்மணி அந்த வீட்டில் ஒரு கீ கொடுக்கப்பட்ட பொம்மைபோல் அவன் விரும்பியபடி அவனுக்கு பொண்டாட்டியாக மட்டும் உலவிக் கொண்டிருந்தாள்.
அவனும் எப்பேர்ப்பட்ட அதிசிறந்த  கணவன் தானென்று அவளுக்கும் ஊருக்கும் உலகத்திற்கும் படம் போட்டு காட்டிக்கொண்டேதான் இருந்தான்.‘‘என் செல்லக்கண்மணி லஞ்ச் சாப்பிட்டாச்சா!’’ என்று அவன் ஆஃபீஸிலிருந்து அனுப்பிய குறுஞ்செய்திக்கு ‘‘வயிறு நிறைஞ்சிருக்கு. கருவுற்றிருக்கிறேன்’’ என்று பதிலனுப்பினாள்.
எதிர்பார்த்தாற்போலவே அடுத்த முக்கால் மணி நேரத்தில் அவன் அவள் முன்பு வந்து நின்றான்.

‘‘ஏய் என்னதிது விளையாட்றியா! மாத்திரை போடும்போது எப்படி!?’’
‘‘மாத்திரையை மறந்துவிட்டேன்...’’ என்றாள் அசட்டையாக‘‘திமிராடி உனக்கு...’’ என்று கையோங்கினவன் வாவென்று அவளைத் தரதரவென்று பிடித்து இழுத்து காருக்குள் தள்ளாதது மட்டும்தான் குறை.‘‘அம்மா வாங்க... கூட்டிட்டுப்போய் கையோடு கலைத்துவிடுவோம்...’’ வழியில் ‘‘எவ்வளவு பணம் செலவானாலும் சரி.

எதாவது நிரந்தர கருத்தடைக்கு வழியிருக்கான்னு டாக்டர்கிட்ட கேட்றணும்...’’ என்றாள் மாமியார் பெண் ஜென்மம்.கண்மணி வெளியே வேடிக்கை பார்த்தபடி கைகளைக் கட்டியவாறு அமர்ந்திருந்தாள்.மருத்துவமனையில் ஆட்கள் நிறைந்திருந்த காத்திருப்போர் அறையை எட்டியதும் கண்மணி நின்றாள்.

‘‘உயிரும் உருவும் கொடுக்கப்போகிற நான்தான் பெத்துக்கணுமா வேண்டாமாங்கிறத முடிவெடுக்கணும்...’’ என்றாள் தீர்க்கமான பார்வையுடன்.அவன்தான் நாலு பேர் முன்னாடி சிறந்த கணவன் ஆச்சே... அடுத்தவர்கள் முன் கோபத்தைக்காட்ட முடியாமல் தணிந்த குரலில் பேசினான்.‘‘இங்க வச்சு பிரச்னை பண்ணாதே... உனக்கெல்லாம் எதை முடிவெடுக்கவும் உரிமையில்லை...’’‘‘இந்த குழந்தை என் ஆசைக்கு மட்டுமில்லை, ஆயுதமும். மத்தவங்களாவது என் உருமாற்றத்தைவைத்துதான் அவமானத்திற்குள்ளாக்கினாங்க.

ஆனா, நீ என்னோட சுயமரியாதை, நிமிர்வு, தைரியம், தன்னம்பிக்கை, தன்மானம் அத்தனையையும் ஒடுக்கி ஒட்டுமொத்தமா நசுக்கி அவமதிச்சிருக்க... உன்னை சும்மா விடுவேன்னா நினைக்கிற!’’‘‘பார்த்துக்கடா... நான் சொன்னத கேட்டாத்தானே... நாயைக் குளிப்பாட்டி நடுவீட்ல வைத்தாலும்...’’ மாமியாரை இடைவெட்டினாள் கண்மணி.

‘‘ஏன், நாய்க்கு உயிரும் உணர்ச்சியும் மான ரோஷமும் இருக்காதுன்னு யார் சொன்னது! எங்கே ஒரு நாயைக் கொணர்ந்து அதட்டி அடக்குமுறை செஞ்சுதான் பாருங்களேன்...’’
‘‘ஏய் என்னதான் சொல்ற! உன்னால அப்படி என்ன செஞ்சு கிழிச்சிடமுடியும்ன்னு சிலுப்பிக்கிட்டு நிக்கிற. ஒழுங்கா டாக்டர பார்க்கவா...’’‘‘முடியாதுடா. உன் பெருமைபீற்றலுக்கு காட்டிக்கிற ஷோக்கேஸ் பொம்மையா உன் வீட்ல இருந்து இனியும் உன்கூட குடும்பம் நடத்த நான் தயாரில்லை.

ஆனால், நான் சட்டப்படி உன் மனைவி. இது சட்டப்படி உன் குழந்தைங்கிறத ஜென்மத்துக்கும் உன்னால மாத்த முடியாது. என்னால என்ன செய்ய முடியும்ங்கிறத நான் செஞ்சு காட்டும் போது பார்த்து தெரிஞ்சுக்க... இனி மத்ததை சட்டப்படி பேசிக்கலாம்...’’அதற்கு மேல் அங்கு நில்லாமல், அவர்கள் நிற்கிறார்களா நகர்ந்தார்களா என்பதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், திடத்தோடும் நிமிர்வோடும்  போய்க்கொண்டே இருந்தாள் கண்மணி.  
 
புவனம்