இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமான ஏரிகள் இருக்கின்றன...
அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது முதல் முறையாக எடுக்கப்பட்ட சேட்டிலைட் படம்
வீட்டுக்குத் தெரியாமல் இனி ‘எதையும்’ மறைக்க முடியாது போல! ஆம். மத்திய அரசின் சேட்டிலைட் ஒன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமான ஏரிகள் இருக்கின்றன என படம் பிடித்துக் காட்டியுள்ளது. மத்திய அரசின் இந்த சேட்டிலைட்டின் பெயர் புவன். சுதந்திரமடைந்தபிறகு முதன்முறையாக எடுக்கப்பட்டிருக்கும் தேசிய அளவிலான நீர்நிலைகள் (waterbodies) பற்றிய இந்த புவன் சேட்டிலைட் கணக்கெடுப்பானது (சென்சஸ்) இந்தியாவில் இருக்கும் ஏரி, குளம், கண்மாய், நீர்த்தேக்கம் மற்றும் அணைகள் பற்றியது.
 2018 முதல் 2019 வரையான இந்த நிர்நிலைகளைப் படம்பிடித்திருக்கும் இந்த சேட்டிலைட், அந்த நீர்நிலைகளின் பரப்பளவு, கதி, நீர்த்தேக்க அளவு, பயன்பாடு ஆகியவை மட்டுமல்ல... மிக முக்கியமானதாக ஆக்கிரமிப்பு பற்றிய புள்ளிவிவரங்களையும் புட்டுப்புட்டு வைக்கிறது. இந்த கணக்கெடுப்பின் அறிக்கை நீர் மேலாண்மை குறித்த ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இது தொடர்பான தமிழக ஆர்வலர்களைத் தொடர்புகொண்டு இந்த கணக்கெடுப்பு சுட்டிக்காட்டும் சில விஷயங்கள் பற்றி கருத்து கேட்டோம்.

‘‘மத்திய அரசின் சேட்டிலைட் நிறுவனமான இஸ்ரோவும், தேசிய ரிமோட் சென்ஸிங் சென்டரும் இணைந்து மாநில அரசுகளின் துணையோடு இந்த கணக்கெடுப்பை செய்திருக்கின்றன.
இந்தியாவில் நீர்நிலைகள் தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் முதன்முறையான சர்வே என்பதால் இந்த கணக்கெடுப்பு மிக முக்கியமான ஒன்றாக பலராலும் பார்க்கப்படுகிறது. இனிமேல் இதை வைத்துத்தான் நீர்நிலைகள் தொடர்பான கருத்துக்களை பேசமுடியும் என்ற நிலையை இந்தக் கணக்கெடுப்பு உருவாக்கியிருக்கிறது...’’ என்று சொல்லும் நீரியல் மேலாண்மை வல்லுநரான சக்திவேல், நீர்நிலைகள் பற்றிய தமிழக நிலை பற்றி விளக்கினார்.
‘‘சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தமிழகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் பல பெரிய ஏரிகள், அதாவது சுமார் 12 ஆயிரம் ஏரிகள் அரசின் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. மற்றவை ஊராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளின் கீழ் வரும். தமிழகத்தில் இருக்கும் பல வகையான நீர்நிலைகளுக்கு பல பெயர்கள் உண்டு. உதாரணமாக ஏரி, குளம், குட்டை, கண்மாய், ஏந்தல், ஊரணி, மற்றும் தாங்கல்.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஏரி அதிகமாக இருக்க தென்மாவட்டங்களில் குளம், குட்டை, கண்மாய், மற்றும் வேறு நீர்நிலைகள் இருக்கும். இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஏரிகள், அதாவது 13629 ஏரிகள் தமிழகத்தில் இருப்பதற்கான காரணம் பெரிய பரப்பளவுதான்...’’ என்று சொல்லும் சக்திவேல், இவ்வளவு ஏரிகள் இருக்கும் தமிழ்நாடுதான் ஆக்கிரமிப்பில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது என்கிறார். ‘‘ஆக்கிரமிப்புக்கான முக்கிய காரணம் நகரமயமாக்கல். இந்தியாவில் நகரமயமாக்கலில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருப்பது தமிழகம்தான். நகரமயமாக்கம் நல்லதுதான் என்றாலும் அதை முறைப்படுத்துவதுதான் நீர்நிலைகளைக் காப்பாற்றும்.
மத்திய அரசைப் போலவே தமிழக அரசும் நீர்நிலைகளைக் காப்பாற்ற தமிழ்நாடு வாட்டர் ரிசோர்சஸ் இன்புட் டெவலப்மென்ட் எனும் ஓர் அமைப்பை உருவாக்கி நீர்நிலைகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பை செய்ய முயற்சித்து வருகிறது. இதுவும் நடந்தால் தமிழக அரசுக்கும் நீர்நிலைகள் பற்றிய ஒரு மதிப்பீடு வரும். உதாரணமாக சென்னை பள்ளிக்கரணையிலுள்ள பெரும் பகுதியை இழந்துவிட்டோம். வேளச்சேரி எனும் 250 ஏக்கர் ஏரியை வெறும் 50 ஏக்கர் ஏரியாக சுருக்கிவிட்டோம்.
காலநிலை மாற்றத்தால் குறைந்த நாட்களில் பெரும் மழையை அண்மைக் காலங்களில் பார்த்து வருகிறோம். இதை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் நீர்நிலைகளைப் பாதுகாப்பதுதான் ஒரே வழி. நீர்நிலைகளைக் காப்பாற்றினால்தான் விவசாயம், குடிநீர் பிரச்சனை தீரும். அதேபோல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீர்கேடுகளைத் தடுக்கமுடியும்...’’ என்று அழுத்தமாக சக்திவேல் முடிக்க, தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் முன்னாள் செயற்பொறியாளரான மீனாட்சிசுந்தரம் கூடுதலாக பல தகவல்களை விளக்கினார்.
‘‘இரண்டு வால்யூம்களாக சுமார் 500 பக்கம் கொண்ட ஆவணம் இது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 75 ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நீர்நிலைகள் பற்றி ஒரு கணக்கெடுப்பு வந்திருப்பது மிக முக்கியமானது, தேவையானது. இந்த ஆவணம்தான் இனிமேல் நீர் மேலாண்மை குறித்து சிந்திப்பவர்கள் கவனம் செலுத்தி பார்க்கக்கூடிய ஆவணமாக இருக்கும். அதுமட்டுமல்ல, நமது நீர்நிலைகளைப் பாதுகாக்க, புனரமைக்க, கட்டமைப்புகளை உறுதிப்படுத்த தேவையான புள்ளிவிவரங்களை கொடுக்கக்கூடிய ஆவணமாகவும் இருக்கும். 19ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் கிரேட் ட்ரிக்னோமெட்ரி சர்வே (முக்கோண சர்வே) என்ற ஜி.டி.எஸ் எனும் நீர்நிலைகள் பற்றிய ஒரு சர்வே வந்தது. இந்த ஜி.டி.எஸ் சர்வேயை இந்த புவன் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு நீர்நிலைகளின் இன்றைய நிலைகளை சரிபார்ப்பது அவசியமானது.
காரணம், புவன் சேட்டிலைட் சென்சஸ், cab காருக்கு வழிகாட்டுவதுபோல முட்டுச்சந்தில் நம்மைக் கூட்டிச்செல்லலாம். புவன் கணக்கெடுப்பு தேவையானது என்றாலும் ஜி.எஸ்.டி எனும் மேனுவல் கணக்கெடுப்புடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது அவசியமானது. உதாரணமாக, ஒரு நீர்நிலையில் பத்து குடிசை இருந்தாலும் சேட்டிலைட் அவை எல்லாமே ஆக்கிரமிப்பு என்று சொல்லி விடும்.
ஆகவே, இரண்டு சர்வேக்களையும் வைத்துக்கொண்டு துல்லியமாகக் கணக்கிட வேண்டும்...’’ என்று சொல்லும் மீனாட்சிசுந்தரம், தமிழக நீர் நிலைகள் பற்றியும் விளக்கினார். ‘‘தமிழகம் நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக பழங்காலத்தில் திகழ்ந்தது. சேர, சோழ, பல்லவ, பாண்டியர்கள் காலத்திலேயே குளம் வெட்டினான்... கண்மாய் வெட்டினான்... என்று சரித்திரம் சொல்கிறது. ஆகவே தமிழகத்துக்கு நீர்மேலாண்மையில் பல வருட அனுபவம் உள்ளது.
எடுத்துக்காட்டாக இன்றும் பயன்பாட்டில் இருக்கும் வீராணம் ஏரி என்று சொல்லப்படும் வீரநாராயணன் ஏரி, சோழர் காலத்தில் கட்டப்பட்டதுதான். செம்பரம்பாக்கம் ஏரி பல்லவர் கட்டியது. ரெட் ஹில்ஸ் ஏரி 300 வருட பழமை உடையது. பூண்டி ஏரி 1942களில் சத்தியமூர்த்தி எனும் காங்கிரஸ்காரர் கட்டியது. சத்தியமூர்த்தி சென்னை மேயராக இருந்தவர். நம் உடலை தினமும் சுத்தப்படுத்துவதுபோல நீர்நிலைகளையும் வருடத்துக்கு ஒருமுறையாவது பராமரிக்கவேண்டும். 30 வருடங்களுக்குப் பிறகு மராமத்து செய்கிறேன் என்று சொல்வது எல்லாம் நீரைக் காப்பாற்ற போதுமானதல்ல.
அந்தக் காலத்தில் மராமத்துப் பணியை குடிமராமத்து எனும் பெயரில் உள்ளூர்வாசிகளே பார்த்தார்கள். இன்று மக்கள் இந்தப் பணிக்கும் அரசை நாடி நிற்கவேண்டிய தேவை வந்துவிட்டது. இது மறுபடியும் மக்கள் கையில்போனால்தான் நீர்நிலைகளைக் காப்பாற்றமுடியும். தமிழக மன்னர்கள் உருவாக்கிய நீர்நிலைகள்தான் தமிழகத்தில் அதிகம் இருந்தன. நாம் புதிதாக உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை... மன்னர்கள் உருவாக்கியதையாவது காப்பாற்ற முன்வரவேண்டும். நீர் இன்றி அமையாது உலகு என்று திருவள்ளுவர் சொன்ன வார்த்தையை மனதில் கொள்ள வேண்டும்...’’ என்கிறார் மீனாட்சி சுந்தரம்.
டி.ரஞ்சித்
|