பீகார் நிலக்கரி சுரங்கமும் அழிக்கப்பட்ட ஒரு கிராமமும்!
குண்டுச் சட்டியில் குதிரை மட்டுமல்ல... யானையைக்கூட ஓட்டிவிடுவார்கள் நம் தமிழ் எழுத்தாளர்கள். ஆனால், எங்கேயோ இருக்கும் பீகார் கிராமத்துக்கு வேலைக்குப் போன சுரேஷ்பாபு அந்த மக்கள் பட்ட அல்லல்களை பினாத்தல் சுரேஷ் என்ற புனைபெயரில் ‘கரும்புனல்’ எனும் ஒரு நாவலாக்கியதன் மூலம் இன்று தேடப்படும் ஒரு இலக்கியவாதியாக மிளிர்கிறார்.
‘கே.ஜி.எஃப்’, ‘தசரா’ என்று திரைப்படங்கள் பல இந்திய தொல்குடிகளைப் பேசியதன் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருக்கையில் பீகாரின் ஒரு பழங்குடிக் கிராமத்தை அதிகார வர்க்கம் எப்படி சுரண்டியது என்பது குறித்து பேசியதன் மூலம் ‘கரும்புனல்’ நாவல் தமிழ் வாசகர்களிடையே சில ஆண்டுகளாக வாசிக்கப்படும் நாவலாக மாறியிருக்கிறது. இந்த நாவல் என்ன சொல்கிறது..?

பீகாரின் ஒரு பிரதேசத்தில் சாஹஸ் எனும் ஒரு நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது. இந்த சாஹஸ் சுரங்கத்துக்கு அருகாமையில் உச்சிடி எனும் ஒரு சிறு மலைக்கிராமம். அங்கே வசிப்பது பெரும்பாலும் மலைவாசிகள் அல்லது பழங்குடிகள். அந்த உச்சிடி கிராமத்தின் நிலத்துக்கு அடியிலும் நிலக்கரி இருக்கிறது என்று உறுதியாகிறது.
இந்தியாவில் நிலக்கரிகளை தோண்டி எடுக்கும் உரிமை கோல் இந்தியா எனும் அரசு சார்பான நிறுவனத்திடம் இருக்கிறது. உச்சிடியிலும் கோல் இந்தியா ஒரு கண் வைக்கிறது. இதை ஒட்டி ஒரு வக்கீலையும் உச்சிடிக்கு அனுப்பி வைக்கிறது. மக்கள் வசிக்கும் உச்சிடியை எப்படி அரசு கையகப்படுத்துவது எனும் திட்டத்துக்காக சந்திரசேகர் எனும் வக்கீல் அந்தக் கிராமத்துக்குச் செல்கிறார்.  பழங்குடிகள் சிவனே என விவசாயம் பார்த்து அமைதியுடன் வாழ்வதை வக்கீல் பார்க்கிறார். இதற்கிடையில் வக்கீலுக்கும் அங்கிருக்கும் ஒரு பழங்குடிப் பெண்ணுக்கும் காதல் அரும்பு கிறது. வக்கீலுக்குப் பின்னால் ஒரு அதிகாரப் படையே உச்சிடி கிராமத்தை முற்றுகையிட்டு மக்களை அப்புறப்படுத்தப் பார்க்கிறது. வக்கீல் காதலிக்கும் அந்தப் பழங்குடிப் பெண்ணின் முறை மாமன் பழங்குடிகளைத் திரட்டி அதிகார வர்க்கத்துக்கு எதிராகப் போராடுகிறார். போராட்டத்தைப் பார்க்கும் அதிகார வர்க்கம், கிராமத்தினருக்கு மாற்று நிலம் வழங்குவதாகச் சொல்லி அவர்களை அப்புறப்படுத்தி நிலமும் வழங்குகிறது.
ஆனால், நிலக்கரி எடுப்பதற்காக உச்சிடியை ஒட்டி போகும் ஒரு நதியை அதிகாரிகள் செயற்கையாகத் திருப்பி விடுகிறார்கள். கடைசியில் , திருப்பி விடப்பட்ட இந்த நதி புதிதாகக் குடியேறிய பழங்குடியினரின் கிராமத்தில் புகுந்து அந்த கிராமத்தையே மூழ்கடிக்கிறது. 2002 முதல் அதே சுரங்கம் தோண்டும் இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கான துபாய் கிளையில் பணிபுரிந்து வரும் சுரேஷ்பாபுவை தொலைபேசியில் பிடித்துப் பேசினோம்.
‘‘எனக்குச் சொந்த ஊர் வேலூர். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்து முடித்தேன். 1989ல் சென்னையில் இயங்கிய ஒரு கம்பெனி மூலம் பீகாருக்கு வேலைக்குச் சென்றேன். அப்போது நான் பணிபுரிந்து வந்த நிறுவனம், கேட்டர்பில்லர் எனும் சுரங்கம் தோண்டும் கருவிகளை விநியோகித்து வந்தது. என் வேலை இந்த இயந்திரங்களில் ஏதாவது கோளாறு வந்தால் அதை சர்வீஸ் செய்வது. 1989 முதல் 1996 வரை பீகாரில் அந்த வேலையைத்தான் பார்த்தேன்...’’ என்று சொல்லும் சுரேஷ்குமார், பீகாரின் சுரங்கத் தொழில், முக்கியமாக நாவலில் வரும் சாஹஸ் சுரங்கம், உச்சிடி கிராமம் பற்றியும் பேசினார்.
‘‘பீகாரைச் சுற்றி சுமார் 40 முதல் 50 நிலக்கரிச் சுரங்கமாவது இருக்கும். இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கம் அதிகம் இருக்கும் மாநிலங்களாக மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஆந்திரா இருக்கின்றன. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பீகார்தான்.நான் வேலை செய்தது சாஹஸ் சுரங்கத்தில். சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை பழுதுபார்ப்பது என்பது நிஜத்தில் சுரங்கத்தில் வேலை செய்வதுபோலவே இருக்கும்.
இந்த சாஹஸ் சுரங்கத்தை ஒட்டிய ஒரு சிறு கிராமம்தான் உச்சிடி. சுமார் 30 பழங்குடிக் குடும்பங்கள் அங்கு வசித்தன...’’ என்று சொல்லும் சுரேஷ்குமார், உச்சிடி மக்களின் வாழ்க்கை முறையையும் விவரித்தார். ‘‘உச்சிடி கிராம மக்கள் சிறு அளவில் விவசாயம் பார்த்து வாழ்ந்த மக்கள். இதில் கிடைக்கும் விளைச்சல்களைக் கொண்டுதான் உயிர் வாழ்ந்து வந்தார்கள். சச்சரவு இல்லாத அமைதியான வாழ்க்கை.
இந்த நேரத்தில்தான் உச்சிடியிலும் நிலக்கரி இருப்பதாக ஒரு செய்தி காட்டுத்தீபோல பரவியது. அந்த மக்களை நாசுக்காக அப்புறப்படுத்துவதற்காக கோல் இந்தியா லிமிடெட் ஒரு வக்கீலை அனுப்பி வைத்தது. ஆனால், ஊருக்கு வந்த வக்கீல் கிராமத்தினரின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு மனம் மாறினார். வக்கீலின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத அதிகார வர்க்கம், வக்கீலையும் மீறி கிராமத்தினரை அப்புறப்படுத்தப் பார்த்தது...’’ என்று சொல்லும் சுரேஷ்குமார், நாவலில் சொல்லப்படாத உச்சிடி பற்றிய விவரங்களைப் பகிர்ந்தார்.
‘‘உண்மையில் ஒரு கிராமத்தினரை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் மூன்று விஷயங்களைச் சொல்லி அவர்களை அப்புறப்படுத்தப் பார்ப்பார்கள். ஒன்று பணம். இரண்டாவது மாற்று நிலம். மூன்றாவதாக குடும்பத்தில் ஒருவருக்கு வேலை. இந்த மூன்றில் இரண்டையாவது செய்யவேண்டும்.
அதுமாதிரி இந்த மக்களுக்கு மாற்று நிலம் கொடுத்தார்கள். ஆனால், என்ன துரதிர்ஷ்டம் என்றால் அந்த நிலம் வெறும் கட்டாந்தரையாக இருந்தது. சிறிய அளவிலாவது கஷ்டப்பட்டு வாழ்ந்த இந்த உச்சிடி கிராமத்தினருக்கு கடைசியில் கிடைத்தது ஒன்றுக்கும் உதவாத பாழ்பட்ட நிலம்தான்...’’ என்று சொல்லும் சுரேஷ்குமார், இப்பொழுது துபாயில் வசித்தபடி அறிவியல் புனைகதை ஒன்றையும், கல்வி தொடர்பான நாவல் ஒன்றையும் எழுதி வருகிறார்.
டி.ரஞ்சித்
|