ஜூனியர் சோழாஸ்!



‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் விமர்சனங்கள், நடிப்பு என எல்லாவற்றையும் பேசி முடித்தாகிவிட்ட நிலையில் இப்போது இணைய இதயங்களின் பார்வை ஜூனியர் சோழர்கள் மேல் பதிந்துள்ளது. யார் இந்த குட்டிக் குட்டி குமர, குமாரிகள் என தேடிக்கொண்டிருக்க, அதே தேடலில் நாமும் இறங்கினோம்.

நந்தினி சாரா அர்ஜுன்

முதல் பாகத்திலேயே சிறுவயது நந்தினி பாத்திரத்தில் குட்டி தேவதையாக காட்சி தந்தார் சாரா அர்ஜுன். முதல் பாகத்தில் குட்டி குட்டிக் காட்சிகளாகக் கடந்து போனபோதும்கூட பலரின் கண்களில் இருந்து சாரா தப்பவில்லை. அட இது நம்ம ’தெய்வத்திருமகள்’ நிலா கிருஷ்ணாவாச்சே என இணையத்திலும் பதிவிட்டனர்.
 ‘பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸுக்கு முன் ‘சின்னஞ்சிறு நிலவே...’ பாடல் கிளிப்ஸ் வெளியானதும் சாராவுக்கு 2கே கிட்ஸ் ஹார்ட்டின் போடத் தொடங்கிவிட்டார்கள். பேபி சாரா அர்ஜுனை தமிழுக்குக் கொண்டு வந்தவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தெய்வத்திருமகள்’ படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நாயகன் விக்ரமுக்கு மகளாகவும், அவர் இயக்கிய அடுத்த படமான ‘சைவம்’ படத்தில் ஆசையாக வளர்த்த சேவலைக் காப்பாற்றப் போராடும் தமிழ்ச்செல்வியாகவும் நம்மைக் கவர்ந்திருப்பார்.

ஆனால், பொண்ணு ஏற்கனவே இந்தியில் அறிமுகமாகி அங்கே 10க்கும் மேலான படங்களில் படு பிஸி. இந்தி நடிகர் ராஜ் அர்ஜுனின் மகள்தான் இவர். தமிழில் ‘தாண்டவம்’ படத்தில் விக்ரமா அது என்று குழப்பும் கேரக்டரான கென்னி தாமஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ராஜ் அர்ஜுன். தவிர ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘த வாட்ச்மேன்’ படத்தில் வீட்டுக்குள் நுழையும் தீவிரவாத கும்பலின் தலைவனாகவும் வந்திருப்பார்.

ஆக, அப்பா - மகள் இருவருமே சினிமாவில் பக்கா பிஸியான நபர்கள். சாராவின் அம்மா சான்யா அர்ஜுன் நடன ஆசிரியை. சாராவுக்கு ஒரு குட்டித் தம்பி இருக்கிறான். பெயர் சுஹான் அர்ஜுன்.  ‘404’ இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சாரா, தொடர்ந்து சல்மான்கானுடன் ‘ஜெய் ஹோ’ படத்தில் பள்ளி மாணவி, ‘ஜாஸ்பா’ படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு மகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சாராவுக்கு இப்போது வயது 16. மும்பையில் பிறந்தவர். ஒன்றரை வயதுக் குழந்தையாக இருக்கும்போது ஒரு மாலுக்கு இவரைத் தூக்கிக் கொண்டு அவரது அப்பாவும் அம்மாவும் சென்றனர். அப்போது குழந்தையைப் பார்த்த ஒரு விளம்பரக் கம்பெனிக் குழு, தாங்கள் எடுக்கப்போகும் அட்வர்டைஸ்மெண்டில் நடிக்க கேட்க... அங்கே தொடங்கியது சாராவின் கரியர்.  

ஹிப்- ஹாப் மற்றும் கதக் இரண்டிலும் கைதேர்ந்த நடனக் கலைஞர் சாரா. மேலும் ஜிம்னாஸ்டிக், கராத்தே, மார்ஷியல் ஆர்ட்ஸ் என பல வித்தைகள் கற்றுத் தேர்ந்திருக்கிறார். நான்கு மொழிகளுக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியும். ஏழு மொழிகளுக்கு மேல் சரளமாகப் பேசுவார்.தற்சமயம் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் காத்திருக்கிறார். இது தவிர ‘கொட்டேஷன் கேங்’ இந்திப் படமும் இவர் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஆதித்த கரிகாலன் சந்தோஷ் ஸ்ரீராம்

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் சிறுவயது ஆதித்த கரிகாலனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறார் நடிகர் சந்தோஷ் ராம். இவரும் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி பல வருடங்களாகக் காத்திருப்பவர்தான்.கடந்த 5 வருடங்களுக்கு முன்னரே ‘பொ செ’ ஆடிஷனில் பங்கேற்றார். பலகட்ட வடிகட்டலுக்குப் பிறகு இறுதியில் தேர்வானார்.

சிறுவயது விக்ரம் போலவே அச்சு அசலாக இருக்கிறார் சந்தோஷ். மணிரத்னம் அசிஸ்டெண்ட் இயக்குநர் சனா மரியத்தின் தங்கை ஆல்யா, சந்தோஷுக்கு பள்ளித் தோழி. ‘காற்று வெளியிடை’ படத்தின்போதே அவருக்குக் கிடைக்க இருந்த மணிரத்னம் பட வாய்ப்பு இப்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சாத்தியமாகியிருக்கிறது.

சந்தோஷ் ஏற்கனவே பள்ளியில் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தில் நடித்திருந்த காரணத்தால் ஆடிஷனிலேயே தனக்கு இந்தக் கதாபாத்திரம் உறுதியானது என்கிறார். சென்னைப் பையன். ஏராளமான விளம்பரங்களில் நடித்திருக்கும் மாடல். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபல பெயின்ட் விளம்பரம் ஒன்றிலும் வந்திருப்பார்.    
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கவேண்டும் என்பதற்காக களரி, சிலம்பம், குதிரையேற்றம் உட்பட பல கலைகளையும் கற்று தன் திறமைகளை வளர்த்துக் கொண்டாராம்.

குந்தவை நிலா கவிதா பாரதி

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சிறுவயது குந்தவையின் கதாபாத்திரத்தில் நடித்தவர், நிலா. இவர் வேறு யாரும் அல்ல... பிரபல நட்சத்திரத் தம்பதி கவிதா பாரதி - கன்யா பாரதியின் மகள்தான்.நிலாவின் குடும்ப புகைப்படம் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலருமே இவர்களுடைய மகள்தானா என்று ஆச்சரியத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

பல சீரியல்களுக்கு கதை எழுதியவர்; குறிப்பாக 90ஸ் உலகின் மாஸ்டர் பீஸான ‘சித்தி’ சீரியலுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் கவிதா பாரதி. பல சீரியல்களை இயக்கியவரும் கூட. மட்டுமல்ல; ‘ராட்சசி’ உள்ளிட்ட பல படங்களின் நடிகரும் கூட. இவரது மனைவி கன்யா, அடிப்படையில் மலையாள நடிகை. தமிழ், கன்னட, மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார். இப்போது சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் ஹீரோவின் அம்மாவாக நடித்து வருபவரும் இவர்தான்.

நிலா, கேரளாவில் பள்ளிப் படிப்பைப் படித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஊரடங்கு காலத்தில் வந்த வாய்ப்புதான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சிறு
வயது குந்தவை பாத்திரம்.  படித்து முடித்ததும் நடிப்பதா வேண்டாமா என்பதை நிலாவே முடிவு செய்வார். மகளது விருப்பம் எதுவோ அதை நிறைவேற்றவே விரும்புகிறோம் என்கிறார்கள் கவிதா பாரதி - கன்யா பாரதி தம்பதியினர்.

ஷாலினி நியூட்டன்