சிறுகதை - சுந்தரி
அதிரசத்தை டப்பாவில் அடுக்கி வைத்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தாள் சுந்தரி. 5.35. கிடுகிடுவென்று மேடையை சுத்தம் செய்து, பாத்திரங்களை ஒதுக்கித் தொட்டியில் போட்டுவிட்டு ஈரத்துணியால் கேஸ் அடுப்பை மேலும் கீழும் துடைத்தாள்.நேரமாகிவிட்டது. இத்தனைக்கும் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்துவிட்டாள். ஆறு மணிக்குக் கிளம்பிப் படி இறங்கவேண்டும்.  இன்னும் அரைமணிநேர வேலையாவது இருக்கிறது. எல்லாமே படு சுத்தமாக இருக்க வேண்டும் சுந்தரிக்கு. காராசேவு, அதிரசம் இவற்றோடு மருமகன் பாண்டிக்குப் பிடிக்குமென்று குழிப்பணியாரம் இனிப்பு காரம் இரண்டும் செய்து தேங்காய்ச் சட்னி, தக்காளித் தொக்கு எல்லாமும் செய்திருந்தாள். ராத்திரியே பலகாரங்களை செய்திருக்கலாம்தான். ஆனால், காலையில் செய்தால் ஃபிரஷ்ஷாக இருக்கும். ஜான்விக்கு சுடச்சுட, மணமாக, அடுப்பில் இருந்து எடுத்த அதிரசத்தைச் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். கட்டிக் குடுத்த மகளை எட்டு மாசம் கழித்து இப்போதுதான் நேராகப் போய் பார்க்கப் போகிறாள். ராத்திரி வந்து கூட பாத்திரம் தேய்த்து ஒழித்துக் கொள்ளலாம். ஆனால், சுந்தரிக்கு கையோடு கையாக எல்லாவற்றையும் சுத்தம் செய்து ஒழுங்குபடுத்த வேண்டும்.
கிராமத்தில் இருக்கும் போது காளிக்குப் பிறந்த செல்லப் பெண்தான் சுந்தரி. அவளுடைய ஐந்து வயதில் அம்மா இறந்து விட... இரண்டே மாதத்தில் வந்த சித்தி மாரி மாட்டுக் கொட்டகை பெருக்கும்படி சுந்தரியை செய்துவிட்டாள். மாரி... சரியான மாரியாத்தாதான். கோபமும் ஆத்திரமும் தாண்டவமாடும். கூட்டிப் பெருக்கி, சாணி தட்டி, தண்ணீர் எடுத்து வந்து சமைத்து, துலக்கி, துவைத்து என்று சுந்தரியின் பதினெட்டு வயதும் படிப்பில்லாமலேயே ஓடி விட்டது.
மாரியின் மற்ற நான்கு குழந்தைகளும் இங்கிலீஷ் ஸ்கூலுக்குப் போக, சுந்தரி அவர்களின் யூனிபார்ம் தோய்த்து அயர்ன் செய்து ஷூவுக்கு பாலிஷ் போட்டபடி வளர்ந்தாள். ஜான்விக்கு ஐந்து வயதானபோது அவளுடன் சென்னைக்கு வந்தாள் சுந்தரி. அப்போதுதான் பூமி இறந்து நான்கு மாதம் ஆகியிருந்தது. துறு துறுவென்று இருந்த ஜான்விக்கு அப்பா இறந்த சோகத்தில் பேச்சு, விளையாட்டு எல்லாமே நின்றுவிட்டது. சுந்தரி பயந்துவிட்டாள். அதனாலேயே சென்னைக்குக் கிளம்பி விட்டாள்.
காஞ்சீபுரத்தில் இருந்து கிராமத்தில் இருந்த மாமா வீட்டிற்கு வந்திருந்த பூமிநாதன், சுந்தரியை ரேஷன் கடையில்தான் முதலில் பார்த்தான். அங்கும் சுந்தரி கூட்டி, அரிசி மூட்டைகளை ஒதுக்கி சுத்தம் செய்து கொண்டுதான் இருந்தாள்.
ஒரு மணி நேரம் அந்த வேலைக்கு அனுப்பினால் மாசம் ஒரு காசு வருகிறதே என்கிற எண்ணம் மாரிக்கு. பில் போடக் கியூவில் நின்றிருந்த பூமி, சுந்தரியின் கை வண்ணத்தில் அந்த இடம் படு சுத்தமாகும் அதிசயத்தைத்தான் முதலில் பார்த்தான்.
அரிசியை நிறுத்துப் போடுபவன் அலட்சியமாய் பையில் கொட்ட, அரிசி கொட்டப் போகிறதே என்று வேகமாய் வந்த சுந்தரியின் நீண்ட பின்னலையும் அவளிடம் இருந்து வந்த ஏதோ ஒரு சுகந்தத்தையும் ரசித்த பூமி நேராக மாமாவிடம் போய் சுந்தரியைப் பெண் கேட்கச் சொன்னான்.
பூமிக்கும் படிப்பு இல்லை, சுந்தரியும் படிக்கவில்லை என்பதே பெரிய பொருத்தமாக இருந்தது. தாய் தந்தை இல்லாத பூமி காஞ்சீபுரத்தில் தனிக்கட்டையாக வாழ்ந்து கொண்டிருந்தான். அங்கு கோயில் பார்க்க வருபவர்களை சில பட்டுப் புடவைக் கடைகளுக்கு அழைத்துச் சென்றால் வரும் கமிஷன்தான் அவனுக்கு வருமானம்.
பூமியின் மாமாவுக்கு காளியையும் அவனது கையாலாகாத தன்மையும் நன்றாகவே தெரியும். தன் செலவில் கோயிலில் வைத்து சுந்தரியை பூமிக்குக் கலியாணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி மாரியை சம்மதிக்க வைத்தார். வீட்டுச் சுத்தம் இனி யார் கையில் என்று தயங்கினாலும், செலவில்லாமல் பொறுப்பு போச்சே என்கிற நிம்மதியில் சுந்தரியைத் தள்ளி விட்டாள் மாரி.
நாடு பெற்ற சுதந்திரத்தை விட, தான் பெற்ற ஆனந்த சுதந்திரத்திற்கு மனது குதியாட்டம் போட ஒரு ஆகஸ்ட் பதினைந்தன்று பூமியுடன் காஞ்சீபுரத்தில் கால் வைத்தாள் சுந்தரி.
கிராமத்தை விட பெரிய டவுனான காஞ்சியில், சுத்தம் புகழ் சுந்தரிக்கு நாலு வீட்டு வேலை நல்லதாகக் கிடைத்தது.
சந்தோஷமான வாழ்க்கைக்கு அந்த வருமானம் போதுமானதாக இருந்தது.சினிமா நடிகை ஸ்ரீதேவியை ரொம்பப் பிடிக்கும் சுந்தரிக்கு. ஸ்ரீதேவியின் மகளான ஜான்வியின் பெயரைத்தான் தன் குழந்தைக்கும் வைத்தாள்.
பூமியுடன் சைக்கிளின் பின்னால் சுந்தரியும் முன்னால் ஜான்வியுமாக நறுவிசாக அவர்கள் கடைத்தெருவுக்குப் போகும் போது அக்கம் பக்கமே பொறாமைப்படும்.
அதுவும் எல்லாப் பெண்களும் நைட்டியிலேயே நாளெல்லாம் திரியும் போது சுந்தரி மட்டும் காலையில் 6 மணிக்கு குளித்து பளிச்சென்று புடவை கட்டிக்கொண்டால் இரவு வாசல் கதவை அடைத்த பின்புதான் நைட்டி மாற்றித் தலைக் கொண்டையை அவிழ்ப்பாள்.
அந்த வழக்கம்தான் இன்று வரை. உடன் வேலை பார்க்கும் மங்கு இப்போதும் இவளுடைய சுத்தமான தோற்றத்தைப் பார்த்து “நாம பார்க்கிற வேலைக்கு இத்தனை சுத்தமான சீலையும், கொண்டையும் தேவையா சுந்தரி” என கேலி செய்வாள்.
வீட்டைப் பூட்டி கிளம்பும்போது ஆறு இருபது ஆகிவிட்டது. இரண்டு மணிக்குள் திரும்பி வரவேண்டும். மதிய டியூட்டியைப் பார்ப்பதாக சூபர்வைஸரிடம் சொல்லும்படி மங்குவிடம் சொல்லியிருந்தாள்.நடந்து ஸ்டேஷன் போய் அங்கிருந்து எலெக்ட்ரிக் டிரெயினைப் பிடிக்க வேண்டும். தாம்பரத்தில் இறங்கி கானாத்தூர் பஸ் பிடித்தால் அரை மணி நேரத்தில் ஜான்வியின் வீட்டிற்குப் போய் விடலாம்.
பெண்ணைப் பார்க்கப் போவதில் மனது குதியாட்டம் போட்டது. தினமும் போனில் பேசும் அவளிடம் இன்று, தான் வரப் போவதைச் சொல்லவில்லை. இவள் இப்படி கிளம்பிப் போவதற்கும் ஒரு காரணம் இருந்தது. வர வர ஜான்வி, தன் கணவன் பாண்டியின் மேல் நிறைய புகார் சொல்கிறாள்.
மருமகன் நல்ல பையன். கால் சென்டரில் வேலை செய்கிறான். சம்பளமும் பதினைந்தாயிரம் வருகிறது. எல்லாவற்றுக்கும் மேல் ஜான்விக்கு மாமியார் மாமனார் பிடுங்கல் கிடையாது. அவர்கள் கிராமத்தில்தான் இருக்கிறார்கள்.
சுந்தரியின் ஆசைக்கு ஜான்வி படித்தாளே தவிர அவளுக்கு சம்பாதிக்கும் ஆசை இருந்ததில்லை. சுந்தரி செல்லமாக வளர்த்ததில் சரியான சொகுசுப் பேர்வழியாக இருந்தாள். பாண்டியும் ஜான்வி மேல் ஆசையாகத்தான் இருக்கிறாற் போல் சுந்தரிக்குத் தோன்றியது. ஆனால், இந்தப் பெண் இப்போதெல்லாம் அடிக்கடி பாண்டியைப் பற்றிக் குறை சொல்கிறது. “சும்மா சும்மா திட்டுறார்மா...”“நீ சரியான சோம்பேறி. சாப்பிடத்தான் லாயக்குங்கறாரு...”“கோவிச்சிட்டு சாப்பிடாம போயிட்டாரும்மா...”“எனக்கு இவுர பிடிக்கவே இல்லைம்மா...”இப்படி ஜான்வியின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் சுந்தரிக்குக் கவலையைக் கொடுத்தது.
சாவதானமாகச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பூமிநாதனை வேகமாக வந்த ஒரு லாரி மோதியது. காலையில் சிரித்துப் பேசிய கணவனை மாலையில் கூழாகப் பார்த்ததும் சுந்தரி நொறுங்கினாள்.
ஆனால், அவளுக்கே உண்டான தைரியத்துடன் ஜான்வியை அழைத்துக்கொண்டு சென்னை கிளம்பினாள். அங்கே இங்கே வேலை பார்த்து ஜான்வியைப் படிக்க வைத்துக் கலியாணமும் கட்டிக்கொடுத்துவிட்டு அப்பாடா என்று உட்கார்ந்தால் இப்படி ஒரு பிரச்னை!
தாம்பரத்தில் இறங்கி மெயின் ரோடுக்கு வந்து ரோடைக் கிராஸ் செய்ய நின்றாள். மணி ஏழரைக்கு மேல் இருக்கும். ஸ்கூல், ஆபிஸ் நேரம். வாகனங்கள் சர் சர்ரென்று பறந்து கொண்டிருக்க ரோட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள் யூனிபாரம் அணிந்திருந்த ஓர் இளம் பெண் தூய்மைப் பணியாளர்.
வேலைக்குப் புதிது போலிருக்கிறது! அந்தப் பெருக்கும் குச்சியைக் கையாளத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள். சுந்தரி அருகில் போய் அவள் கையில் இருந்த அந்தக் குச்சியை வாங்கி லாவகமாகப் பிடித்துக் கொண்டு அவளுக்குப் பெருக்கிக் காட்டினாள்.
“இப்படி இந்தக் கையில பிடிச்சுகிட்டு அந்தக் கையால சீரா தள்ளணும்...” பாங்காக சுந்தரி சொல்லிக் கொடுத்ததை அதிசயமாகப் பார்த்தாள் அந்தப் பெண்.
“தாங்க்ஸ்க்கா...”“இப்படியா தலை சீவாம, பொட்டு வைக்காம வருவே? நீட்டா டிரெஸ் பண்ணனும். சரியா?”கேட்காமலேயே அவளுக்கு அறிவுரை சொல்லி விட்டு ரோடைக் கிராஸ் பண்ண பச்சை விளக்கு எரிய வேகமாக நடந்தாள் சுந்தரி.ஜான்வி வீட்டை அவள் அடையும் போது எட்டரைக்கு மேல் ஆகி விட்டது.
அந்தத் தெருவில் வரிசை வீடுகள்தான். ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் ஒரு சுவர்தான் இடையில். ஓட்டு வீடுகள். வீட்டு எண்ணைப் பார்த்துக் கொண்டே போய் பாண்டி வீட்டைக் கண்டு பிடித்து விட்டாள். தெருவெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் விதவிதமாகக் கோலங்கள். சில வீடுகளில் சாணி தெளித்திருந்த பச்சைத் தரைகள். 16ம் நம்பர் வீடு இவர்களுடையது. அந்த வீடு இன்னும் கோலம் போடாமல் அத்தனை குப்பையாக இருந்தது. “அட அத்தை ! என்ன இப்படி ஷாக் குடுக்கறீங்க?”பனியன் துணியில் பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்த பாண்டி சந்தோஷமாக வெளியே வந்து இயல்பாகக் கை நீட்டி சுந்தரியின் கையில் இருந்த பைகளை வாங்கிக் கொண்டான்.‘‘உள்ள வாங்க அத்தை.
போன் பண்ணியிருந்தா நான் தாம்பரம் ஸ்டேஷனுக்கு வந்து பைக்ல கூட்டியாந்திருப்பேனே?”“பரவாயில்ல தம்பி... ஜான்வி எங்க?” தேடிக்கொண்டே உள்ளே நுழைந்த சுந்தரி கண்களை சுழல விட்டாள். சோபா செட்டும் டிவியுமாக இருந்த அந்த ஹால் கந்தர கோலமாய் இருந்தது. அவிழ்த்துப் போட்ட உடைகளும், சாப்பிட்ட ஜூஸ் பாட்டிலும், இறைந்திருந்த வேர்க்கடலைத் தோல்களும்... “இருங்க அத்தை ஜான்விய எழுப்பறேன். வழக்கமா நான் ஆபீஸ் கிளம்பினப்புறம்தான் எழுந்திருப்பா...”
படுக்கை அறைக்கு நகர்ந்த பாண்டியை நிறுத்தினாள் சுந்தரி. “ இருங்க தம்பி. அவளை அப்பறம் எழுப்பலாம். நீங்க வாங்க. நான் பணியாரம் கொண்டு வந்திருக்கேன். சாப்பிடுங்க...”
ஆபீசுக்குக் கிளம்பத் தயாராக இருந்த பாண்டிக்கு நாவில் எச்சில் ஊறியது. இருந்தாலும், “இப்ப தான் அத்தை இட்லி ஊத்தியிருக்கேன்.
இருங்க உங்களுக்கு டீ போட்டுத் தரேன்...” என்றான்.“இல்ல தம்பி... நீங்க ரெடியாகுங்க. நான் எடுத்தாந்ததைத் தரேன். சாப்பிடுங்க...” அந்த சமையலறை போர் முடிந்த களமாக இருந்தது. சாம்பார் கறையும், தொட்டி முழுக்க பாத்திரங்களும், கால் ஒட்டும் தரையும் சுந்தரிக்கு ஜான்வி நடத்தும் குடித்தனத்தின் லட்சணம் தெரிந்தது. பாண்டிக்கு ஏன் ஜான்வியின் மேல் கோபம் வருகிறது என்பதும் புரிந்தது. ஒரு சில நிமிடங்களில் பம்பரமாய்ச் சுழன்று சமையலறையையும் ஹாலையும் பளிச்சிட வைத்து பூஜை அலமாரியைத் துடைத்து விளக்கேற்றி ஊதுவத்தியையும் ஏற்றி வைத்தாள். அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டியிடம் அதிரசத்தையும் பணியாரத்தையும் தட்டில் வைத்து நீட்டினாள். மாமியாரின் முன்னால் வீடு இப்படி அலங்கோலமாக இருப்பது சங்கடமாக இருக்கத் தலையைக் குனிந்து கொண்டு சாப்பிட்ட பாண்டியைப் பார்க்கும் போதே பாவமாக இருந்தது சுந்தரிக்கு.
“கிளம்பறேன் அத்தை. அம்மாவும் பொண்ணும் ஜாலியா பேசிட்டு இருங்க. சாயங்காலம் சீக்கிரம் வந்திடறேன்...”“இல்ல தம்பி. ரெண்டு மணி டூட்டிக்கு வரதா சொல்லியிருக்கேன். ஜான்வியை எழுப்பி பேசிட்டு நான் கிளம்பறேன்...’’ “நாலு நாள் இருந்துட்டுப் போகலாம் இல்ல? சரி, சரி. அடிக்கடி வாங்க அத்தை...” என்ற பாண்டியின் குரலில் அவன் சொல்லாத செய்தியும் இருப்பது போல் தோன்றியது.
காலமெல்லாம் சுத்தம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்த தான், பெற்ற மகளுக்கு அதை சொல்லித் தரவில்லையே? படிக்காத தனக்குத் தெரியும் சுத்தம் படித்த மகளுக்குத் தெரியவில்லையே? மண்டையில் உறைக்கிறாற் போல் அவளுக்கு புத்தி சொல்லிவிட்டுத்தான் மறு வேலை...வாசலைப் பெருக்கத் துடைப்பத்துடன் சென்றாள் அரசாங்கத்தின் தூய்மைப் பணியாளர் சுந்தரி.
-கிரிஜா ராகவன்
|