இந்திய ஸ்டார்ட் அப்புகளுக்கு என்னதான் ஆச்சு..?



ஒரு வேலையை சுலபமாக்க, விரைவுபடுத்த, தானியங்கியாக்க, பாதுகாப்பு, விலை மலிவு... உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ‘ஸ்டார்ட் அப்’ என்னும் வடிவம் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டு சக்கைப்போடு போட்டு வருகிறது.

அது என்ன ஸ்டார்ட் அப்?

நாட்டின் தொழில்முனைவோருக்கு மலிவாக வணிக நிதியை வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முன்முயற்சியே ஸ்டார்ட் அப். இத்திட்டம் மானியத்துடன் கூடிய கடன் தொகையை உரியவர்களுக்கு வழங்கும்.   2016ம் ஆண்டு பிரதமர் மோடியால் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை உருவாக்குவதற்காக ‘ஸ்டார்ட் அப்’ திட்டம் தொடங்கப்பட்டது. 
குறுகிய காலத்தில் இத்திட்டம் பெருமளவு வெற்றி பெற்றது... இதன் விளைவாக ஸ்டார்ட் அப் துறையில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது...இப்படித்தான் இதுவரை இந்தியர்களாகிய நாம் அனைவரும் நினைக்கிறோம்.

ஆனால், கடந்தவாரம் வெளியான ஆய்வு ஒன்று இந்த ‘பிரபலத்தை’ சுக்குநூறாக உடைத்திருக்கிறது.இந்த ஆய்வை மேற்கொண்டது ட்ராக்ஸ்ன் (Tracxn) எனும் நிறுவனம். இந்த ஆய்வில் இந்தியாவில் 2023ம் ஆண்டு 15,921 ஸ்டார்ட் அப்புகளும், 2024ம் ஆண்டு 12,717 ஸ்டார்ட் அப்புகளும் என மொத்தமாக சுமார் 28,638 ஸ்டார்ட் அப்புகள் மூடப்பட்டுள்ளன என்ற வெடிகுண்டை வீசியிருக்கிறது.

அதாவது வெறும் இரண்டே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப்புகள் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப் பட்டுள்ளன.

இதில் அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் என்ன தெரியுமா?

கோவிட் காலமான 2019 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கிடையில் வெறும் 2300 ஸ்டார்ட் அப்புகள்தான் மூடப்பட்டன. அப்படியிருக்க எவ்வித பொருளாதார - போக்குவரத்து முடக்கமற்ற, தனிமைப்படுத்தப்பட்ட சூழல் நிலவாத காலத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான ஸ்டார்ட் அப்புகள் மூடப்பட்டுள்ளன என்றால் ஷாக் அடிக்கத்தானே செய்யும்?

உண்மையில் இந்தியாவில் எத்தனை ஸ்டார்ட் அப்புகள் இருக்கின்றன என்ற துல்லியமான புள்ளிவிபரம் இல்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஸ்டார்ட் அப் ப்ரா
டக்டுகள் தொடங்கப்படுகின்றன என்று ஓரளவு சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக 2019 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கிடையே 9,600 ஸ்டார்ட் அப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இது 2024ல் 5264 ஆக சரிந்தது. இந்த வருடம் - 2025ல் - இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை வெறும் 125 ப்ராடக்டுகள்தான் தொடங்கப்பட்டுள்ளன. 

தொடக்கம் சரி... மூடப்பட்டவை? இந்த ஆண்டு இதுவரை நான்கே மாதங்களில் சுமார் 259 ஸ்டார்ட் அப்புகள் காணாமல் போயிருக்கின்றன என்கிறார்கள். இந்த வருடம் முடிவதற்குள் இந்த எண்ணிக்கை எத்தனை மடங்கு அதிகரிக்குமோ என அச்சம் எழுகிறது.

99.9 சதவிகித ஸ்டார்ட் அப்புகள் கடனை வாங்கித்தான் கோலாகலமாக ஆரம்பிக்கப்படுகின்றன. இச்சூழலில் மக்கள் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜென்சோல் என்ஜினியரிங் (Gensol Engineering) என்ற நிறுவனம் ஸ்டார்ட் அப் எனச் சொல்லி பெரிய ஸ்கேம் ஒன்றில் சிக்கிக் கொண்டிருப்பது தேசம் எங்கும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் இந்த ஜென்சோல் என்ஜினியரிங் ஒரு சாம்பிள்தான். இதுபோல் வங்கியில் கடனை வாங்கி ஆரம்பிக்கப்பட்ட எண்ணற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திடீரென்று மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் ஸ்டார்ட் அப்புகளின் எதிர்காலம் என்ன எனும் கேள்வி எழுகிறது. ‘‘ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஆரம்பிப்பது என்பது ஒரு கடினமான வேலைதான்...’’ என்றபடி பேசத் தொடங்கினார் மெடிகார்ப் ஓபிசி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இயக்குனரான முரளிகிருஷ்ணன். 

‘‘ஒரு ஸ்டார்ட் அப்புக்கான ஐடியாவை உருவாக்குவது, அந்த ஐடியாவை ப்ராடக்டாக செய்ய நிதி சேகரிப்பது, சேகரித்த நிதியை வெற்றிகரமான ப்ராடக்டாக மாற்றுவது, அது நிலையாக இருக்க அப்டேட் செய்வது... என ஒரு நீண்ட நெடிய ப்ராசஸ் இது.

இந்த நிகழ்வுப்போக்கில் நிதி பிரச்னைகள் வரும். ஒருவேளை அந்த ப்ராடக்ட் வெற்றிகரமாக இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம். தோல்வியில் முடிந்தால் அதோகதிதான்...’’ என்று சொல்லும் முரளி, ஒரு ஸ்டார்ட் அப்பின் வெற்றி தோல்விக்கான மிக முக்கியமான மந்திரங்களையும் எடுத்துரைத்தார்.‘‘ஒரு ப்ராடக்டுக்கு மிஷன், விஷன் என்று இரு நோக்கங்கள் இருக்கவேண்டும். மிஷன் என்றால் சிறிய அளவிலான திட்டம். விஷன் என்றால் நீண்டகாலத் திட்டம்.

மிஷனில்தான் ஒரு ப்ராடக்டை உருவாக்கும் விஷயம் வருகிறது. விஷனில் அந்த ப்ராடக்ட் நீண்ட நாட்கள் ஃபீல்டில் இருப்பது பற்றி வருகிறது. பல ப்ராடக்டுகள் மிஷனில் வெற்றிகரமாக இருக்கின்றன. 

ஆனால், விஷனில் கோட்டைவிட்டு விடுகின்றன. இதுதான் ஒரு ஸ்டார்ட் அப்பின் மூடுவிழாவுக்கான முக்கியமான காரணம்.ஸ்டார்ட் அப் என்பது ஒரு நிறுவனத்துக்கும் அதன் கஸ்டமர்களுக்கும் பாலமாக இருப்பது. ஒரு ஸ்டார்ட் அப்பின் தொடக்கத்தில் பெரிய நிறுவனங்கள் நிதி ரீதியாக துணை நின்றாலும் அது வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக வேண்டும். இந்த பிரபலத்தைத்தான் பெரிய நிறுவனங்கள் விரும்புகின்றன.

அதாவது தங்களுக்கும் கஸ்டருக்கும் இடையில் பாலமாக நிற்கும் குறிப்பிட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம், தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பெரிய நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதை தவறென்று சொல்ல முடியாது. இந்த நம்பகத்தன்மையை இழக்கும் ஸ்டார்ட் அப்புகள் மூடுவிழா காண்கின்றன. உதாரணமாக கோவிட் காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான ஸ்டார்ட் அப்புகள் கோலோச்சின. 

கோவிட் முடிந்ததும் அதற்கான தேவை குறைந்துவிட்டது. ஆன்லைன் வகுப்புகளுக்கான தேவை இன்றும் இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை நிறுவனங்களும், கஸ்டமர்களும் உணரவில்லை அல்லது இவ்விரண்டுக்கும் பாலமாக நின்ற ஸ்டார்ட் அப்புகள் உணர வைக்கவில்லை.

இதுபோலத்தான் மற்ற ஸ்டார்ட் அப்புகளும். எடுத்துக்காட்டாக டேட்டா பாதுகாப்பு என்று ஒரு ஸ்டார்ட் அப் வந்தால் அதற்கு கஸ்டமர்களிடையே வரவேற்பு இருந்தால் மட்டுமே பிரபலமாகும்...’’ என்ற முரளி, தற்போதைய ஸ்டார்ட் அப்பின் வீழ்ச்சி தற்காலிகமானதா அல்லது நீடித்ததா என்ற கேள்விக்கும் விடையளித்தார். ‘‘கோவிட்டுக்குப் பிறகு ஐடி மற்றும் பெரிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு நிகழ்ந்தன. அந்த தாக்கம் இன்னும் குறையவில்லை. இதுவும் இன்று ஸ்டார்ட் அப் வீழ்ச்சிக்கு காரணம்.

அத்தோடு அமெரிக்காவில் டிரம்ப் ஜெயித்தது, அவரின் இன்றைய பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவை எல்லாம் பெரிய நிறுவனங்களையே ஆட்டம் காண வைத்துள்ளன. இச்சூழலில் ஸ்டார்ட் அப்புகளை யார் அணைத்துக்கொள்வார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. பெரிய முதலீடும் மிகவும் அத்தியாவசியமான ப்ராடக்டுகளும் வெற்றிகரமாக இயங்கலாம். 

ஆனால், சின்னஞ்சிறு பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப்புகள் வீழ்ச்சியடையத்தான் செய்யும். இதை மனதில் வைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் ப்ராடக்டுகளை அமைத்தால் ஓரளவுக்காவது வெற்றிகரமாக இயங்கலாம்...’’ என்கிறார் முரளி.

டி.ரஞ்சித்