யோ யோகலட்சுமி!



‘நீ ஏற்கனவே கடல் கடந்துதான் எனக்காக வந்திருக்க...’ சமீபத்திய இயல்பான அதே சமயம் ஆழமான காதல் ப்ரொபோசல் இதுதான். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் வரும் இந்த ஒற்றைக் காட்சி இப்போது இளசுகளிடம் டிரெண்டிங்.
ரீல்ஸ், ஷார்ட்ஸ் உட்பட வைரல். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோக லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.

இலங்கையில் இருந்து அகதியாக வரும் ஒரு குடும்பம், அதைச் சார்ந்த நிகழ்வுகள்தான் கதை. கதை கேட்க சோகமான உணர்வு கொடுத்தாலும் படம் முழுக்க காமெடி, கல
கலப்பு, லேசான உணர்வு என ரசிக்க வைக்கிறது. இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியிருக்கிறார் நடிகை யோகலட்சுமி. சசிகுமார் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பகவதி பெருமாள் என்கிற பக்ஸுக்கு மகளாக நடித்திருக்கிறார்.

இணையம் முழுக்க தற்போது மிதுன் ஜெய் சங்கர் மற்றும் யோகலட்சுமி ஜோடிதான் ஹாட் டாபிக். 2கே மனநிலையானாலும் அம்மா, அப்பா மீதான அக்கறை, மரியாதை, காதல் தோல்விகளைக் கூட லேசாகக் கடக்கும் ஸ்டைல் என இந்த ஜோடி வெரி ஸ்பெஷல் .

மேக்கப், கலர்ஃபுல் உடைகள், கண்ணைக் கவரும் காதல் டயலாக், உருட்டுகள் என எதுவும் இல்லாமல் பெரிய சைஸ் டி-ஷர்ட், பெர்முடா பேண்ட் சகிதமாக அசால்ட்டாக தற்போது இளைஞர்களின் ஃபேவரைட் சாய்ஸ் ஆகியிருக்கிறார் யோகலட்சுமி. இணையத் தொடர், தொலைக்காட்சித் தொடர்கள் என அறிமுகமானவர் தற்போது வெள்ளித் திரையில் அறிமுகமாகி இருக்கிறார்.

சென்னை பொண்ணுதான். 2001ம் ஆண்டு பிறந்த 24 வயது மங்கை. கல்லூரிப் படிப்பை முடித்தவுடன்  மாடலிங்கில் களமிறங்கியவர். தொடர்ந்து டிஜிட்டலில் இன்சூரன்ஸ் ஆக களமிறங்கினார். 

சன் டிவியில் பட்டையைக் கிளப்பும் ‘சிங்கப்பெண்’ தொடரில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதனைத் தொடர்ந்து ‘ஹார்ட் பீட்’ என்ற இணையத் தொடரில் ‘தேஜு’ எனும் கதாபாத்திரத்தில் கவர்ந்தார். இத்தொடர், இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில் அவர் நடித்த ‘குரல்’ என்ற கதாபாத்திரம், அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@iamyogalakshmi) படு பிசியாக செயல்பட்டு வருகிறார்.

யோகலட்சுமியின் ஸ்பெஷல் படத்தில் வருவது போலவே தன் சமூக வலைதள பக்கங்களிலும் இயற்கையான அழகுடன் எந்த மேக்கப்பும் அதிகம் பயன்படுத்தாமல் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவிடுவதுதான்.

90ஸ் மற்றும் 2கே கிட்ஸைப் பொருத்தவரை ஃபிரண்ட்ஷிப், காதல், ரிலேஷன்ஷிப் பிரச்னை என அனைத்தையும் மன அழுத்தமாகப் பார்த்தாலும் இன்னொரு புறம் அதை சுலபமாக கடந்து செல்லும் மனநிலையும் அவர்களிடம் இருக்கிறது. அதை அச்சு அசலாக மிதுன் ஜெய்சங்கர் மற்றும் யோக லட்சுமி கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தியிருக்கும்.

இருவருமே படத்தில் காதல் தோல்வி அடைந்தவர்கள். ஆனாலும் தங்களுக்குள்ளாகவே நட்பு மூலம் காமெடியாக அதைக் கடந்து செல்வது படத்தில் இன்னொரு ஸ்பெஷல். இந்தப் படம் மூலம் யோகலட்சுமி மற்றும் மிதுன் ஜெய்சங்கர் இருவருக்குமே தமிழில் நல்ல அறிமுகம் என்று சொல்லலாம். நடிகை சிம்ரனுடன் இணைந்து நடித்ததை மிகப்பெரிய பெருமையாகவும் மரியாதையாகவும் தெரிவிக்கிறார் யோகலட்சுமி.

ஷாலினி நியூட்டன்