Must Watch
 ஃபேமிலி பேக் ‘நெட்பிளிக்ஸி’ல் பார்வைகளை அள்ளி வரும் பிரெஞ்ச் மொழிப்படம், ‘ஃபேமிலி பேக்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.ஊர்ப்புறத்தில் ஜெரோமின் தந்தை வீடு இருக்கிறது. அந்த வீட்டுக்குத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வருகிறார் ஜெரோம். ஆரம்பத்திலேயே சில பிரச்னைகள் வெடிக்கின்றன. பல வருடங்கள் கழித்து வீட்டுக்கு வந்திருப்பதால், ஜெரோமின் குடும்பத்தினரைப் பற்றி அவரது தந்தைக்கு அவ்வளவாக நினைவில் இல்லை.
இந்நிலையில் பூகம்பம் வருகிறது. அவர்களைச் சுற்றியிருக்கும் எல்லாமே வித்தியாசமாக காட்சியளிக்கிறது. முன்பு இருந்ததைப் போல இல்லை. ஜெரோமின் மூத்த மகள் கிளாரா காணாமல் போகிறாள். ஜெரோமின் குடும்பத்தினருக்கு ஒரு விஷயம் தெரிய வருகிறது. பூகம்பத்துக்குப் பிறகும் அதே வீட்டில்தான் இருக்கின்றனர்.
ஆனால், காலம் மாறியிருக்கிறது. 500 வருடங்கள் பின்னோக்கிச் சென்றிருக்கிறது ஜெரோமின் குடும்பம். எப்படி ஜெரோமின் குடும்பம் கடந்த காலத்துக்குள் சென்றது? உண்மையில் பூகம்பம்தான் வந்ததா? எப்படி அவர்கள் நிகழ்காலத்துக்கு வந்தார்கள்... என்பதை ஃபேன்டஸியாகச் சொல்லியிருக்கின்றனர். ஜாலியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஃப்ரான்சியோஸ் உசான். குக்கூ
சுவாரஸ்யமான திகில் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? உங்களுக்கான நல்ல சாய்ஸ் ‘குக்கூ’. ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம். அம்மா இறந்த பிறகு, 17 வயதான கிரேட்சன் தந்தை லூயிஸுடன் ஒரு மலைப்பகுதிக்குச் செல்கிறாள்.
அங்கே லூயிஸுக்கு மனைவி, ஆல்மா என்ற மகள் என்று இன்னொரு குடும்பம் இருக்கிறது. வேறு வழியில்லாமல் தந்தை லூயிஸுடன் இருக்க வேண்டிய நிலை கிரேட்சனுக்கு ஏற்படுகிறது. அந்த மலையில் லூயிஸின் நண்பர் ஒரு ரிசார்ட்டை வைத்திருக்கிறார். அந்த ரிசார்ட்டில் வேலை செய்ய ஆரம்பிக்கிறாள் கிரேட்சன்.
அங்கே பல விநோதமான சம்பவங்கள் நடக்கின்றன. ரிசார்ட்டில் தங்கியிருக்கும் பெண் வாடிக்கையாளர்கள் எல்லோரும் வாந்தி எடுக்கின்றனர். ஆல்மாவிற்கு வலிப்பு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் வித்தியாசமான ஒரு பெண்ணைச் சந்திக்கிறாள் கிரேட்சன்.
அந்தப் பெண்ணுக்கும் ஒரு கொலைக்கும் சம்பந்தமிருப்பது கிரேட்சனுக்குத் தெரியவர, சூடுபிடிக்கிறது திரைக்கதை. திகில் படப்பிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது. இப்படத்தின் இயக்குநர் டில்மன் சிங்கர். 28 டிகிரி செல்சியஸ்
‘அமேசான் ப்ரைமி’ன் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் தெலுங்குப்படம், ‘28 டிகிரி செல்சியஸ்’. கல்லூரியில் படிக்கும்போது அஞ்சலியுடன் காதல் வயப்படுகிறான் கார்த்திக். ஆனால், இந்த காதலுக்கு அஞ்சலியின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அனாதையான கார்த்திக்குக்கு அஞ்சலிதான் ஒரே உறவு. அதனால் அஞ்சலியை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்.
இந்நிலையில் அஞ்சலிக்கு மூளையில் ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அஞ்சலி உயிருடன் இருக்க வேண்டும் என்றால் அவரது உடலை 28 டிகிரி செல்சியஸிலே எப்போதும் வைத்திருக்க வேண்டும். உடலின் வெப்பநிலை 28 டிகிரிக்கும் அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ அஞ்சலியின் உயிருக்கே ஆபத்து. அஞ்சலியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறான் கார்த்திக். ஆனால், எதிர்பாராத பல விஷயங்கள் நடக்கின்றன.
உண்மையில் அஞ்சலிக்கு என்ன நடந்தது? அஞ்சலி உயிர் பிழைத்து, கார்த்திக்குடன் இணைந்தாளா என்பதை ரொமான்டிக் திரில்லிங்காகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை. வித்தியாசமான ஒன்லைனை எடுத்துக்கொண்டு, விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கின்றனர். காதலுடன் சஸ்பென்ஸையும் கலந்து தந்திருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் அணில் விஸ்வநாத்.
கிரேஸி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்திப் படம், ‘கிரேஸி’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.திறமையான அறுவை சிகிச்சை நிபுணர் அபிமன்யு. ஆனால், மோசமான கணவர்; தந்தை. அதனால் அவருக்கு மனைவியுடனும், மகளுடனும் நல்ல உறவு இல்லை. அதே நேரத்தில் தொழிலிலும் அலட்சியமாக இருக்கிறார்.
தனது அலட்சியத்தால் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் அபிமன்யு. சிறை செல்ல வேண்டிய சூழல். 5 கோடி ரூபாய் பணம் கொடுத்து, அந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க முடிவு செய்கிறார். பணத்தை எடுத்துக்கொண்டு போகும்போது அவரது மகள் கடத்தப்பட்டதாக ஒரு போன் கால் வருகிறது. மகளை விடுவிக்க வேண்டும் என்றால் 5 கோடி ரூபாயைப் பணயத் தொகையாக கேட்கின்றனர்.
தன்னிடம் இருக்கும் 5 கோடி ரூபாயைக் கொடுத்து மகளைக் காப்பாற்றினாரா அல்லது சிறை செல்ல வேண்டிய சிக்கலிலிருந்து தன்னையே காப்பாற்றிக் கொண்டாரா என்பதை திரில்லிங்காக சொல்லியிருக்கிறது திரைக்கதை. சின்னச் சின்ன குளறுபடிகள் இருந்தாலும், விறுவிறுப்பாகச் செல்லும் இப்படத்தின் இயக்குநர் கிரிஷ் கோலி.
தொகுப்பு : த.சக்திவேல்
|