இவரைப் பற்றிய ஷார்ட் ஃபிலிம் லண்டன் மியூசியத்தை அதிர வைத்தது!
பொதுவாக சிலருக்கு பழம் பொருட்களை சேகரிப்பது ரொம்பவே பிடிக்கும். அப்படியாக தபால்தலைகளில் தொடங்கி பழமையான நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், புத்தகங்கள், கைக்கடிகாரங்கள், கீ செயின்கள், பொம்மைகள், கார்கள், டூவீலர்கள், ரேடியோக்கள், சினிமா சார்ந்த விஷயங்கள் எனப் பல்வேறு பொருட்களைத் தேடித் தேடி சேகரிப்பார்கள்.
அப்படியான ஒரு நபர்தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த செலீம் கந்தகர். இவர் ஒன்றிரண்டு அல்ல. சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்களைக் கடந்த 50 ஆண்டுகளாக சேகரித்து தன் வீட்டில் ஒரு அருங்காட்சியகமே வைத்துள்ளார்.

இதில் ஹைலைட் என்னவென்றால் சமீபத்தில் இவரின் சேகரிப்பில் இருந்து சிறுபகுதி, லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அருங்காட்சியகமான விக்டோரியா அண்ட் ஆல்பர்ட்டை அடைந்துள்ளதுதான். இதற்குக் காரணம் செலீம் கந்தகரின் உறவுக்கார பெண்ணான ஓஹிடா கந்தகர்.  செலீம் கந்தகரின் அருங்காட்சியகம் குறித்து ஓஹிடா எடுத்த, ‘ட்ரீம் யுவர் மியூசியம்’ என்ற குறும்படம் விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் மதிப்புமிக்க ஜமீல் பரிசை வென்றுள்ளது. இதனாலேயே செலீம் கந்தகரின் சேகரிப்பு விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திற்குச் சென்றதுடன் உலகம் முழுவதும் அவரைக் கவனிக்கச் செய்துள்ளது. 
மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள கெலேபரா என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் செலீம் கந்தகர். பிழைப்பிற்கு கொல்கத்தா வந்தவர், அங்கே ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக பணியாற்றினார்.
1970ம் ஆண்டிலிருந்து அவரிடம் பழமைப் பொருட்கள் சேகரிப்பு பழக்கம் வந்துள்ளது. ஆரம்பத்தில் எல்லோரையும் போல தபால்தலைகள்தான் அவரின் பிரதான சேகரிப்பாக இருந்துள்ளது. பின்னர் கொல்கத்தாவில் ஓர் இடத்தில் நடந்த பாரம்பரிய கண்காட்சியைப் பார்த்து பிரமித்துள்ளார். இப்படியான பொருட்களைக்கூட சேகரிக்கலாம் போல என அப்போதுதான் அவருக்குத் தோன்றியுள்ளது. ‘‘அந்த கண்காட்சியில் பண்டைய கால பொருட்களின் சேகரிப்பைப் பார்த்து ஆச்சரியமானேன். மனிதர்களின் எளிய வாழ்க்கையிலுள்ள அன்றாட பொருட்களைக்கூட சேகரிக்கலாம் என நினைத்தேன். அதுவே ஒரு சிறந்த பதிவாக இருக்குமெனத் தோன்றியது. அப்படியாக பஸ், ரயில் டிக்கெட்கள், பேனாக்கள், பழைய கடிகாரங்கள், பெர்ஃபியூம் பாட்டில்கள், பில்கள், கேமிராக்கள், இங்க் பாட்டில்கள், என எல்லாவற்றையும் தேடித் தேடி சேகரித்தேன். நான் எந்த பொருளையும் வீணானது எனத் தூக்கி எறியவதில்லை...’’ எனச் சிரிக்கிறார் செலீம் கந்தகர்.
இதுமட்டுமல்ல. அவரின் இந்தச் சேகரிப்பில் 70களில் இருந்த மெட்ரிகுலேஷன் விடைத்தாள்கள்கூட உள்ளன. தவிர, கிராமபோன்கள், குழந்தைகள் அணிந்த துணிமணிகள், விசிறிகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஓஹிடாவின் அம்மா வேண்டாமென தூக்கியெறிந்த பெர்ஃபியூம் பாட்டிலும் இதில் அடக்கம்.
செலீம் கந்தகர், மருத்துவரிடம் கம்பவுண்டராக பணிபுரிந்தபோது பல்வேறு நோயாளிகளும் முதலில் அவரைத்தான் பார்த்துள்ளனர். இரத்த அழுத்தம் பரிசோதிப்பது, ரத்த மாதிரிகளை எடுப்பது எனப் பல பணிகளின் மூலம் நோயாளிகளிடம் இவர் நெருங்கிப் பழகியுள்ளார். காலப்போக்கில் அவர்களும் இவருக்கு நெருக்கமானவர்களாக மாறியுள்ளனர். அந்த நட்பின் வழியே செலீம் கந்தகர் அவர்களிடம், காலாவதியான பொருட்கள் என நினைத்து தூக்கி எறியவதைத் தன்னிடம் தரும்படி கேட்டுள்ளார். தனக்கு பழம்பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் இருப்பதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படியாக செலீம் நிறைய பொருட்களைச் சேகரித்துள்ளார். இதனுடன் பழம்பொருட்கள் சந்தைகளுக்கும் அவ்வப்போது சென்று தனது சேகரிப்பை விஸ்தாரமாக்கி உள்ளார்.
அவரின் இந்த சேகரிப்புதான் உறவினரான ஓஹிடாவிற்கு பிடித்துள்ளது. கொல்கத்தா மற்றும் டில்லியில் உள்ள கவின்கலைக் கல்லூரியில் படித்த மாணவியான ஓஹிடா இதனை ஆவணப்படுத்த வேண்டும் என நினைத்தார்.அங்கிருந்து, ‘ட்ரீம் யுவர் மியூசியம்’ குறும்படம் உருவானது. சமீபத்தில் இந்தப் படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியத்தின் ஜமீல் பரிசை வென்றுள்ளது.
ஓஹிடாவின் இந்தப் படம் தனிப்பட்ட பொருட்களுக்கு அருங்காட்சியகங்களில் இடம் இல்லாதது குறித்தான கேள்வியை எழுப்புகிறது. செலீம் கந்தகர் இத்தனை பொருட்களை தன்னுடைய வீட்டில் சேகரித்து வைப்பதற்காகப் பட்ட கஷ்டங்களை வெளிப்படுத்துகிறது.
தற்போது ஓஹிடாவின் இந்த குறும்படத்திற்கு முதல் பரிசான 25 ஆயிரம் பவுண்ட் கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 28 லட்சம் ரூபாயாகும். இந்த நிதியின் மூலம் செலீம் கந்தகரின் பொருட்களுக்கான ஓர் அருமையான அருங்காட்சியகத்தை கெலேபரா கிராமத்திலேயே உருவாக்க நினைத்துள்ளார் ஓஹிடா.
பி.கே
|