ஐபிஎல் வரலாற்றில் 14 வயதில் சதம் அடித்த இந்திய வீரர்!



ஒரு சதம். ஒரே ஒரு சதம்தான். உலகின் அத்தனை கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார் வைபவ் சூர்யவன்ஷி. 35 பந்துகளில் ஒரு சதம் அடிப்பது என்பது இன்றைய அதிரடி டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் சாத்தியமே. 
ஆனால், அந்தச் சாதனையை ஓர் அனுபவம் வாய்ந்த வீரர் செய்திருந்தால் பெரிதாக ஆச்சரியம் இருந்திருக்காது. வெறும் 14 வயதே நிரம்பிய சிறுவன் அடித்ததே பலரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது.

இந்த 18வது ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு போட்டி குறித்த விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸின் தோனியும், ராஜஸ்தான் ராயல்ஸின் சஞ்சு சாம்சனும் ஜாலியாகப் பேசிக் கொள்வார்கள். அதில் தோனி, ‘சஞ்சு, 13 வயது குழந்தைப் பையனை உன் அணியில் எடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்...’ என்பார்.
அதற்கு சஞ்சு சாம்சன், ‘ஆமாம்...’ என்பார். பதிலுக்குத் தோனி, ‘அவன் பிறப்பதற்கு முன்பே நாங்க ஐபிஎல் கோப்பையை ஜெயிச்சிட்டோம்...’ எனக் கிண்டலாகச் சொல்வார்.

அதற்கு சஞ்சு, ‘இட்ஸ் ஓகே பிரதர். நீங்க ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறுவதற்குள் அவனும் கோப்பையை ஜெயிப்பான்...’ என்பார் நம்பிக்கை தொனியில். ஆனால், அப்போது தோனி குறிப்பிட்ட அந்த 13 வயது குழந்தைப் பையன் வைபவ் சூர்யவன்ஷிதான் என்பது பலருக்கும் தெரியாது. இப்போது சஞ்சுவின் நம்பிக்கை வார்த்தைகளை நிஜமாக்கும் வகையில் ஆடி வருகிறார் சூர்யவன்ஷி.

இந்த ஐபிஎல் சீசனின் ஆரம்பப் போட்டிகளில் சீனியர் வீரர்கள் இருந்ததால் சூர்யவன்ஷியால் 11 பேர் கொண்ட விளையாடும் குழுவில் இடம்பிடிக்க முடியவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக தொடக்க வீரராக விளையாட முடியாமல் போகவே சூர்யவன்ஷிக்கு அடித்தது சான்ஸ். அப்படியாக களம் கண்டவர் எதிர் அணிகளை துவம்சம் செய்து வருகிறார்.

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி..?

இந்நிலையிலேயே சூர்யவன்ஷியின் பின்புலம் பரவலாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. அவர் சதம் அடித்த அன்றே அவரின் தந்தை சஞ்சீவ், சிறுவயது சூர்யவன்ஷியை தூக்கியபடி ஐபிஎல் பார்க்கும் புகைப்படங்கள் டிரெண்டாகியது.  கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்திலுள்ள மோதிபூர் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் வைபவ் சூர்யவன்ஷி.

ஐந்து வயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராக் காதல். அதற்குக் காரணம் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அவரின் தந்தை சஞ்சீவ். இவரும் கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். ஆனால், அவரால் பெரிதாக வரமுடியவில்லை. இதனால், தன்னுடைய மகனை கிரிக்கெட்டில் ஜொலிக்க வைக்க நினைத்துள்ளார்.

அதனால், ஏழு வயதில் சமஸ்திபூரில் கிரிக்கெட் பயிற்சிக்குச் சேர்த்துள்ளார். பின்னர் தன்னுடைய விவசாய நிலத்தை விற்று, சமஸ்திபூரிலிருந்து நூறு கிமீ தொலைவில் உள்ள பாட்னாவிற்கு சூர்யவன்ஷியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சூர்யவன்ஷிக்கு 9 வயது. அங்கே மணிஷ் ஓஜா என்பவரின் அகடமியில் சேர்த்து பயிற்சி பெறச் செய்துள்ளார்.  

இதுகுறித்து பேசும் பயிற்சியாளர் மணிஷ் ஓஜா, ‘‘எனது பயிற்சி மையத்திற்கு ஒரு நாள்விட்டு ஒரு நாளென நூறு கிமீ தூரம் பயணித்து சூர்யவன்ஷி வருவார். காலையில் 7.30 மணிக்குத் தொடங்கி மாலை வரை தீவிரமாகப் பயிற்சி செய்வார். பிறகு மீண்டும் வீட்டிற்குச் செல்வார்.

இப்படி அவர் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பயிற்சி எடுத்தார். இதற்காக சூர்யவன்ஷியின் தந்தையும் தாயும் தந்த ஒத்துழைப்பு அளப்பரியது.தந்தை சஞ்சீவ், மகனின் கனவை நிறைவேற்ற விவசாய நிலத்தை விற்றதுடன், பயிற்சிக்கும், போட்டிகளுக்கும் கூடவே வருவார். 

அவரின் தாய் காலையில் 4 மணிக்கே எழுந்து அவர்களுக்கான உணவைத் தயார் செய்து பயிற்சிக்கு அனுப்புவார். நாங்கள் பயிற்சியளித்தாலும் சூர்யவன்ஷியை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது பெற்றோர்தான்...’’ என்கிறார்.

இதற்கிடையே படிப்பையும் தொடர்ந்து கொண்டு கிரிக்கெட்டில் பயிற்சி எடுத்தார். 12 வயதில் வினோ மன்கத் டிராபிக்கான அண்டர் 19 போட்டியின் பீகார் அணியில் இடம் பிடித்தார். பின்னர் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி டிராபியில் முதன்முறையாக பீகார் அணியில் இடம்பெற்றார். அப்போது சூர்யவன்ஷியின் வயது 12 ஆண்டு 284 நாட்கள். இதனால், பீகாருக்காக ரஞ்சி டிராபியில் விளையாடும் இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதில் மும்பை அணிக்கு எதிராக களம் இறங்கியவர், பெரிதாக சோபிக்கவில்லை. இரண்டு இன்னிங்ஸிலும் முறையே 19 மற்றும் 12 ரன்களே எடுத்தார். இதற்கிடையே அவர் அண்டர் 19 இந்திய பி அணியிலும் இடம் பிடித்தார். இந்நிலையில்தான் அந்தத் தரமான சம்பவம் நடந்தது. 2024ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய அண்டர் 19 அணிக்கும் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கும் இடையில் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது.

இது சூர்யவன்ஷியின் முதல் யூத் டெஸ்ட் போட்டி. இதில் 58 பந்துகளில் நூறு ரன்கள் எடுத்து வரலாறு படைத்தார். அண்டர் 19ல் சதம் விளாசிய இளம் இந்திய வீரர் என்ற பெயரை எடுத்தார்.
உலக அளவில் இந்தச் சாதனையை இங்கிலாந்தின் மொயின் அலி வைத்துள்ளார். அவர் 2005ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக அண்டர் 19ல் 56 பந்துகளில் இந்தச் சாதனையைச் செய்திருந்தார்.

இதன்பிறகு சூர்யவன்ஷி டி20 சையத் முஸ்டாக் டிராபியில் பீகார் அணிக்காக களமிறங்கினார். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் இளம் வீரர் என்ற பெயரையும் பெற்றார்.
தொடர்ந்து அண்டர் 19 ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக ஆடினார். இதில் அரையிறுதியில் இலங்கை அண்டர் 19 அணியுடன் 36 பந்துகளில் 67 ரன்கள் குவித்து இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால், இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் இந்திய அண்டர் 19 அணி தோற்றுப் போனது. இருந்தும் சூர்யவன்ஷியின் அதிரடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைக் கவர்ந்தது. இதனால் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் ஏலத்தில் ஒரு கோடியே 10 பத்து லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  

ஐபிஎல் தொடங்கியதும் முதல் ஏழு போட்டிகளில் அவர் ஆடவில்லை. இந்நிலையில் எட்டாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக சூர்யவன்ஷி களமிறக்கப்பட்டார். அப்போது 14 வயது 23 நாட்களை எட்டியிருந்தார். இதனால், ஐபிஎல் விளையாடிய இளம் வயது வீரர் என்ற பெயரைப் பெற்றார். இதுமட்டுமல்ல. 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட பிறகு பிறந்த ஒருவர், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல்முறை.

லக்னோவுடனான அந்த முதல் போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அனைவரையும் கவர்ந்தார் சூர்யவன்ஷி. இந்தப் போட்டியில் 20 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுத்தார்.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எளிதாக வெற்றிபெற்றுவிடும் என்றிருந்தபோதும் இறுதியில் 2 ரன்களில் பரிதாபமாகத் தோற்றது. பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் ஒன்பதாவது போட்டியில் விளையாடியது.

இதில் சூர்யவன்ஷி 12 பந்துகளில் 2 சிக்சர் அடித்து 16 ரன்கள் எடுத்தார். இதிலும் வெற்றி பெறும் என நினைத்த நேரத்தில் ராஜஸ்தான் அணி 11 ரன்னில் தோற்றுப் போனது.  
பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் குஜராத் அணி 209 ரன்கள் அடித்தது. நிச்சயம் குஜராத் அணிதான் வெற்றிபெறும் என்றே பலரும் கணித்திருந்தனர். ஆனால், அந்தக் கணிப்பை சூர்யவன்ஷி தவிடுபொடியாக்கினார்.  

அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ், இஷாந்த் ஷர்மா, பிரஷித் கிருஷ்ணா, ரஷித்கான், வாஷிங்டன் சுந்தர் என எவரையும் விட்டு வைக்கவில்லை. அனைவரின் பந்துகளையும் சிக்சர்களுக்கும், பவுண்ட்ரிகளுக்குமாக விரட்டினார். அவர் அடிக்க அடிக்க பின்னால் விக்கெட் கீப்பிங் செய்த, ஜாஸ் பட்லர் ஆச்சரியமாக பார்த்தபடியே இருந்தார். 

இதில் மொத்தம் 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் சூர்யவன்ஷி. வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலுக்குப் பிறகு ஐபிஎல்லில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

இதன்பிறகு ஐபிஎல் தளத்தின் வீடியோவில் பேசிய வைபவ் இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் தன் பெற்றோர்தான் என்றார். ‘‘என் அம்மா எனக்காக தினமும் மூன்று மணிநேரமே தூங்கினார். அதிகாலை 2 மணிக்கெல்லாம் எழுந்து எனக்காக உணவு சமைத்தார். என் அப்பா எனக்காக தன்னுடைய வேலையை துறந்தார். என் மூத்த சகோதரர் எனக்காக அப்பாவின் பணியை ஏற்றுக்கொண்டார். எல்லோரின் தியாகத்தாலே தான் இது முடிந்தது...’’ என நெகிழ்வாகத் தெரிவித்தார்.

பலரும் அவரைக் கொண்டாடித் தீர்த்த வேளையில் மும்பையுடனான அடுத்த போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார் சூர்யவன்ஷி. இதனால், ரசிகர்கள் மனம் உடைந்து போயினர்.  
உண்மையில் நிலைத்து நின்று தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சூர்யவன்ஷிக்கு இன்னும் நிறைய அனுபவங்கள் தேவைப்படுகின்றன. 

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுவனான சூர்யவன்ஷியிடம் அதனை இப்போதே எதிர்பார்ப்பது தவறானது. ஆனால், விரைவில் அவரின் தீவிர பயிற்சியால் சிறந்த நுட்பங்களும், அனுபவங்களும் அவருக்குக் கிடைக்கக்கூடும். அப்போது ஐபிஎல்லில் மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் அணியிலும் சூரியனைப் போல பிரகாசிப்பார் சூர்யவன்ஷி.

பேராச்சி கண்ணன்