மனிதர்களைத் தூக்கிச் செல்லும் தொழிலாளியின் வருமானம் ரூ.36 லட்சம்!
கிழக்குச் சீனாவில் உள்ள கடற்கரை மாகாணமான சாண்டாங்கில் அமைந்திருக்கிறது, மவுண்ட் டாய் எனும் மலை. சீன வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மலை இது. மட்டுமல்ல, சீனாவில் உள்ள ஐந்து புனித மலைகளில் தலைமை மலையாகவும் கருதப்படுகிறது, டாய்.  இதனை டாய் சான் என்றும் அழைக்கின்றனர். கலாசார ரீதியாகவும் இந்த மலை பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. கடந்த 3000 வருடங்களாக வழிபாட்டுத்தலமாகவும் இருக்கிறது. இதுபோக ‘யுனெஸ்கோ’வின் உலகப் பராம்பரிய தளமாகவும் இந்த மலை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  தவிர, மனதைக் குளிர்விக்கும் இயற்கை அழகு, 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுக்கள், சீனாவின் கட்டடக்கலைக்குப் பெருமை சேர்க்கும் பழமையான கோயில்கள்... என மக்களை ஈர்க்கும் பல விஷயங்கள் இந்த மலையில் சூழ்ந்திருப்பதால் சீனாவின் முக்கிய சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. மட்டுமல்ல, ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அரசர்கள் முதல் சாதாரண மக்கள் வரை எல்லோரும் யாத்திரை மேற்கொள்ளும் ஓர் இடமாகவும் இந்த மலை இருக்கிறது.
உலகிலேயே அதிகமாக மலையேற்றம் நடக்கும் இடங்களில் முதன்மையானது இந்த மலை. ஆனால், இதில் மலையேற்றம் செய்வது சவாலான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
5029 அடிகள் உயரம் கொண்ட இம்மலையின் உச்சிக்குச் சென்று, இயற்கையை ரசிக்க வேண்டும் என்பது இங்கே வருகை தருபவர்களின் முக்கிய விருப்பம். மலையின் உச்சிக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.
ஆனால், குறிப்பிட்ட ஓர் இடத்தை அடைந்ததும், மலையேற்ற அனுபவம் இல்லாதவர்களுக்குச் சோர்வு ஏற்பட்டுவிடும். கடைசி 1000 படிகள் ஏறுவதுதான் சவால். அப்போது உதவிக்கு யாராவது இருந்தால் மலையேறுபவர்களுக்குப் பக்க பலமாக இருக்கும். இந்த உதவியையே ஒரு தொழிலாக மாற்றி, பணத்தை அள்ளி வருகிறார் ஷியாவோ சென் என்ற இளைஞர். சீனாவில் பிறந்து, வளர்ந்த ஷியாவோ, டாய் மலையின் மீது ஏறுபவர்களுக்கு உதவியாளராக வேலை செய்து வருடத்துக்கு 36 லட்ச ரூபாய் சம்பாதித்து வருகிறார். அதாவது, மலையேறும்போது இடையில் சோர்வு ஏற்பட்டு, ஏற முடியாமல் போய்விட்டால் அவர்களைத் தோளில் சுமந்து சென்று உச்சியில் விடுவது அவரது வேலை. இதற்காக ஒரு கட்டணத்தை வசூல் செய்கிறார் ஷியாவோ.
வாடிக்கையாளர்களைப் பகல் நேரத்தில் சுமந்து செல்ல 7 ஆயிரம் ரூபாய் கட்டணம்; இரவு நேரத்தில் 4,600 ரூபாய் கட்டணம். குறைந்தபட்சம் 1000 படிக்கட்டுக்களாவது வாடிக்கையாளர்களைச் சுமந்து செல்கிறார்.
தினமும் இரண்டு வாடிக்கையாளர்கள்தான். அதிகபட்சமாக 30 நிமிடங்களில் வாடிக்கையாளரைச் சுமந்துகொண்டு, 1000 படிக்கட்டுகளில் ஏறி, உச்சியை அடைந்துவிடுகிறார். சில மாதங்களில் 5.5 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைத்திருக்கிறது. சராசரியாக வருடத்துக்கு 36 லட்சம் ரூபாய்.
மலையேற்ற அனுபவம் இல்லாத சுற்றுலாவாசிகள்கூட, 80 சதவீத உயரத்துக்குத் தாங்களாகவே ஏறிவிடுகின்றனர். அதற்குப் பிறகு ஏறுவது கடினமாகிவிடுகிறது. மீதமிருக்கும் படிக்கட்டுகளில் ஏறுவதற்காக மட்டுமே ஷியாவோவின் உதவியை நாடுகின்றனர்.
ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் சோர்வுற்று, கீழே விழாமல் இருப்பதற்காக அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு உடன் நடக்கிறார். அவர்களால் படிக்கட்டுகளில் ஏற முடியாதபோது, தோளில் சுமந்துகொண்டு செல்கிறார். ஷியோவின் சேவைக்குப் பெரிய தேவை இருப்பதால், வேலைக்கு ஆட்களை நியமித்து இருக்கிறார்.விளையாட்டுத்துறையில் பட்டப்படிப்பு படித்த ஷியாவோ, 25 வயது முதல் 40 வயது வரைக்குமான பெண்களுக்கு மட்டுமே தனது சேவையை வழங்குகிறார் என்பதுதான் இதில் ஹைலைட்.
த.சக்திவேல்
|