உலகின் வயதான பெண்மணி!
உலகின் வயதான பெண்மணி என்ற பட்டத்திற்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த எதெல் கேட்டர்ஹாம். அவரின் தற்போதைய வயது 115.

அவருக்கு இந்தப் பட்டத்தை கின்னஸ் உலக சாதனைகளுக்காக வயதை சரிபார்க்கும் ஆய்வு நிறுவனங்களான, லாங்கிவிகுவெஸ்ட் மற்றும் ஜெரோன்டாலஜி ஆராய்ச்சிக் குழு ஆகியவை இணைந்து வழங்கியுள்ளன.  இதற்குமுன் இந்த பட்டத்தை பிரேசில் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் வைத்திருந்தார். அவர் கடந்த ஏப்ரல் 30ம் தேதி இயற்கை எய்தினார். அப்போது இனா கனபரோ லூகாஸின் வயது 116 ஆண்டுகள் 326 நாட்கள். இந்நிலையில்தான் அடுத்து உலகின் வயதான பெண்மணி யார் என ஆய்வு செய்யப்பட்டதில் அதிகாரபூர்வமான தகவல்களுடன் அந்தப் பட்டம் எதெல் கேட்டர்ஹாம் வசம் சென்றது. எதெல் கேட்டர்ஹாம் 1909ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி, இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் மாகாணத்திலுள்ள ஷிப்டன் பெல்லிங்கர் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவரின் ஐந்தாவது வயதில் முதல் உலகப் போர் நடந்தது.
எட்டு குழந்தைகள் உள்ள பெரிய குடும்பத்தில், இரண்டாவது குழந்தையாகப் பிறந்த எதெல் கேட்டர்ஹாம் தன்னுடைய 18வது வயதில் இந்தியாவிற்கு வந்தார்.அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த ஒரு இராணுவக் குடும்பத்தில் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்.1931ம் ஆண்டு ஒரு டின்னர் பார்ட்டியில் தன்னுடைய எதிர்காலக் கணவர் நார்மன் கேட்டர்ஹாமைச் சந்தித்தார். பின்னர் அவர்கள் 1933ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நார்மன் கேட்டர்ஹாம், இங்கிலாந்தின் ராயல் ஆர்மியில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தார். இதனால் கணவருடன் ஹாங்காங் மற்றும் ஜிப்ரால்டர் பகுதிகளுக்குச் சென்றார் எதெல் கேட்டரஹாம். ஹாங்காங்கில் நர்சரி பள்ளி ஒன்றை அமைத்து குழந்தைகளுக்கு ஆங்கிலம், கைவினைப் பொருட்கள் செய்தல், விளையாட்டுகள் ஆகியவற்றை கற்றுக் கொடுத்தார். இதேபோல் ஜிப்ரால்டரிலும் செய்தார்.பிறகு இரண்டு பெண் குழந்தைகள் அவருக்குப் பிறந்தன. இதனையடுத்து தம்பதிகள் இங்கிலாந்து திரும்பினர். கணவர் நார்மன் 1976ம் ஆண்டு மரணமடைந்தார்.
தொடர்ந்து தன் இரண்டு மகள்கள், மூன்று பேத்திகள், ஐந்து கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் 50 ஆண்டுகள் வசித்து வந்தார் எதெல் கேட்டர்ஹாம். தன்னுடைய 97 வயது வரை கார் ஓட்டினார். 1999ம் ஆண்டு தனது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதன்பிறகு அவரின் மூத்த மகள் இறந்துபோக, இரண்டாவது மகள் ஆனியுடன் வசித்து வந்தார். அவரும் 2020ம் ஆண்டு மரணிக்க, சர்ரே மாகாணத்தில் உள்ள ஆஷ்வேல் கிராமத்தில் உள்ள கேர் ஹோமில் சேர்ந்தார்.
அங்கே சில காலம் இருந்துவிட்டு தற்போது லைட்வாட்டர் கிராமத்தில் உள்ள கேர் ஹோமில் வசித்து வருகிறார்.தனது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘யாருடனும் ஒருபோதும் வாக்குவாதம் செய்யமாட்டேன். நிறைய கவனிப்பேன். எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன்’ என்கிறார் சந்தோஷமாக!
ஹரிகுகன்
|