நான் முதல்வன் திட்டத்தால் சாத்தியமான சிவில் சர்வீஸ் கனவு!
தமிழ்வழியில் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றி பெற்றிருக்கிறார் சங்கர் பாண்டிராஜ்
சமீபத்தில் 2024ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழ் வழியில் பயின்று தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சியெடுத்த சங்கர் பாண்டிராஜின் வெற்றி, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. தமிழ்வழிக் கல்வி பயின்று, எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமலேயே ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்குச் செல்ல முடியும் என்பதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் சங்கர் பாண்டிராஜ்.

இந்நிலையில் கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுத் திரும்பியவரை இடைநிறுத்திப் பேசினோம். ‘‘கடந்த ஒன்பது ஆண்டுகளாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் யுபிஎஸ்சி தேர்வு எழுதினேன்.
அதில் மூன்று முறை முதன்மைத் தேர்வுகளிலும், 8 முறை முதல்நிலைத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற நான், இப்போதுதான் முதல்முறையாக நேர்காணலில் வெற்றி அடைந்திருக்கிறேன். இது, நான் முதல்வன் திட்டத்தாலேயே சாத்தியமானது...’’ என உற்சாகம் ததும்ப ஆரம்பித்தார் சங்கர் பாண்டிராஜ். 
‘‘சொந்த ஊர் மதுரை. அப்பா, அம்மா இருவருமே தையல் வேலை செய்து வருகின்றனர். என் பள்ளிப் படிப்பை சில ஆண்டுகள் அப்பா ஊரிலும், சில ஆண்டுகள் மதுரையிலும் படித்தேன். பொருளாதாரச் சூழலால் மேற்கொண்டு கல்லூரிக்குச் சென்று என்னால் படிக்க இயலவில்லை.அதனால் தொலைதூரக் கல்வியில் பிபிஏ முடித்தேன்.
எனக்கு சிறுவயது முதலே சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால் படித்துக் கொண்டிருந்தபோதே, மதுரையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்தேன்.
மனித உரிமைகள் சார்ந்த பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொண்டேன். இங்கே கிடைத்த அனுபவங்கள் எனக்கு நிறைய தைரியத்தைத் தந்தன. ஒருமுறை மதுரையில் பேக்கரி ஒன்றில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தனர். நான் அதை தட்டிக்கேட்டு காவல்துறையினரிடம் சொல்லி அங்கு வேலை பார்த்த சிறுவர்களை மீட்டேன். அப்போது எனக்கு 20 வயது.
இது எனக்கு சந்தோஷத்தைத் தந்தாலும் ஒரு தனி மனிதனாக குறிப்பிட்ட அளவுதான் சமூகத்திற்கு உதவ முடியும் என்பது புரிந்தது. முழுமையாக உதவ வேண்டுமென்றால் ஐஏஎஸ் போன்ற உயர் பதவியில் இருக்க வேண்டும். அதனாலேயே சிவில் சர்வீஸை தேர்ந்தெடுத்து வெற்றிபெற நினைத்தேன்.
ஆனால், தமிழ்வழியில் பயின்று, யுபிஎஸ்சி தேர்வு எழுத முடியுமா என்ற தயக்கம் வந்தது. அப்போது தமிழ்வழிக் கல்வி பயின்று தமிழில் யுபிஎஸ்சி தேர்வெழுதி 2015ம் ஆண்டு இந்திய அளவில் 117வது இடம் பிடித்த இளம்பகவத் ஐஏஎஸ் பற்றி படித்தேன். இதன்பிறகு எனக்குள் இருந்த குழப்பங்கள் நீங்கி ஐஏஎஸ் கனவோடு 2016ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.
‘‘ஆனால், சென்னையில் எனக்கு யாரையும் தெரியாது. கையில் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் சுற்றினேன். அந்நேரம் ஒரு தனியார் கம்பெனியின் மெஷின் ஆபரேட்டர் பயிற்சிக்கான விளம்பரத்தைப் பார்த்தேன். அதைச் சொல்லித் தரும் கல்லூரியில் சாப்பாடும் தங்குமிடமும் கொடுப்பதாகச் சொல்லியிருந்தனர்.
அதனால், உடனடியாக அங்கு சேர்ந்தேன். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கிக் கொண்டு அந்தப் பயிற்சியையும் எடுத்தேன். கிடைத்த நேரத்தில் தமிழ்நாடு அரசு இலவசமாக நடத்தும் ஆல் இந்தியா சிவில் சர்வீஸ் கோர்ஸில் பயிற்சி பெற்றேன். இப்படியாக கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தினேன்.
இந்த மூன்று மாத காலத்தில் சென்னையில் பழக்கமான நண்பர்களுடன் கூலி வேலைகளுக்கும் சென்றேன். இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்க சென்னை அண்ணா நகரில் மு.சிபிகுமரன் என்பவர் தமிழ் வழியில் ஐஏஎஸ் படிப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அகடமி நடத்தி வந்தார். அவரைச் சந்தித்தேன். அவர் தன்னுடைய அகடமியிலேயே தங்குவதற்கு அனுமதித்தார்.
அங்கே மாதம் ரூ.1500 கொடுத்து சிவில் சர்வீஸுக்கான பயிற்சி பெற்றேன். இந்தப் பணம் அங்கே தங்குவதற்குத்தான். யுபிஎஸ்சி தேர்வுக்கான தமிழ்வழிப் பயிற்சியை அவர் இலவசமாகவே கொடுத்தார்.பகலில் படிப்பதும், இரவில் தங்குவதுமாக சில காலம் சென்றது. பின்னர் 2017ம் ஆண்டு யுபிஎஸ்சி படித்துக்கொண்டே, குரூப்-1 முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இது டெபுடி கலெக்டருக்கான தேர்வு. இதில் தேர்ச்சி பெற்றபோதுதான் முதல் முதலில் எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது.
இருந்தும் என்னுடைய கனவு ஐஏஎஸ்ஸாகவே இருந்தது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், ஒரு அகடமியில் என்னை பயிற்சி எடுக்கச் சொல்லிக் கேட்டு, சம்பளமும் கொடுத்தார்கள். இதில் கிடைத்த பணத்தில் எனது செலவுகளை பார்த்துக் கொண்டே ஐஏஎஸ்ஸிற்குத் தேர்வு எழுதினேன். ஒரு கட்டத்தில் இந்த இடத்தில் இருந்து வெளியேறி தமிழக அரசின் இலவச சிவில் சர்வீஸ் கோர்ஸில் சேர நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்.
அங்கே பயிற்சி பெற்று மூன்றாவது முறையாக யுபிஎஸ்சி தேர்வு எழுதினேன். ஆனால், இந்த முறையும் தோல்வியையே சந்தித்தேன். அதனால், தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்பில் என்னால் தொடர முடியாத சூழல் வந்தது.பிறகு அங்கிருந்து வெளியேறி ஒரு யூடியூப் சேனல் தொடங்கி யுபிஎஸ்சி தேர்வுக்கு எப்படி படிப்பது, எதை படிப்பது என வீடியோவாக பதியேற்றம் செய்து வந்தேன். எனது ஐஏஎஸ் கனவும் என்னை துரத்திக்கொண்டே இருந்தது.
அதனால், யுபிஎஸ்சி பயிற்சியை மீண்டும் தொடங்கினேன். 2019ம் ஆண்டு மீண்டும் யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். தங்குவதற்கு இடம் இல்லாத பிரச்னை ஒருபுறம் என்றால், பணமில்லாததால் படிக்க முடியாத சூழல் மறுபுறம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால், 2019ம் ஆண்டு திருவண்ணாமலையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.
அவர்கள் விவசாயம், குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவிப்பது, யுபிஎஸ்சி, குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பது என நிறைய வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். நானும் அங்கே தங்கி மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்தேன். அது மனநிறைவாக இருந்தது. அங்கு இருக்கும்போதுதான் கொரோனா காலம் வந்து அனைத்தையும் முடக்கியது. அதனால், 2020ல் யுபிஎஸ்சி தேர்வும் தள்ளிப்போனது.
பின்பு 2021ல் ஐஏஎஸ் தேர்வின்போது எனக்கு கொரோனா வந்துவிட்டது. அதனால், மன அழுத்தத்தின் உச்சத்திற்கே சென்று விட்டேன். அதிலிருந்து மீண்டு, 2022ல் குரூப்-2 தேர்வு எழுதினேன். அப்போது எழுதிய குரூப்-2 தேர்வின் முடிவு இரண்டு ஆண்டுகள் கழித்து 2024ல் வெளியானது. அதில் தேர்வாகி தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் வேலை பார்த்து வருகிறேன்.
இதற்கிடையில்தான் 2022ம் ஆண்டு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் அறிமுகமானது. இதில் தேர்வானேன். இதன்வழியே அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.7,500 பணம் தந்தது எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இலவச ஐஏஎஸ் பயிற்சியுடன், செலவுக்கும் பணம் கிடைத்ததால், வெளி வேலைகளுக்குச் செல்லாமல் நன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். இதுவே இன்று என்னை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியடையச் செய்துள்ளது.
அதுவும் தமிழ்வழியில் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த முறை எனக்கு ஐஆர்எஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். ஆனால், எனது கனவு ஐஏஎஸ்தான். அதனால் மீண்டும் யுபிஎஸ்சி தேர்வு எழுத இருக்கிறேன். ஐஏஎஸ் ஆகி சமூகத்திற்குச் சேவை செய்வதே என் குறிக்கோள்...’’ அத்தனை நம்பிக்கையுடன் சொல்கிறார் சங்கர் பாண்டிராஜ்.
செய்தி: ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|