எனக்கு பதிலாக சாய் பல்லவி சீதையாக நடிக்கிறாரா..?



பதில் சொல்கிறார் ஸ்ரீநிதி ஷெட்டி

சமூக வலைத்தளத்தில் கன்னட சினிமா ரசிகர்கள் அதிகம் பின் தொடரும் நடிகைகளில் முதன்மை இடத்தில் இருப்பவர் ஸ்ரீநிதி ஷெட்டி. ‘மிஸ் கர்நாடகா’ அழகி பட்டம் இவருக்கு ‘கே.ஜி.எப்’ என்ற பிரம்மாண்ட வாய்ப்புக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. தொடர்ந்து ‘கே.ஜி.எப் 2’  படத்திலும் நடித்து கன்னட சினிமாவின் மோஸ்ட் வான்ட்டட் நடிகையாக மாறியவருக்கு தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வாய்ப்புகள் குவிந்தன.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ இவருடைய முதல் தமிழ் படம். தற்போது நானி நடித்துள்ள ‘ஹிட் 3’ படத்தில் நாயகி வாய்ப்பு. படத்துக்கான வரவேற்பு பாசிட்டிவ்வாக வந்துள்ளதால் ஸ்ரீநிதியின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. ‘கே.ஜி.எப்’ பெரியளவில் ஹிட்டாகும்னு நினைத்தீர்களா?

உண்மையை சொல்வதாக இருந்தால் அந்தப் படம் பெரியளவில் ஹிட்டாகும் என்றும், அந்தப் படத்தில் நானும் ஓர் அங்கமாக இருப்பேன் என்றும் நினைக்கவில்லை.

முதல் படம் பிரம்மாண்ட படைப்பாக அமைந்ததால் எதைப்பற்றியும் யோசிக்காமல் நடித்தேன். இயக்குநர் பிரசாந்த் நீல், யஷ் போன்றவர்களின் ஆளுமை படத்தை வெற்றிக்கான பாதையில் வழி நடத்தியது. படம் பிடித்ததால் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

‘ஹிட் 3’ அனுபவம் எப்படி இருந்தது?

‘ஹிட்’ மாதிரி கதையில் நடிக்க ரொம்ப ஆர்வமாக இருந்தேன். இந்தப் படத்தை கமிட் பண்ணுவதற்கு முன் ‘ஹிட்’ படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தேன். இரண்டு படங்களின் கதையும் பிடிச்சிருந்தது.‘ஹிட்’ படத்தின் மூன்றாம் பாகத்தின் கதை, என்னுடைய கேரக்டர் பற்றி சொன்னதுமே மிஸ் பண்ணக்கூடாத படமாக தோணுச்சு. 
அதுமட்டுமல்ல, சமூக வலை தளங்களில் ‘கே.ஜி.எப் 1’, ‘கே.ஜி.எப் 2’, ‘ஹிட் 3’ என நியூமராலஜிப்படி நடிப்பதாகவும் கமெண்ட் போடுவதோடு இந்த கணக்கு இத்துடன் நிற்குமா, 4, 5 என அடுத்தடுத்த பாகங்களிலும் நடிப்பீர்களா என்றும் கேட்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓர் இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் வெளியாவதில் அவ்வளவு சந்தோஷம்.

படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

ஃபீல்டுக்கு வந்தோமா, அடுத்தடுத்து நாலைந்து படங்கள் பண்ணினோமா என்ற மனநிலை எனக்கு எப்போதும் இருந்ததில்லை. சின்ன பட்ஜெட் படமோ, பெரிய பட்ஜெட் படமோ என்னுடைய மனதைத் தொடும் கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன்.சினிமாவில் ஓர் அங்கமாக எப்போதும் இருக்க வேண்டும் என்பது ஆசை. 
அதுமட்டுமல்ல, ஒரு படத்தைத் தேர்வு செய்து நடிக்கும்போது அந்த கேரக்டராகவே மாற வேண்டும் என்பதோடு இயக்குநர், நடிகர் என அனைவரோடும் புரிதலுடன் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.

அப்படி ‘ஹிட் 3’ படத்தின் எல்லா அம்சங்களும் எனக்குப் பிடிச்ச மாதிரி இருந்துச்சு. என் கேரக்டர் மீது ஒரு சதவீதம் சந்தேகம் இருந்தாலும் அந்தப் படத்தை நான் ஏற்கமாட்டேன். அந்த முடிவை எனக்கான சுதந்திரமாகப் பார்க்கிறேன்.

ஏனெனில் முதல் படம் செய்யும்போது யோசிக்கும் இடத்திலோ, படங்களைத் தேர்வு செய்யும் இடத்திலோ நான் இல்லை. அதன் பிறகு வரும் படங்களை கமிட் செய்வது என்னுடைய கன்ட்ரோலில்தான் இருக்கிறது.

10 வருடங்கள் கழிச்சு என்னுடைய ஃபில்மோகிராஃபியை எடுத்துப் பார்க்கும்போது ஆறேழு படங்கள் பண்ணிய மாதிரி இருந்தாலும் சந்தோஷப்படுவேன். ஏனெனில், அந்தப் படங்கள் எல்லாமே எனக்கும் ரசிகர்களுக்கும் பிடிச்ச படங்களாக இருக்கும். எந்த கட்டத்திலும் நான் நடித்த படங்களுக்காக வருந்தக்கூடிய சூழ்நிலை இருக்காது.

யஷ், நானி... இவ்விருவரில் யாருடன் வேலை செய்யும்போது ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தது?

ஆர்ட்டிஸ்ட்டுகளின் வேலை கதை, கேரக்டருக்கு ஏற்ப நடிக்க வேண்டும் என்பதுதான். நானி உடன் நடிக்கும்போது பெரியளவில் மெனக்கெடல் இருக்காது. கொஞ்சம் முயற்சி எடுத்து நடித்தால் போதும். நானியும் அப்படிதான். தன்னுடைய கதாபாத்திரத்துக்கு பெரியளவில் முயற்சி எடுக்காமல் இயல்பான நடிப்புக்காக முயற்சி செய்வார்.

நானியுடன் வேலை செய்வது எப்போதும் கடினமாக இருக்காது. இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பிக்கும்போது நானி சாரின் முந்தைய படங்கள், பேட்டி என எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பிச்சேன். அது எனக்கு அவரைப் பற்றிய புரிதலைக் கொடுத்துச்சு.

அவருடைய ஒவ்வொரு படத்திலும் கேரக்டருக்கு நியாயம் செய்திருப்பதை பார்த்திருக்க முடியும். அவரிடம் நிறைய சினிமாவுக்கான நுட்பங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. இயக்குநர், சக நடிகர்களின் பங்களிப்பு என்னுடைய பெஸ்ட் கொடுக்க துணையாக இருக்கிறார்கள். ‘ஹிட் 3’ படத்தில் அர்ஜுன் - மிருதுளா ஜோடிப் பொருத்தம், கெமிஸ்ட்ரி  சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள்.

பெரிய நடிகர்களுடன் நடிக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஆரம்பத்தில் அழுத்தம் இருக்கும். இப்பொழுது நான் தினமும் யோகா பயிற்சி செய்கிறேன். அது என்னுடைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது.

விஷ் லிஸ்ட் நடிகர்கள் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

‘கோப்ரா’வில் விக்ரம் சாருடன் வேலை செய்துள்ளேன். சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என எல்லோரோடும் நடிக்க வேண்டும். இந்தியில் ஷாருக்கானுடன் நடிக்கணும். சிறுவயதிலிருந்து நான் ஷாருக்கான் படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்துள்ளேன். அவருடைய படத்தில் நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறேன்.

ரன்பீர் கபூர், யஷ் நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தில் உங்களுக்கு பதில்தான் சாய் பல்லவி நடிக்கிறார் என்று செய்தி வருகிறதே..?

‘கே.ஜி.எப்’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் என்னை சீதாவாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ஒரு பேட்டியில் கூறினேன். பலர் அதை தவறாக புரிந்துகொண்டார்கள்.

சீதா கேரக்டருக்கான ஆடிஷனில் நானும் கலந்துகொண்டேன். அதன் பிறகு படக்குழுவிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. சீதா கேரக்டரில் சாய் பல்லவி நடிக்கிறார் என்பதை ஊடகங்கள் வழியாக தெரிந்துகொண்டேன்.

ஆனால், எனக்கு பதில் சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டதுபோல் செய்திகள் கட்டமைக்கப்பட்டன. அது தவறு. அதுமட்டுமல்ல, ‘கே.ஜி.எப்’ படத்தில் ஹீரோவாக நடித்த யஷ் இதில் ராவணனாக நடிக்கிறார். அவர் ராமனாகவும், நான் சீதாவும் நடிக்கும்போதுதான் பொருத்தமாக இருந்திருக்கும்! நான் சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடிக்கும்போது அந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாது!

எஸ்.ராஜா