சமைச்சுக்கிட்டே படம் பார்க்கலாம்!
இன்று சமைப்பது என்பது ஒரு சலிப்பான விஷயமாகவே மாறிவிட்டது. சமையலின் மீது பெருங்காதல் கொண்டவர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு அதுவொரு கடின வேலைதான். அதனால்தான் நாலாப்பக்கமும் புதிது புதிதாக உணவகங்கள் திறக்கப்படுகின்றன. அந்த உணவகங்கள் மக்கள் கூட்டங்களால் நிறைகின்றன.
 குறிப்பாக விடுமுறை நாட்களில் வீட்டில் சமைப்பதைவிட, உணவகங்களை நோக்கிச் செல்வதையே மக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் சமையலைக் கூட சலிப்பில்லாத ஒரு ஜாலியான அனுபவமாக மாற்றுவதற்காக சினிமா உணவகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது, சீனா. அங்கே உள்ள பொழுதுபோக்குத் துறையை ஒரு கலக்கு கலக்கி வருகிறது, சினிமா உணவகம்.
 அதென்ன சினிமா உணவகம்?
பொதுவாக திரையரங்குகளில் பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக வரிசையாக இருக்கைகள் இருக்கும். இப்போது படுத்துக்கொண்டே பார்ப்பதற்கான வசதிகள் கூட வந்துவிட்டன.
ஆனால், சினிமா உணவகம் என்கிற இந்த நவீன திரையரங்கில் ஒவ்வொரு இரண்டு இருக்கைக்கு முன்பாக ஒரு மேசை இருக்கும். வழக்கமான இருக்கைகளை விட மிகவும் குறைவான இருக்கைகளே இருக்கும்.
சமையலின் மீது ஆர்வமும், காதலும் கொண்டவர்களுக்காக இதை வடிவமைத்திருக்கின்றனர். நம் சமையலறையில் ஒரு மிகப்பெரிய திரை இருந்து, அதில் நமக்குப் பிடித்த படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே சமைத்தால் சலிப்பு பறந்துவிடும்.
சமைப்பது கூட மகிழ்ச்சியான அனுபவமாகும். இதையே ஒரு பிசினஸாக மாற்றியிருக்கின்றனர் சீனர்கள்.ஆம்; இந்த சினிமா உணவகத்தில் சினிமா பார்த்துக்கொண்டிருக்கும்போது, பார்வையாளர்களுக்கு இண்டக்ஷன் ஸ்டவ், கடல் உணவு, காய்கறிகள் உட்பட அவர்களுக்கு விருப்பமான உணவைச் சமைப்பதற்கான அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும்.
தாங்கள் என்ன சமைக்கப்போகிறோம், அதற்கு என்ன தேவை என்று டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே சொல்லிவிட்டால், அதை திரையரங்கம் ஏற்பாடு செய்துவிடும். பார்வையாளர்கள் சினிமாவைப் பார்த்துக்கொண்டே சமைக்கலாம். இதற்காகத்தான் அந்த மேசை. இந்த தனித்துவமான சினிமா உணவகம் சீனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சீனாவில் உள்ள பெய்ஜிங், செங்க்டு, கிங்டோவ், சாங்ஷா, குவாங்ஷோ ஆகிய நகரங்களில் பரிசோதனைக்காக சினிமா உணவகத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். அந்த திரையரங்குகளில் ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
சீனாவைத் தொடர் ந்து மலேசியாவிலும் சினிமா உணவகம் கால் பதித்துள்ளது. விரைவில் உலகின் முக்கிய நகரங்களை சினிமா உணவகம் ஆக்கிரமிக்கலாம். சீனாவில் உள்ள சினிமா உணவகங்களில் சமையல் செய்வதற்கான கட்டணமே இரண்டு பேருக்கு 2000 ரூபாய். டிக்கெட்கட்டணம் தனி.
பொதுவாக மற்ற திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பித்ததும் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டுவிடும். அருகில் அமர்ந்திருப்பவர் ஸ்மார்ட்போனைப் பார்க்கும்போது, அதிலிருந்து வெளிப்படும் சிறு வெளிச்சம்கூட படம் பார்ப்பதைத் தொந்தரவு செய்யும். அந்தளவுக்குத் திரையரங்க அனுபவத்துக்கு இருள் என்பது முக்கியம். அந்த இருள்தான் திரையரங்க அனுபவத்தை முழுமையாக்குகிறது. ஆனால், சினிமா உணவகத்தில் நடப்பதே முற்றிலும் வேறு. ஆம்; இங்கே திரைப்படம் ஆரம்பிக்கும்போது முற்றிலுமாக மின்விளக்குகளை அணைக்க மாட்டார்கள். திரையரங்குக்குள் ஒளிரும் மின்விளக்குகளின் வெளிச்சத்தைக் குறைப்பார்கள். மட்டுமல்ல, பார்வையாளர்களின் இருக்கைக்கு முன்பு இருக்கும் மேசையில் இரண்டு இரவு விளக்குகள் இருக்கும். சமைத்து, சாப்பிடுவதற்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காக அந்த விளக்குகளைப் பொருத்தியிருக்கின்றனர்.
உண்மையில் இந்த சினிமா உணவகம் திரையரங்க அனுபவத்தைவிட, வித்தியாசமான சமையல் செய்யும் அனுபவத்தைக் கொடுக்கிறது.தீவிரமான சினிமா ரசிகர்களுக்கு உகந்ததல்ல இந்த சினிமா உணவகம். ஆனால், வித்தியாசமான, ஜாலியான அனுபவம் வேண்டுபவர்களுக்கு நிச்சயமாக புது அனுபவத்தை இந்த சினிமா உணவகம் கொடுக்கும் என்கின்றனர்.
த.சக்திவேல்
|