Sleep DIVORCE!
ரிலேஷன்ஷிப்பில் இது புது ட்ரெண்ட்
இந்தியாவில் தினமும் சுமார் 100 விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. பெரும்பாலானவை மெட்ரோ நகரங்களில் இருந்து வருகின்றன. ஏற்கனவே குடும்ப நீதிமன்றங்களில் மொத்தமாக 11.4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது பதற வைக்கும் நிஜம்.  இதில் கேரளாவில் கடந்த பத்து வருடங்களில் விவாகரத்து விகிதம் 350% அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2022ம் ஆண்டு மட்டும் தினசரி சராசரியாக 75 விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ‘இந்தியாவின் விவாகரத்து மாநிலம்’ என கேரளா மாறி யிருக்கிறது.  அந்த வகையில் ஓரளவுக்கு தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களை அணுகும் தம்பதியரின் எண்ணிக்கை 35% குறைந்து இருக்கிறது. எனினும் இதில் மிகப்பெரிய மாற்றம் நிகழவில்லை. இச்சூழலில் இந்த விவாகரத்து பிரச்னைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக மேற்கத்திய நாடுகள் கடைப்பிடிக்கும் ஒரு வழக்கம்தான் ஸ்லீப்பிங் டிவோர்ஸ். அதாவது தூங்கும் போது மட்டும் தற்காலிக விவாகரத்து.
 கணவன் - மனைவி அல்லது உறவில் சண்டை என்றால் மட்டும்தான் தனித்தனியாக பிரிந்து தூங்கும் வழக்கம் நம்மிடையே இருந்து வரும் நிலையில் இது என்ன தூக்கத்தில் தற்காலிக விவாகரத்து என்னும் கேள்வி எழலாம்.ஆனால், இதுதான் இன்றைய நவீன யுகத்திற்குத் தேவையான ஒன்று என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.
 மேலை நாடுகளில் அதிகம் பிரபலமாக பரவி விட்ட இந்த ஸ்லீப்பிங் விவாகரத்து கூட்டுக் குடும்பமாக வாழும் இந்தியாவில் சாத்தியமா? இந்த ஸ்லீப்பிங் விவாகரத்தால் என்னென்ன பலன்களை அடையலாம்... எப்படி செயல்படுத்தலாம் என்பதை விளக்கமாக சொல்கிறார் மருத்துவ உளவியலாளர் டாக்டர் எஸ்.வந்தனா.
‘‘நம் உடல் மற்றும் மனநல பிரச்னைகள் அத்தனைக்கும் அடிப்படை தூக்கமின்மைதான். தூக்கத்தில் இடையூறு வரும்போது, தானாகவே மன அழுத்தம், உடல் பிரச்னை, சாப்பிட்ட உணவு சரியான நேரத்தில் செரிமானம் ஆகாதது உள்ளிட்ட மைனர் பிரச்னைகள் துவங்கி, உடல் பருமன், கேஸ்டிரிக், ஒழுங்கற்ற மாதவிடாய், நீரிழிவு, தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை உள்ளிட்ட பல பிரச்னைகள் உண்டாகும். இதன் விளைவாக உறவில் ஆர்வம் இல்லாமை அல்லது தாம்பத்தியத்தில் உணர்வு எழாமை உள்ளிட்ட இடையூறுகளும் உண்டாகும்.
இதற்கு ஒரே முடிவு நல்ல தூக்கம். ஆண் - பெண் இருவருமே இன்று வேலைக்கு செல்லும் சூழல் உருவாகிவிட்ட நிலையில் இருவருக்குமே நல்ல தூக்கம் தேவைப்படுகிறது. மேலும் ஒரே வீட்டில் இருவருக்கும் வேறு வேறு விதமான வேலை நேரங்களும் இருக்கும் பட்சத்தில் தாமதமாக வரும் ஒருவரால் மற்றொருவரின் தூக்கம் பாதிக்கப்படும்.
இது மட்டுமின்றி குறட்டை, தூங்கும் முறை காரணமாக ஒருவரால் இன்னொருவருக்கு படுக்கையில் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட சில பல சிக்கல்கள் ஒருவருக்கொருவர் இடையூறாக இருப்பதால்தான் முழுமையான தூக்கம் இல்லாமல் போகிறது. இதுவே மன அழுத்தமாகவும் சண்டையாகவும் மாறி உறவில் பிரிவுகள் ஏற்படுகின்றன. இதற்குத்தான் சுதந்திரமான தூக்கம்... அதனுடன் இணைந்த தற்காலிக விவாகரத்து என்கிற பழக்கத்தை மேலை நாடுகள் கடைப்பிடிக்கின்றன.
ஒரே வீட்டில் அதிக நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தால் கூட சில நேரங்களில் சண்டைகள் அதிகமாகும். எதிர்பார்ப்புகள் கூடும். ஒருவரை மற்றொருவர் எல்லாவற்றிற்கும் சார்ந்து இருக்கும் நிலை உருவாகும். இதைத் தவிர்க்கவும் கூட இந்த ஸ்லீப்பிங் விவாகரத்து மிகப்பெரிய பலனாக மாறி இருக்கிறது.
மேலும் குறைந்தபட்சம் தனக்கென ஒரு தனி அறை, பிரைவசியான நேரம்... இதெல்லாம் கிடைக்கும்போது, தானாகவே தூங்கி எழுந்தவுடன் தனது துணையை மனம் தேடும். இதுவே தம்பதிகளுக்குள் இன்னும் அந்நியோன்யத்தை அதிகரித்து உறவை பலப்படுத்தும்.
அதேபோல் ஒருவருக்கு சிறிது நேரம் விளையாடலாம் எனத் தோன்றும், ஒரு சிலருக்கு சிறிது நேரம் புத்தகம் படித்துவிட்டு தூங்கலாம் எனத் தோன்றும். நிச்சயம் சேர்ந்து இருக்கும் பொழுது இதெல்லாம் சாத்தியமல்ல. எல்லோரும் படுக்கும் பொழுது நிச்சயம் தூங்கியாக வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும். இதனாலேயே சிலருக்கு அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு கூட விழிப்பு வருவதும் நடக்கிறது.
தனியாக தூங்கும் பழக்கத்தை உண்டாக்கும்போது இவையெல்லாம் சாத்தியப்பட்டு ‘மீ (மை) டைம்’ அதிகரிக்கும் பொழுது மற்றவர்கள் மேலும் ஆர்வமும் உணர்வும் அதிகரிக்கும்...’’ என்று சொல்லும் வந்தனா, இந்தியா போன்ற நாடுகளில் இது சாத்தியமா என்பதையும் விளக்கினார். ‘‘இதுவொரு முக்கியமான கேள்வி. ஏனெனில் சண்டை என்றால் மட்டும்தான் தம்பதியர் இருவர் பிரிந்து தூங்குவது இந்தியாவில் வழக்கம். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கணவனும் மனைவியும் திடீரென்று உறங்கும்போது இருவருக்குள் சண்டை போல என பெரியவர்கள் புரிந்து கொள்வார்கள்.இச்சூழலில் இந்திய தம்பதியரிடமும் ஸ்லீப்பிங் டைவர்ஸ் சாத்தியமா என்ற வினா எழவே செய்யும். நிச்சயம் இது சாத்தியம்தான்.
எல்லாருக்குமே எல்லா வயதிலும் ‘RRR’ அவசியம். அதாவது Renew, Rejuvenate, Refresh - அதாவது புதுப்பித்தல், செல் புத்துயிர், புத்துணர்வு. உறவு, வேலை, படிப்பு... ஏன் வாழ்க்கையில் கூட இந்த RRR ரொம்ப முக்கியம்.
ஒரே மாதிரி போரிங் வேலையை அல்லது வாழ்க்கையைக் கடைப்பிடித்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் சலிப்பு உண்டாகும். உறவும் அப்படித்தான். ஒரே நபர் ஒரு எட்டு மணி நேரம் கழித்து எழுந்து பார்க்கும்போது அவர்களும் நமக்குப் புதிதாகத் தெரிவார். நமக்கும் அது புதிதாக இருக்கும். உறவும் பலப்படும். இரண்டு பேருமே சம்பாதிக்கும் பட்சத்தில் இன்று இரண்டு அல்லது மூன்று பெட்ரூம் வீடுகள் சாதாரணமாகிவிட்டன. என்கையில் இது நிச்சயம் சாத்தியம். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பேசினால் புரிந்து கொள்வார்கள். அதைப்போல் புரிய வைக்க வேண்டியது குழந்தைகளிடம்தான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வேறு வேறு வேலை நேரம் என்பதால் தூக்கம் தேவைப்படுகிறது என விளக்கிச் சொல்லும்போது தூக்கத்தின் முக்கியத்துவம் அவர்களுக்கும் விளங்கும்.
ஒருவேளை ஓர் அறைதான் அல்லது தனி படுக்கையறை கிடையாது என்றால் குறைந்தபட்சம் கதவிலேயே சாவி வைத்து பூட்டிக் கொள்ளும் முறையை பயன்படுத்துங்கள்.
இரண்டு சாவிகள் வீட்டுக்கு இருக்கும் என்பதால் ஒருவர் பூட்டிக்கொண்டு தூங்கினால் கூட மற்றொருவர் கதவைத் தட்டி அவரை எழுப்பாமல் அல்லது காலிங் பெல் அடித்து உறங்குபவரின் தூக்கத்தைக் கெடுக்காமல் தன்னிடம் இருக்கும் சாவியைக் கொண்டு கதவைத் திறந்து வீட்டுக்குள் செல்லலாம்.
போலவே ஒருநாள் ஒருவர் படுக்கையிலும் மற்றவர் தரையிலும் உறங்கலாம். முந்தைய நாள் படுக்கையில் படுத்தவர் மறுநாள் தரையில் படுக்கலாம். இப்படி மாற்றிக் கொள்வது உண்மையில் உறவை பலப்படுத்தவே செய்யும்...’’ என்ற வந்தனா, ஸ்லீப்பிங் விவாகரத்தால் என்னென்ன பலன்களை அடையலாம் என்பதையும் விளக்கினார்.
தூக்கத்தின் தரம் உயர்வுஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப் பிடித்த படுக்கை சூழல் (temperature, light, silence) கிடைக்கும். ஏனெனில் இன்னொருவரின் உடல் சூடு கூட மற்றவரின் தூக்கத்தைக் கெடுக்கும்.
கோபத்தையும் சண்டையையும் குறைக்கும்தூக்கக் குறைபாடே அதிக கோபத்துக்கும், அவநம்பிக்கைக்கும் வழிவகுக்கும். தூங்கச் சிறந்த இடம் கிடைத்தால் மனநிலை நிம்மதியாக இருக்கும். எதையும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படும் உத்வேகம் பிறக்கும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்
தூக்கமின்மையின் விளைவுகளைத் தவிர்ப்பதால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை கட்டுக்குள் வரும். ஒரு சிலருக்கு நல்ல தூக்கம் ஹார்மோன்கள் மற்றும் சுரப்பிகளின் ஆற்றலையும் மேம்படுத்தும். நல்ல தூக்கம் ஆண்களின் உயிர் அணுக்களையும், பெண்களில் கருமுட்டையின் வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
உறவில் பரஸ்பர மரியாதை அதிகரிக்கும்
தனக்காக நேரம் ஒதுக்கி நிம்மதியாக தூங்குவது தனிப்பட்ட உரிமையாக மதிக்கப்படும். இதனால் ஒருவரின் அந்தரங்க செயல்பாட்டில் இன்னொருவர், தானாகவே எல்லைகளை வகுத்துக் கொள்வர்.
இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் பிரைவசி மிக அவசியம். பெரும்பாலும் பிரைவசி விஷயங்களில் தலையிடும்போதுதான் விவாகரத்து அதிகரிக்கிறது. கணவன் மனைவியே ஆனாலும் அவரவருக்கு எனத் தனித் தனியாக அலுவலக வேலைகள் மற்றும் நண்பர்கள் அது சார்ந்த சந்திப்புகள் அவற்றிற்கான பழக்க வழக்கங்கள் என எத்தனையோ பிரைவசி விஷயங்கள் இருக்கின்றன. எனவே ஒருவருக்கான நேரத்தை மற்றும் பழக்க வழக்கங்களை மற்றவர் மதித்து நேரம் கொடுப்பதும் அவசியம்.
தனித்தனியாக தூங்குவதால் இந்தப் பழக்கங்களும் அதிகரிக்கும். ஒரு சுற்றுலா அல்லது பயணத்துக்குச் சென்றால் கூட அவரவருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களே எடுத்து வைத்துக்கொள்வர். இதனால் பொறுப்புகள் ஒருவர் தலையில் விழாது.
இதற்குப் பெயர்தான் எதிர்மறையாக ஸ்லீப்பிங் விவாகரத்து என நவீன உலகிற்கு ஏற்றபடி பெயரிடப்பட்டிருக்கிறது. ஆனால், இது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிரந்தர பிரிவிலிருந்து பாதுகாக்கும் கவசமாக மேற்கத்திய நாடுகளில் அதிகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் இது மிகவும் பழமையான ஒரு பழக்கவழக்கம்.
நம் மன்னர்கள் காலத்தில் அந்தப்புரம் என்ற பழக்கம் உண்டு. அங்கே ராணி மற்றும் அவருடன் சேர்ந்த தோழிகள் என தனியாக இருப்பர். தேவைப்பட்டால் மட்டும்தான் அரசனும் அரசியும் ஒன்றிணைவார்கள். இதனால்தான் அவர்களின் பந்தம் பலமாக இருந்தது. இன்று வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் என்ற வித்தியாசமே கிடையாது. எல்லோருக்கும் அவர்களுக்கென தனி நேரம் அவசியம். சுருக்கமாகச் சொன்னால், வீட்டுக்குள்ளேயே ஒரு சில மணி நேரங்கள் தொலைதூர உறவை உருவாக்கிக் கொண்டு அதில் ‘மிஸ்ஸிங்’ உணர்வை அதிகரிக்கச் செய்து உறவை பலப்படுத்தும் நோக்கம்தான் இந்த ஸ்லீப்பிங் விவாகரத்தின் முழுமையான நோக்கம்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் உளவியல் மருத்துவரான வந்தனா.
ஷாலினி நியூட்டன்
|