60 நிமிடங்களில் 100 பேர் தனிமை பாதிப்பால் இறக்கின்றனர்..!
பொதுவாக தனிமையைப் பெரும்பாலானவர்கள் விரும்புவர். சிந்திக்க, முடிவுகளை எடுக்க, வேகமாக வேலைகளை முடிக்க உள்ளிட்ட சில காரணங்கள் இதற்குப்பின் இருக்கும்.
ஆனால், தனிமை விரும்பிகளாகவே இருப்பது ரொம்பவே ஆபத்தானது என்றே எச்சரிக்கின்றன ஆய்வுகள். சகஜமாக பேசுவதும், பழகுவதுமே வாழ்க்கையைச் சிறப்பாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இந்நிலையில் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
உலகம் முழுவதும் தனிமையால் பாதிக்கப்பட்ட ஆறு பேரில் ஒருவர் மரணிப்பதாகச் சொல்கிறது அந்த அறிக்கை. அதுமட்டுமில்லாமல் தனிமை பாதிப்பால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 100 மரணங்கள் நிகழ்வதாகவும், மொத்தமாக ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகிறது.  தவிர, தனிமை எல்லா தரப்பு வயதினரையும் பாதித்திருந்தாலும் குறிப்பாக அதில் இளைஞர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறது. அத்துடன் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்களை அதிகளவில் பாதித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கை, 13 முதல் 29 வயதுடையவர்களில் 17 முதல் 21 சதவீதம் பேர் தனிமையாக உணர்வதாகச் சொல்கிறது. இதில் அதிக வருமானம் உள்ள நாடுகளைவிட குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 24 சதவீதத்தினர் தனிைமயாக உணர்வதாகக் கூறியுள்ளனர்.
தனிமை மட்டுமல்ல. சமூகத்தால் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் இதில் அடங்குவர். மாற்றுத்திறனாளிகள், புலம்பெயர்ந்தோர், LGBTQ, பழங்குடி குழுக்கள் மற்றும் இன சிறுபான்மையினர் பாகுபாட்டாலோ அல்லது வேறு தடைகளாலோ ஒரு சமூக பிணைப்பை ஏற்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
இதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது. இதனால் இவர்கள் பக்கவாதம், இதய நோய், நீரிழிவு நோய், அறிவாற்றல் குறைபாடு, இளமையில் மரணம் எனப் பல்வேறு அபாயத்தை சந்திக்கின்றனர்.அதேபோல் தனிமையில் இருப்பவர்கள் மனச்சோர்வை அனுபவிக்கும் வாய்ப்பு இரு மடங்கு அதிகம் என்றும், பதற்றம் மற்றும் தற்கொலை எண்ணங்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடுவதாகவும் குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.
இதனால் உலக சுகாதார நிறுவனம் அரசாங்கங்கள், தனிநபர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் ஒரு சமூக பிணைப்பை உருவாக்கி உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.
பி.கே.
|