கடலுக்குள் வாழும் பழங்குடிகள்!
கடலில் பிறந்து, கடலுக்குள் வாழ்ந்து, கடலுக்குள்ளேயே மரணிப்பவர்கள், பஜாவு இன மக்கள். இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவைச் சுற்றியிருக்கும் கடல் பகுதிகளில் வாழ்ந்துவரும் கடல் பழங்குடிகளைத்தான் பஜாவு என்று அழைக்கின்றனர்.  கடலுக்குள் படகையே வீடாக மாற்றி வாழ்ந்து வருகின்றனர். இந்தப் படகு வீட்டை ‘லெபா - லெபா’ என அழைக்கின்றனர். இதன் மூலம் தீவுக்கும், கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைக்கும் இடைப்பட்ட நீர்ப்பகுதிகளில் ஒரு நாடோடி போல வாழ்கின்றனர். தவிர, கடலில் அமைக்கப்படும் ஸ்டில்ட் வீடுகளிலும் வசிக்கின்றனர். 
பஜாவு மக்களின் பெரும்பாலான வாழ்நாட்கள் கடலுக்குள்ளும், கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் கழிகிறது. கடல்தான் அவர்களின் வாழ்வாதாரம்; வாழ்க்கை. கடலில் கிடைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர்.  கடலில் கிடைக்கும் மீன்களை விற்பனை செய்வதற்காக மட்டுமே கடற்கரைக்கு வருகின்றனர். மனிதர்களைப் போலில்லாமல், ஒரு கடல் கன்னியைப் போல நீருக்குள் பஜாவுகளால் டைவ் அடிக்க முடியும். மனித இனத்தைச் சேர்ந்த திறமையான டைவரால் கூட இது முடியாது. 20 முதல் 30 மீட்டர் ஆழத்துக்குள் டைவ் அடிப்பதோடு மட்டுமல்லாமல், 5 முதல் 13 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி, அந்த ஆழப்பகுதியிலே இருக்க முடியும் என்பது பஜாவுகளின் சிறப்பு. இப்படி டைவ் அடிக்க மனிதர்களுக்கு ஸ்கூபா உபகரணங்கள் தேவை. ஆனால், பஜாவு மக்களுக்கு எந்த உபகரணங்களும் தேவைப்படுவதில்லை. இந்த டைவிற்காக அவர்களே வடிவமைத்த மரப்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
பஜாவு மக்களால் எப்படி ஒரு மீனைப் போல நீண்ட காலம் கடலுக்குள் வாழ முடிகிறது என்பதைப் பற்றி பல வருடங்களாக ஆராய்ச்சி நடந்திருக்கிறது.பரிணாம வளர்ச்சியினால் மற்ற இன மனிதர்களைவிட பஜாவு இனத்தினரின் மண்ணீரல் பெரிதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பெரிதான மண்ணீரல்தான் அவர்கள் நீண்ட நேரம் மூச்சுப்பிடித்து நீருக்குள் இருப்பதற்குக் காரணம். அதுவே அவர்கள் நிலத்தை விரும்பாததற்கும் காரணம் என்கின்றனர். அதனால்தான் உணவு உண்பதற்கு, உறங்குவதற்குக்கூட நிலப்பகுதிக்கு வருவதற்கு பஜாவு மக்கள் அஞ்சுகின்றனர்.
த.சக்திவேல்
|