எதுக்கு டேட்டிங் apps?



‘‘உனக்கே தெரிய வேண்டாமாடா?!  இந்த ஆப்ஸ் எல்லாமே மேட்டருக்குதான்னு...’’‘‘அவன் ஜொள்ளு...’’‘‘அப்பறம் என்ன புண்ணியத்துக்கு டேட்டிங் ஆப்ஸ் வந்தாளாம்?’’

இப்படி டீசரிலேயே இக்காலத் தலைமுறையின் கதறலாக ஒலிக்கிறது ‘நீ ஃபாரெவர்’.
ரொமாண்டிக் திரில்லர் ‘தருணம்’ கொடுத்த தயாரிப்பாளர்கள் ஈடன் மற்றும் புகழ் குழுவின் அடுத்த படம்தான் இந்த ‘நீ ஃபாரெவர்’. முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களுடன் இளமைத் துள்ளலுடன் இம்முறை களம் இறங்குகிறார்கள்.

‘‘இன்னைக்கு உலகமே, திருமணமானாலும் சரி சிங்கிளா இருந்தாலும் சரி, எந்த வயது வித்தியாசமும் இல்லாம டேட்டிங் appsல்தான் இருக்காங்க. எதுவுமே இல்லைன்னா கூட தன்னை எத்தனை பேர் தேர்வு செய்யறாங்க என்பதை தெரிஞ்சுக்கவாவது டேட்டிங் ஆப்ஸ் பயன்படுத்துறாங்க. 
ஆனால், அங்கேயே இருந்துகிட்டு ‘நீங்க இங்க என்ன செய்யறீங்க’னு நம்மளை கேரக்டர் ஜட்ஜ்மெண்ட் செய்யும்போதுதான் கோபமா வருது...’’ 90ஸ் மற்றும் 2கே தலைமுறையின் குரலாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் அசோக்குமார் கலைவாணி.

‘‘ஒரு டேட்டிங் ஆப்ஸ், அதில் சந்திக்கற ரெண்டு பேர், தொடர்ந்து அந்த ரிலேஷன்ஷிப் என்ன ஆகுது... அவங்களை எந்த எல்லை வரை கூட்டிட்டுப் போகுது என்பதுதான் கதை.

இன்னைக்கு நிறைய இளைஞர்கள் சிங்கிள் மதர் அல்லது சிங்கிள் ஃபாதர் குழந்தைகளா இருக்காங்க. பொதுவாகவே சமூகத்தில் தன்னை முன்னிறுத்திக்க அவங்ககிட்ட ஒரு போராட்டம் இருக்கும். எல்லாத்தையும் கேள்வி கேட்பாங்க. அப்பா,  அம்மா எங்க என்கிற கேள்வியே அவங்களை டயர்ட் ஆக்கியிருக்கும்.

அப்படிப்பட்டவங்க ரிலேஷன்ஷிப்பைக் கூட முழுமையாக ஏத்துக்க மாட்டாங்க. இதையும் இந்தப்படம் பேசும்...’’ என்பவர், தானும் இதை அனுபவித்திருப்பதாகச் சொல்கிறார்.
‘‘ஆமா. நானும் ஒரு சிங்கிள் பெற்றோர் கிட்தான். ஸ்கூல் வாழ்க்கை துவங்கி நிறைய இடங்களில் இந்த கேள்விகளை எல்லாம் சந்திச்சிருக்கேன். நிறைய சொந்த அனுபவங்கள் படத்தில் இருக்கு.

நாங்க ஃப்ரெண்ட்ஸாகதான் டெக்னிக்கல் டீமில் வேலை செய்திருக்கோம். பிரபல குறும்பட ரியாலிட்டி நிகழ்ச்சி வின்னர் சுதர்ஷன் கோவிந்த் ஹீரோ, மிஸ் சவுத் இந்தியா கேர்ள் அர்ச்சனா ரவி இந்தப்படம் மூலமா அறிமுகமாகறாங்க.

இவங்க கூட ஒய்.ஜி.மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார், எம்.ஜே.ஸ்ரீராம் சார், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர் வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி...இப்படி எல்லோருக்கும் முக்கியமான கேரக்டர்கள். பொதுவா இந்த 2கே தலைமுறை பெற்றோர்கள் பிரச்சனையும் இதில் பேசியிருக்கோம்.

 ‘தருணம்’, ‘பியார் பிரேமா காதல்’ படங்களுக்கு வேலை செய்த ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கார். இந்தப்படத்தில் நிறைய லைவ் லொகேஷன் பயன்படுத்தியிருக்கோம். அதற்கு அவருடைய ஒளிப்பதிவு சூப்பரா கைகொடுத்திருக்கு. எடிட்டர்  எஸ்.ஏ.நாகார்ஜுன் என்னுடைய நண்பர்தான்.  

‘தருணம்’ பேக்ரவுண்ட் மியூசிக் செய்த அஸ்வின் ஹேமந்த், இந்தப் படத்துக்கு மியூசிக். பாட்டெல்லாம் நல்லா வந்திருக்கு...’’ என்ற அசோக்குமார் கலைவாணி, இந்தப் படத்தில் மெசேஜ் என எதுவுமில்லை என்கிறார். ‘‘அட்வைஸ் செய்தா பூமர்னு சொல்லிடுவாங்க. அப்படி பூமரா அட்வைஸ் சொல்லாம ரிலேஷன்ஷிப்ல இருக்கும் பிரச்னைகளை எடுத்து வைத்து ஒரு டிஸ்கஷன் ஆரம்பிச்சிருக்கோம். இதுதான் ‘நீ ஃபாரெவர்’ மையம்...’’ என்கிறார்.

ஷாலினி நியூட்டன்