படிக்க வைக்கறோம்... எழுத வைக்கறோம்... அச்சிட்டுத் தர்றோம்!
தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித் துறையின் சபாஷ் முயற்சி
மூன்றாவது படிக்கிறாள், அபி. அவளின் தோழி மூன்று ஸ்ட்ராபெரி பழங்கள் தருகிறாள். வீட்டுக்கு வந்த அபி, அம்மாவிடம் காட்டுகிறாள். பின் அவளே சாப்பிட்டு விடுகிறாள்.
அம்மா யதேச்சையாக ஸ்ட்ராபெரி பிடிக்கும் எனச் சொல்ல, அபிக்கு அதிர்ச்சி. அடுத்து என்ன செய்கிறாள்- என்பதே ‘என் அம்மாவுக்குப் பிடிக்கும்’ கதை.
இதை எழுதியவர், அரசுப்பள்ளி மாணவியான அபிநயஸ்ரீ . இதுபோன்ற பல கதைகளை ‘வாசிப்பு இயக்கத்’தின் மூலம் புத்தகமாக்கி, வெளியிட்டு வருகிறது, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் முக்கியமான திட்டம் இது.
 கடந்த ஜூலை 21, 2023ல், திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.வாசிப்பு இயக்கத்தின் ஆரம்பம், அதன் நோக்கம், எதிர்கால திட்டங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்தார் முத்துக்குமாரி. விடத்தக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இவர், வாசிப்பு இயக்கத்தின் படைப்புக்குழுவிலும் இயங்கி வருகிறார்.
 ‘‘கொரோனா காலத்துக்குப் பிறகு மாணவர்களின் வாசிப்புத்திறன் மேம்பாட்டுக்கான தொடர் முயற்சிகள் பள்ளிக்கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதிதான் வாசிப்பு இயக்கம்...’’ என்று ஆரம்பித்த முத்துக்குமாரி, வாசிப்பு இயக்கத்தின் உருவாக்கத்தைப் பற்றியும் பகிர்ந்தார். ‘‘வாசிப்புத்திறன் வளர பாடப் புத்தகங்கள் மட்டுமே போதாது. கதைப் புத்தகங்களைப் படிப்பதன் வழியாக வாசிப்பை மேம்படுத்த முடியும். அதேசமயம் நாம் வாசிக்கத்தரும் கதைப் புத்தகம் எளிமையாக இருக்க வேண்டும்.
ஒரு கதை, ஒரு புத்தகம் என்பதுதான் வாசிப்பு இயக்கப் புத்தகத்தின் அடிப்படை. அதாவது, 16 பக்கங்கள் மட்டுமே உள்ள அந்தப் புத்தகத்தில் ஒரு கதை மட்டுமே இருக்கும். தட்டுத் தடுமாறி வாசிக்கும் குழந்தைகளைத் தன்னம்பிக்கையோடு வாசிக்க வைக்க வேண்டும். பெரியவர்களின் துணையின்றி குழந்தைகள் சுயமாக வாசிக்க வேண்டும்.
பொதுவாக பெரியவர்கள் சொல்கிற கதைகளைக் குழந்தைகள் கேட்பார்கள். இப்படி கேட்கும் இடத்திலிருந்து வாசிக்கும் இடத்துக்குக் குழந்தைகளை நகர்த்த வேண்டும். இதற்காகத்தான் வாசிப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது...’’ என்கிற முத்துக்குமாரியிடம், ‘‘என்ன மாதிரியான புத்தகங்களைக் குழந்தைகளுக்கு வாசிக்க கொடுக்கின்றனர்..?’’ என்றோம்.
‘‘பெரிய புத்தகங்களைக் கொடுத்தால் குழந்தைகள் பயந்துவிடுவார்கள். சிறிய புத்தகம் என்றால் குழந்தைகள் சுலபமாக வாசித்துவிடுவார்கள். அவர்களுக்கு ஒரு புத்தகத்தை வாசித்த மகிழ்ச்சி கிடைக்கும். அந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த புத்தகங்களுக்குச் செல்வார்கள். தங்களது நண்பர்களிடமும் நான் இவ்வளவு புத்தகங்களைப் படித்தேன் என்று சொல்வார்கள். அதைக் கேட்டு அவர்களின் நண்பர்களும் வாசிப்பார்கள். தற்போது சந்தையில் கிடைக்கும் புத்தகங்கள் வயது மற்றும் வகுப்பின் அடிப்படையில்தான் உள்ளன.பத்து வயதுக் குழந்தைக்கு ஆறு வயது மொழியறிவு இருக்கலாம்.
அந்தக் குழந்தைக்குப் பத்து வயதுக்கான புத்தகத்தை தர முடியாதல்லவா? நான்காவது படிக்கும் குழந்தை கொரோனா காலத்துக்குப் பிறகு ஆறாம் வகுப்பிற்குப் போய்விட்டது. அந்தக் குழந்தை ஆறாம் வகுப்பிற்குப் போனாலும் கூட அதன் கற்றல் நிலை நான்காம் வகுப்புதான். இப்போது ஆறாம் வகுப்பு படிக்கிறது என்பதற்காக அந்தக் குழந்தைக்கு ஆறாம் வகுப்புக்கான கதைப் புத்தகங்களைக் கொடுக்க முடியாதல்லவா?
இதையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக புத்தகங்களை உருவாக்க வேண்டியிருந்தது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடமும் அங்குள்ளஆசிரியர்களிடமும் கதைகேட்டு வாங்கினோம்...’’ என்றவரிடம், ‘‘வயது மற்றும் வகுப்புக்கு மாற்றாக எப்படி புத்தகங்களை உருவாக்கினீர்கள்..?’’ என்றோம்.
‘‘வகுப்பு மற்றும் வயதை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசுப் பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு நிலையை மையமாக வைத்து புத்தகங்களை உருவாக்கிக் கொடுத்தோம். ‘நுழை’, ‘நட’, ‘ஓடு’, ‘பற’ என நான்கு வகைகளாக வாசிப்பு நிலைகளைப் பிரித்தோம். கல்வியாளர் மாடசாமிதான் இந்நான்கு நிலைகளுக்குப் பெயர் வைத்தார். வாசிப்பு இயக்கத்தின் வழிகாட்டியும் அவர்தான். வாசிப்பின் ஆரம்பகட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மிக எளிய சொற்களைக் கொண்ட, அதிகமான படங்களைக் கொண்ட ‘நுழை’ வகைப் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும். எழுத்துக் கூட்டி வாசிக்க முடிகிற குழந்தைகளுக்கு ‘நட’ வகைப் புத்தகங்கள், கொஞ்சம் சரளமாக வாசிக்கின்ற குழந்தைகளுக்கு ‘ஓடு’ வகையிலான புத்தகங்கள், மிகவும் நன்றாக வாசிக்கின்ற குழந்தைகளுக்குப் ‘பற’ வகைப் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.
‘நுழை’ வகைப் புத்தகங்களைப் படித்த குழந்தைகள் அடுத்த நிலைக்குச் செல்வார்கள். இப்படி குழந்தைகளின் வாசிப்பு அடுத்தடுத்த நிலைக்குச் செல்லும்...’’ என்றவர், வாசிப்பு இயக்கத்தின் செயல்பாடு பற்றியும் பகிர்ந்தார்.‘‘2023ல் வாசிப்பு இயக்கம் முன்னோடித் திட்டமாகவே (Pilot study) பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை, ஈரோடு என 11 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு ஒரு ஒன்றியம் மட்டும் தேர்வு செய்து, மொத்தம் 11 ஒன்றியங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் இவ்வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டது...’’ என்கிற முத்துக்குமாரி, வாசிப்பு இயக்கம் வெளியிட்டிருக்கும் புத்தக எண்ணிக்கை பற்றியும் சொன்னார். ‘‘முதற்கட்டத்தில் தயாரான 53 புத்தகங்களை, 95 லட்சம் பிரதிகள் அச்சிட்டனர்; இரண்டாம் கட்டத்தில் தயாரான 70 புத்தகங்களை, 1.3 கோடிப் பிரதிகள் அச்சிட்டனர். மூன்றாம் கட்டத்தில் 81 தமிழ்ப் புத்தகங்களும், 30 ஆங்கிலப் புத்தகங்களும் தயாராகின. இந்தப் புத்தகங்கள் 1.58 கோடிப் பிரதிகள் அச்சாகின. ஆக மொத்தம் தமிழில் 174 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 30 புத்தகங்களும் சேர்ந்து 3.8 கோடிப் பிரதிகள் அச்சாகியுள்ளன. அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இந்தப் புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் அல்லது நூலக நேரத்தில் இந்தப் புத்தகங்களைக் குழந்தைகள் வாசித்து வருகின்றனர். அடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இம்முறை வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் செல்ல கல்வித்துறை ஆவன செய்துள்ளது.நான்காவது கட்டத்தில் முழுக்க முழுக்க மாணவர் படைப்புகளைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களைக் கதைகளை எழுத வைக்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை அவர்கள் எடுக்க வேண்டும். அதற்கு இந்த வாசிப்பு இயக்கம் உறுதுணையாக இருக்கும்; இயன்ற உதவிகளைச் செய்யும்.
இப்பொழுது வாசிப்பு இயக்கம் சார்பில் 250 புத்தகங்கள் முழுமையாக வெளிவர உள்ளன. இதுவரை 174 புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. இன்னமும் 76 புத்தகங்களுக்கான கதைகள் தேவை.
ஏற்கனவே மாணவர் படைப்புகளாக 25 புத்தகங்கள் வந்துள்ளன.பெரியவர்களிடம் கதை கேட்ட மாணவர்களைக் கதை சொல்லும் மாணவர்களாக மாற்றிய வாசிப்பு இயக்கம், அவர்களை படைப்பாளியாகவும் முன்நிறுத்த விரும்புகிறது.இதில் 100 புத்தகங்கள் மாணவர்கள் எழுதியதாக இருக்கும் என்பது வாசிப்பு இயக்கத்தின் சாதனையாக இருக்கும்...’’ என்று முடித்தார் முத்துக்குமாரி.
த.சக்திவேல்
|