10 வயதில் உலக கேடட் செஸ் சாம்பியன்!
அசத்தும் தமிழக சிறுமி
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். ஆனால், முதல் கோணலை முற்றிலும் சீராக்கி சாதிக்க முடியும் என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி ஷர்வாணிகா. ஆம். சமீபத்தில் கஜகஸ்தான் நாட்டில் பத்து வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதன் முதல் போட்டியில் தோற்ற ஷர்வாணிகா, அடுத்தடுத்து 9 போட்டிகளில் வென்று தங்கப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்.
 இதற்கு முன்பு இந்தச் சாதனையை இந்தியாவின் கொனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்குமே செய்திருந்தனர். அவர்களுடன் மூன்றாவது இந்திய வீராங்கனையாக ஜொலிக்கிறார் ஷர்வாணிகா. அதுமட்டுமல்ல. இந்தச் சிறிய வயதில் உலக கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் வென்ற முதல் தமிழக வீராங்கனையும் அவர்தான். சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் என்றாலும் இப்போது பயிற்சியின் பொருட்டு சென்னைவாசியாக இருக்கிறார் ஷர்வாணிகா. அப்பா சரவணன், அம்மா அன்பு ரோஜா, அக்கா ரட்சிகா என மொத்த குடும்பமும் ஷர்வாணிகாவை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
 ‘‘எங்களுக்கு அரியலூர் மாவட்டத்துல உள்ள உடையார்பாளையம்னு ஒரு சின்ன ஊர். என் கணவர் சரவணன் நெசவுத் தொழில் செய்றார். மூத்த பொண்ணு ரட்சிகா, சென்னைக் கல்லூரில முதலாமாண்டு படிக்கிறா. சின்னவள்தான் ஷர்வாணிகா...’’ அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் ஷர்வாணிகாவின் அம்மா அன்பு ரோஜா. ‘‘நான் இயற்பியலில் எம்.எஸ்சி எம்.எம்ஃபில், எம்.எட் படிச்சிருக்கேன். ஒரு பிரைவேட் காலேஜ்ல வொர்க் பண்ணிட்டு வீட்டுல டியூஷன் சென்டர் வச்சிருந்தேன். இதைப் பெரிய லெவல்ல நடத்தினோம். குறிப்பா, அரசு பள்ளி மாணவர்களை ஃபோகஸ் பண்ணி செய்தோம்.
அரியலூர் பின்தங்கிய மாவட்டம். இங்க குழந்தைகளை படிக்க வைப்பதே ஒரு பெரிய சவால்தான். அதனால், பசங்ககிட்ட ரொம்ப பீஸ் வாங்க முடியாது. மினிமமாக கொடுக்கிறவங்ககிட்ட வாங்கிப்பேன். மத்தவங்களுக்கு இலவசமாகவே எடுத்தேன். இப்படி இருந்தநேரம் கொரோனா வந்திடுச்சு.
இதுக்கிடையில் பெரிய பொண்ணுக்கு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி என்ற பெயரில் வாரம் ஒருமுறை பள்ளியில் செஸ் கத்து கொடுத்தாங்க. கொரோனா வந்ததுனால பெரியவளால் விளையாட முடியல. அதனால் சின்னவள் ஷர்வாணிகாவுடன் விளையாடினா.
அப்ப மூத்தவள் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தா. சின்னவளுக்கு 5 வயசு. அப்படியே ஷர்வாணிகாவுக்கு செஸ் விளையாட்டுல ஆர்வம் வந்து கத்துக்கிட்டா.
நான் காலையில் டியூஷன் எடுக்கும்போது சீக்கிரமே எழுந்து வந்து தொந்தரவு செய்வா. இதனால் நான் தொந்தரவு செய்யக்கூடாதுனு ஷர்வாணிகாவுக்கு பேப்பர்ல ஏபிசிடி எழுதி கொடுப்பேன். ஆனா, அவ உடனே படிச்சிட்டு வந்திடுவா.சரி என்ன பண்றதுன்னு தெரியாம தலைகீழா படிச்சிட்டு வானு சொல்வேன். அப்பவும் வேகமாக படிச்சிட்டு வந்து சொல்லிடுவா. அப்புறம் கணக்கு வாய்ப்பாடுகள் எழுதிக் கொடுப்பேன். அதையும் சொல்லிடுவா.
அவளுக்கு இயல்பிலேயே கூடுதல் திறமை இருந்தது. செஸ் விளையாட்டுல அடுத்தடுத்து என்னனு கேட்க, அரியலூர்ல சசிகுமார்னு ஒரு செஸ் மாஸ்டர்கிட்ட பயிற்சிக்கு சேர்த்துவிட்டோம். மூணு மாசம் அவர்கிட்ட படிச்சா. அப்புறம் கொரோனா உச்சமானதால் ஊரடங்கை கண்டிப்பு பண்ணிட்டாங்க.
எங்கேயும் போக முடியல. பிறகு, ‘கோல்டன் நைட் செஸ் அகடமி’னு மதுரையில் இருக்கு. அங்கே உமா மகேஸ்வரன் சார், மணிகண்டன் சார் ரெண்டு பேரும் ஆன்லைன் மூலம் கிளாஸ் எடுத்தாங்க. உமா மகேஸ்வரன் சார் ஷர்வாணிகாகிட்ட கூடுதல் திறமைனு சொன்னார். ஷர்வாணிகா அப்பவே ‘நான் இந்தியாவுக்காக கோல்டு வின் பண்ணுவேன்’னு சொல்வா. அப்புறம் ஆன்லைன்ல ஒரு டோர்னமெண்ட் நடந்துச்சு. அதுல ஜெயிச்சதும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமானது. அதுக்கப்புறம் அடுத்த லெவல் போறதுக்கு மேற்கொண்டு பணம் கட்ட சொன்னாங்க. எங்ககிட்ட அப்ப பணம் இல்ல. டியூஷனும் இல்ல. காலேஜும் கிடையாது. அதனால் கட்டமுடியல.
கொரோனா முடிஞ்சபிறகு சிவகாசியில் ஒரு அகடமியில் சேர்த்துவிட்டோம். அப்புறம் ஒரு ஸ்டேஜ்ல ஷர்வாணிகா மாநில அளவில் ஜெயிக்க ஆரம்பிச்சிட்டா.
பிறகு தேசிய அளவிலான போட்டி குஜராத்தில் நடந்துச்சு. அகமதாபாத்தில் நடந்த அந்தப் போட்டியில் 11க்கு 11 சுற்றுகளையும் ஜெயிச்சு நேஷனல் ரெக்கார்டு பண்ணினா. இதுவரைக்கும் அண்டர் 7 பிரிவில் ஆண்கள், பெண்கள் யாருமே இத்தனை ஆண்டுகால வரலாற்றில் ஜெயிக்கல.
அப்புறம் ஒடிசாவுல அண்டர் 7 பிரிவில் நேஷனல் ஸ்கூல் சாம்பியன்ஷிப் நடந்துச்சு. அங்கேயும் சாம்பியன் ஆயிட்டா. ஒரே வருஷத்துல ரெண்டு சாம்பியன் பட்டம் வென்றாள். அடுத்து 2022ம் ஆண்டு ‘ஏசியன் ஸ்கூல் சாம்பியன்’ போட்டி லங்காவுல நடந்துச்சு. அதான் எங்களோட முதல் விமான பயணம். அங்க கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ்னு மூணு பிரிவுகள்ல போட்டிகள் நடந்துச்சு.
இதுல மூணு பிரிவிலும் எல்லா போட்டிகளிலும் ஜெயிச்சு ஷர்வாணிகா ஆசிய சாதனை படைச்சா. அடுத்து 2023ம் ஆண்டும் அவளின் சாதனைகள் தொடர்ந்துச்சு. அப்புறம் 2024ம் ஆண்டு ‘காமன்வெல்த்’ போட்டி மலேசியாவுல நடந்தது. அதில் அண்டர் 10ல் கிளாசிக்கல், பிளிட்ஸ்னு ரெண்டு பிரிவுகள்ல சாம்பியனானாள். அப்ப, ஷர்வாணிகாவுக்கு ஒன்பது வயசு.
இதன்பிறகு 2024ல் உலக கேடட் போட்டி அல்பேனியாவுல நடந்தது. இதில் அண்டர் 10 ரேபிட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றா. பிளிட்ஸ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் ஜெயிச்சா. அடுத்து 2025ல் ஜார்ஜியாவுல நடந்த உலகக் கோப்பையில் அண்டர் 10 கிளாசிக்கல் பிரிவில் வெண்கலம் வென்றாள். அவளின் பாயிண்ட்ஸும் அதிகரிச்சது. இப்போ, ஆசியாவில் இளம் டபிள்யூசிஎம்னு சொல்லப்படுற வுமன் கேண்டிடேட் மாஸ்டர் ஷர்வாணிகாதான். இதுவரைக்கும் யாரும் ஒன்பது வயசுல 1,900 புள்ளிகள் எடுக்கல.
அதே மாதிரி செஸ் வரலாற்றுல இந்த வயசுல பெண்கள் பிரிவில் 2,000 புள்ளிகள் கடந்த முதல் இந்திய பெண்ணும் ஷர்வாணிகாதான். தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி இந்த 2,000 புள்ளிகளை 12 வயசுலயும், திவ்யா தேஷ்முக் 11 வயசுலயும் எடுத்தாங்க.
இப்ப, கஜகஸ்தான்ல உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துக்கிட்டா. இந்தமுறை நாங்க தமிழ்நாடு அரசின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டோம். இதுல முதல் சுற்றுல தோற்றுட்டா. இதனால், முதலிடத்திலிருந்து 107வது இடம் போயிட்டாள்.
இதனால் ரொம்ப மனசு உடைஞ்சு அழுதுகிட்டே இருந்தா. அப்புறம் உட்கார்ந்து பேசி ‘உன்னால வர முடியும் பாப்பா’னு ஊக்கப்படுத்தினோம். அப்புறம் தொடர்ந்து 9 போட்டிகள்ல ஜெயிச்சு மணிமகுடத்தை சூட்டினா.
முதல்வர், துணை முதல்வர்னு எல்லோரும் ஷர்வாணிகாவைப் பாராட்டினாங்க. துணை முதல்வர் உதயநிதி சாருக்கு ஷர்வாணிகா ரொம்பவே பெட். அவர் அரியலூர் பக்கம் ஏதாவது நிகழ்வுக்கு வந்தார்னா ஷர்வாணிகாவை கூப்பிட்டு பேசுவார்.
அப்புறம், விஸ்வநாத் ஆனந்த் சாரும் அவங்க மனைவி அருணா மேடமும் கால் பண்ணி வாழ்த்தினாங்க. இதை நாங்க எதிர்பார்க்கவே இல்ல. ரொம்ப சந்தோஷமா இருந்தது...’’ எனப் பெருமைபொங்க குறிப்பிடுபவர், தொடர்ந்து பேசினார்.
‘‘இவ்வளவு தூரம் ஷர்வாணிகா வந்ததுக்குக் காரணம் என் பெரிய பொண்ணு ரட்சிகாவும், பயிற்சியாளர்களும்தான். பெரியவள் ரட்சிகா ஆன்லைன்ல செஸ் வகுப்பு எடுக்குறது, டியூசன் வகுப்பு எடுக்குறது மூலமாக குடும்பத்திற்கு நிறைய சப்போர்ட் பண்றா.
ஷர்வாணிகாவின் முதல் பயிற்சியாளரும் அவதான். உண்மையில் ஷர்வாணிகாவுக்கு இன்னொரு அம்மாவாக இருந்து ஊக்கப்படுத்திட்டே இருக்கா...’’ என அம்மா அன்பு ரோஜா நிறுத்த, ஆன்லைனில் செஸ் விளையாடிக் கொண்டிருந்த ஷர்வாணிகா நம் பக்கம் திரும்பினார்.
‘‘ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லோரும் பாராட்டுறாங்க. இதுக்கு அப்பாவும், அம்மாவும், அக்காவும், பயிற்சியாளர்களுமே காரணம். அடுத்து என் நோக்கம் இளம் வயதில் வேர்ல்ட் செஸ் சாம்பியன் ஆகணும் என்பதுதான். அதுக்கான பயிற்சியில்தான் இருக்கேன்...’’ என அந்தக் கீச்சுக் குரலில் அத்தனை நம்பிக்கையாகச் சொல்கிறார் ஷர்வாணிகா.
பேராச்சி கண்ணன்
|