வெளிநாட்டில் தீபாவளி!
இந்தோனேஷியா இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஒரு நாடு, இந்தோனேஷியா. அங்கே வாழ்கின்ற இந்து மக்களின் எண்ணிக்கை வெறும் 1.7 சதவீதம் மட்டுமே. இருந்தாலும் இந்தோனேஷியாவில் வாழும் இந்து மக்கள் அனைவரும் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். புத்தாடை, கோவில் வழிபாடு என இந்தியாவில் நடக்கும் அனைத்து தீபாவளி கொண்டாட்டங்களும் இந்தோனேஷியாவிலும் அரங்கேறுகின்றன.
 தீபாவளி கொண்டாட்டத்துக்காக மக்கள் பாலி தீவைத் தேர்ந்தெடுக்கின்றனர். அங்கே இடைவிடாமல் 7 நாட்களுக்குத் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அப்போது இரவு நேரங்களில் பாலி தீவே மின் விளக்கு ஒளியில் மிளிரும். இந்தக் கொண்டாட்டத்தைக் காண இந்துக்கள் அல்லாத இந்தோனேஷியர்களும் வருவது இதில் ஹைலைட்.
 ஃபிஜி தீவு
உலகப்புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலம், ஃபிஜி தீவு. இந்தத் தீவில் இந்தியர்கள் அதிகமாக வாழ்வதால், தீபாவளிக்குத் தேசிய விடுமுறை விடப்படுகிறது. மக்கள் விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும், இனிப்பு மற்றும் பரிசுப்பொருட்களைப் பரிமாறிக்கொண்டும் உற்சாகமாகத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இங்கேயும் தீபங்களை ஏற்றி, மெழுகுவர்த்திகளை அலங்கரித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இந்தியர்களின் கலாச்சாரம், பண்டிகைகளை மாணவர்கள் அறிந்துகொள்வதற்காக ஃபிஜி தீவில் உள்ள பள்ளிகளிலும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மட்டுமல்ல, தீபாவளி சார்ந்த கட்டுரை, பாட்டுப் போட்டிகள் கூட பள்ளிகளில் நடக்கின்றன.  மொரீஷியஸ்
இந்து மக்கள் அதிகமாக வாழும் ஒரு தீவு, மொரீஷியஸ். மட்டுமல்ல, மொரீஷியஸின் மக்கள் தொகையில் 67 சதவீதம் பேர் இந்தியர்கள்தான். அதனால் இந்தத் தீவில் முக்கியமான பண்டிகையே தீபாவளிதான். இந்தியாவைப் போல மொரீஷியஸிலும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகளின் முன்பு களிமண் தீபங்களை ஏற்றுகின்றனர்.
மட்டுமல்ல, வீடுகளை விதவிதமான மின் விளக்குகளால் அலங்கரிக்கின்றனர். அதனால் இரவு நேரம் தீவே பிரகாசமாக ஒளிரும். சிலர் பட்டாசு வெடித்தும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். தீபாவளி கொண்டாடுவதற்காக இந்தியாவிலிருந்து மொரீஷியஸ் செல்கின்றவர்களும் இருக்கின்றனர். நேபாளம்
நேபாளத்தின் இரண்டாவது பெரிய பண்டிகையே தீபாவளிதான். இங்கே திஹர் என்ற பெயரில் ஐந்து நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் காகங்களைக் கொண்டாடி, உணவு வைக்கின்றனர். இரண்டாம் நாளில் நாய்களை வணங்கி, உணவு கொடுக்கின்றனர். மூன்றாம் நாள் பசுக்களை வழிபட்டு, லட்சுமி பூஜையும் நடக்கிறது. நான்காம் நாளில் விவசாயத்துக்குப் பெரும் பங்களிப்பைச் செய்ததற்காக எருதுகளை வழிபாடு செய்கின்றனர். ஐந்தாம் நாளில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன.
மலேசியா
மலேசியாவில் தீபாவளியை ‘ஹரி தீபாவளி’ என்று அழைக்கின்றனர். இங்கே ஹரி தீபாவளிக்குப் பொது விடுமுறை விடப்படுகிறது; ஐந்து நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவுடன் ஒப்பிடும்போது மலேஷியாவில் தீபாவளி கொண்டாட்டம் கொஞ்சம் வேறுபடுகிறது.
அங்கே தீபாவளியன்று மக்கள் காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, கோயிலுக்குச் செல்கின்றனர். பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் யாரும் பட்டாசுகளை வெடிப்பதில்லை. இனிப்பு, பரிசுப்பொருட்கள், வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சிங்கப்பூர்
சிங்கப்பூர் மக்கள் தொகையில் 9 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி கொண்டாட்டத்தின்போது இந்தியர்களின் ஒவ்வொரு வீடும் சுத்தம் செய்யப்பட்டு, தீபங்களால் ஒளிரும்.
இந்தியாவைப் போலவே கடை வீதிகள் எல்லாம் மக்கள் கூட்டத்தால் அள்ளும். சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் புத்தாடை அணிந்து, இனிப்பு வகைகளையும், பரிசுப் பொருட்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக தீபாவளி மாதத்தில் சிங்கப்பூர் கடைகளில் இந்தியர்களின் பாரம்பரிய பொருட்கள் எல்லாம் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை
இந்தியாவைப் போலவே இலங்கையிலும் தீபாவளி முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி கொண்டாட்டத்தின்போது தீய சக்திகளை விரட்டும் விதமாகவும், எதிர்காலம் பிரகாசமாக ஒளிர வேண்டியும் இலங்கை மக்கள் தங்களின் வீடுகளில் தீபங்களை ஏற்றுகின்றனர். இராவணனை ராமர் வெற்றி கொண்டதைச் சிறப்பிக்கும் விதமாகவும் இலங்கையில் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
டிரினிடாட் அண்ட் டொபாகோ
டிரினிடாட் அண்ட் டொபாகோவின் மக்கள் தொகையில் 35 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்தியர்கள்தான். அங்கே வாழும் இந்தியர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக டிரினிடாட் மக்கள் இந்தியர்களுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
டிரினிடாட்டில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் பெரிதாக இல்லை என்பதால், வெடிச் சத்தம் தீபாவளி முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கும். இரவு நேரத்தில் விருந்து, மின் விளக்கு அலங்காரம் என ஊரே குதுகலமாக இருக்கும்.
த.சக்திவேல்
|